தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 3 augustus 2014

கொழும்புக்குச் சிக்கலை ஏற்படுத்தியுள்ள புதுடில்லி!

தமிழர் பிரச்சினைக்கு ஆட்சி மாற்றம் மாத்திரம் தீர்வாக இருக்காது: கஜேந்திரகுமார் (செய்தித் துளிகள்)
[ ஞாயிற்றுக்கிழமை, 03 ஓகஸ்ட் 2014, 02:17.34 AM GMT ]
இலங்கையில் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது மாத்திரம் தீர்வாக இருக்காது என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு இந்தக்கருத்தை வெளியிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையினால் தமக்கு நீதி கிடைக்கும் என்று தமிழ் மக்கள் நம்பவில்லை. எனினும் வேறு வழியின்றி ஐக்கிய நாடுகள் சபையுடன் இணைந்து செயற்பட வேண்டிய நிலை தமிழ் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.
இதேவேளை சில நாடுகள் தமது அக்கறையை கருத்திற் கொண்டே ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் நிகழ்ச்சித் திட்டத்தை இலங்கைக்குள் கொண்டு வந்துள்ளதாகவும் கஜேந்திரகுமார் கருத்துரைத்துள்ளார்.
போரின்போது நிகழ்ந்த உரிமைமீறல்கள் குறித்து ஜனாதிபதி ஆணைக்குழு மேற்கொள்ளும் விசாரணையை ஏற்கமுடியாது. இதற்காக அரசாங்கம் மாறினால் விசாரணையின் முடிவுகளில் மாற்றம் வரும் என்றும் கூறமுடியாது.
ஏனெனில் தெற்கில் சில இடதுசாரி கட்சிகளை தவிர ஏனைய சிங்கள கட்சிகள் படையினர் பாதுகாக்கப்பட வேண்டும் என்று கொள்கையை கொண்டிருப்பதாகும் என்று கஜேந்திரகுமார் குறிப்பிட்டுள்ளார்.
எனவேதான் சர்வதேச விசாரணை ஒன்றை தமிழ் மக்கள் நம்பவேண்டியநிலை ஏற்பட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டத்திற்கு எதிராக அமைச்சர் வீதியில் இறங்கி போராட்டம்
அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டத்திற்கு எதிராக அமைச்சர் ஒருவர் வீதியில் இறங்கி போராட்டம் நடத்த உள்ளார்.
அரசாங்கம் உரிய முறையில் அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்கத் தவறியுள்ளதாக குற்றம் சுமத்தி இந்தப் போரட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது.
சிறு போக ஏற்றுமதி மேம்பாட்டு அமைச்சர் ரெஜினோல்ட் குரே இந்தப் போராட்டத்தை இன்று முன்னெடுக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
களுத்துறை பொம்புவல பிரதேசத்தில் இன்று மக்களுடன் இணைந்து அமைச்சரும் வீதியில் இறங்கி அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்த உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
களுத்துறை மாவட்டத்தின் நாகொடை – நேபொட வீதி உரிய தரத்திற்கு அமைய நிர்மானிக்கப்படவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் இந்த வீதி புனரமைக்கப்பட்டிருந்தது. எதிர்வரும் 8ம் திகதி இந்த வீதி அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்கு நட்டமோ நட்டம்
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்கு சுமார் 583 மில்லியன் ரூபாய்கள் நட்டம் ஏற்பட்டுள்ளது.
கவனயீனம் காரணமாக கடலுக்கு அடியில் எரிபொருள் விநியோகப் பிரிவில் ஏற்பட்ட சேதம் காரணமாக 5 எரிபொருள் கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தில் பல நாட்களாக நங்கூரமிட்டிருந்தன.
கடந்த ஜூன் 14ஆம் திகதி முதல் 29 ஆம் திகதி வரை இந்தக்கப்பல்கள் துறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்தன.
இந்த கப்பல்களுக்கு தாமத கட்டணங்களாக மாத்திரம் 583 மில்லியன் ரூபாய்கள் செலுத்தப்பட்டுள்ளன.
