[ ஞாயிற்றுக்கிழமை, 24 ஓகஸ்ட் 2014, 08:13.02 AM GMT ]
இவ்வாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நன்றி தெரிவித்து எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
அந்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
இலங்கையில் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வை பெற்றுக் கொள்வதற்கு அரசியல் அமைப்பில் ஏற்றுக் கொள்ளப்பட்ட தீர்வை நோக்கி முன்னகர்வதற்கு இருக்கக்கூடிய ஒரே வழிமுறையாக 13வது திருத்தச்சட்டத்தை அடிப்படையாகக் கொண்டு முன்னகர்வதுதான்.
இதையே நாங்கள் கடந்த இருபது வருடங்களுக்கு மேலாக மாறி மாறி ஆட்சிக்கு வந்த இலங்கை அரசுகளிடமும், தமிழ் மக்களிடமும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றோம்.
ஆனால் உங்களைச் சந்தித்த கூட்டமைப்பினரோ 13வது திருத்தத்தை அர்த்தமற்றது என்றும், அதை அமுல்படுத்தி தீர்வொன்றை நோக்கிச் செல்லமுடியாது என்றும் கூறிவருகின்றார்கள்.
இந்தநிலையில் அவர்களுடனான சந்திப்பில் 13வது திருத்தத்தை அடிப்படையாகக் கொண்டு அரசியல் தீர்வை கட்டியெழுப்ப வேண்டும் என்றும் இலங்கையில் உள்ள அனைத்துத் தரப்பினருடனும் கூட்டுறவாக செயற்பட்டு பிரச்சினைக்கு தீர்வுகாண உழைக்க வேண்டும் என்று நீங்கள் கூறியிருப்பதை மகிழ்ச்சியோடு வரவேற்கின்றேன்.
அதேபோல் இலங்கையில் குறிப்பாக வடக்கு, கிழக்கில் இந்திய அரசால் முன்னெடுக்கப்படும் உதவிகளை தொடருவதாகவும், இவ்விவகாரங்களில் இந்திய அரசு தவறாமல் கரிசனையோடு செயற்படும் என்றும், இலங்கையில் தமிழ் மக்கள் நீதி, பாதுகாப்பு, சமத்துவம் பெற்று வாழ வேண்டும் என்றும் நீங்கள் கூறியிருப்பது கண்டு பெருமகிழ்ச்சியடைகின்றேன்.
உங்களது வார்த்தைகள் தமிழ் மக்களுக்கு நிச்சயம் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும் என நம்புகின்றேன்.
உங்களின் பெறுமதி மிக்க ஆலோசனைகளை கூட்டமைப்பினர் சிரமேற்று செயற்பட வேண்டும் என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டியுள்ளது என்றும் அந்தக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyIRYLdfuy.html
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு கிளை புனரமைப்பு கூட்டம்
[ ஞாயிற்றுக்கிழமை, 24 ஓகஸ்ட் 2014, 08:21.52 AM GMT ]
அந்த வகையில் நேற்று மட்டக்களப்பு மாவட்டம் மட்டக்களப்பு தொகுதிக் கிளைக்கான புனரமைப்புக் கூட்டம் மட்டக்களப்பு நல்லையா வீதியில் அமைந்துள்ள இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட தலைமைக் காரியாலயத்தில் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பாக்கியசெல்வம் அரியநேத்திரன் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரான சீனித்தம்பி யோகேஸ்வரன் மற்றும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான துரைராஜசிங்கம், நடராசா மற்றும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் அணி உபதலைவர் பூபாலராஜா மற்றும் மட்டக்களப்பு தொகுதி தமிழ் அரசுக் கட்சி ஆதரவாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இதன் புதிய தலைவராக வவுணதீவு பிரதேசத்தைச் சேர்ந்த தம்கபிப்பிள்ளை கோபாலப்பிள்ளை, செயலாளராக கல்லடி பிரதேசத்தைச் சேர்ந்த கதிர்காமத்தம்பி குருநாதன், பொருளாளராக புதுக்குடியிருப்பு பிரதேசத்தைச் சேர்ந்த தங்கராசா இன்பராசா ஆகியோர் தெரிவு செய்யப்பட்டதுடன், உபதலைவர் உபசெயலாளர்களாக முறையே சட்டத்தரணி பிறேம்நாத் மற்றும் பூபாலராஜா ஆகியோர் தெரிவு செய்யப்பட்டு 14 நிர்வாக உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இங்கு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன்,
ஐக்கிய தேசியக் கட்சி, மக்கள் விடுதலை முன்னனி, முஸ்லிம் காங்கிரஸ் போன்ற கட்சிகளில் பிளவுகளை ஏற்படுத்தியது போல் இந்த அரசாங்கம் தமிழ் தேசியக் கூட்டமைப்பிலும் பிளவுகளை ஏற்படுத்த பலவாறாக முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.
