தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 3 juli 2014

வன்முறைகளைக் கட்டவிழ்த்து விட்டவர்கள் சுதந்திரமாக திரிகின்றனர்: ஹக்கீம்

சிறில் ரமபோசா 8ம் திகதி யாழ். விஜயம்! - சிறில் ரமபோசாவின் தலையீட்டை எதிர்க்கும் அரசின் கூட்டணி கட்சிகள்
[ வியாழக்கிழமை, 03 யூலை 2014, 07:12.02 AM GMT ]
தென்னாபிரிக்காவின் உதவி ஜனாதிபதியாக பதவி வகிக்கும் சிறில் ரமபோசா, இலங்கையில் அமைதி முயற்சிகளை மீள ஆரம்பிப்பதற்காக எதிர்வரும் 6ம் திகதி விஜயம் செய்யவுள்ளார்.
இலங்கை அரசாங்கத்துக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் பேச்சுக்களை ஆரம்பிப்பது தொடர்பான, ஆரம்பக்கட்ட பேச்சுக்களை நடத்துவதற்காக வரவுள்ள சிறில் ரமபோசாவுடன், மூன்று பேர் கொண்டு குழுவொன்றும் விஜயம் செய்யவுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தக் குழுவில், தென்னாபிரிக்காவின் பிரதி அமைச்சர் ஒபெய்ட் பொபியேலா, பிரதி அமைச்சர் இப்ராகிம் இஸ்மாயில் இப்ராகிம், முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ஐவர் ஜெனிங்ஸ் ஆகியோரும் இடம்பெறவுள்ளனர்.
இந்தக் குழுவினர், எதிர்வரும் 8ம் திகதி யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனைச் சந்தித்து வடக்கிலுள்ள நிலவரங்களை நேரில் அறிந்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், ரமபோசா தலைமையிலான குழுவினர், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் மற்றும் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா ஆகியோரையும் சந்தித்துப் பேசவுள்ளனர்.
இதேவேளை, சிறில் ரமபோசா நேற்று முன்தினம் நோர்வே பிரதமர் எர்ணா சோல்பேர்க்கை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
நோர்வே பிரதமர், தென்னாபிரிக்கா சென்றுள்ள நிலையில், அங்குள்ள யூனியன் கட்டடத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
சிறில் ரமபோசாவின் தலையீட்டை எதிர்க்கும் அரசின் கூட்டணி கட்சிகள்
இலங்கைக்கான தென் ஆப்பிரிக்காவின் விசேட பிரதிநிதி சிறில் ரமபோசா எதிர்வரும் திங்கட்கிழமை இலங்கைக்கு வரவுள்ள சில அரசாங்கத்தின் கூட்டணி கட்சிகள் தென்னாபிரிக்க அரசின் தலையிட்டை கடுமையாக எதிர்த்துள்ளன.
வடக்கு கிழக்கு பிரச்சினைக்கு தீர்வுகாண முயற்சிகளை மேற்கொள்ளும் நோக்கில் அரசாங்கம், எதிர்க்கட்சிகள் மற்றும் ஏனைய குழுக்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தும் நோக்கில் சிறில் ரமபோசா இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாக அரசாங்கதத்தின் சிரேஷ்ட பிரதிநிதி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை தென்னாபிரிக்காவின் விசேட பிரதிநிதியின் இலங்கை விஜயம் பற்றி தனக்கு தெரியவில்லை என குறிப்பிட்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், எனினும் ரமபோசாவுடன் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கான அழைப்பு அவரிடம் இருந்து கிடைத்துள்ளதாகவும் அதனை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
இதனிடையே இலங்கையின் உள்நாட்டு பிரச்சினையை தீர்ப்பதில் வெளி குறுக்கீடுகளை விரும்பவில்லை என ஜே.வி.பியின் பிரதான செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு விவகாரத்தில் வெளிநாடுகளின் தலையீடுகள் தொடர்பான முழு பொறுப்பையும் அரசாங்கமே ஏற்கவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கங்களின் கொள்கைகள் இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு பதிலாக இனங்களுக்கு இடையில் அவநம்பிக்கையை ஊக்குவித்து வருகின்றன.
வெளிநாட்டு தலையீடுகள் இலங்கையில் தற்போது மிகப் பெரிய தீங்கை விளைவித்துள்ளன எனவும் ரில்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை இலங்கைக்கான தென்னாபிரிக்காவின் விசேட பிரதிநிதியும் அந்நாட்டின் ஆளும் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸின் பிரதித் தலைவருமான சிறில் ரமபோசாவின் இலங்கை விஜயத்திற்கு ஜாதிக ஹெல உறுமய மற்றும் தேசிய சுதந்திர முன்னணி ஆகியனவும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளன.
இலங்கையின் சமாதான முயற்சிகளில் ஈடுபடுவதற்காக அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் இலங்கை வரும் ரமபோசாவின் வருகையை ஜாதிக ஹெல உறுமய கடுமையாக எதிர்ப்பதாக அந்த கட்சியின் பேச்சாளரும் மேல் மாகாண சபை உறுப்பினருமான நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா நாடுகளின் பிரச்சினைகள் முற்றிலும் வேறுப்பட்டவை. இதனால் தென் ஆப்பிரிக்க பாணியிலான முயற்சிகள் இலங்கையில் சாதகமான முவுகளை கொண்டு வராது.
