தேர்தல் திணைக்களம் பற்றிய கமலேஸ் சர்மாவின் கருத்து சரியானதே என தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்கள் தெரிவித்துள்ளன. இலங்கை தேர்தல் திணைக்களம் பூரண சுயாதீனத்தன்மையுடன் இயங்குவதில்லை என பொதுநலவாய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் கமலேஸ் சர்மா குற்றம் சுமத்தியிருந்தார். இந்தக் குற்றச்சாட்டு சரியானதே என பெபரல், கபே மற்றும் தேர்தல் கண்காணிப்பிற்கான மனித உரிமை வலையமைப்பு அமைப்பு ஆகியன தெரிவித்துள்ளன.
உத்தியோகப் பற்றற்ற ரீதியில் தேர்தல் பிரச்சாரப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளன. ஜனாதிபதி நாள் தோறும் பொதுத்துறை ஊழியர்களை அழைத்து நிகழ்ச்சிகளை நடத்தி வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளனர். தாதியர், கிராம உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் இவ்வாறு அழைக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளனர்.
நாள் தோறும் 5000த்திற்கும் மேற்பட்டவர்கள் அலரி மாளிகைக்கு அழைக்கப்பட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளனர். தேர்தல் தொடர்பில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படாத போதிலும் அதற்கான அடிப்படை முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
அண்மையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, குருணாகலில் தேர்தல் செயற்பாட்டு காரியாலயம் ஒன்றை திறந்து வைத்துள்ளார் எனவும் இதற்கு பல அரச அதிகாரிகள் ஊழியர்கள்அழைக்கப்பட்டிருந்தனர் எனவும் பெபரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.
காரியாலய திறப்பு விழா நிகழ்வுகளுக்கு இதேவிதமாக அரச அதிகாரிகளை அழைக்க வேறும் தரப்பினருக்கு சந்தர்ப்பம் கிடையாது என குறிப்பிட்டுள்ளார். இவ்வாறான ஓர் நிலைமை ஆரோக்கியமானதல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தேர்தல் முறைமையின் குறைபாடாகவே இதனை நோக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். ஆளும் கட்சியினரின் செயற்பாடுகள் சுயாதீனமான தேர்தலுக்கு வழியமைக்குமா என்பது சந்தேகமே என தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அரசாங்க ஊழியர்கள் மீது தேவையற்ற அழுத்தங்களை பிரயோகிக்கும் நடவடிக்கையானது தெளிவான தேர்தல் சட்ட மீறலாகும் என தேர்தல் கண்காணிப்பிற்கான மனித உரிமை வலையமைப்பு அமைப்பின் சட்ட ஆலோசகர் சமிந்த குணசேகர தெரிவித்துள்ளார்.
சுயாதீனமான முறையில் தேர்தலை நடாத்துவதற்கு காவல்துறையினரின் ஒத்துழைப்பு அவசியம் எனவும், காவல்துறையினரின் மீது அழுத்தங்கள் பிரயொகிக்கப்படும் போது சுயாதீனமான தேர்தல்களை எதிர்பார்க்க முடியாது என குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, தேர்தல் கண்காணிப்பு திணைக்களத்தின் நன்மதிப்பு தொடர்பில் சர்ச்சை நிலைமை ஏற்பட்டுள்ளதாக கபே அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரஞ்சித் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்துள்ளார். நிகழ்ச்சி நிரலின் அடிப்படையிலேயே செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். தேர்தலின் நேர்மைத்தன்மை தொடர்பில் பிரச்சினை காணப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார். |
Geen opmerkingen:
Een reactie posten