தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 11 april 2013

தொடரும் இலங்கை கடற்படையின் அட்டூழியம்!! தமிழக மீனவர்கள் மீது இரும்பு கேபிளினால் தாக்குதல்!


இலங்கையை ரவுடி நாடு என்று உலக நாடுகள் அறிவிக்க வேண்டும்: பெ.மணியரசன்
[ வியாழக்கிழமை, 11 ஏப்ரல் 2013, 07:33.43 AM GMT ]
இலங்கை அரசை ரவுடி நாடு என்று உலக நாடுகள் அறிவித்து அதன் பேரில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் பெ.மணியரசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்படப்பட்டுள்ளதாவது,
ஈழத் தமிழர்களுக்கு எதிராக 2008-2009ம் ஆண்டுகளில் சிங்கள இராணுவம் நடத்திய போரில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டது,
போர்க்குற்றம்- மனித உரிமை மீறல்கள் நடந்தது, இவை குறித்து உலக நாடுகளின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது. இதன் மீது, ஐ.நா. மனித உரிமை மன்றமும் அவை பற்றி புலனாய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
இந்நிலையில் சிங்கள இராணுவ தலைமைத் தளபதி ஜெகத் ஜெயசூரிய இராணுவ நீதிமன்றம் அமைத்து அதன் மூலம் போர்க்குற்றம் நடந்ததா என்று கண்டறிய ஆணையிட்டாராம்.
அந்த இராணுவ நீதிமன்றம், நடந்து முடிந்த போரில் குடிமக்களில் ஒருவர்கூட இராணுவத்தால் கொல்லப்படவில்லை என்று தீர்ப்பளித்து இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அந்த இராணுவ நீதிமன்றத் தீர்ப்பின் முதல் பாகத்தை இலங்கை அரசின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிடம் ஜெயசூரியா கொடுத்துள்ளார்.
சிங்கள அரசின் அதிகாரத்திலுள்ள ஆட்சியாளர்கள், இராணுவ நீதிமன்றத் துறையினர், இராணுவ அதிகாரிகள் உள்ளிட்ட அனைவரும் எந்த அளவு சொந்த மனச்சான்றை கொலை செய்யக்கூடியவர்கள் என்பதும், இலங்கையில் எழுதப்பட்டுள்ள சட்ட திட்டங்களுக்கும், பன்னாட்டு மனித உரிமை சட்ட திட்டங்களுக்கும், ஐ.நா. மன்றத்திற்கும் கட்டுப்படாத ரவுடிகள் என்பது இந்த இராணுவ நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
பான்கீ மூன் அமைத்த மூவர் குழு, போரின் கடைசி நாட்களில் 40 ஆயிரம் தமிழ்ப் பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள் என்றும், சிங்கள இராணுவம் செய்த போர்க் குற்றங்கள் மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் என்றும் கூறியுள்ளது.
ராஜபக்ச உத்தரவின் பேரில் அமர்த்தப்பட்ட நல்லிணக்க ஆணையம்கூட, கீழ்நிலை இராணுவ அதிகாரிகள் போர்க் குற்றம் புரிந்துள்ளார்கள் என்று அறிக்கை வெளியிட்டது.
மனிதர்கள் உள்ளிட்ட மற்ற விலங்குகளை முழுமையாக விழுங்கும் முதலையைப் போல, சிங்கள இராணுவ நீதிமன்றம் குடிமக்களில் ஒருவர்கூட கொல்லப் படவில்லை. (zero civilian casualty) என்று தீர்ப்பளித்துள்ளது.
இதன் மூலம் இலங்கை அரசு ஒரு ரவுடி அரசு என்பது உண்மையாகுகிறது. இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் இலங்கை அரசுடன் தூரதரக உறவை துண்டித்துக் கொண்டு அதன் மீது இனப்படுகொலை குற்ற விசாரணை நடத்த பன்னாட்டு புலனாய்வு அமைப்பை ஏற்படுத்த வேண்டும்.
இலங்கை அரசு தனது குற்றச்செயல்களை நேர்மையாக விசாரித்து நடவடிக்கை எடுத்துக் கொள்ளும் என்று நம்புவதற்கு எள்ளளவும் இனி இடமில்லை என்பதை உலக நாடுகள் உணர்ந்து செயல்பட வேண்டும் என்று தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.