இதனை தவிர அவசியமற்ற வகையில் எரிபொருள் தாங்கி ஒன்றை வாடகைக்கு அமர்த்தியமைக்காக மாத்திரம் 82 மில்லியன் ரூபாய்களை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் செலுத்தவேண்டியுள்ளது.
சிங்கப்பூருக்கு சொந்தமான அந்த எரிபொருள் தாங்கி, கப்பல் ஒன்றில் இருந்து கப்பலுக்கு எரிபொருளை ஏற்றுவதற்காகவே கொண்டு வரப்பட்டது.
எனினும் எரிபொருள் கப்பல் நிறுவனம் ஒன்று, குறித்த தாங்கியின் மூலம் எரிபொருளை தமது கப்பலில் இருந்து மற்றும் ஒரு கப்பலுக்கு ஏற்றுவதற்கு மறுப்பு தெரிவித்தது.
இதன்காரணமாக வெறுமனே குறித்த கப்பலுக்கு நாளொன்றுக்கு 2.73 மில்லியன் ரூபாய்களை செலுத்த வேண்டியேற்பட்டுள்ளது.
குறித்த எரிபொருள் தாங்கி ஒரு மாத உடன்படிக்கை அடிப்படையில் கொண்டு வரப்பட்டமையால், அதனை திரும்ப எடுத்துச்செல்ல உரிமையாளர் நிறுவனம் மறுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyITXLcft1.html
ஐக்கிய நாடுகள் அமர்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உரையாற்றவுள்ளார்
[ ஞாயிற்றுக்கிழமை, 03 ஓகஸ்ட் 2014, 02:24.29 AM GMT ]
அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பொது அமர்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உரையாற்றவுள்ளார்.
பிரதான உரை நிகழ்த்தும் பட்டியலின்படி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு இரண்டாவது நாள் ஒதுக்கப்பட்டுள்ளது.
அதேநாளில் பாகிஸ்தான், கனடா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளின் தலைவர்கள் உரையாற்றவுள்ளனர்.
அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரோன் ஆகியோர் அமர்வின் ஆரம்ப நாளான செப்டம்பர் 24 ஆம் திகதி உரையாற்றவுள்ளனர்.
இலங்கை உட்பட்ட நாடுகளின் பிரச்சினைகள் தொடர்பாக பேசப்படவுள்ள ஐக்கிய நாடுகளின் 27ஆவது மனித உரிமைகள் அமர்வு, செப்டம்பர் 8-26 ஆம் திகதி வரை நடைபெற்று முடிவடையும் வேளையில், ஐக்கிய நாடுகளின் பொது அமர்வு நடைபெறவுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyITXLcft3.html

கொழும்புக்குச் சிக்கலை ஏற்படுத்தியுள்ள புதுடில்லி!
[ ஞாயிற்றுக்கிழமை, 03 ஓகஸ்ட் 2014, 03:13.21 AM GMT ]
கொழும்புடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளும் இந்தியாவின் அணுகுமுறை ஒருபக்கத்தில் இலங்கைக்கு சாதகமாகவே இருந்தாலும், இன்னொரு பக்கத்தில் தனது நீண்டகால நண்பர்களுடனான உறவு குறித்த கலக்கமும் அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ளது.
நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசாங்கம் சில விவகாரங்களில் எடுத்துள்ள முடிவு கொழும்பைப் பெரிதும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது என்பதில் சந்தேகமில்லை.
தமிழர் பிரச்சினை இலங்கையின் உள்நாட்டு விவகாரம் என்பதும், இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கையில் எந்தவொரு மாநிலமும் தலையிட முடியாது என்பதும், கொழும்புக்குப் பெரும் திருப்தியைத் தரும் முடிவுகளாக இருந்தன.
ஏனென்றால் இதற்கு முந்திய காங்கிரஸ் அரசாங்கத்தின் காலத்தில் இந்த இரண்டு விவகாரங்களும் கொழும்புக்கு அழுத்தங்களைக் கொடுப்பதாகவும் தொந்தரவுகளைச் செய்வதாகவும் அமைந்திருந்தன.
தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண இந்தியா எடுத்த முயற்சிகளும் சரி, தமிழர்களின் நலன் சார்பாக இந்தியா எடுத்த நகர்வுகளும் சரி கொழும்பை வெறுப்பேற்றுவதாகவே இருந்தன.
இலங்கைத் தமிழர்களின் நலன்களைப் பாதுகாப்பது இந்தியாவின் பொறுப்பு என்று, இந்தியப் பிரதமராக இருந்த மன்மோகன் சிங்கும் அவரது அரசாங்கமும் அவ்வப்போது வலியுறுத்தி வந்தன. அது, இப்போதைய பாஜக அரசினது, தமிழர் பிரச்சினை உள்நாட்டு விவகாரம் என்ற கொள்கைக்கு முற்றிலும் நேர்மாறானது.
அதுபோலவே பல்வேறு சந்தர்ப்பங்களில், இலங்கை அரசுக்குச் சாதகமாக புதுடில்லி நடந்து கொள்ளத் தலைப்பட்ட போதெல்லாம், தமிழ்நாடு அதனைத் தட்டி வீழ்த்தி வந்தது.
குறிப்பாக சர்வதேச அரங்கில் இலங்கைக்கு எதிரான நகர்வுகள் மேற்கொள்ளப்பட்ட போதெல்லாம் இதனைக் காப்பாற்ற முயன்ற புதுடில்லிக்குக் கடிவாளம் போட்டது தமிழ்நாடு தான்.
இப்போது தமிழ்நாடோ அல்லது மேற்கு வங்காளமோ வெளிவிவகாரக் கொள்கையில் தலையிட முடியாது ஆலோசனை மட்டும் கூறலாம் என்று பாஜக அரசு திட்டவட்டமாக கூறிவருகிறது.
இது இலங்கை அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் மிகப்பெரிய பலம் என்பதில் சந்தேகமில்லை. சர்வதேச அரங்கில் இலங்கை இன்று முகம்கொடுத்துள்ள முக்கியமான பிரச்சினை போர்க்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல் விவகாரம் தான்.
இந்தப் பிரச்சினை சர்வதேச மயப்படுத்தப்படக் கூடாது என்று புதுடில்லி வலியுறுத்தும் நிலையிலும் ஐநாவில் இந்தியா துணை நிற்கும் என்ற வாக்குறுதியை வழங்கும் நிலையிலும் இலங்கை அரசின் மனோபலம் பலமடங்கு அதிகரித்துள்ளது என்பதில் சந்தேகமில்லை.
ஆனால் அதற்கு பாகிஸ்தான் போன்ற நட்பு நாடுகளின் உறவை விலையாகச் செலுத்த நேரிடுமோ என்ற அச்சம் கொழும்புக்குத் தோன்றியிருக்கிறது.
ஏனென்றால் அண்மைக்காலத்தில் பாகிஸ்தான உளவுத்துறையும் தீவிரவாதிகளும் இலங்கையைத் தளமாக வைத்து தென்னிந்தியா மீது தாக்குதல் நடத்த திட்டமிடுவதான குற்றச்சாட்டு இந்தியத் தரப்பில் இருந்து சுமத்தப்பட்டு வருகிறது.
இலங்கை அரசாங்கம் அப்படி யாரும் இலங்கையைத் தளமாகப் பயன்படுத்த அனுமதிக்கப் போவதுமில்லை என்று தெளிவாகப் பலமுறை கூறியிருந்த போதிலும் இந்தியத் தரப்பில் இருந்து இந்தக் குற்றச்சாட்டு வந்து கொண்டு தான் இருக்கிறது.
பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்சவும், பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரியவும் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸூம் எத்தனையோ முறை இவ்வாறு மறுத்தாலும், இந்தியத் தரப்பில் இருந்து தொடர்ந்து அதே குற்றச்சாட்டு வருகிறதென்றால் அதன் அர்த்தம் என்ன?
இலங்கை கூறுவதை இந்தியா ஏற்கத் தயாராக இல்லை. குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்கள் இந்தியாவின் கையில் உள்ளன என்று தான் கருத வேண்டும்.
