தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 8 oktober 2014

தமிழர்களின் ஒற்றுமையை வென்றெடுப்பதே மிகப் பெரிய சவால்: திருமாவளவன் - ராஜபக்ச போர்க்குற்றவாளியென உலக அரங்கில் நிறுவ வேண்டும்: மாவை!



தமிழ்ச் சமூகத்தின் ஒற்றுமையை வென்றெடுப்பதுதான் நாம் சந்திக்க வேண்டிய மிகப்பெரிய சவாலாக உள்ளது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
ஜேர்மனியில் நடைபெற்ற உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் 12வது தமிழ்ப் பண்பாட்டு மாநாடும் 40வது ஆண்டு நிறைவு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தொல்.திருமாவளவன் தனது உரையில் மேலும் தெரிவிக்கையில்,
விமர்சனங்கள் இந்தக் காலகட்டத்தில் கூடாது. விமர்சனங்களை முன்வைத்தால் அது நமக்கு பயன்பெறாது.
தந்தை செல்வாவின் கனவை நாம் நனவாக்க வேண்டுமென்றால், பிரபாகரனின் கண்ட கனவை நாம் நனவாக்க வேண்டுமென்றால், தமிழீழத்தை வென்றெடுக்க வேண்டுமானால் சர்வதேச சமூகத்தின் ஆதரவை வென்றெடுத்தாக வேண்டும்.
உலகமயமாதல் நிகழ்ந்து கொண்டிருக்கும் இந்தக் கால கட்டத்தில் உலக நாடுகளின் ஆதரவில்லாமல் எந்தவொரு இனத்தின் விடுதலைப் போராட்டமும் வெற்றி பெறாது.
சிங்களவனுக்கும் தமிழனுக்கும் இடையிலான சண்டையாக மட்டுமே இது இருந்திருந்தால், விடுதலைப் புலிகள் வெற்றி பெற்று விட்டார்கள் என்று எப்போதோ பிரகடனப்படுத்தியிருக்க வேண்டும்.
சிங்களவர்களை ஜெயவர்தனவின் காலத்திலேயே விடுதலைப் புலிகள் வெற்றி பெற்று விட்டார்கள்.
உலகத்தின் எந்தவொரு நாடும் நமது இன விடுதலைப் போராட்டத்தினை அது ஒரு இன விடுதலைப் போராட்டம் தான் என ஏற்றுக் கொள்ளவில்லை, அங்கீகரிக்கவில்லை என்றார்.
உலக அரங்கில் ராஜபக்ச போர்க்குற்றவாளியென நிறுவ வேண்டும்: மாவை சேனாதிராஜா
உலக அரங்கிலே ராஜபக்ச போர்க்குற்றவாளி என்று நிறுவ வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் மாநாட்டில் உரையாற்றும்போது தெரிவித்துள்ளார்.
கடந்த 4ம் , 5ம் திகதிகளில் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் 12வது தமிழ்ப் பண்பாட்டு மாநாடும் 40வது ஆண்டு நிறைவு விழாவும் ஜேர்மனி ஹம் நகரில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
இங்கு இறுதி நாளன்று உரையாற்றும்போதே மாவை சேனாதிராஜா மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளர்.
புலம்பெயர்ந்த உறவுகள் தங்கள் மண்வாசனையை மறவாமல் தங்கள் மூச்சோடு இணைத்துக்கொண்டு இசையையும் நாட்டியக் கலையையும் தமிழர்களின் பண்பாட்டின் ஒரு அங்கமாக ஊட்டியிருப்பதையிட்டு மகிழ்ச்சியைடைகிறேன். அவர்களுக்கு எனது வாழ்த்துக்களையும் தெரிவிக்கின்றேன்.
சிங்கள அரசு போர் விதிமுறைகளை மீறி, அறத்தை மீறி ஆயிரக்கணக்கான எங்கள் இனத்தை அழித்துள்ளது.
