தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 2 juli 2014

தமிழர் விரும்பும் தீர்வுத் திட்டம்!

தமிழர் விரும்பும் தீர்வுத் திட்டத்தை யாரிடம் முன்வைக்கவுள்ளோம். நாம் யாரிடம் இருந்து தீர்வை எதிர்பார்க்கின்றோம். நிட்சயமாக தீர்வைத் தர வேண்டியவர்கள் ஸ்ரீலங்கா அரசுதான்.
ஸ்ரீலங்கா அரசு அதைத் தானாகத் தரப்போவதில்லை. அரசிடம் இருந்து அதைப் பெற்றுத் தரப்போவது சர்வதேச சமூகம் தான். ஆகவே தமிழர் தரப்புகளாலும் சர்வதேசத்தாலும் ஏற்றுக் கொள்ளக்கூடிய வகையில் அப்படியான சொல்லாடலில் அது இருக்கவேண்டுமென்பதை யாராலும் மறுக்க முடியாது.
தமிழர் விரும்புவது:
தமிழர் என்ற ஒரு தேசிய இனமாகிய நாம் இன்னொரு இனத்தால் ஆளப்படும் இனமாக இல்லாமல் உலகில் வாழும் ஏனைய இனங்களைப் போன்று ஆட்சியில் சம பங்காளராக சம வாய்ப்புள்ளவர்களாக சமமான சுதந்திரத்தை அனுபவிப்பவர்களாக சமஉரிமை களோடு வாழ விரும்புகின்றோம்.
அதாவது,
1. உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதருக்கும் பிறப்பால் வரும் தனி மனித உரிமை, நாட்டில் சுதந்திரமாக நடமாடும் உரிமை, நாட்டின் பொது வளங்களை பகிர்ந்து கொள்ளும் உரிமை, தொழில் செய்யும் சுதந்திரம், மொழி, கல்வி,மத, கலாச்சார, பொருளாதார சுதந்திரம், ஊடக மற்றும் பேச்சுச்சுதந்திரம், சொத்துரிமைச் சுதந்திரம், உயிர் உடமைகளுக்கான பாதுகாப்பு
2. ஒரு நாட்டின் பிரசைகள் என்ற முறையில் அனைத்துப் பிரசைகளுக்குமான சம கெளரவம், சம வாய்ப்புகள், சம உரிமைகள், அனைவருக்கும் பொதுவான சுயாதீனமான நீதி நிர்வாகம், சட்டத்தின் ஆட்சி, சுயாதீனமான தேர்தல் ஆணையம்.
3.ஒரு தேசிய இனமாகிய எமக்குஉலகில் வாழும் ஏனைய இனங்கள் அனுபவிக்கும் ஒரு தேசிய இனக் குழுமத்தின் உரிமைகள், தேசிய இனத்திற்கான தாயகநில உரிமை .
4. ஒரு தேசிய இனத்திற்கான உள்ளக சுயநிர்ணய உரிமை, வெளியாரின் நிதி உதவிகளைப் பெறும் உரிமை .
5. இன மத ரீதியான ஒடுக்குமுறையோ அடக்கு முறையோ இல்லாத அரசில் அனைவரும் சம பங்காளராக இருப்பதாகத் திருப்திப்படக்கூடிய அரசியல் உரிமைகள். ஆகியவற்றை நாம் வேண்டி விரும்பி நிற்கின்றோம்.
இதை அனைத்துத் தமிழர் தரப்பும் ஏற்றுக்கொள்வார்கள். அதைவிட மிக முக்கியமாக சர்வதேசம் ஏற்றுக் கொள்ளும். இப்படியான நியாயபூர்வமான அடிப்படை விடயங்களை சர்வதேசத்தால் மறுக்க முடியாது.
