தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 24 juli 2013

அகிம்சை, ஆயுதப் போராட்டத்தால் அரசியல் அநாதைகளாக்கப்பட்டுள்ளது தமிழ்ச் சமூகம்: ஜனா

மட்டக்களப்பில் 9 மாதங்களுக்கு முன் மரணமான பெண்ணின் சடலம் தோண்டியெடுப்பு
[ செவ்வாய்க்கிழமை, 23 யூலை 2013, 10:49.23 AM GMT ]
மட்டக்களப்பில் கடந்த 9மாதங்களுக்கு முன்னர் மரணமான பெண் ஒருவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மீண்டும் இன்று தோண்டியெடுக்கப்பட்டது. 
கடந்த 2012ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17ம் திகதி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வயிற்றுவலியினால் மட்டக்களப்பு கல்லடித் தெருவைச் சேர்ந்த ஜேசுதாசன் கோல்டன் பென்சமின் சாந்தி(வயது42) எனும் பெண் மரணமடைந்தார்.
இப் பெண்ணின் சடலம் 19.09.2012 அன்று மட்டக்களப்பு கள்ளியங்காடு கிறிஸ்தவ மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
இப் பெண்ணின் மரணம் தொடர்பில் இவருடைய கணவர் ஜேசுதாஸ் கோல்டன பென்சமின் பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பிய முறைப்பாட்டு கடிதத்தினையடுத்து, மட்டக்களப்பு பிரதி பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில் மட்டக்களப்பு தலைமையகப் பொலிசார் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் வழக்கொன்றை தாக்கல் செய்தனர்.
இதனை விசாரணை செய்த மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி என்.எம்.அப்துல்லா இப்பெண்ணின் சடலத்தை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டிருந்தார்.
நீதிபதியின் உத்தரவுக்கமைவாக சடலம் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் தோண்டப்பட்டது.
மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி என்.எம்.அப்துல்லா முன்னிலையில் இந்த பெண்ணின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது.
இதன் போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரிகளான டாக்டர் எம்.குணதிலக, மற்றும் டாக்டர் எம்.ஏ.அப்துர் றஹ்மான், மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் அனுரத்த ஹக்மன பண்டார, மற்றும் மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்தின் சிறு குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி ஐ.பி.சாந்தகுமார் ஆகியோர் சமூகமளித்திருந்தனர்.
இந்த பெண்ணின் சடலம் தோண்டும் போது அவரின் கணவர் ஜேசுதாஸ் கோல்டன் பென்சமின் மற்றும் அவரின் குடும்பத்தினரும் சமூகமளித்திருந்தனர்.
இப் பெண்ணின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டு பொலிசாரினால் அம்பாறை வைத்திய சாலைக்கு பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டது.
குறித்த பெண் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 11ம் திகதி வயிற்று வலியினால் மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு செப்டம்பர் 17ம்திகதி மரணமடைந்தார்.
19ம் திகதி இவரின் சடலம் அடக்கம் செய்யப்பட்டது.
இப் பெண்ணின் மரணம் தொடர்பில் இவரது கணவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் இரண்டு மகப்பேற்று வைத்தியர்களுக்கெதிராக முறைப்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அகிம்சை, ஆயுதப் போராட்டத்தால் அரசியல் அநாதைகளாக்கப்பட்டுள்ளது தமிழ்ச் சமூகம்: ஜனா
[ செவ்வாய்க்கிழமை, 23 யூலை 2013, 02:14.12 PM GMT ]
அகிம்சைப் போராட்டம், ஆயுதப் போராட்டம் போன்றன நடைபெற்று இன்று தமிழ் சமூகம் அரசியல் அனாதையாக்கப்பட்டுள்ளது என கிழக்கு மாகாண சபையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் கோவிந்தம் கருணாகரம் (ஜானா) அவர்கள் தெரிவித்தார்.
களுவஞ்சிகுடியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொணடு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் இவ்வாறு மேலும் கருத்து தெரிவிக்கையில்,
இலங்கை- இந்திய ஒப்பந்தம் மூலம் தமிழினத்திற்கு ஓரளவு விமோசனம் கிடைக்கும் என எதிர்பார்த்தோம். அது கைகூடவில்லை. வடமாகாணத்தில் 26 வருடகாலமாக தேர்தல் நடைபெறவில்லை தற்போது வடக்கில் தேர்தல் அறிவிப்பினை இலங்கை அரசு அறிவித்துள்ளது.