கடந்த வாரமும் கூட பிரிகேடியர் ருவான் வணிகசூரிய மறுப்பை வெளியிட்ட நிலையில் என் ஐ ஏ எனப்படும் இந்தியாவின் தேசிய புலனாய்வுப் பிரிவு கொழும்பிலுள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் இருந்து செயற்படும் வீசா அதிகாரியானவர் இந்தியாவில் தாக்குதல் நடத்துவதற்கான தகவல்களைத் திரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதான தகவலை இலங்கையுடன் பகிர்ந்து கொள்ளவுள்ளதாகச் செய்திகள் வெளியாகின. இதற்கு இந்தியாவிடம் இரண்டு சாட்சிகள் உள்ளனர்.
ஒருவர் தமீம் அன்சாரி என்ற அடுத்தவர் சஹீர் ஹூசெய்ன் என்ற இலங்கையர்  இவர்கள் இருவரும் பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றும் அதிகாரி ஒருவரால் உளவாளியாக மாற்றப்பட்டவர்கள்.
தென்னிந்தியாவில் உள்ள கேந்திர நிலைகள் குறித்த தகவல்களைத் திரட்டிச் சென்று வழங்கி வந்தவர்கள் தமீம் அன்சாரி 2012ம் ஆண்டும் சஹீர் ஹூசெய்ன் 2014ம் ஆண்டும் கைது செய்யப்பட்டனர்.
இந்த இடைப்பட்ட காலத்தில் பாகிஸ்தான் தூதரக அதிகாரியான குறித்த நபரை இந்திய அதிகாரிகள் கண்காணித்து வந்துள்ளனர் என்ற விபரமும் வெளியாகியுள்ளது.
ஆக இந்தியா தனது பாதுகாப்புக்காக இலங்கையில் ஒரு புலனாய்வு யுத்தம் ஒன்றை நடத்திக் கொண்டிருக்கிறது என்பதும் வெளிப்படையாகியுள்ளது.
இலங்கையில் இருந்து தனது பாதுகாப்புக்கு அச்சுறத்தலை ஏற்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டமை பற்றிய சில ஆதாரங்கள் இந்தியாவின் கையில் இருப்பதால் தான் தொடர்ச்சியாக அதுபற்றிய குற்றச்சாட்டுகளை இந்தியா முன்வைத்து வருகிறது. இந்தியாவைப் பொறுத்தவரையில் சீனாவை நம்பினாலும் பாகிஸ்தானை நம்பத் தயாராக இல்லை.
சீனாவுடன் இந்தியா நெருங்கிச் செயற்பட முனைகின்ற போதும் புதிய இந்திய அரசாங்கம் பாகிஸ்தானுடன் அந்தளவுக்கு நெருங்கிச் செயற்பட போதிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்பதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.
பாகிஸ்தான் மூலம் நேரடியாகவோ மறைமுகமாகவோ வரக்கூடிய அச்சுறுத்தல் காஷ்மீருக்கும் அப்பால் இந்தியாவின் ஆள்புல ஒருமைப்பாட்டுக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடியது என்று இந்தியா கருதுகிறது. இந்தச் சூழலில் தான் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு இலங்கை பாகிஸ்தானைப் பயன்படுத்திக் கொள்வதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கும்படி புதுடில்லி வலியுறுத்தியிருந்தது.
புதுடில்லியின் புதிய அரசு காட்டும் நற்சமிக்ஞைகளுக்குத் தலைவணங்கும் வகையில், இலங்கை அரசும் சில நடவடிக்கைகளை எடுத்தது. அதில் ஒன்று இலங்கையில் அகதிகளாகத் தஞ்சமடைந்திருந்த பாகிஸ்தானியர்கள் மற்றும் ஆப்கானிஸ்தானியர்களை கைது செய்து தடுப்பு முகாம்களில் அடைத்தது.
அவர்களைத் திருப்பி அனுப்பும் நடவடிக்கைகளை இலங்கை அரசு மேற்கொண்டாலும் அதற்காக ஏற்படும் செலவுகள் குறிப்பாக விமானப் பயணச் செலவுகளைத் தாங்கிக் கொள்ள வேண்டியுள்ளது தான் சிக்கலாக உள்ளது.