அதற்கான தீர்வுத் திட்டம்:
இவற்றை உறுதி செய்யக்கூடிய எந்தத் தீர்வுத் திட்டத்தையும் ஏற்றுக்கொள்ளலாம். அந்தத் தீர்வுத் திட்டம் ஒரு சர்வதேச அனுசரணையில் உருவாக்கப்பட்டு சில அடிப்படையான அம்சங்கள் சர்வதேசத்தின் ஒப்புதலின்றி பெரும்பான்மையால் மாற்ற முடியாத ஒன்றாக இருக்க வேண்டும்.இந்த நிலைப்பாடுதான் தமிழினத்தின் விமோசனத்திற்கான ஒரே வழி. இந்தத் தீர்வை எப்படி சாத்தியமாக்கலாம் என்பதைத் தீர்வைக் கொடுப்போரே தீர்மானிக்கலாம். அந்தத் தீர்வை தீர்மானிக்க வேண்டியவர்கள் அவர்கள்தான். அப்படி ஒரு தீர்வுத் திட்டத்தை நாமே முன்வைக்க வேண்டுமாயின் இங்கு ஆரம்பத்தில் நாம் குறிப்பிட்ட அனைத்தையும் அந்த ++ களுக்குள் சேர்த்து நாம் எமது தீர்வுத் திட்டமாக முன்வைக்கலாம்.
நாம் முன்வைக்கும் தீர்வில் கனடாவில் உள்ள மாகாண சபைகளுக்கு இணையானதாக கேட்கலாம். வடகிழக்கு இணைப்பு, முழுமையான சுயாதீனமான காணி பொலிஸ் அதிகாரங்கள், நிறைவேற்று அதிகாரம் கொண்ட அமைச்சர் அவை, சட்டவாக்கம், வரியறவீடு, வெளியார் நேரடி உதவிகள், என்பன கட்டாயமாக உள்ளடக்கப் படுவதோடு அந்த அடிப்படைகள் மத்திய அரசின் பெரும்பான்மையால் மாற்றப்பட முடியாதபடியும் அமைய வேண்டும்.
இன்னொரு விடயத்தையும் முக்கியமாக இங்கு நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். நாம் விரும்புவதை தற்போதைய அரசியற் திட்டத்தின் கீழ் அடைய முடியாது. குறிப்பாக 18ம் சரத்து நீக்கப்படல் போன்றவை. ஆனால் ஜனாதிபதி முறையை ஒழிப்பது உட்பட அவற்றைச் செய்வதற்கு சிங்கள மக்கள் தாமே தயாராகி வருகிறார்கள். எனவே எமது சக்தியை நாம் அதற்காக செலவிடத் தேவையில்லை. முறையான மாகாண சபை வரும் போது அது சிங்கள மக்களுக்கும் சேர்த்துத் தான் வரும். அப்படி வந்தால் சிங்கள மக்களே அதனைப் பலப்படுத்த வேண்டிய தேவை அவர்களுக்கே வரும். அதனால் நமது செயற்பாடு சுலபமாகிவிடும்.
தமிழர் தரப்புகள்
அந்தத் தீர்வை அடைவதற்கான வழிமுறைகளில் தான் தமிழர் தரப்புகள் தமக்குள் வேறுபட்டு மாறுபட்டு முட்டி மோதிக்கொள்கிறார்கள். அவர்கள் அப்படி வேறுபட்டு நிற்பதால் சர்வதேசமும் எதையும் உருப்படியாகச் செய்யாமல் இழுத்தடிக்கிறார்கள்.
தமிழர் தரப்பிற்கான தீர்வு கண்ணுக்கு எட்டிய தூரத்தில் இருக்கும் போது எமக்குள் சண்டை யிட்டு சந்தர்ப்பத்தை நழுவ விட்டு ஈழத்தமிழருக்கு மீண்டும் ஒரு முள்ளிவாய்க்காலை கொடுக்கத்தான் வேண்டுமா? தனி நாடு, சமஷ்ட்டி, சுயஆட்சி, 13++ , வடகிழக்கு இணைந்த மாகாண சுயஆட்சி போன்ற இவை அனைத்தும் நாம் விரும்புவதை எமது தேவையை அடைவதற்கான வழிகளே தவிர அவை எமது தேவை அல்ல. அந்த வழிகள் மூலம் நாம் அடைய விரும்புவது மேலே குறிப்பிட்டவாறு சர்வதேசம் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒரு கௌரவமான வாழ்வுதான். வரம் கேட்பவன் சாதுரியமாகக் கேட்டால் தெய்வம் கொடுத்துத் தான் ஆகவேண்டும்
நிட்சயமாக நாம் கேட்கின்ற படி 100 வீதம் கிடைக்காது.
