தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 3 juli 2014

கிளிநொச்சியில் 2ம் கட்டப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளது த.தே.ம.முன்னணி!

நல்லிணக்க ஆணைக் குழுவின் பரிந்துரைகள் முழு அளவில் அமுலாக்கப்படவில்லை: பிரித்தானியா குற்றச்சாட்டு
[ வியாழக்கிழமை, 03 யூலை 2014, 05:09.46 AM GMT ]
இலங்கையில் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை பரிந்துரைகள் முழு அளவில் அமுலாக்கப்படவில்லை என பிரித்தானியா குற்றம் சாட்டியுள்ளது.
உரிய தரத்தில் இலங்கையில் விசாரணைகள் நடத்தப்படவில்லை என பிரித்தானிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கை விவகாரம் தொடர்பில் பிரித்தானிய இராஜ சபையில் பேசும் போது இந்த விடயங்கள் பேசப்பட்டுள்ளன.
மேலும் இலங்கை விவகாரம் தொடர்பில் தொடர்ந்தும் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக பிரித்தானிய வெளிவிவகார மற்றும் பொதுநலவாய நாடுகள் விவகார சிரேஸ்ட அமைச்சர் பார்னொஸ் வார்சீ (Baroness Warsi) தெரிவித்துள்ளார்.
யுத்தத்தின் போது இரண்டு தரப்பினராலும் மேற்கொள்ளப்பட்டதாக குற்றம் சுமத்தப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் சுயாதீன பக்கச்சார்பற்ற விசாரணைகளை இலங்கை அரசாங்கம் நடத்தத் தவறியுள்ளது, என்ற ஐக்கிய நாடுகள் அமைப்பின் நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்வதாக பார்னொஸ் வார்சீ தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தீர்வுத் திட்டமொன்றை எட்டுவதற்கான அரசியல் விருப்பம் தொடர்ந்தும் கேள்விக்குறியாகவே காணப்படுகின்றது எனவும், 2009ம் ஆண்டிலிருந்து பிரித்தானியா உள்ளிட்ட பல நாடுகள் சர்வதே சுயாதீன விசாரணைகளை வலியுறுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
பொதுபல சேனா இயக்கத்தின் நடவடிக்கைகள் குறித்து அவதானிக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை அரசாங்கத்திடம் தொடர்ச்சியாக கோரி வருவதாகவும் பார்னொஸ் வார்சீ தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyHTXLbkw2.html
முகமாலையில் மேலுமொரு எலும்புக்கூடு இன்று மீட்பு!- மூன்றாவது எலும்புக்கூடும் மீட்பு
[ வியாழக்கிழமை, 03 யூலை 2014, 05:58.44 AM GMT ]
யாழ். முகமாலைப் பகுதியில் இருந்து இன்று காலை மேலும் ஒரு எலும்புக் கூடு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது எலும்புக் கூடுகள், பொலித்தீன் பைகள், கைக்குண்டு, வெற்று ரவை நிரப்பி என்பன மீட்கப்பட்டுள்ளதாக பளைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 குறித்த எச்சங்களை பொலிஸார் பொறுப்பேற்றுள்ளதாகத்  தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை நேற்றைய தினம் இந்தப் பகுதியில்  சோதனைச் சாவடி இருந்த இடம் ஒன்றிலிருந்து பெண் விடுதலைப் புலி உறுப்பினருடைய எலும்புக்கூடு மீட்கப்பட்ட நிலையில் இன்று இரண்டாவது எலும்புக்கூடு மீட்கப்பட்டுள்ளது.
அப்பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபடும் பணியாளர்களே இந்த  எலும்புக்கூடுகளை மீட்டு, பளை பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
இதனால், இப்பகுதியில் மேலும் எலும்புக்கூடுகள் இருக்கலாம் என சந்தேகித்து  கண்ணிவெடி அகற்றும் பணியாளர்களுடன் இணைந்து, தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மூன்றாவது எலும்புக்கூடு மீட்பு
யாழ். முகமாலைப் பகுதியில் மேலும் மூன்றாவது எலும்புக்கூடும் இன்று வியாழக்கிழமை மதியம் மீட்கப்பட்டுள்ளதாக பளைப் பொலிஸார் தெரிவித்தனர்.
