பொது பல சேனா அல்லது வேறு அதுபோன்ற அமைப்புகளுடன் தனக்குத் தொடர்புகள் இருப்பதை நிரூபித்தால், பதவி விலகுவேன் என்று சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வி ஒன்றில், பொது பல சேனாவுடன் தொடர்புகள் இருப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டை அவர் நிராகரித்துள்ளார்.
“எனக்கும் பொது பலசேனாவுக்கும் எந்த தொடர்பும் கிடையாது. இவையெல்லாம் அடிப்படையற்ற குற்றச்சாட்டுகள். சில முஸ்லிம் அரசியல்வாதிகளும், எதிர்க்கட்சி அரசியல்வாதிகளும் தான் என்னை எப்போதும் குற்றம்சாட்டுகின்றனர். ஊடகங்களும் அதனைச் செய்கின்றன. அவர்கள் எந்த அடிப்படையில் அவர்கள் இதனைக் கூறுகிறார்கள்?
அவர்கள் இதுபோன்ற ஆதாரமற்ற கட்டுரைகளை எழுதுவது மிகவும் தவறானது. இது மிகவும் துரதிஸ்டம். அனைத்துலக ஊடகங்கள் இவர்களை உண்மையானவர்கள் என்று நம்புகிறார்கள். அவர்களால், இதனை நிரூபிக்க முடிந்தால், நான் பதவியை விட்டு விலகுவேன். இதுபோன்ற அமைப்புகளுடன் எனக்குத் தொடர்புகள் இருப்பதாக நிரூபித்தால், இந்தப் பதவியை விட்டு விலகிச் செல்வேன்.
எதிர்காலத்தில் அரசியலில் நுழைவேன் என்று கூறப்படுவதை நிராகரிக்கமாட்டேன். சிறிலங்கா அதிபர் அழைத்தால், நிச்சயமாக அரசியலில் பிரவேசிப்பேன். தற்போது அதிகாரத்தில் உள்ள அரசியல்வாதிகள் பலரை விடவும், என்னால், மிகவும் திறமையாகச் செயற்பட முடியும் என்று நான் உறுதியளிக்கிறேன்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten