[ திங்கட்கிழமை, 28 ஏப்ரல் 2014, 12:08.25 AM GMT ] [ பி.பி.சி ]
வழக்கின் வாதப் பிரதிவாதங்கள் முடிவடைந்து, தீர்ப்பு வருமென்று கருதப்பட்ட வேளையில், வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றியது ஏமாற்றம் அளிக்கிறது என்று பியூசிஎல் எனும் மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
இதேபோன்ற வழக்குகளை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற வேண்டுமென்று மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் வாதாடிய போது, நீதிபதிகள் அதை நிராகரித்திருந்தனர் என்று அந்த அமைப்பின் மூத்த உறுப்பினரும் வழக்கறிஞருமான பாலமுருகன் தமிழோசையிடம் கூறினார்.
யார் இறந்தார்கள் என்பதன் அடிப்படையில் ஒரு வழக்கைப் பார்ப்பது சரியல்ல என்றும், மாநில அரசின் அதிகாரங்களை மத்திய அரசு கைப்பற்ற நினைப்பது சரியா தவறா என்பதையே சட்டரீதியாகப் பார்க்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
தண்டனைக் குறைப்பை அளிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு உள்ளது என்பது அரசியல் அமைப்புச் சட்டத்தில் தெளிவாக இருக்கிறது என்றும், மத்திய அரசு சார்ந்த குற்றங்களில் அவர்களது ஆலோசனை பெறப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளதே தவிர அனுமதி பெறப்பட வேண்டும் எனச் சொல்லப்படவில்லை என்றும் அவர் கூறுகிறார்.
கேரளா போன்ற மாநிலங்களில் மத்திய அரசு சார்ந்த குற்றங்கள் வரும்போது அவர்கள் யாரையும் அணுகுவதில்லை என்றும் தமது அதிகார வரம்புக்கு உட்பட்டு தண்டனை பெற்றவர்களை விடுதலை செய்யும் நடவடிக்கையை முன்னெடுக்கிறார்கள் எனவும் கூறுகிறார் பாலமுருகன்.
முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் ஆகியோர் மீது தொடரப்பட்டிருந்த மத்திய அரசின் குற்றங்களான கடவுச் சீட்டு தொடர்பான குற்றம், தொலைத்தொடர்பு தொடர்பான குற்றம், வெடிபொருட்கள் தொடர்பிலான குற்றம் ஆகியவற்றில் அவர்கள் தண்டனைக் காலத்தை ஏற்கனவே தண்டனையை கழித்துள்ளார்கள் என்பதால், அதைக் காரணம் காட்டி, மத்திய அரசு தமது அனுமதி வேண்டும் என்று முன்வைக்கும் வாதம் முறையானது அல்ல எனவும் அவர் தெரிவித்தார்.
Geen opmerkingen:
Een reactie posten