பெண்கள் கண்ணீர் விட்டுக் கொண்டிருக்கிறார்கள். இலங்கையில் தமிழ் தாய்மார்கள் வடிக்கும் கண்ணீருக்கு இன்றைக்கும் பதில் சொல்ல இலங்கை அரசாங்கம் திடனாயில்லை.
ராஜபக்சவினுடைய இந்தக் கொடுமைகளை அனுபவித்துக் கொண்டிருக்கின்ற எங்கள் தாய்க்குலம் கண்ணகிகளா? அல்லது தமிழச்சிகளா? அவர்கள் செல்லாத இடமில்லை, கேட்காத இடங்கள் இல்லை. கொடுக்காத அறிக்கைகள் இல்லை.
ஐ.நா வில் வெளியிடப்பட்ட தீர்மானங்களை நிர்மூலமாக்குவதற்காக ராஜபக்ச, தானே ஆணைக்குழுக்களை நியமித்து ஏமாற்றப் பார்க்கிறார். விசாரணைகள் எங்கு போகுமோ தெரியாது.
இன்று ஜனநாயக ரீதியாக ராஜபக்ச தோற்கடிக்கப்பட்டுள்ளார். ஜனநாயகம் என்று கூறி சர்வாதிகார ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கின்றது அரசு.
தமிழர்களுடைய தேசத்தை அடக்கி ஆள இராணுவ ஆட்சி நடத்திக் கொண்டு இருக்கிறது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தமிழர்கள் தமது ஆட்சியை நிறுவ இந்தியா முழு நடவடிக்கையினையும் எடுக்க வேண்டும்: உ.த.ப. இயக்கத்தின் மாநாட்டுத் தீர்மானங்கள்
உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் 12வது தமிழ்ப் பண்பாட்டு மாநாடும் 40வது ஆண்டு நிறைவு விழாவும் ஜேர்மனி ஹம் நகரில் மிகவும் சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது.
ஜேர்மனி ஹம் ஆலயத்தின் யாகத்துடன் ஆரம்பமான மாநாடு கடந்த வெள்ளி, சனி ஞாயிறு தினங்களில் சிறப்பாக இடம்பெற்றது.
இதில் பல கலை, கலாச்சார நிகழ்வுகளுடன் தமிழரின் பழமையான சஞ்சிகைகள் பத்திரிகைகள் மற்றும் பல புத்தகங்களை ஆவணங்கள் எனும் அமைப்பு ஆவணப்படுத்தியிருந்ததுடன் பல நாடுகளின் நாணயங்கள் மற்றும் இன்றைய சந்ததி அறியாத பல சரித்திர படைப்புக்களும் ஆவணப்படுத்தப்பட்டிருந்தமை பலரதும் கவனத்தையும் ஈர்த்தது.
இந்நிகழ்விற்கு வருகை தந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன், தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் உட்பட பல புத்திஜீவிகளும் இக் கண்காட்சியை பாராட்டியமை குறிப்பிடத்தக்கது என்பது குறிப்பிடத்தக்கது.
அத்துடன் உலகெங்கும் 50க்கும் அதிகமான நாடுகளில் கிளைகளில் இருந்து வருகை தந்த அரசியல் பிரமுவர்கள் கல்வித் துறைசார் பேராசிரியர்கள் அடங்கலாக இலக்கிய ஆர்வலர்கள் மற்றும் பல சமூக ஆர்வலர்கள் ஹம் ஆலயத்தின் வழிபாட்டுடன் இரண்டாம் நாள் நிகழ்வுகளை ஆரம்பித்தனர்.
