[ ஞாயிற்றுக்கிழமை, 02 நவம்பர் 2014, 09:20.04 AM GMT ]
இது தொடர்பான இணக்கப்பாடு ஏற்பட்டு ஒன்றரை ஆண்டுகளாகி விட்டன. தமிழ் நாட்டின் எதிர்ப்பு காரணமாகவும் இதற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் தொடுக்கப்பட்ட வழக்கு காரணமாகவும், இந்தக் கப்பல்களின் கட்டுமானப் பணிகள் நிறைவடையாமல் இருந்ததாலும், இந்த விவகாரம் குறித்து அதிகம் பேசாமல் இருந்து வந்தது இந்திய அரசாங்கம்.
கடந்த செப்டெம்பர் மாதம், சீனக் கடற்படையின் சொங் வகை நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று கொழும்புத் துறைமுகத்துக்கு வந்து சென்ற பின்னர் புதுடில்லியின் அணுகுமுறை மாறத் தொடங்கியுள்ளது.
இந்தக்கட்டத்தில் தான், ஆழ்கடல் ரோந்துக் கப்பல்களையும் ஏனைய பல இராணுவத் தளபாடங்களையும் இலங்கைக்கு வழங்கப் போவதாக, இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் இந்திய பாதுகாப்புச் செயலாளர் ஆர்.கே.மாத்தூரின் கொழும்புப் பயணம் இலங்கை பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்ஷவின் புதுடில்லிப் பயணம் இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அடமிரல் ஜயந்த பெரேராவின் இந்தியப் பயணம் என்பனவற்றின் போது இது தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
கோவா சிப்பிங்யார்ட் நிறுவனத்தில் கட்டப்படும் ஆழ்கடல் ரோந்துப் படகுகளை இலங்கைக்கு விற்க இந்தியா கடந்தாண்டு மே மாதம் இணக்கம் தெரிவித்திருந்தது. 105 மீற்றர் நீளமான இந்த இரண்டு ரோந்துக் கப்பல்களும், 2017-18ஆம் ஆண்டு காலப்பகுதிக்குள் விநியோகிக்கப்படும் என்று ஏற்கனவே இணக்கப்பாடு எட்டப்பட்டது.
எனினும், இதற்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கு இன்னமும் முடிவுக்கு வராதுள்ள நிலையில் மீண்டும் இது பற்றி பேச்சு எழுந்திருக்கிறது.
இதற்கு காரணம் சீன நீர்மூழ்கியின் கொழும்பு பயணமேயாகும். சீனாவின் பக்கமே முழுமையாக இலங்கை சாய்ந்து விடாமல் தடுப்பதற்காக இந்தியா போடுகின்ற சிறு தீனிதான் இது.
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே நெருக்கமான இராணுவ ஒத்துழைப்புகள் இருந்தாலும் சீனா அளவுக்கு இந்தியாவினால் இலங்கைக்கு உதவிகளை அள்ளிக் கொடுக்க முடியாத நிலை உள்ளது.
எனவே சீனாவுக்கு ஈடாக இலங்கைக்கு உதவிகளை வழங்கி அதனைத் தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு பதிலாக சீனாவுடன் ஒப்பிடும் போது சிறியளவிலான உதவிகளை வழங்கி முற்றிலுமாக சீனாவிடம் மூழ்கி விடாமல் தடுக்கப் பார்க்கிறது இந்தியா.
சீனாவின் இன்னொரு போட்டி நாடாக விளங்கும் ஜப்பானும் கூட, இலங்கைக்கு ஆழ்கடல் ரோந்துக் கப்பல்களை வழங்கப் போவதாக செய்திகள் வெளியாகின.
கடந்த செப்டெம்பர் மாதம் ஜப்பானிய பிரதமர் சின்ஷோ அபேயின் கொழும்பு பயணத்தின் போது இதற்கான முடிவெடுக்கப்படும் என்று முன்னதாக ஜப்பானிய அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
அதாவது எத்தனை படகுகள் வழங்குவது என்று கொழும்பில் ஜப்பானிய பிரதமர் சின்ஷோ அபே நடத்தும் பேச்சுக்களின் அடிப்படையிலேயே முடிவு செய்யப்படும் என்றும் கூறப்பட்டது.
ஆனால், ஜப்பானியப் பிரதமர் சின்ஷோ அபேயின் கொழும்புப் பயணத்தின் போதோ அதற்கு பின்னரோ இதுபற்றி ஜப்பான் அறிவிப்பு எதையும் விடுக்கவில்லை அதற்கான காரணம் ஏதும் வெளிப்படுத்தப்படவும் இல்லை.
திடீரென ஜப்பான் தனது முடிவை மாற்றிக் கொண்டிருந்தால் அதற்கு சீனாவுடனான அதிகளவு நெருக்கமாகவே இருக்கக் கூடும்.
இந்தியப் பெருங்கடலில் சீனாவின் இராணுவ மற்றும் பொருளாதாரத் தலையீடுகள் அதிகரித்து வருகின்ற நிலையில் சீனாவின் போட்டி நாடுகளான இந்தியாவும் ஜப்பானும் இந்த விடயத்தில் வெவ்வேறு அணுகுமுறைகளைக் கடைபிடிக்கின்றன.
ஆனால் இந்த இரண்டு நாடுகளும் சீனாவுக்கு எதிரான வலுவான போட்டியைக் கொடுக்கத்தக்க பலமான கூட்டு ஒன்றை ஆசியாவில் உருவாக்கி வருகின்றன என்பது வெளிப்படை.
அதுபோலவே தனக்கு அருகே சீனா உருவாக்கி வரும் கோட்டைகளுக்குப் போட்டியாக இந்தியாவும் தனக்கான பிடிமானங்களை வலுப்படுத்த தொடங்கியுள்ளது இந்தியா.
இதன் மூலம் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் எந்தக் காரியத்துக்கும் இடமளிக்க மாட்டோம் என்று இலங்கையின் வாயாலே கூற வைத்திருக்கிறது.
அதேவேளை தென்சீனக்கடலில் எண்ணெய் அகழும் விவகாரத்தில் சீனாவுக்குப் பெரும் தலைவலியைக் கொடுக்கும் நாடான வியட்னாமுடனும் இந்தியா நெருக்கத்தை அதிகமாகியுள்ளது.
கடந்த செப்டெம்பர் மாதம் இந்தியா இலங்கை பாக்கிஸ்தான் ஆகிய மூன்று நாடுகளுக்கான பயணத்தை மேற்கொள்ள சீன ஜனாதிபதி சி ஜின்பிங் திட்டமிட்ட போது முதலில் இந்தியாவுக்கு செல்லவே ஏற்பாடுகள் செய்யப்பட்டன ஆனால் இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் வியட்னாம் பயணத்தை காரணம் காட்டி திகதியை மாற்றியமைக்க கோரியது இந்தியா பின்னர், அதற்கேற்பவே சீன ஜனாதிபதியின் பயணத் திட்டம் திருத்தியமைக்கப்பட்டது.
அது போல சீன ஜனாதிபதியின் பாகிஸ்தான் பயணமும் திட்டமிட்டவாறு அமையவில்லை.
ஆக சீன ஜனாதிபதியை அவரது நிகழ்ச்சி நிரலுக்கமைய செற்படவிடாமல் தமது நிகழ்ச்சி நிரலுக்கேற்பவே செயற்படுவதற்கு இணங்க வைத்திருந்தது இந்தியா.
அதற்காக இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்குமார் டோவல் பெய்ஜிங் சென்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இப்போது சீனாவுடன் சர்ச்சைக்குரிய கடல் எல்லையை கொண்டுள்ள வியட்னாமை பலப்படுத்துவதற்கும் இந்தியா உதவ முன்வந்துள்ளது.
கடந்த வாரம் புதுடில்லிக்கு பயணம் மேற்கொண்டிருந்த வியட்னாம் பிரதமர் நுயென் ரன் டங்குடன் நடத்திய பேச்சுகளின் போது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வியட்னாமுக்கு பாதுகாப்பு உதவிகளை வழங்க இணங்கியுள்ளார். அவையொன்றும் சாதாரணமானவையல்ல.
