முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் தேர்தல் வியூயகம் வெற்றியளிக்கவில்லையா என்ற கேள்வி எழுப்பப்பட்டு வருகின்றது. ஆளும் கட்சியைச் சேர்ந்த பெரும் எண்ணிக்கையிலான உறுப்பினர்கள் எதிர்க்கட்சியுடன் இணைந்து கொள்ள உள்ளதாக உள்நாட்டு வெளிநாட்டு ஊடகங்களில் பிரச்சாரம் செய்யப்பட்டது.
குறிப்பாக வரவு செலவுத் திட்ட மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பின் போது ஆளும் கட்சிக்கு அதிர்ச்சி வைத்தியம் காத்திருப்பதாகவே சித்தரிக்கப்பட்டது. எனினும், கடந்த வரவு செலவுத் திட்டங்களை விடவும் அதிக மேலதிக வாக்குகளுடன் 2015ம் ஆண்டுக்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ சமர்ப்பித்த வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டது.
பெரும் எண்ணிக்கையிலான ஆளும் கட்சி உறுப்பினர்கள் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும், ஒரு உறுப்பினர் கூட வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பின் போது எதிரணியில் இணைந்து கொள்ளவில்லை. ஒரு தொகுதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் மற்றும் கட்சி ஆதரவாளர்களின் ஆதரவினையும் ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட ஏனைய எதிர்க்கட்சிகளின் ஆதரவினையும் ஒன்று திரட்டி ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டுவதே முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவின் வியூகமாக அமைந்துள்ளது.
எனினும், தற்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் எதிர்க்கட்சியில் இணைந்து கொள்வதற்கு ஏதோ ஒர் வகையிலான தயக்கத்தை காண்பித்து வருவதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சில இணைய ஊடகங்களில் கட்சித் தாவப் போகும் ஆளும் கட்சி உறுப்பினர்களின் பெயர் விபரங்கள் பட்டியலிடப் பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் கொத்து கொத்தாக எதிர்க்கட்சியில் இணைந்து கொள்வார்கள் என்ற காரணத்தின் அடிப்படையிலேயே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் மைத்திரிபால சிறிசேனவை ஐக்கிய தேசியக் கட்சி பொது வேட்பாளராக ஏற்றுக்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. சுதந்திரக் கட்சியின் ஒரு சில உறுப்பினர்களின் ஆதரவினை பெற்றுக்கொள்வதற்காக ஐக்கிய தேசியக் கட்சி ஜனாதிபதி வேட்பாளர் பதவியை தியாகம் செய்திருக்காது என்பது வெளிப்படையான உண்மையாகும்.
ஏனெனில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை தோற்கடிக்க வலுவான ஓர் எதிர்க்கட்சி உருவாக்கப்பட வேண்டும் என்ற காரணத்தினாலேயே ஐக்கிய தேசியக் கட்சி மைத்திரிபாலவை பொது வேட்பாளராக ஏற்றுக்கொண்டது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் அழுத்தம் காரணமாகவே இவ்வாறு ஆளும் கட்சியினர் எதிர்க்கட்சியில் இணைந்து கொள்வதற்கு பின்வாங்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவிற்கு எதிராக அப்போதைய ஆளும் கட்சியினர் இவ்வாறு நம்பிக்கையில்லா தீர்மானம் ஒன்றை நிறைவேற்ற ஆயத்தமாகி பின்னர் திடீரென, ஜனாதிபதி பிரயோகித்த அழுத்தம் காரணமாக அந்த திட்டம் கைவிடப் பட்டிருந்தமைக்கு நிகராக தற்போதைய நிலைமையை சில அரசியல் ஆய்வாளர்கள் விபரிக்கின்றனர்.
எது எவ்வாறாயினும் ஜனாதிபதி தேர்தல் நடைபெறுவதற்கு இன்னமும் சுமாh ஒன்றரை மாதங்கள் காணப்படுவதாகவும், தற்போதைக்கு எவ்வித எதிர்வுகூறல்களையும் திடமாக வெளியிட முடியாது எனவும் அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆளும் கட்சியினரை இணைத்துக்கொள்ளும் முயற்சிகளை ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக தற்போதைய சூழலில் ஜனாதிபதி பக்கம் இருப்பவர்கள் முழுமையாகவோ பாதியாகவோ மறுபக்கம் இழுத்துவரப்பட்டால், பாராளுமன்றம் கலைக்கப்படலாம், ஒத்தி வைக்கப்படலாம், ஜனாதிபதியை எதிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்புகள் வாபஸ்பெறப்படலாம், குறைக்கப்படலாம் என்ற பல்வேறு விடயங்களை கருத்தில் கொண்டே எதிரணியின் வியூகங்கள் அமைக்கப்படுவதாக எதிரணி நகர்வுகளில் இருக்கும் முக்கியஸ்த்தர் தெரிவித்தார்.
அந்த வகையில் இறுதி நேரத்தில் எதிர்க்கட்சியுடன் இணைந்து கொள்ள சிலர் ஆயத்தமாகி வருவதாக எதிர்க்கட்சியின் உயர்மட்டத்தினர் தெரிவிக்கின்றனர். எவ்வாறெனினும் பணம் கொடுத்தும் வேறும் வழிகளிலான அழுத்தங்களின் மூலமும் ஆளும் கட்சியின் உறுப்பினர்களை தக்க வைத்துக்கொள்வதில் அரசாங்கம் அதிக சிரத்தை எடுத்துக்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது
Ragta-01
Maithripala