அது முடியாது எனும் பட்சத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து தமிழரசுக் கட்சியை பிரிப்பதற்கு தனது வியூகத்தை வகுத்து வருகின்றது. அதில் முன்னின்று செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார் ஆனந்தசங்கரி ஐயா என தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.
கடந்த காலத்தில் வடகிழக்கில் இயக்கங்கள் காலத்தின் கட்டாயத்தில் வேறு பாதையில் சென்றன. இறுதியாக புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப், ஈரோஸ் டெலோ போன்ற இயக்கங்கள் போராடினாலும் கூட 86ம் ஆண்டுக்குப் பிறகு ஒரே ஒரு விடுதலை இயக்கம் மாத்திரம் 2009ம் ஆண்டு மே மாதம் 19ம் திகதி வரையும் போராடிக் கொண்டிருந்தது.
அந்தவகையில் அவ்வியக்கமானது தனித்துவமாக வடகிழக்கு மக்களுக்காக போராடினார்கள் அந்த விடுதலைப் போராட்டத்தினை வடகிழக்கு தமிழ் மக்கள் அனைவரும் ஏற்றுக் கொண்டார்கள் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதியாக அவ்வியக்கத்தினை அனைவரும் ஏற்றுக் கொண்டார்கள் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை.
இவ்வாறானதொரு போராட்டம் வளர்ச்சியடைந்ததன் நிமித்தமாகத்தான் 2001 பெப்ரவரி மாதம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. இவ்வாறு உருவாக்கப்படும் போது கூட அவ்வியக்கம் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது.
இந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் மட்டக்களப்பு கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் மற்றும் சில ஆர்வலர்கள் முயற்சியினை மேற்கொண்டார்கள். இவர்களின் முயற்சியாலேயே தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.
ஐக்கிய தேசியக் கட்சி, மக்கள் விடுதலை முன்னனி, முஸ்லீம் காங்கிரஸ் போன்ற கட்சிகளில் பிளவுகளை ஏற்படுத்தியது போல் இந்த அரசாங்கம் எமது தமிழ் தேசியக் கூட்டமைப்பிலும் பிளவுகளை ஏற்படுத்த பலவாறாக முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. அது முடியாது எனும் பட்சத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து தமிழரசுக் கட்சியை பிரிப்பதற்கு தனது வியூகத்தை வகுத்து வருகின்றது.
அதில் முன்னின்று செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார் ஆனந்தசங்கரி ஐயா அவர்கள்.
இந்த புளொட் அமைப்பும் ஆனந்தசங்கரி ஐயா அவர்களின் தமிழர் விடுதலைக் கூட்டணியும் பிரிந்து சென்று மீண்டும் 201ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பிரதேசசபைத் தேர்தலின் போதே எம்முடன் மீண்டும் வந்து இணைந்து கொண்டனர்.
தமிழ் மக்கள் எல்லாம் ஒற்றுமையாக இருக்கின்றனர். தமிழ் கட்சிகள் எல்லாம் ஒருமித்து இருக்கின்றன என்பதைக் காட்டுவதற்காகத் தான் அக்கட்சிகளையும் நாம் இணைக்க வேண்டியதாயிற்று.
எமது இலங்கைத் தமிழ் அரசுக் கட்சிக்கும் கொள்கை இருக்கின்றது யாப்பு இருக்கின்றது. இதற்கொன ஒரு மாவட்ட அமைப்பு, பிரதேச அமைப்பு, தொகுதி அமைப்பு, இளைஞர் அமைப்பு, மகளிர் அமைப்பு, கலாச்சார அமைப்பு என பல அமைப்புகள் இருக்கின்றன.