சீனாவுடன் எல்லைப் பிரச்சினையை கொண்டுள்ள தென்சீனக்கடல் பகுதியில் வியட்னாமின் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காக 100 மில்லியன் டொலர் கடனுக்கு 4 ஆழ்கடல் ரோந்துப் படகுகளை வழங்கவுள்ளது இந்தியா.
இதுமட்டுமின்றி ரஷ்ய இந்தியக் கூட்டுத் தயாரிப்பான பிரம்மோஸ் ஏவுகணையும் வியட்னாமுக்கு வழங்கப்போகிறது இந்தியா.
இவை தென் சீனக்கடலில் நடமாடித்திரியும் சீன நீர்மூழ்கிகளை கட்டுப்படுத்துவதற்காக இந்தியா வழங்கப் போகும் உதவிகளாகும்.
கொழும்புக்குள் சீன நீர்மூழ்கிக்கு காலடி எடுத்து வைத்ததற்கு இதன் மூலம் இந்தியாவும் சீனாவுக்கு பதிலடி கொடுத்துள்ளது.
இன்னொரு பக்கத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாகவே இந்திய நீர்மூழ்கிகளில் வியட்னாம் படையினருக்கு பயிற்சி அளித்து வருகிறது இந்தியா.
இந்த எண்ணிக்கையை மேலும் அதிகரிக்குமாறும் வியட்னாம் கோரியுள்ளது. காரணம் ஏற்கனவே இரண்டு நீர்மூழ்கிகளை கொண்டுள்ள வியட்னாம் மூன்றாவது நீர்மூழ்கியை ரஷ்யாவிடம் வாங்கவுள்ளது.
இவ்வாறாக சீனாவும் இந்தியாவும் பொருளாதார ரீதியான நெருக்கமடைந்து வந்தாலும் எல்லை பிரச்சினை மற்றும் இந்தியப் பெருங்கடலின் பாதுகாப்பு விவகாரத்தில் இருநாடுகளும் வெளிப்படையானதும் மறைமுகமானதுமான போட்டியிலே ஈடுபட்டுள்ளன.
அதுவும் சீனா தனது நீர்மூழ்கி பலத்தை வெளிப்படையாகவும் இரகசியமாகவும் பெருக்கிக் கொண்டுள்ள நிலையில் தனது ஆற்றலை பொத்தி வைத்திருக்க முடியாமல் அவதிப்படுகிறது.
எலி கொழுத்தால் வளையில் தங்காது என்றொரு பழமொழி இருக்கிறது. அதுபோலதான் தனது நீர்மூழ்கி பலத்தை வெகுவாக அதிகரித்துக் கொண்டுள்ள சீனாவும் அதனை வைத்துக் கொண்டு சும்மாயிருக்க முடியாமல் தான் இந்தியபெருங்கடலில் இறக்கி விட்டுள்ளது. இந்தியா இந்த சவாலை தனக்கான நேரடி அச்சுறுத்தலாக பார்க்கிறது.
இதன் விளைவு இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் ஆயுதப் போட்டிதான் அதிகரித்துள்ளது. பனிப்போர் காலத்து ஆயுதப் போட்டிக்கு சிறிய நாடுகள் அகப்பட்டுக் கொண்டது போன்ற நிலை சீனாவின் இப்போதைய அணுகுமுறையால் மீண்டும் ஏற்படத் தொடங்கியுள்ளது.
இது இந்தியப் பெருங்கடலின் அமைதிக்கு விரைவிலேயே ஆபத்தாக மாறி விடக் கூடும்.
ஹரிகரன்
http://www.tamilwin.com/show-RUmszBTWKXip3.html
ஜனாதிபதியின் பிறந்தநாளை முன்னிட்டு நாடு முழுவதும் மருத்துவ முகாம்
[ ஞாயிற்றுக்கிழமை, 02 நவம்பர் 2014, 09:57.06 AM GMT ]
தேசிய மருத்துவமனை மற்றும் சுகாதார கல்விப் பிரிவின் அதிகாரிகளைக் கொண்டு இந்த மருத்துவ முகாம் நடத்தப்படவுள்ளது.
கொழும்பு மாளிகாவத்தையில் ஆரம்பித்து நாடு முழுவதும் நடத்தப்படவுள்ள இந்த முகாம், முற்றுமுழுதாக தேர்தல் பிரச்சார நோக்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
அரச வளங்கள் தேர்தல் நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படுவது தொடர்பில் சுகாதாரத் திணைக்கள அதிகாரிகள் அதிருப்தியடைந்துள்ளனர்.