கிடைப்பதை வைத்துக் கொண்டு அதன்மூலம் முடிந்தவரை நமது உடனடித் தேவைகளைக் கவனித்துக் கொண்டு இன்னும் கூடிய பலத்தோடு மேலும் கிடைக்க வேண்டியவற்றிற்காக எமது போராட்டத்தையும் தொடருவோம். முழுமையாக நமது நிகழ்காலத்தைத் தொலைத்துவிட்டு எதிர்காலத்தை யார் எங்கே தேடுவது. இன்னொரு முள்ளிவாய்க்கால் அவலம் நமக்கு வந்தால் "தமிழ்" என்ற சொல் கூட அங்கே இருக்காது. அதை நாம் மிகச் சரியாக மனதில் கொள்ள வேண்டும்.
நாம் பின்பற்ற வேண்டிய உலகியல் விதிமுறைகள்.
1.நாம் நினைத்தபடி அல்லது நமக்குச் சரி என்று படுகின்றபடி எமது வாழ்வோ உலகமோ அமையப் போவதில்லை. காரணம் ஒட்டுமொத்த உலகுக்கும் எது சரி எது நல்லது என்பதை எந்தவொரு தனி மனிதனாலும் அறிய முடியாது. ஆகவே உலக அசைவுகளுக்கேற்ப நடைமுறைச் சாத்தியமானவற்றை அதிஉச்சமாகப் பெற்று அதன் திருப்தியோடு வாழ்வதுதான் வாழ்க்கையில் உண்மையான வெற்றி.
2. நமக்கு சிறிதளவேனும் சாதகமாக கிடைக்கும் நன்மைகளை முழுமையாகப் பயன்படுத்தி அந்தப் பலத்தில் நின்றுகொண்டு நாம் அடையவிரும்புவதைப் பெறத் தொடர்ந்து போராடவேண்டும். நாம் விரும்பியபடி கிடைக்கவில்லை என்று கிடைப்பதையும் பயன்படுத்தாமல் பலவீனப்படக் கூடாது.
3.நமது முதல் எதிரியை மட்டுமே நாம் தாக்க வேண்டும். முதல் எதிரியை வீழ்த்தும் வரை ஏனைய எதிரிகளைத் தாக்கக் கூடாது. எச்சரிக்கையுடன் நட்பாக இருக்கலாம். (மகிந்தவும் அதைத்தானே செய்கிறார்.)
4.முதல் எதிரியை வீழ்த்தும்வரை முதல் எதிரியின் பகைவர்களோடு அவர்கள் எமக்கும் பகையானாலும் கூட அவர்களுடன் எச்சரிக்கையோடு கைகோர்த்துக் கொள்ளவேண்டும். (முதல் எதிரியை வீழ்த்தியபின் இரண்டாம் எதிரி நமது முதல் எதிரியாவது ஜதார்த்தம்.)
5.பெரிய லாபங்களை அல்லது நன்மைகளைப் பெறுவதற்கு சிறிய விடயங்களை இழக்கத் தயங்கக் கூடாது. (கொடியை இழந்து நாட்டைப் பெற முடியுமானால் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். நாட்டுக்குத் தான் கொடியே தவிர கொடிக்காக நாடு அல்ல.)
6. தலைமையின் உண்மையான திட்டங்களை தந்திரோபாயங்களை அவர்கள் முழுமையாகப் பகிரங்கப்படுத்தினால் எதிரி அந்தத் திட்டங்களை இலகுவாகத் தோற்கடித்து விடுவான். எனவே எமது தலைமையின் செயற்பாடுகளுக்கான காரணம் எமக்கு புரியாவிட்டால் அவர்களுடனான நேரடித் தொடர்புகள் மூலம் நாம் புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டுமே தவிர "வெளிப்படையாக எங்களுக்கும் விளங்கப் படுத்தித் தான் நீங்கள் செயற்பட வேண்டும்" என்று அடம்பிடித்தால், தலைமையை வாய்க்கு வந்தபடி திட்டித் தீர்த்தால் அது நமது அழிவிற்கே வழிவகுக்கும்.