ஏற்கனவே நேற்று புதன்கிழமை ஒரு எலும்புக்கூடும் இன்று காலையில் ஒரு எலும்புக்கூடும் மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 
http://www.tamilwin.com/show-RUmsyHTXLbkw3.html
ஜாதிக ஹெல உறுமயவின் அமைப்பாளரின் சடலம் கிணறு ஒன்றில் இருந்து மீட்பு
[ வியாழக்கிழமை, 03 யூலை 2014, 06:11.09 AM GMT ]
ஜாதிக ஹெல உறுமயவின் பொலனறுவை மாவட்ட அமைப்பாளர் ஒருவர் கிணறு ஒன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் வட மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரான யூ.பி.கே. குணரட்ன என்ற இந்த அரசியல்வாதி, ஜாதி ஹெல உறுமயவின் பொலனறுவை மாவட்ட அமைப்பாளராக பணியாற்றி வந்தார்.
மெதிரிகிரிய பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து 60 வயதான அவரது சடலம் உதாரகம பிரதேசத்தில் உள்ள கிணறு ஒன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
சடலமாக மீட்கப்பட்டவர் கடந்த செவ்வாய் கிழமை முதல் காணாமல் போயிருந்தாக கூறப்படுகிறது. சம்பவம் குறித்து மெதிரிகிரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmsyHTXLbkw4.html
கிளிநொச்சியில் 2ம் கட்டப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளது த.தே.ம.முன்னணி
[ வியாழக்கிழமை, 03 யூலை 2014, 06:39.40 AM GMT ]
கிளிநொச்சி- பரவிப்பாஞ்சான் மக்களுடைய மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இரண்டாம் கட்டப் போராட்டத்தை நாளை கிளிநொச்சி மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளதுடன், அனைத்து தரப்பினருக்கும் பகிரங்க அழைப்பினையும் கட்சி விடுத்துள்ளது.
நாளை காலை 11 மணி தொடக்கம் 12 மணி வரை இப்போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
குறித்த போராட்டம் தொடர்பாக த.தே.ம.முன்னணி விடுத்துள்ள செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
யுத்தம் முடிவடைந்து ஐந்து ஆண்டுகள் கடந்துள்ளபோதிலும் கிளிநொச்சியில் பரவிப்பாஞ்சான் உள்ளிட்ட பல பகுதிகளில் மக்களது வீடுகளையும், பொது நிலையங்களையும் இராணுவம் ஆக்கிரமித்து நிலை கொண்டுள்ளதால் இடம்பெயர்ந்துள்ள நூற்றுக்கணக்கான குடும்பங்கள் சொந்த வீடுகளுக்குத் திரும்ப முடியாதுள்ளனர்.
பல ஆண்டுகளாக உறவினர், நண்பர்கள் வீடுகளில் அகதிகளாக அவல வாழ்வு வாழ்ந்து வருகின்றனர்.
இம் மக்களின் மீள் குடியமர்வை வலியுறுத்தி கடந்த மே 28ம் திகதி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை பாதிக்கப்பட்ட மக்களுடன் இணைந்து நடாத்தியிருந்தோம்.
எனினும் இன்றுவரை அம்மக்களின் மீள் குடியமர்வு தொடர்பாக எவ்விதமான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளினால் மேற்கொள்ளப்படவில்லை.
இந்நிலையில் பரவிப்பாஞ்சான் உட்பட இடம்பெயர்ந்து வாழும் மக்களுக்குச் சொந்தமான காணிகள், வீடுகளில் ஆக்கிரமித்து நிலை கொண்டுள்ள இராணுவத்தினர் அங்கிருந்து உடனடியாக வெளியேறுவதுடன், அந்த வீடுகளையும், நிலங்களையும் உரிமையாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரியும், இது தொடர்பில் சர்வதேச சமூகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியும் மீண்டும் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெறவுள்ளது.
இப்போராட்டத்தில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கின்றோம்.
என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyHTXLbkw5.html

Geen opmerkingen:

Een reactie posten