தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 5 november 2014

கட்டுநாயக்க விமான நிலையத்தின் செயற்பாடுகள் ஸ்தம்பிதம்- பேச்சுவார்த்தை- போராட்டம் முடிவு!

விமான நிலையம் மற்றும் விமான சேவை சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 
விமான சேவை சங்க ஊழியர்களின் சம்பள பிரச்சினையை அடிப்படையாக வைத்து இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஆளும் கட்சியின் தொழிற்சங்கமான ஸ்ரீலங்கா சுதந்திர ஊழியர் சங்கம் இந்த தொழிற்சங்கப் போராட்டத்தினை முன்னெடுத்துள்ளது. இதன் காரணமாக விமான நிலையத்தில் மின்சாரம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக எமது கொழும்பு செய்தியாளர் தெரிவித்தார்.
கட்டுநாயக்க விமான நிலையம் மற்றும் விமான சேவை நிறுவனத்தின் ஊழியர்கள் இன்று காலை 9 மணி முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சம்பள அதிகரிப்பு உட்பட 5 கோரிக்கைகளை முன்வைத்து தாம் இந்த போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திர ஊழியர் சங்கத்தின் தலைவர் என்.டப்ளியூ.பீ. முஹாந்திரம் தெரிவித்தார்.
10 ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு, மருத்துவ காப்பீடு, ஊழியர்களுக்கான கடனுதவி, விமான நிலைய பாதுகாப்பு துறையின் தலைமை அதிகாரியை நீக்க வேண்டும், ஊழியர்களுக்கு ஓய்வு அறையை வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை தாம் முன்வைத்து போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த பிரச்சினைகளை தீர்ப்பதற்காக அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் அது தோல்வியடைந்ததால், இறுதியில் தாம் இந்த முடிவுக்கு வந்தாகவும் சுதந்திர ஊழியர் சங்கத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு காரணமாக விமான சேவைகளுக்கு தடையேற்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விமான நிலைய ஊழியர்களுடன் அமைச்சர் பேச்சுவார்த்தை! பாதுகாப்புக்கு கமாண்டோக்கள் குவிப்பு
கட்டுநாயக்க விமான நிலையத்தில் பணி பகிஷ்கரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அமைச்சர் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் விரைந்து கொண்டிருக்கின்றனர்.
தொழிற்சங்க பிரதிநிதிகளின் வேலை நிறுத்தம் தொடர்பான தகவல் கிடைக்கப்பெற்றதும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சர் பிரியங்கர ஜயரத்தினவைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு வறுத்தெடுத்துள்ளார்.
இதனையடுத்து கட்டுநாயக்க விமான நிலையத்தில் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள ஊழியர் சங்கத்தின் பிரதிநிதிகளுடன் அமைச்சர் பிரியங்கர ஜயரத்தின தொலைபேசி வாயிலாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.
மேலும் விமானநிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் தலைவருடனும் அமைச்சர் ஜயரத்தின தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடியுள்ளார்.
இதனையடுத்து நிலைமைகளை நேரில் அவதானித்து தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகள் கட்டுநாயக்க விரைந்து கொண்டிருப்பதாக அமைச்சரின் பாதுகாப்பு அதிகாரி கொழும்பு டுடே செய்திச் சேவைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்புரையின் பேரில் விமான நிலையத்தின் உள்வட்டம் உடனடியாக விமானப்படையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
வெளிப்பகுதி பாதுகாப்புக்காக விசேட கமாண்டோக்கள் பெரும் எண்ணிக்கையில் தருவிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விமான நிலைய தொழிற்சங்கப் போராட்டம் முடிவுக்கு வந்தது
விமான நிலைய பணியாளர்களால் மேற்கொள்ளப்பட்டிருந்த தொழிற்சங்கப் போராட்டம் இணக்கப்பாட்டுடன் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.
விமானசேவைகள் அமைச்சர் பிரியங்கர ஜயரத்தின, பிரதியமைச்சர் சரத் குணரத்தின, ஜனாதிபதி செயலக அதிகாரியொருவர் ஆகியோர் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தையில் இருதரப்பும் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளனர்.
அதன் பிரகாரம் தற்போதைக்கு ஊழியர்களுக்கு மாதாந்த ஊக்குவிப்புக் கொடுப்பனவாக 8 ஆயிரம் வீதம் வழங்கவும் ஒக்டோபர் மாத்திலிருந்து அமுலுக்கு வரும் வகையில் கொடுப்பனவை வழங்குவது என்றும் இணக்கம் ஏற்பட்டுள்ளது.
எனினும் ஊழியர்கள் மாதாந்த ஊக்குவிப்புக் கொடுப்பனவாக பத்தாயிரம் ரூபா கோரிக்கையை முன்வைத்திருந்தனர்.
தொழிலாளர்களின் ஏனைய கோரிக்கைகள் தொடர்பில் இன்னும் ஒரு வாரகாலத்துக்குள் பதிலளிக்க நடவடிக்கை எடுப்பது என்றும் அமைச்சர்கள் தரப்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
விமான நிலைய சுதந்திர ஊழியர் சங்கத்தின் ஊழியர்கள் இன்று அதிகாலை விமான நிலையத்தின் ஒரு பிரிவை சுற்றிவளைத்து விமான நிலையத்தின் தலைவர் பிரசன்ன விக்ரமசூரியவை பதவியில் இருந்து நீக்குமாறு கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பிரசன்ன விக்ரமசூரிய என்பவர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் உறவு முறை மகனாவார்.
விமான நிலைய தலைவர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் அவருக்கு ஆதரவாக எவரும் குரல் கொடுக்கவில்லை என தெரியவருகிறது.
இதனையடுத்து தொழிற்சங்க ஊழியர்களின் பணிப் பகிஷ்கரிப்பு போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.
விமான நிலையத்தின் செயற்பாடுகள் தற்போது வழமைக்குத் திரும்பியுள்ளன. எனினும் பாதுகாப்புக்கு தருவிக்கப்பட்ட விமானப்படை மற்றும் கமாண்டோக்கள் தொடர்ந்தும் அங்கு தரித்து நிற்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
http://www.tamilwin.com/show-RUmszBTZKXhw7.html

Geen opmerkingen:

Een reactie posten