கிழக்கு மாகாணத்தினைத்தவிர இலங்கையிலுள்ள அனைத்து மாகாண சபைகளுக்கும் அனைத்து உரிமைகளையும் சலுகைகளையும் வழங்கியுள்ள இலங்கை அரசு, கிழக்கு மாகாணத்தினை ஒதுக்கின்றது. அதிலுள்ள காணி, பொலிஸ் அதிகாரஙகளை பிடுங்கிவிடப் பார்க்கின்றது.
கிழக்கு மாகாணத்திலுள்ள அமைச்சர்கள் கூட அவர்களது அதிகாரங்களைப் பயன்படுத்த முடியாத நிலைக்கு மாகாணசபை தள்ளப்பட்டுள்ளது என்றார்.
ஆளும் கட்சி அமைச்சர்கள் மக்களிடையே பகைமையை வளர்த்து அரசியல் இருப்பினை உறுதி செய்கிறார்கள்- மார்க்கண்டு நடராசா
மாகாண சபைகளை இல்லாமல் செய்ய வேண்டும் 13, இல்லாதொழிக்க வேண்டும் என்று கொக்கரித்துக் கொண்டிருக்கும் அமைச்சர்களான விமல் வீரவன்ச, பட்டாளி சம்பிக்க ரணவக்க மற்றும் மேல்மாகாணசபை அமைச்சரான உதயகம்பன்வில போன்றவர்கள் சிறுபான்மையின மக்களுக்கும் பெரும்பான்மையின மக்களுக்குமிடையே பகைமையுணர்வினை ஏற்படுத்தி, அதன் மூலம் தங்கள் அரசியல் இருப்பினை உறுதி செய்கிறார்கள் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மார்க்கண்டு நடராசா தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
தற்போதய சூழ்நிலையில் எரிபொருள், மின்கட்டணம், நீர்க்கட்டணம் என்பவற்றின் கட்டண உயர்வு, பால்மா, சீனி ஆகியவற்றின் விலையுயர்வு மற்றும் பஸ், புகையிரதம் என்பனவற்றின் பயணகட்டண உயர்வு போன்றவற்றின் மூலம் எமது மக்களின் வாழ்வாதாரத்தினை அதள பாதாளத்திற்குள் தள்ளிவிட்டது.
அத்துடன், வறுமை மற்றும் கொலை, கொள்ளை போன்ற சமூகச் சீர்கேடுகள் அதிகரித்த நிலையிலுள்ளதனையிட்டு மௌனமாக இருந்து கொண்டு இவைகளை மறைப்பதற்கு 13ம் திருத்தத்தினை கையிலெடுத்துக் கொண்டு மக்களிடையே மாயைகாட்ட இவர்களைப் போன்ற அரசியல்வாதிகள் முனைகின்றனர்.
எனினும் இவர்களின் அரசியல் நாடகங்கள் தற்போதய நிலையில் எம்மக்களிடையே எடுபடாது. ஏனெனில் தற்போது மக்கள் அரசியல்வாதிகளைவிட சகலவிடயங்களையும் அறிந்தவர்களாக இருக்கின்றதுடன் இன்றைய நிலையில் பெரும்பான்மை இனமக்களில் பெரும்பாலானோர், சிறுபான்மை இனமக்களின் மனங்களைப் புரிந்தும் இன்றைய பேரினவாத அரசியல் வாதிகளின் கபடநாடகங்களைப் பற்றி அறிந்தும் வைத்துள்ளனர்.
இனியும் இவ்வாறான அரசியல்வாதிகள் எம்மக்களை ஏமாற்ற முடியாது. எதிர்வரும் காலங்களில் இவ்வாறான அரசியல்வாதிகளுக்கு பெரும்பான்மை இன சகோதர மக்கள் சரியான நேரத்தில் சரியான தீர்ப்பை வழங்குவார்கள் என்பதே நிதர்சனம் என அவ்வறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten