தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 25 november 2014

பிரபாகரன்... வழித்துணையல்ல.. வழி! - கவிஞர் பழனி பாரதி!



விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் 60வது பிறந்த நாளையொட்டி கவிஞரும் பாடலாசிரியருமான பழனிபாரதி ஒரு சிறப்புக் கவிதை எழுதியுள்ளார்.
இந்தக் கவிதையை பிரபல இசையமைப்பாளர் தாஜ் நூர் இசையில் வீடியோவாகவும் பதிவு செய்து வெளியிட்டுள்ளார். தாஜ் நூரின் இசை ஒலிக்க, கவிதை வரிகளை பழனி பாரதியே வாசித்துள்ளார்.
இன அழிப்புக்கு எதிரான ஆயுதம்தான் பிரபாகரன் எனும் பெயர் என்று கவிதையில் அவர் குறிப்பிட்டுள்ளது படிப்பவரை மெய் சிலிர்க்கச் செய்யும். பிரபாகரன் என்ற பெயர் தமிழ் இனத்தின் வழித்துணை மட்டுமல்ல, வழியே அதுதான் என்று கவிதையை அவர் முடித்துள்ளார்.
இதோ அந்தக் கவிதை...
கானுறை வேங்கையின்
கனலும் கண்களைப் பார்த்திருந்தால்...
 சமாதானத்தின்
வெள்ளைச் சொற்கள்
தீர்ந்து பீரங்கியின் மேல் அமர்ந்திருக்கும்
புறாவின்
சிறகுகளைத் தடவிக் கொடுத்திருந்தால்...
 நான் உங்களுக்கு
அந்தப் பெயரைச் சொல்லவேண்டியதில்லை
இன அழிப்புக்கு எதிரான
அந்தப் பெயர்
எங்களுக்கு ஓர் ஆயுதம்
அது எங்கள் படையெடுப்பு
அது எங்கள் மானங்காத்த சீருடை
அது எங்கள்
காயம் ஆற்றிய சிகிச்சை
எம் பெண்களை
வன்புணர வருகின்றவர்களின்
வழியில் அது ஒரு கண்ணிவெடியாக
இருந்தது
எம் குழந்தைகளுக்கு
தாய்ப்பாலாகச் சுரந்தது
மாபெரும் மனிதச் சங்கிலியான
அந்தப் பெயர் எங்களுக்கு ஒரு விதை
அது எங்கள் பசி
அது எங்கள் தாகம்
அது எங்கள் இரத்தம்
அது எங்கள் தழும்பு
அது எங்கள் புன்னகை
காற்றில்
தீச்சுடராய் அசையும்
காந்தள் மலரைத்
தொட்டுப் பாருங்கள்
அந்தப் பெயரை
நீங்களும் சூடிக்கொள்வீர்கள்
உயிருருக்கும்
யாழிசையைக்
கேட்டுப் பாருங்கள்
நீங்களும்
அந்தப் பெயரை
நீங்களும் பாடிச் செல்வீர்கள்
மனிதர்களுக்கு எதிரானவர்கள்
அந்தப் பெயரை
முள்ளிவாய்க்காலில்
புதைக்க நினைத்தார்கள் ...
 நந்திக் கடலில்
கரைக்க நினைத்தார்கள்...
அது
எங்கள் கைகளைப் பிடித்துக்கொண்டு
அழைத்துச் செல்லத் தொடங்கிவிட்டது
அந்தப் பெயர்
எங்கள் வழித்துணையல்ல
வழியே அதுதான்
- பழநிபாரதி-
கவிதையின் வீடியோ வடிவம்
மாவீரர் நாள்
http://www.tamilwin.com/show-RUmszBRZKYep7.html

Geen opmerkingen:

Een reactie posten