எனினும் அமைச்சர் மைத்திரிபால சிரிசேனவின் உத்தரவு என்பதால் அதிகாரிகளால் இதனை மீற முடியாத நிலை காணப்படுவதாக தெரிய வந்துள்ளது.
சுயாதீன தொலைக்காட்சி நிறுவனத்தின் ஊடக அனுசரணையில் நடைபெறும் இந்த மருத்துவ முகாம் செயற்திட்டம் இவ்வாரம் தொட்டு ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
http://www.tamilwin.com/show-RUmszBTWKXip5.html
புலிகளை வைத்து நடக்கும் தேர்தல் வியாபாரம்
[ ஞாயிற்றுக்கிழமை, 02 நவம்பர் 2014, 10:25.41 AM GMT ]
இந்தப் பலப்பரீட்சையில், மீண்டும் விடுதலைப் புலிகள் விவகாரம்தான் முதன்மை பெற்றுள்ளது.
விடுதலைப் புலிகளுடன் கொண்டிருந்த தொடர்பைக் காரணம் காட்டி, மறு தரப்பை துரோகியாகக் காட்டுவதும், விடுதலைப் புலிகளை அழித்து அல்லது அழிக்க முயன்றது என்று கூறி தம்மைப் பெருமைப்படுத்திக் கொள்வதும் தான் பிரதான அரசி யல் கட்சிகள் இரண்டின் தலைவர்களின் வேலையாக மாறியுள்ளது.
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மூன்றாவது தடவையும், போட்டியிடுவார் என்பது உறுதியாகியுள்ளது.
அதற்கு அவர் பல்வேறு சட்டச்சிக்கல்க ளையும் தாண்ட வேண்டிய நிலை வந்தாலும் அதற்கு அச்சமின்றி அடுத்த முறையும் போட்டியிடுவதற்குத் தயாராகி வருகிறார்.
மறுபக்கத்தில், பொதுவேட்பாளர் என்ற நிலை மாறி ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்கவே பெரும்பாலும் போட்டியிடுவார் என்ற நிலை உருவாகி விட்டது.
சஜித் பிரேமதாச போன்ற, ரணிலுக்குத் தலைவலி கொடுத்து வந்த ஐ.தே.க.வின் அடுத்த மட்டத் தலைவர்களே ரணிலை ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்தத் தொடங்கி விட்டனர்.
கிட்டத்தட்ட ரணில் இப்போது பலிக்கடா போன்ற நிலையில் இருக்கிறார்.
அவரது தலைமையில் ஐ.தே.க. பெருமளவு தோல்விகளைக் கண்டிருக்கிறது.
இம்முறையும் தோல்வியுற்றால், ரணில் ஐ.தே.க.விலிருந்து ஓரங்கட்டப்படப் போவது உறுதி.
அதனால்தான், சஜித் பிரேமதாச போன்ற அடுத்த நிலை போட்டித் தலைவர்கள் ரணிலை முன்னிலைப்படுத்தி வருகின்றனர்.
இந்தமுறை ஜனாதிபதித் தேர்தலில், சிறு பான்மையினரின் வாக்குகள்தான் தீர்க்கமான முடிவைத் தருமென்று பரவலான கருத்து, ஆய்வாளர்களிடையே உள்ளது.
குறிப்பாக தமிழ், முஸ்லிம்களின் வாக்குகள்தான் தீர்மானிக்கும் சக்தியாக விளங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தநிலையில், ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் கடுமையான சவால்களை எதிர் கொண்டு வருகின்றனர்.
ஒரு பக்கத்தில் சிங்கள பௌத்த கடும் போக்குவாத ஜாதிக ஹெல உறுமய போன்ற கட்சிகள் அரசாங்கத்துக்கு கடும் அழுத்தம் கொடுத்து வருகின்றன.
சிங்கள பௌத்த கடும்போக்குவாத கட்சி களின் அழுத்தங்களுக்கு அடிபணிந்தால், அது சிறுபான்மையின மக்களிடமிருந்து தம்மை மேலும் அந்நியப்படுத்தி விடுமென்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நினைக்கிறார்.
