தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 1 november 2014

முப்படையினர் இனங்களுக்கு இடையில் உறவுப் பாலத்தை கட்டியெழுப்புகின்றனர்: ஜனாதிபதி



ஸ்ரீகொத்தா முன்னால் ஐ.தே.க. அரசியல்வாதிகள் ஆர்ப்பாட்டம்
[ சனிக்கிழமை, 01 நவம்பர் 2014, 12:26.06 PM GMT ]
ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்கள் சிலர் கட்சித் தலைமையகமான ஸ்ரீகொத்தா முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கண்டி ஹேவாஹெட்டை பிரதேச சபையின் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களே இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக மேலும் தெரிய வந்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சி மறுசீரமைப்புத்திட்டத்தின் கீழ் ஹேவாஹெட்டைத் தொகுதிக்கு அக்கட்சியின் மத்திய மாகாண சபை உறுப்பினர் சாந்தினி கோன்கஹகே நியமிக்கப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது.
எனினும் சாந்தினி கோன்கஹகேவுக்கும் ஹேவாஹெட்டைக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்றும் தங்கள் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரையே தொகுதி அமைப்பாளராக நியமிக்குமாறு கோரியும் இந்த ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டுள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.
இன்று காலை முதல் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
http://www.tamilwin.com/show-RUmszBTVKXjwy.html
மன்னாரில் காணி அபகரிப்பில் பசில் ராஜபக்ஷ? சூழலியலாளர்கள் குற்றச்சாட்டு
[ சனிக்கிழமை, 01 நவம்பர் 2014, 12:32.43 PM GMT ]
அமைச்சர் பசில் ராஜபக்ஷ தனது அதிகாரத்தை முறைகேடாகப் பயன்படுத்தி மன்னாரில் காணி அபகரிப்பில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மன்னார் வங்காலைப் பிரதேசத்தில் உள்ள வனப்பாதுகாப்பு திணைக்களத்துக்கு உரித்தான காணியில் அரைவாசிக்கும் மேற்பட்ட பகுதியை அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் அவரது ஆதரவாளர்கள் பலாத்காரமாக அபகரித்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இலங்கை சூழல் பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்தவர்கள் பகிரங்க குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்கள்.
நகர்ப்புறம் ஒன்றை அண்டியதாக அமைந்திருக்கும் இந்தக்காணிகளை நகர அபிவிருத்தியின் பெயரால் கையகப்படுத்தி, பின்னர் அமைச்சரும் அவரது ஆதரவாளர்களும் பலாத்காரமாக அபகரித்து வருவதாக அமைப்பின் ஏற்பாட்டாளர் சஜீவ சாமிகர தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBTVKXjwz.html
இலங்கையின் ஐந்தில் ஒரு பங்கு ஆபத்தில்! பகீர் எச்சரிக்கை
[ சனிக்கிழமை, 01 நவம்பர் 2014, 12:56.17 PM GMT ]
இலங்கையின் மொத்த நிலப்பரப்பில் ஐந்தில் ஒரு பங்கு மண்சரிவு மற்றும் மண்ணுக்குள் புதையுண்டு போகும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளதாக எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
தேசிய கட்டுமாண ஆய்வு நிறுவனம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இலங்கையின் நிலப்பரப்பில் சுமார் 12122 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பு இவ்வாறு மண்சரிவு மற்றும் மண்ணுள் புதையுண்டு போகும் ஆபத்தை எதிர்கொண்டுள்ளது.