இம் மாநாட்டில் பழைமையான பத்திரிகைகள் காட்சிக்கு வைக்கப்பட்டதுடன் கலை நிகழ்ச்சிகள் மற்றும் பல உரைகளும் இடம்பெற்றதுடன் ஜேர்மனி நாட்டின் மாகாண மட்ட அரசியல் பிரமுகர் ஒருவரும் இம் மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
எதிர்காலத்தில் தமிழை பலமுள்ள மொழியாக மாற்ற அனைவரும் ஒருமித்து உழைக்க வேண்டும் என்கிற பலமான கருத்து இம் மகாநாட்டில் ஓங்கி ஒலித்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, மாநாட்டின்போது உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தினால் தீர்மானங்கள் வெளியிடப்பட்டன.
அவை பின்வருமாறு,
1.இலங்கைத் தமிழர் தம் சொந்த தாயகத்தில் வாழுவதற்கும் ஆளுவதற்கும் தமிழ் மொழி, கலை, கலாச்சாரங்கள் பண்பாடு பாதுகாக்கப்பட வேண்டும். அவர்கள் வாழும் நிலம் தமிழர் நிலமாக இருக்க வேண்டும். அவை பாதுகாக்கப்பட வேண்டும். தமிழர் ஆட்சியை தமிழர் நிலத்தில் நிறுவுவதற்கு சர்வதேச சமூகம் குறிப்பாக இந்தியா முழு நடவடிக்கையினையும் எடுக்க வேண்டும். என்பதுடன் அவர்களின் போராட்டங்கள் புலம்பெயர்ந்த தமிழர்களும் சர்வதேச நாடுகளும் ஆதரிக்க வேண்டும் என இம்மாநாடு அறைகூவல் விடுக்கின்றது.
இலங்கையில் வாழும் தமிழர்கள் பூரண உரிமையுடன் வாழ இம்மாநாடு தனது பூரண ஆதரவையும் உதவிகளையும் வழங்க வேண்டுமென தீர்மானம் மேற்கொள்கிறது..
2. உலகலாவும் வாழுகின்ற மக்களுக்கென பொதுத் தமிழர் வங்கி ஒன்றினை ஆரம்பிப்பதற்கு இம்மாநாடு சிபாரிசு செய்கிறது.
3. புலம்பெயர் தமிழர்களிடையே பொதுவான ஒருங்கிணைந்த கல்வித் திட்டம் ஒன்றினை உருவாக்க வேண்டும் என இம்மாநாடு அறை கூவல்விடுக்கின்றது.
4. உலக நாடுகளில் தமிழர்கள் வாழும் நாடுகளில், தமிழர் குடியேற்றத்திற்கான நினைவுத் தூபி நிறுவப்பட வேண்டுமென இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.
5.தமிழர் வாழும் நாடுகளிலெல்லாம் தமிழர் கலை, கலாச்சார பண்பாட்டு, விழுமியங்களை பிரதிபலிக்கும் ஊர்தி, ஊர்வலம், தமிழர் மரபு மாதமான தை மாதத்தில் நடத்தப்பட வேண்டுமென இம்மாநாடு தீர்மானம் எடுக்கிறது.
6.தமிழர் மரபு விளையாட்டுக்களை வளர்க்கவும், தமிழர் மரபு அடையாளங்களை சேகரிக்கப்பட வேண்டுமென இம்மாநாடு தீர்மானம் எடுக்கிறது.
7. புலம்பெயர் தமிழர் மத்தியில் தமிழ்ப் பணி செய்யும் தமிழ் புரவலர்களை அடையாளம் கண்டு, தமிழர் மத்தியில் புதிய ஆய்வுகள் மேற்கொண்டு தமிழ் சமுதாயத்திற்கு சிறப்புச் செய்யும் தமிழர்களை அடையாளம் கண்டு, தமிழர் விருது விழா ஒன்றை நடாத்தி அவர்களைக் கௌரவம் செய்ய வேண்டுமென இம்மாநாடு தீர்மானம் எடுக்கின்றது.
http://www.tamilwin.com/show-RUmszATcKWmx7.html

Geen opmerkingen:

Een reactie posten