அத்துடன் தென்னாபிரிக்க விடுதலைப் புலிகளுடன் நெருக்கமான தொடர்புகளை பேணும் நாடு என்பதால், இலங்கை மக்களின் நம்பிக்கையை அந்நாடு வென்றெடுக்க முடியாது.
அத்துடன் அந்நாடு சிறுபான்மை இனத்தவருக்கான குறைகள் பற்றி மாத்திரமே கவனம் செலுத்தி வருகிறது.
இலங்கையின் நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் ஊடாக உள்நாட்டு பொறிமுறையின் மூலம் சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முடியும் என ஜாதிக ஹெல உறுமய நம்புகிறது.
இதனால் நமது பிரச்சினைகளை தீர்ப்பதற்கு வெளிநாட்டு அரசாங்கங்களின் பின்னால் செல்லாமல், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் கலந்து கொள்ள வேண்டும் எனவும் வர்ணசிங்க குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே அரசாங்கத்திற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்த ரமபோசாவை கொண்டு வரும் முயற்சியானது இலங்கையின் உன்நாட்டு பிரச்சினையை சர்வதேசமயப்படுத்தும் நோக்கத்தை கொண்டது என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் அமைச்சருமான விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளின் அனுசரணையாளராக முன்னர் எரிக் சொல்ஹெய்ம் செயற்பட்டார். தற்போது அதேவழியில் கூட்டமைப்புக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் பேச்சுவார்த்தையில் ரமபோசா தலையிட முயற்சித்து வருகிறார்.
ஜனாதிபதி அல்லது அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்த தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வெளியாட்கள் தேவையில்லை.
அரசாங்கத்தின் கதவு எப்போதும் திறந்தே உள்ளது. கூட்டமைப்பு வந்து பேச்சுவார்த்தைகளை நடத்த முடியும் எனவும் வீரவன்ஸ கூறியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyHTXLbkxz.html
அளுத்கம, பேருவளை தாக்குதல் சம்பவம்: 117 பேர் கைது
[ வியாழக்கிழமை, 03 யூலை 2014, 07:49.18 AM GMT ]
அண்மையில் அளுத்கம மற்றும் பேருவளையில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பாக இதுவரை 117 பேர் கைது செய்யப்படுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டோரில் 88 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களில் 25 பேர் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக பல்வேறு தரப்பினரிடமும் வாக்கு மூலம் பதிவு செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
இதனிடையே, பொதுபல சேனா அமைப்பின் பொது செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரிடம் குற்ற விசாரணை பிரிவினர் விசாரணை நடத்தி வாக்குமூலங்களை பதிவு செய்தமையும் குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyHTXLbkx0.html
வன்முறைகளைக் கட்டவிழ்த்து விட்டவர்கள் சுதந்திரமாக திரிகின்றனர்: ஹக்கீம்
[ வியாழக்கிழமை, 03 யூலை 2014, 07:49.41 AM GMT ]
முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறைகளைக் கட்டவிழ்த்து விட்டவர்கள் தண்டிக்கப்பட்டு நாட்டின் சட்டம், ஒழுங்கு நிலைமை உறுதி செய்யப்பட வேண்டுமென நீதி அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கு ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
முஸ்லிம் மக்களுக்கு எதிராக வன்முறைகளைக் கட்டவிழ்த்து விட்டவர்கள் சுதந்திரமாக சுற்றி திரிகின்றனர்.
வன்முறைகளுடன் தொடர்புடையவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும்.
எனினும், வன்முறைகளைத் தூண்டிய அமைப்போ அல்லது தூண்டிய நபரோ இதுவரையில் தண்டிக்கப்படவில்லை .
அடிப்படைவாத அமைப்பு ஒன்றே இந்த அனைத்து பிரச்சினைகளுக்கும் காரணம். அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் முஸ்லிம்கள் நாட்டில் அமைதியான முறையில் வாழ முடியாது.
அண்மைய சம்பவங்களின் பின்னர், பின்தங்கிய பிரதேசங்களில் வாழ்ந்து வரும் முஸ்லிம் மக்கள் பாதுகாப்பற்ற நிலைமையில் வாழ்ந்து வருகின்றனர்.
கடந்த இரு ஆண்டுகளாக குறித்த அடிப்படைவாத அமைப்பு, முஸ்லிம்கள் மீதும், அவர்களின் மத வழிபாட்டுத் தலங்கள் மீதும் தாக்குதல்களை நடத்தி வருகின்றது.
எவ்வாறெனினும், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான அரசாங்கம் நிவாரணங்களை வழங்கியமை வரவேற்கப்பட வேண்டியது என ஹக்கீம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyHTXLbkx1.html

Geen opmerkingen:

Een reactie posten