அதனால் தான் தாமதங்கள் ஏற்பட்டுள்ளன. அடுத்து கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்திறங்கியதும் பெறக்கூடிய வீசா திட்டம் பாகிஸ்தானியர்களுக்கு ரத்துச் செய்யப்பட்டது இதன் மூலம் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு பாகிஸ்தானுக்கு இருந்து வந்த ஒருவழி அடைக்கப்பட்டது. அது போலவே கொழும்பிலுள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றிய அதிகாரி ஒருவரையும், இங்கிருந்து வெளியேறப் பணித்தது.
மாற்று அதிகாரி கொழும்பு வந்து பணியைப் பொறுப்பேற்ற பின்னரும் அவர் அநாவசியமாக கொழும்பில் தங்கியிருந்தார்.
இந்தியாவில் நரேந்திர மோடி அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் இலங்கை அரசாங்கத்தின் போக்கில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து, பாகிஸ்தான் கவனம் செலுத்தியுள்ளதாகவே தெரிகிறது.
பாகிஸ்தான் எப்போதுமே இரட்டடை நிர்வாகம் கொண்ட நாடாகவே இருந்து வருகிறது. அங்கு ஒரு அரசாங்கம் இருக்கும் ஆனால் அதன் விருப்பப்படி எல்லாம் நடக்காது.
அரசாங்கம் ஒன்றைச் செய்யும். அதற்கு மாறான இன்னொன்றை பாகிஸ்தான் இராணுவமும் புலனாய்வுத்துறையும் மேற்கொள்ளும். இந்தியாவுடன் நெருக்கத்தை ஏற்படுத்த பாகிஸ்தான் அரச நிர்வாகம் விரும்பினாலும் பாகிஸ்தான இராணுவமோ அல்லது புலனாய்வுத்துறையோ அதற்கு விரும்பாது.
நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் பங்கேற்று புதிய உறவுகளை ஏற்படுத்தும் சமிக்ஞையை வெளிப்படுத்தியிருந்தாலும் இன்னொரு பக்கத்தில் பாகிஸ்தான் இராணுவம் அதற்கெதிரான நகர்வுகளை மேற்கொண்டு தான் வருகிறது.
இந்திய அரசாங்கத்தின் அழுத்தங்களின் பேரில் பாகிஸ்தானை வெட்டிவிட இலங்கை அரசு முனைகிறதா என்ற சந்தேகம் கூட பாகிஸ்தான் உளவுப்பிரிவுக்கு வந்திருக்கலாம் அது இயல்பாகவே ஏற்படக்கூடிய சந்தேகமும் கூட இதுபற்றிப் பாகிஸ்தான் அவ்வளவாக கண்டுகொள்ளவில்லை என்று கருதமுடியாது.
அண்மையில் பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஜெனரல் ரஹீல் ஷரீப் கடந்த ஜூன் 19ம் திகதி இலங்கைக்கு மேற்கொள்ளவிருந்த பயணம் கடைசி நேரத்தில் ஒத்திப்போடப்பட்டது.
மேற்கு வரிசிஸ்தான் மாகாணத்தில் இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டதால் தான் அவரது பயணம் பிற்போட்டதாக காரணம் கூறப்பட்டது.
எனினும் அந்தப் பயணம் இன்னமும் மீள உறுதிப்படுத்தப்படவில்லை. என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
புதிதாக  ஏற்பட்டுள்ள நிலைமைகள் குறித்து கண்காணித்தே பாகிஸ்தான் அடுத்த நகர்வில் இறங்கும் எனத் தெரிகிறது.
புதுடில்லியுடன் ஏற்படத் தொடங்கியுள்ள நெருக்கத்துக்குப் பின்னர் பாகிஸ்தானிடம் இருந்து கொழும்பு சற்று விலகத் தொடங்கியுள்ளது என்பதை மகிந்த ராஜபக்ச அரசாங்கம் உணர்ந்தே இருக்கிறது.
அதனைச் சரிப்படுத்திக் கொள்வதற்காக இந்த மாதம் 21ம் திகதி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மூன்று நாள் பயணமாக பாகிஸ்தான் செல்லத் திட்டமிட்டிருக்கிறார்.