தொடரும் இலங்கை கடற்படையின் அட்டூழியம்!! தமிழக மீனவர்கள் மீது இரும்பு கேபிளினால் தாக்குதல்!
[ வியாழக்கிழமை, 11 ஏப்ரல் 2013, 07:46.52 AM GMT ]
எதற்கும் துணிந்தவர்களாகி விட்டார்கள் இலங்கை கடற்படையினர். தமிழக மீனவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை கண்டித்து தமிழ்நாட்டில் எத்தனையோ போராட்டங்கள் நடந்தாலும் அதைக் கண்டு பயந்துவிட மாட்டோம், ஓய்ந்துவிட மாட்டோம் என்று நிருபிப்பதை போன்று மீண்டும் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியிருக்கின்றனர்.
நேற்று (10.04.2013)  இரவு இந்திய கடல் பகுதியான வேதாரணியத்தைச் சேர்ந்த மீனவர்கள் செல்வம், மணிகண்டன், விஜயகுமார், சௌந்தர்ராஜன் ஆகிய 4 பேர் பைபர் படகில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
அவர்களை, இலங்கை கடற்படையினர், நம் இந்திய எல்லைக்குள் வந்து இரும்பு பைப், மற்றும் இரும்பு கேபிளினால் மிகக் கடுமையாக தாக்கிவிட்டுச் சென்றுள்ளனர்.
அதோடு மட்டுமில்லாமல், இவர்களின் வலை, ஜி.பி.எஸ் கருவி, ஐஸ் பெட்டி ஆகியவற்றையும் அறுத்தும் உடைத்தும் அட்டூழியம் செய்திருக்கிறார்கள்.
இனி ஒருமுறை உங்களை கடலில் பார்த்தால் சுட்டு கடலில் வீசிவிட்டுப் போய் விடுவோம் என்று எச்சரித்து விட்டு சாவகாசமாக கிளம்பியிருக்கின்றனர்.
நான்கு பேருக்கும் பலத்த உள்காயம் ஏற்பட்டு உடலின் பல பகுதிகளில் வீக்கம் ஏற்பட்டு உள்ளது.
அடிபட்ட மீனவர்கள் தமது ஊருக்கு தகவல் சொல்ல அவர்கள் மற்ற படகுகளில் சென்று அவர்களை ஏற்றி கரைக்கு கொண்டுவந்து நாகபட்டினம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார்கள்.
அங்கு சிகிச்சை பெற்று வருகிறவர்களை மாவட்ட ஆட்சியர் மற்றும் வேதாரண்யம் எம்.எல்.ஏ காமராஜ் ஆகியோர் சென்று பார்த்து ஆறுதல் சொன்னார்கள்.
தாக்குதலுக்கு உள்ளான மீனவர்கள் கூறியதாவது:
இந்திய எல்லையில் மீன் பிடித்து கொண்டிருந்தோம். நமது எல்லைக்குள்ளே அத்துமீறி வந்து தாக்குதல் நடத்தினர். எங்களிடம் இருந்த ரூ.1 லட்சம் மதிப்புள்ள கருவிகளை பறித்து சென்றனர்.
இந்திய கடற்படை இந்த பகுதியை கண்டுகொள்வதே இல்லை. இதனால்தான் இலங்கை இராணுவம் தமிழக மீனவர்களை தாக்குகிறது.
கடந்த 5ம் தேதி காரைக்காலில் இருந்து சென்ற 26 பேரை கைது செய்தனர். அதன்பிறகு இராமேஸ்வரத்தில் இருந்து சென்ற 25க்கும் மேற்பட்டவர்களை பிடித்து சென்றனர்.
நமது நாட்டு எல்லைக்குள் வந்து தாக்குதல் நடத்தும் இலங்கை இராணுவத்தை கண்காணிக்க இந்த பகுதியில்  நமது கடற்படையும் ரோந்து செல்ல வேண்டும்.
இல்லாவிட்டால் இந்த பகுதியில் உள்ள மீனவர்கள் வாழ்வாதாரம் அடியோடு பாதிக்கப்படும். இவ்வாறு மீனவர்கள் கூறினர்.

Geen opmerkingen:

Een reactie posten