நடைமுறைச் சாத்தியப் பாடுகள்:
நடைமுறைச் சாத்தியமற்ற திட்டங்களைப் போட்டுவிட்டு பூனைக்கு மணிகட்டுவது யார் என்று கேட்க்கக் கூடாது. கருத்துக் கணிப்பிற்கான வாக்கெடுப்பு மூலம் ஈழத் தமிழருக்கான அரசியற் தீர்வைக் கண்டு அதை நடைமுறைப் படுத்த வேண்டும் என்ற தமிழக முதல்வரின் நிலைப்பாட்டை பலர் ஆதரிக்கக் கூடும்.
மேலோட்டமாக அது அருமையான ஒன்றாகப் பட்டாலும் அதன் நடைமுறைச் சாத்தியப் பாடுகளை ஆராய வேண்டும். தாயகத்திலே இராணுவத்தின் அனுமதியுடன்தான் இயற்கைக் கடன்களையும் கழிக்க வேண்டிய நிலையில் உள்ள தமிழர்; வன்னியில் அடுத்தவேளை கஞ்சிக்கும் அரச உதவியில் தங்கியிருக்கும் தமிழர்; தம் குடும்பப் பொருளாதார வளர்ச்சிக்காக அரசிற்கு ஆதரவாக, அரசையே நாடிநிற்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள மக்கள், குறிப்பாகக் கிழக்குமாகாண நிலைமைகள் ஆகிய எல்லாவற்றையும் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்.
இந்த நிலைமைகள் எப்போ எப்படிச் சீர்செய்யப் படலாம், இயல்பு நிலைக்கு வரலாம் என்பது ஒருபக்கம் இருக்க அப்படிச் சீர்செய்யப்பட்டாலும் ஒரு சுயாதீனமான கணக்கெடுப்பைச் ஸ்ரீலங்காவில் நடத்த ஸ்ரீலங்கா அரசை ஏற்றுக்கொள்ள வைப்பதற்கான நிலைமைகள் உள்ளனவா?.எதற்கெடுத்தாலும் நாம் சர்வதேசத்தைத் தானே அண்ணாந்து பார்க்க வேண்டி உள்ளது. ஆகவே இந்தச் சர்வதேச நிலைமைகளை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அப்படியான வாக்கெடுப்புக்கான காலம் கனியும்போது தான் அதைச் செய்ய வேண்டும். அதுவரை.......??.
சர்வதேசத்தின் ஆதரவும் ராஜதந்திரச் செயற்பாடுகளும்
சர்வதேசத்தின் ஆதரவு மட்டும்தான் இன்று தமிழருக்கு உள்ள ஒரேயொரு பலம். சர்வதேசம் சர்வதேச நலன்களை உதாசீனம் செய்து தமிழர் கேட்பதைக் கொடுக்கப் போவதில்லை. சர்வதேசத்தின் ஆதரவின்றி எமக்கு விடிவு இல்லை. எனவே சர்வதேச சக்திகளின் பலங்களைத் தனித்தனியாக அளவிட்டு அவை எப்படி எப்படியான தாக்கங்களை ஏற்படுத்துகின்றன என்பதை கணிப்பிட்டு மிகச்சரியாக நாம் காய்களை நகர்த்தினால் இறுதியில் நமது வெற்றி நிட்ச்சயமே.
வெறும் உணர்ச்சி வசப்பட்டவர் களின் கையில் உலகத்தின் கட்டுப்பாடு இல்லை. அதியுயர்ந்த ராஜதந்திரச் சிந்தனை யாளர் கையில்தான் உலகக் கட்டுப்பாடு இருக்கிறது. உணர்ச்சிகளால் வழிநடத்தப்படும் சாதாரண மக்களின் உணர்ச்சிகளைக் கிளறிவிட்டு அதனால் தமது அற்ப சுயலாபங் களைப் பெற்றுக் கொள்பவர்களால் முழு இனத்திற்குமே பேரழிவுதான் கிட்டும். தலைவர்கள் என்று இருப்போர் மிக மிக நிதானமாக தாமும் சரியான வழியில் பயணித்து மக்களையும் வழிநடத்த வேண்டும்.
தமது குறுகியகால சுய லாபங்கள் கெட்டுவிடுமே என்று தமது தேவைக்காக இனமீட்பர்கள் போல் நடிக்கும் சிலரது செயற்பாடுகளை அடாவடித்தனங்களை சவால்களை பொதுமக்களும் உண்மையான தலைமைகளும் சந்திக்க வேண்டித்தான் உள்ளது. மக்கள் தமது உண்மையான தலைமைகளையும் போலி நடிகர்களையும் இனம்கண்டு சரியான தலைமையைப் பலப்படுத்த வேண்டும். உடனடிச் சலுகைகளை மட்டும் பாராமல் தமது நீண்டகால நன்மைக்காக தமது எதிர்காலச் சந்ததிக்காக தம் பிள்ளைகள் பேரப்பிள்ளைகளின் நலனுக்காக சிந்தித்துச் செயலாற்ற வேண்டும்.
அமெரிக்காவும் சோவித் ரஷ்ஷிய ஒன்றியமும் உலகச் சமநிலையைப் பேணிவந்த காலம் போய் அமெரிக்காவும் சீனாவும் அந்த எதிர் அணிகளுக்குத் தலைமை தாங்கி உலகம் இயங்கிக்கொண்டிருக்கின்றது. இலங்கை சீனாவின் தலைமையை ஏற்று அதன் பாதுகாப்பில் தங்கியுள்ளதால் அமெரிக்கத் தலைமையிலான நாடுகள் சிறிலங்காவை எதிர்த்து அழுத்தம் கொடுக்கின்றன.
இந்துசமுத்திரப் பிராந்தியத்தின் கட்டுப்பாட்டைத் தீர்மானிக்கும் ஸ்ரீலங்காவின் அமைவிடம் தான் அதன் கட்டுப்பாட்டைத் தத்தமக்காக ஆக்கிக்கொள்ள வேண்டுமென்று இரு அணியினரும் பனிப்போரில் இறங்கியுள்ளார்கள்.
சற்று நலிவுற்றிருந்த பிராந்திய வல்லரசான இந்தியா இப்போது மோடி தலைமையில் மீண்டும் தலை நிமிர்ந்துள்ளது. மோடி தலைமையிலான இந்தியா அமெரிக்க அணியுடன் இருந்தாலும் சீனாவை முழுமையாகப் பகைக்க விரும்பாத ஒரு நிலையில் இருக்க விரும்புவதாகவே தெரிகிறது.
சிறிலங்காவை இந்தியா முறையாகக் கையாளுமாக இருந்தால் அமெரிக்கத்தலைமை இந்தியாவிற்குப் பக்கபலமாக இருப்பதை விரும்பு வதாகவே நம்பவேண்டி உள்ளது. அந்த நிலைமையைத் தக்க வைக்கவேண்டுமாயின் இந்தியா உடனடியாக இலங்கைப் பிரச்சனையில் தலையிட்டு அதைத் தன் கைகளில் எடுக்கவேண்டிய தேவை இந்தியாவுக்கு உள்ளது. இந்தச் சர்வதேச ஜதார்த்தங்களை அடிப்படையாகக் கொண்டே நடைமுறைச் சாத்தியமாக நமது காய்களை நகர்த்த வேண்டும்.