இந்தளவுக்கும், மலையகத் தமிழ் மக்களிடம் செல்வாக்குப் பெற்றுள்ள இ.தொ.கா. போன்ற அரசாங்கத்துடன் உள்ள பெரும்பாலான கட்சிகள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கே ஆதரவு தெரிவித்துள்ளன.
அதுபோல, முஸ்லிம்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், உள்ளிட்ட பெரும்பாலான கட் சிகளும் அரசாங்கத் தரப்பிலேயே நிற்கின்றன.
இவை இன்னமும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக தீர்மானம் எடுக்காவிடினும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவைச் சார்ந்தே நிற்பதற்கு வாய்ப்புகள் உள்ளன என்பதை முஸ்லிம் தலைமைகளின் கருத்துகள் புலப்படுத்துகின்றன.
இருந்தாலும், சிறுபான்மையின மக்களின் ஆதரவைத் தம்மால் பெறமுடியாது என்ற உறுத்தல் அரசாங்கத்துக்கு இருந்து கொண்டேயிருக்கிறது.
இதனால் கடும்போக்கு சிங்கள பௌத்த வாதக் கட்சிகளுடன் சமரசம் செய்து கொள்ளவும் முடியாமல், அதேவேளை, குறிப்பிட்ட சில தமிழ், முஸ்லிம் கட்சிகளின் ஆதரவை நம்பி கடும்போக்கு பௌத்த கட்சிகளை இழக்கவும் விரும்பாத ஓர் இக்கட்டான நிலை அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில், கொள்கை ரீதியாகவோ, அல்லது திட்டங்களை முன்வைத்தோ வரப்போகும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற முடியாது என்பதை இரண்டு பிரதான கட்சிகளின் வேட்பாளர்களும் உணர்ந்திருப்பதாகத் தெரிகிறது.
இந்த அரசியல் வங்குரோத்து நிலை தான், 2009ஆம் ஆண்டு மே மாதம் முள்ளி வாய்க்காலில் வைத்து அழிக்கப்பட்ட விடுதலைப் புலிகளை மீண்டும் துணைக்குத் தேட வேண்டிய நிலையை இரு கட்சிகளுக்கும் உருவாக்கி விட்டுள்ளது.
ஐந்தரை ஆண்டுகளுக்கு முன்னர் அழிக்கப்பட்ட விடுதலைப் புலிகளை முன்னிறு த்தி ஐ.தே.க.வும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் பிரசாரம் செய்யத் தொடங்கியுள்ளன.
தேர்தல் காலங்களில்தான் பல உண்மைகளும், இரகசியங்களும் வெளிவருவதுண்டு.
விடுதலைப் புலிகள் பலமாக இருந்த காலகட்டங்களில், தேர்தல்களில் தீர்மானிக்கும் சக்தியாக இருந்துள்ளனர்.
தேர்தல்களில் அவர்கள் போட்டியிடாத போதிலும், அவர்களின் கண்ணசைவுக்காகப் பிரதான கட்சிகள் காத்திருந்தது வரலாறு.
இப்போது, விடுதலைப் புலிகளுடனான கடந்தகாலத் தொடர்புகளைக் கிண்டிக் கிளறியும், புலம்பெயர் தமிழர்களுடன் கொண்டுள்ள உறவுகளைச் சுட்டிக்காட்டியும், சிங்கள பௌத்த வாக்காளர்களைக் கவர இரு கட்சிகளுமே முயற்சிக்கின்றன.
அதாவது, ரணில் விக்கிரமசிங்கவும், மஹிந்த ராஜபக்சவும் ஒருவரை ஒருவர் புலியாகக் காட்டிக் கொள்ள முனைந்துள்ளனர்.
விடுதலைப் புலிகள் இயக்கம் மீது ஐரோப்பிய ஒன்றியம் விதித்திருந்த தடையை, ஐரோப்பிய நீதிமன்றம் அண்மையில் நீக்கியிருந்தது.
இதையடுத்தே, புலிகள் விவகாரம் சூடுபிடித்துள்ளது.