குறிப்பாக கண்டி, மாத்தளை, நுவரெலியா, ரத்தினபுரி, கேகாலை, களுத்துறை, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களே இவ்வாறு ஆபத்தை எதிர் கொண்டுள்ளதாகவும் பட்டியலிடப்பட்டுள்ளது.
இயற்கை காரணிகள் மற்றும் மனித செயற்பாடுகள் காரணமாக இந்த ஆபத்து ஏற்பட்டிருப்பதாக தேசிய கட்டுமாண ஆய்வு நிறுவனம் தனது எச்சரிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszBTVKXjw0.html
தனக்குத்தானே முரண்படும் ஜனாதிபதி! இலங்கையில் குறைவான தனிநபர் வருமானம் (செய்தித் துளிகள்)
[ சனிக்கிழமை, 01 நவம்பர் 2014, 01:03.45 PM GMT ]
இலங்கையரின் வருடாந்த வருமானம் 3000 டொலர்கள் என்று வரவு செலவுத்திட்ட உரையில் ஜனாதிபதி தெரிவித்த தகவல்கள் பொய் என்பது அம்பலமாகியுள்ளது.
வரவு செலவுத்திட்ட வாசிப்பின் ஆரம்ப உரையின் போது ஜனாதிபதி இலங்கையரின் தனிநபர் வருமானம் 3000 டொலர்கள் என்று குறிப்பிட்டிருந்தார்.
இன்னும் இரண்டு வருடங்களுக்குள் அதனை 7ஆயிரம் அமெரிக்க டொலர்களாக உயர்த்துவது அரசின் நோக்கம் என்றும் ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.
எனினும் ஜனாதிபதியின் வரவு செலவுத்திட்ட அறிக்கையில் இலங்கையில் நான்கில் ஒரு பகுதி மக்களின் வருட வருமானம் 730 டொலர்களை விட குறைவாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்களின் நாளாந்த வருமானம் 260 ரூபா என்றும் அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
இதன் மூலம் தான் முன்வைத்த அறிக்கை மற்றும் அதன் அறிமுக உரை இரண்டுக்கும் இடையில் ஜனாதிபதி தனக்குத் தானே முரண்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கொழும்பு துறைமுக நகரத்தில் 108 ஹெக்டயார் சீனாவுக்கு தாரைவார்ப்பு
உத்தேச கொழும்பு துறைமுக நகரத்தில் 108 ஹெக்டயார் நிலத்தை சீனாவுக்கு தாரைவார்க்கவுள்ளதாக எத்த பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
ஆளுங்கட்சியின் கூட்டணிக்கட்சியான இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் எத்த பத்திரிகை இது தொடர்பாக விசேட கட்டுரையொன்றை வெளியிட்டுள்ளது.
உத்தேச கொழும்பு துறைமுக நகரம், கொழும்பு துறைமுகப்பரப்பை அண்டியதாக கடலில் மண்நிரப்பி உருவாக்கப்படுகின்றது.
இதில் உருவாக்கப்படும் நிலப்பரப்பில் 108 ஹெக்டயார் நிலம், இந்த நகரின் நிர்மாணப் பணிகளில் ஈடுபட்டுள்ள சீன நிறுவனத்துக்கு வழங்கப்படவுள்ளது.
நிர்மாணப் பணிகளில் ஈடுபட்டுள்ள சீனாவின் C C C நிறுவனமும் அரசாங்கமும் இது தொடர்பில் அண்மையில் ஒப்பந்தமொன்றைச் செய்து கொண்டுள்ளன. 99 வருட குத்தகை ஒப்பந்தத்தின் பேரில் இந்த நிலம் கையளிக்கப்படவுள்ளதாகவும் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உத்தேச கொழும்புத் துறைமுக நகரத்தின் மொத்த நிலப்பரப்பு 233 ஹெக்டயார்கள் மட்டுமே. இதில் 63 ஹெக்டயார்கள் பூங்கா, செயற்கை நீர்த்தடாகம், சாலை வசதிகள், மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகளுக்கு ஒதுக்கப்படவுள்ளது.
எஞ்சியுள்ள நிலப்பரப்பில் முக்கால்வாசி நிலத்தை சீனா கபளீகரம் செய்யப் போவதாகவும் எத்த பத்திரிகை தனது செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளது.
அதிலும் 20 ஹெக்டயார் நிலம் சீன நிறுவனத்துக்கு சொந்தமாகவே ஒதுக்கப்படவுள்ளது என்றும் தெரிய வந்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszBTVKXjw1.html

