விசாரணைக் குழுவுடன் தொடர்பு கொள்ளும் மக்களை இலங்கை அரசாங்கம் தடுக்க முயன்றாலும் தமது விசாரணைகள் திட்டமிட்டபடி முன்னெடுக்கப்படும் என்று அந்த விசாரணைக் குழுவின் வல்லுநர்களில் ஒருவரான அஸ்மா ஜஹாங்கிர் தெரிவித்துள்ளதாக சர்வதேச செய்திச் சேவை ஒன்று குறிப்பிட்டுள்ளது.
இந்தநிலையில் சாட்சியம் அளிக்கும் மக்களை எதேச்சாதிகாரமாக தடுக்க முயல்வது இலங்கை அரசாங்கத்துக்கே பாதகமாக அமையும் என்றும் அஸ்மா ஜஹாங்கிர் குறித்து ஊடகத்துக்கான பிரத்தியேக செவ்வியில் சுட்டிக்காட்டியுள்ளார்.
எல்லா தரப்பினரும் புரிந்துள்ள மனித உரிமை மீறல்கள் தொடர்பில் தமது விசாரணைக் குழு பக்கச்சார்பற்ற முறையிலும் சுயாதீனமாகவும் விசாரிக்கும்.
இதன் போது இலங்கை அரசாங்கம் தடுத்தாலும் மக்கள் தம்முடன் தொடர்பு கொள்வதற்கான வழிமுறைகளைக் கண்டு கொள்வார்கள் என்றும் பாகிஸ்தானிய வழக்கறிஞர் அஸ்மா ஜஹாங்கிர் கூறியுள்ளார்.
அரசாங்கங்கள் ஒத்துழைப்பு வழங்காதிருந்த பல சர்வதேச விசாரணைகளை இதற்கு முன்னர் தாம் நடத்தியிருப்பதாகவும் விசாரணைக்குழு வல்லுநர் ஜஹாங்கிர் தெரிவித்தார்.
தமக்கு இரகசியமாக தகவல்களை அளிப்போரின் இரகசியத் தன்மை பாதுகாக்கப்படும்.
இதேவேளை தமது விசாரணைகள் வரும் ஆகஸ்ட் முதல்-இரண்டு வாரங்களில் தொடங்கும் வாய்ப்புள்ளதாகவும் அஸ்மா ஜஹாங்கிர் கூறினார்.
தமது பரிந்துரைகள் அடங்கிய விசாரணை அறிக்கை எதிர்வரும் மார்ச் மாதம் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர், ஐநா மனித உரிமைகள் பேரவையே அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி முடிவெடுக்கும் என்றும் வழக்கறிஞர் ஜஹாங்கிர் சர்வதேச செய்திச் சேவையிடம் குறிப்பிட்டுள்ளார்.
பாலஸ்தீன நிலப்பரப்பில் இஸ்ரேலிய குடியேற்றங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் விசாரணை அறிக்கையை அஸ்மா ஜஹாங்கிர் கடந்த ஆண்டு வெளியிட்டமையும் குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyHTVLbluy.html
Geen opmerkingen:
Een reactie posten