இந்த தடைநீக்கத்துக்கும் ரணிலுக்கும் தொடர்புள்ளது என்றும், அவரது லண்டன் பயணத்துக்குப் பின்னரே இது இடம்பெற்றுள்ளதாகவும் அரசாங்கம் பிரசாரம் செய்தது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவே பகிரங்க மேடைகளில் இந்தக் குற்றச்சாட்டை சுமத்தினார்.
சுவரொட்டிகள் மூலம், ரணில் மீது சேறு பூசும் முயற்சிகள் நடந்தன.
ஆனால், புலிகள் மீதான தடையை நீடிப்பதற்கு அரசாங்கம் எதையும் செய்யவில்லை என்று ரணில் குற்றம்சாட்டுகிறார்.
இதற்கிடையே, மலேசியாவில் புலிகளை சந்தித்துப் பேசியதாக அடுத்த குற்றச்சாட்டை அரசாங்கம் முன்வைத்தது.
அதனை நிராகரித்துள்ள ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, நியூயோர்க்கில் தாம் சந்தித்த புலம்பெயர் தமிழர்கள் யார் என்பதை வெளிப்படுத்த வேண்டும் என்று கோரியுள்ளார்.
அப்படி யாரையும் ஜனாதிபதி சந்திக்கவில்லை என்று பாராளுமன்றத்தில் அமைச்சர் பீரீஸ் தெரிவித்துள்ளார்
ஆக, இரண்டு தரப்புகளுமே, இப்போதும், மறுதரப்பு விடுதலைப் புலிகள் அல்லது அதன் ஆதரவு சக்திகளுடன் தொடர்புகளை வைத்துள்ளதாக காட்டிக் கொள்வதற்கு முனைகின்றன.
ஒரு காலகட்டத்தில் இரண்டு கட்சிகளுமே தமக்கு சார்பாக நடந்து கொள்வதற்காக, விடுதலைப் புலிகளிடம் நேரடியாகவோ மறைமுகமாகவோ பேச்சுக்களை நடத்தியிருந்தன – பேரம் பேசியிருந்தன என்பது உண்மை.
1988ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்ட தனது தாயார், சிறிமாவோ பண்டாரநாயக்கவுக்கு புலிகளின் ஆதரவைப் பெறுவதற்காக, அனுரா பண்டாரநாயக்க மணலாறுக் காட்டுக்குச் சென்று பேச்சு நடத்தியிருந்தார்.
அங்கு அவர் பாறையொன்றில் வழுக்கி விழுந்ததால், அந்த இடம் "அனுரா கல்" என்று புலிகளால் அந்தக் காலகட்டத்தில் அழைக்கப்பட்டது.
2005ம் ஆண்டு, ஜனாதிபதி தேர்தலின் போது, வடக்கில் தேர்தலைப் புறக்கணிக்க விடுதலைப் புலிகள் மறைமுகமாக முடிவெடுத்தனர்.
அப்போது, விடுதலைப் புலிகளுக்கு கோடிக்கணக்கான பணம் கொடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்திருந்தன.
அதுபோலவே, புலிகளின் முடிவை மீள்பரிசீலனை செய்யுமாறு ரணில் விக்கிரமசிங்கவும் கூட, பெ.சந்திரசேகரன் போன்ற மலையகத் தமிழ்த் தலைவர்களைப் புலிகளிடம் தூது அனுப்பியிருந்தார்.
இப்போது மறுதரப்புக்குப் புலிவால் கட்ட முனையும் ரணிலும், மஹிந்தவும் தமது கட்சிகள் கடந்த காலத்தில் புலிகளின் ஆதரவுக்காகவோ அவர்களின் கண்ணசைவுக்காகவோ ஏங்கி நின்ற வரலாற்றை மறந்து விட்டதாகவே தோன்றுகிறது.
ரணில் விக்கிரமசிங்கவை புலிகளின் ஆதரவாளராகக் காட்டியும், புலிகளை தாமே அழித்தது என்று தம்பட்டம் அடிக்கும் அரசாங்கத்தின் வாயை அடைப்பதற்காக சஜித் பிரேமதாச, நீண்டகாலமாக உறங்கியிருந்த ஓர் உண்மையை உடைத்திருக்கிறார்.