வரவு செலவுத்திட்ட வாக்கெடுப்பில் ஆளுங்கட்சி வெற்றி! பட்டாசு கொழுத்தி கொண்டாட்டம்
[ சனிக்கிழமை, 01 நவம்பர் 2014, 01:20.55 PM GMT ]
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்ட 2015ஆம் ஆண்டுக்கான வரவு செலவுதிட்டம் இன்று பாராளுமன்றத்தில் அதி கூடிய வாக்குகளால் வெற்றி பெற்றுள்ளது.
இதையடுத்து மலையகத்தில் ஹட்டன் பகுதியில் உள்ள மக்கள் பட்டாசு வெடித்து தங்களது சந்தோஷங்களை வெளிப்படுத்தியுள்ளனர்.
வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பின் மீதான வாக்கெடுப்பில் ஆளுங்கட்சி நூறு வாக்குகளால் வெற்றி பெற்றுள்ளது.
இது தொடர்பான வாக்கெடுப்பு இன்று நடைபெற்றபோது ஆளுங்கட்சிக்கு ஆதரவாக 157 வாக்குகள் கிடைத்துள்ளன. எதிராக 57 வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளன.
வரவு-செலவுத்திட்ட வாசிப்பின் மீதான இரண்டாம் கட்ட வாக்கெடுப்பில் ஜாதிக ஹெல உறுமய கட்சி பங்கேற்கவில்லை. அக்கட்சி வாக்கெடுப்பைப் புறக்கணித்திருந்தது.
இதன் மூலம் வரவு செலவுத்திட்ட உரையின் இறுதி வாக்கெடுப்பிலும் ஆளுங்கட்சிக்கு வெற்றி வாய்ப்பு தொடர்பான நம்பிக்கை அதிகரித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

http://www.tamilwin.com/show-RUmszBTVKXjw2.html
முப்படையினர் இனங்களுக்கு இடையில் உறவுப் பாலத்தை கட்டியெழுப்புகின்றனர்: ஜனாதிபதி
[ சனிக்கிழமை, 01 நவம்பர் 2014, 01:33.38 PM GMT ]
இனங்களுக்கு இடையில் நல்லுறவை கட்டியெழுப்பும் பாலமாக முப்படையினர் மாறியுள்ளதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அலரி மாளிகையில் நேற்று நடைபெற்ற கொத்தலாவல பாதுகாப்பு கல்லூரியின் 24வது பட்டமளிப்பு விழாவில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
முப்படையில் உள்ள பலர் இன்று உயர்கல்வியை கற்று வருகின்றனர். அவர்கள் டிப்ளோமா, பட்டப்படிப்பு மாத்திரமல்லது பட்டப்பின்படிப்பையும் மேற்கொண்டு வருகின்றனர்.
இதனால், எதிர்காலத்தில் மிகவும் முன்னேறிய வலுவான புத்திசாலித்தனமான இராணுவம் உருவாகும். அது அறிவை ஆயுதமாக கொண்ட முப்படையாக இருக்கும்.
நாட்டின் பாதுகாப்புக்காக முப்படையினரால் பலவற்றை செய்ய முடியும். தற்போது இனங்களுக்கு இடையில் நட்புறவை கட்டியெழுப்ப முப்படையினர் பல பணிகளை ஆற்றி வருகின்றனர்.
வடபகுதி பிள்ளைகளை தெற்கிற்கும் தென் பகுதி பிள்ளைகளை வடக்கும் கொண்டு செல்கின்றனர். வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையில் விளையாட்டு அணிகளும் பரிமாறிக்கொள்ளப்பட்டு வருகின்றன.
பல்வேறு கலாசார வேலைத்திட்டங்களை படையினர் முன்னெடுத்து வருகின்றனர். முப்படையினர் இன்று இனங்களுக்கு இடையில் நல்லுறவை வளர்க்கும் பாலமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றனர் எனவும் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBTVKXjw3.html

Geen opmerkingen:

Een reactie posten