ஏனென்றால் இலங்கையைப் பொறுத்தவரையில் என்றுமே மறக்க முடியாத ஒருநாடு பாகிஸ்தான். விடுதலைப் புலிகளுக்கு எதிரான போருக்காக பாகிஸ்தான் ஏராளமான உதவிகளைச் செய்திருக்கிறது. அது இப்போது என்றில்லை.
1985ம் ஆண்டு பாகிஸ்தான் இராணுவ ஆட்சியாளராக இருந்த ஜெனரல் ஷியா உல் ஹக் இலங்கைக்கு மேற்கொண்ட பயணத்தின் பின்னர் விடுதலைப் புலிகளுக்கு எதிராகப் போரிடப் பயிற்சியளிக்கத் தொடங்கியது பாகிஸ்தான்.
அனுராதபுரம், சாலியபுர முகாமில் வைத்து கஜபா படைப்பிரிவுக்கு பாகிஸ்தான் மேஜர் ஒருவர் பயிற்சி அளித்து வந்தார்.
அவர் ஒப்பரேசன் லிபரேசன் நடவடிக்கையில் கூட நேரடியாகவே பங்குபற்றியிருந்தார். இந்திய இலங்கை உடன்பாட்டுக்கு பின்னர் அவரைத் தந்திரமாக வெளியேற வைத்தது புதுடில்லி. இந்தியப்படைகள் வெளியேறிய பின்னர் புலிகளுக்கு எதிரான போருக்குத் தேவையான எல்லா உதவிகளையும் பாகிஸ்தான் வழங்கியது.
ஆனையிறவின் வீழ்ச்சியைத் தொடர்ந்து 2000ம் ஆண்டு மே மாதம் விடுதலைப் புலிகளிடம் யாழ்ப்பாணக் குடாநாடு வீழ்ச்சி காணும் நிலை ஏற்பட்ட போது பாகிஸ்தான் கொடுத்த பல்குழல் பீரங்கிகள் தான் ஆயிரக்கணக்கான படையினரைக் காப்பாற்றியது.
ஏன் 2007ல் படையினர் வன்னியில் முன்னேறிக் கொண்டிருந்த போது ஒரு கட்டத்தில் ஆட்டிலறி, மோட்டார் குண்டுகளுக்குப் பெருந்தட்டுப்பாடு ஏற்பட்டது.
அப்போதும் பாகிஸ்தானே இராணுவக் களஞ்சியங்களில் இருந்து கப்பல்களில் அவற்றை அனுப்பி வைத்தது.
போரின் உச்சக்கட்டத்தில் வாரத்துக்கு ஒரு கப்பல் பாகிஸ்தானில் இருந்து பீரங்கி மோட்டார் குண்டுகளுடன் கொழும்புத் துறைமுகத்துக்கு வந்தது. அப்போது மட்டுமன்றி போர் முடிந்த பின்னரும் சர்வதேச அரங்கில் இலங்கையைக் காப்பாற்ற பாகிஸ்தான் தவறியதில்லை.
கடந்த மார்ச் மாதம் ஐநா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான சர்வதேச விசாரணையை மேற்கொள்ள வலியுறுத்தும் தீர்மானம் கொண்டு வரப்பட்ட போது அதனைத் தடுத்து நிறுத்துவது தோற்கடிப்பது என்று எல்லா முயற்சிகளையும் எடுத்திருந்தது பாகிஸ்தான்.
அப்போது பாகிஸ்தானுக்குப் பின்னால் தான் இந்தியா நின்று கொண்டது. அப்படிப்பட்ட பாகிஸ்தானை இழக்க இலங்கை விரும்பாது.
ஆனால் இந்தியா தனது பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக மட்டும் முயற்சிக்கவில்லை. பாகிஸ்தானை தூரவிலக்கி வைக்கவும் முயற்சிக்கிறது.
இந்த நிலையில் என்ன செய்யப் போகிறது இலங்கை?
சுபத்ரா
http://www.tamilwin.com/show-RUmsyITXLcft4.html

Geen opmerkingen:

Een reactie posten