இந்தியாவுக்கு உள்ள பலத்தின் அடிப்படையில் அதனால் உடனடியாக என்ன செய்ய முடியும். ஸ்ரீலங்கா- இந்திய ஒப்பந்த அடிப்படையில் மகிந்த கொடுத்துள்ள வாக்குறுதிப்படி 13++ ஐ உடனடியாக அமுல்படுத்து விப்பதற்கான உரிமை அதற்கான சாத்தியங்கள் மிக அதிகம். காரணம் அமெரிக்க தலைமையிலான நாடுகளின் முற்றுமுழுதான ஆதரவு அதற்குக் கிடைப்பதோடு சீனாவும் கூட அதனை எதிர்க்க வாய்ப்பில்லை. அந்தவகையில் தனிச் சிங்கள பௌத்த நாட்டுக் கனவு பறிபோவது மகிந்தவிற்கு தன் உயிர் போவது போல் இருப்பினும்;
செப்டெம்பரில் வரவிருக்கும் சர்வதேச விசாரணையின் வாய்மூல அறிக்கையும் மார்ச் 2015ல் வரவிருக்கும் முழுமையான எழுத்துமூல அறிக்கையும், ஸ்ரீலங்காவில் அரசிற்குள்ளேயும் வெளியிலும் குமுறி வரும் எதிர்ப்பலைகளும் மகிந்தவின் ஆட்டம் ஆட்டம் காண்பதையே நிரூபிக்கின்றன. தனது இறுதி அஷ்திரங்களை அவர் பயன்படுத்துவார் என்பது நிட்சய மென்றாலும் கூட்டிக் கழித்துப் பார்க்கும்போது எப்படியும் அவர் தாக்குப் பிடிக்க முடியாது.
ஆயுதப் போராட்ட உச்சக்கட்டத்தில் தனிச் சிங்களப் பௌத்த நாட்டுக் கனவை விட்டிடலாமா என்று எண்ணிய சிங்கள இனம் பின்னர் அது சாத்தியமென்று இப்போது முழுமையாக நம்பிவிட்டது. ஆனாலும் மீண்டும் சர்வதேச அழுத்தங்களின் உச்சத்தாலும் உள்நாட்டுப் பிரச்சனைகளின் தாங்கொணாமையினாலும் சாத்தியமான பொருளாதாரத் தடைகளால் ஏற்படக்கூடிய நலிவினாலும் தமது அந்த எண்ணத்தை அவர்கள் மாற்றித்தான் ஆகவேண்டும். ஜதார்த்தத்தை ஏற்றுக்கொள்ள நிர்ப்பந்திக்கப்படுவர். இந்தியா, சீனாவையும் பகை உணர்வில்லாமல் கையாண்டு Give and Take முறையில் சமாளிக்கும் என்றே நம்பலாம். (அம்பாந்தோட்டை போனாலும் திருகோணமலையும் சம்பூரும் இந்தியாவுக்குக் கிடைக்கும்) விசாரணைகள் மூலம் நிரூபிக்கப் படவிருக்கும் மிகப் பலமான நியாயத் தன்மைகளுக் கெதிராக சிறிலங்காவைக் காப்பாற்றுவது சீனாவுக்கும் முடியாமல் இருக்கும். ஆக ஒருவருடத்திற்குள் ஸ்ரீலங்காவில் ஆட்சி மாற்றத்தோடு 13+ வரக்கூடிய சாத்தியப்பாடுகள் அதிகம்.
அதுதான் தீர்வா?. அத்துடன் எமது பிரச்சனைகள் தீர்ந்துவிடுமா?. நிட்சயமாக இல்லை. இப்போதுள்ள வடமாகாண சபையால் பிரச்சனை தீராவிட்டாலும் எப்படி அதன் உதவியோடு அதன் பலத்தோடு நாம் மேலும் போராட முடிகிறதோ அதைப்போல நாம் 13+ கிடைத்தாலும் இன்னும் பலத்தோடு எமது தேவை கிடைக்கு மட்டும் போராட முடியும். போராட வேண்டும். கிடைப்பதை நிரந்தரத் தீர்வாக நாம் ஏற்றுக்கொள்ளத் தேவை யில்லை. ஆனால் கிடைப்பதை வேண்டாமென்று ஒதுக்கக் கூடாது. முடிந்த அளவு அதிகமாகப் பெற முயற்சிக்க வேண்டும்.போராட்டம் தொடர வேண்டும்.
http://www.tamilwin.com/show-RUmsyHTWLbku6.html

Geen opmerkingen:

Een reactie posten