ஆர்.பிரேமதாச ஆட்சியிலிருந்த போதே, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனைக் கொல்வதற்கு முயற்சி எடுக்கப்பட்டதாகவும், அதற்காகப் புலிகளின் பிரதித் தலைவராக இருந்த மாத்தயாவுக்கு ஆயுதங்களும் பணமும் ஐ.தே.க. அரசாங்கத்தினால் கொடுக்கப்பட்டதாகவும் அவர் அண்மையில் ஒரு கூட்டத்தில் கூறியிருக்கிறார்.
புலிகளுக்கு ஆயுதங்களைக் கொடுத்து அவர்களைப் பலப்படுத்தியது ஐ.தே.க. அரசாங்கமே என்ற குற்றச்சாட்டு பல காலமாக இருந்து வந்த நிலையில்தான், பிரபாகரனைக் கொல்வதற்கு அரசாங்கம் வகுத்திருந்த சூழ்ச்சி வெளிப்பட்டுள்ளது.
ஆனால் அந்தத் திட்டம் தோல்வியில் முடிந்ததாகவும், சஜித் பிரேமதாச கூறியிருக்கிறார்.
ஏற்கனவே, புலிகளை வென்றது தாமே என்று அரசாங்கம் கொண்டாடிய போது, கருணாவைக் கொண்டு புலிகள் இயக்கத்தில் பிளவை ஏற்படுத்தி, அவர்களைப் பலவீனப்படுத்தியது தாமே என்று ஐ.தே.க. தலைவர்கள், பகிரங்கமாகவே கூறியிருந்தனர்.
ஐ.தே.க. புலிகளைப் பலவீனப்படுத்த முயன்றதாகவும், பிரபாகரனைக் கொல்ல முயன்றதாகவும், அதன் தலைவர்கள் ஒப்புக்கொண்ட இரண்டு காலப்பகுதிகளுமே, புலிகளுடன் அவர்கள் பேச்சு நடத்திய காலப்பகுதிகளாகும்.
ஒரு பக்கத்தில், புலிகளுடன் பேசிக் கொண்டே அவர்களை அழிக்கத் திட்டமிட்டோம் என்று ஐ.தே.க. இப்போது வெளிப்படையாகவே ஒப்புக்கொள்ளும் நிலைக்கு வந்திருக்கிறது.
அதாவது, சமாதான முயற்சிகளில் ஐ.தே.க. அரசாங்கம் நேர்மையாக இருந்திருக்கவில்லை என்பதை இது காட்டுகிறது.
ஆனால், அந்தக்கால கட்டங்களில் தாம் சமாதான முயற்சிகளில் அர்ப்பணிப்புடன் ஈடுபட்டதாகவும் ஐ.தே.க. காட்டிக் கொண்டது.
இப்போது தேர்தலில், சிங்கள பௌத்த மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக, புலிகளை அழிக்கத் தாம் மேற்கொண்ட சூழ்ச்சிகளையும் கூச்சமில்லாமல் ஒப்புக்கொள்ள முன்வந்திருக்கிறது.
வரப்போகும் ஜனாதிபதித் தேர்தலில், இதுபோன்ற இன்னும் பல இரகசியங்களும், உண்மைகளும் சந்திக்கு வரக்கூடும்.
ஏனென்றால், மீண்டும் புலிகளை வைத் துத்தான் தமது அரசியல் வியாபாரத்தை நடத்த பிரதான கட்சிகள் முடிவு செய்து விட்டன.
எனவே, இதுபோன்ற உணர்வுபூர்வமான விவகாரங்களை கிளப்பிவிட்டு, சிங்கள பௌத்த வாக்காளர்களின் ஆதரவை இழுக்கவே இருகட்சிகளும் முயற்சிக்கும்.
இது, கடந்த காலங்களில், சமாதான முயற்சிகளில் விடுதலைப் புலிகளின் நேர்மையின் மீது சந்தேகம் கொண்டிருந்தவர்கள், தமது நிலைப்பாட்டை மறு பரிசீலனை செய்ய வைக்கும் என்பதை இரு கட்சிகளுமே மறந்து விட்டன.
(என்.கண்ணன்)
http://www.tamilwin.com/show-RUmszBTWKXip6.html
Geen opmerkingen:
Een reactie posten