மாநாடு நடாத்தக் கூடிய வாய்ப்பு இருக்கின்றது. இது போல் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருக்கும் அனைத்துக்கட்சிகளுக்கு அவ்வாய்ப்புகள் இருக்கின்றது அதனை அவர்களும் மேற்கொள்ளலாம் மேற்கொண்டிருக்கின்றார்கள்.
ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற ரீதியில் நாம் மாநாடு எதுவும் மேற்கொள்ள முடியாது. இவ்வாறு சட்டம் இருக்கின்றது. இவ்வாறு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருப்பதன் காரணமாக ஏனைய கட்சிகளும் இதில் பலம் பொருந்தியவர்களாக இருக்கின்றார்கள்.
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியை உடைத்துவிட்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பினை பலப்படுத்துவதென்பது முடியாத விடயம்.
எனவே இதனைப் பலப்படுத்தி எது இந்தக் கட்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதற்காக இந்தக்கட்சியின் மூலமாக எமது அரசியல் பணியினை ஏனைய கட்சிகளுடன் சேர்ந்து மேற்கொள்வதற்காக நாம் ஒன்றாக இருக்க வேண்டும்.
எமது தமிழ் அரசுக் கட்சியுடன் சேர்ந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வளர்ச்சியை பல்வேறு பட்ட நாடுகள் பார்த்துக் கொண்டிருக்கின்றன. அதுபோல் அவை உதவிகளை மேற்கொள்ளவும் தயாராக இருக்கின்றன.
இலங்கையின் போராட்ட வரலாற்றில் பிராந்திய வல்லரசாக இருந்து அனைத்தையும் கவனித்துக் கொண்டிருந்தது இந்தியா.
இந்தியாவே இந்த 13வது அரசியல் சட்டத்தைக் கொண்டு வந்தது. எந்த ஒரு சர்வதேச நாடும் மேற்குலக நாடுகள் இந்தியாவின் ஒப்புதல் இல்லாமல் இந்தியாவை வெறுத்து ஒதுக்கி விட்டு எமது மக்களுக்கு எந்த ஒரு தீர்வினையும் தராது என்பது நாம் கண்ட வரலாறு. இவ்வாறு மேற்குலக நாடுகளை வழிக்கு கொண்டுவருவதற்கு இந்தியாவின் அரசாங்கத்தினருடன் சில நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டி இருக்கின்றது.
எனவே இனிவரும் காலங்களில் நாம் எமது அரசியல் பலத்தினை தக்க வைத்துக் கொள்ள வேண்டும். தமிழரசுக்கட்சிக்கு தான் ஆதரவாக இருக்க வேண்டும் என்று நாங்கள் கூறவில்லை இன்று தமிழர்களுக்கென்று ஒரு அரசியல் பலமாக எது இருக்கின்றதோ அதற்கு உங்கள் ஆதரவை வழங்குங்கள் என்றே கேட்கின்றோம்.
அதற்காக தமிழர்களாக இருந்து கொண்டு மாற்றுக்கட்சிகளில் சோரம் போகும் அரசியல்வாதிகளின் பின்னால் நாம் செல்வோமாக இருந்தால் அந்த இடத்திலேயே எமது தேசியம் அழிக்கப்படுகின்றது என்று தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmsyIRYLdfuz.html
என்ன செய்யப் போகிறது புதுடில்லி?
[ ஞாயிற்றுக்கிழமை, 24 ஓகஸ்ட் 2014, 08:25.22 AM GMT ]
புதுடில்லியில் பா.ஜ.க. அரசு அமைந்தவுடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அழைப்பு விடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
பின்னர், ஜூலையில் அழைப்பு விடுக்கப்படும் என்று கருதப்பட்டது.
ஆனால், சுமார் மூன்று மாதங்கள் கழித்துத் தான் இந்த சந்திப்புகள் சாத்தியமாகியுள்ளன.
இந்த மூன்று மாதகால இடைவெளிக்குள், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப் பேசியிருந்ததுடன், வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பிரீஸை, இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தார்.
எனினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான சந்திப்பு குறித்த தீர்மானம் ஏதும் புதுடில்லியால் எடுக்கப்படாத நிலையில், இந்த விடயத்தில் இந்தியா தயக்கம் காட்டுகிறதா என்ற சந்தேகம் எழுந்தது.
இதற்கிடையில், சுப்பிரமணியம் சுவாமி வேறு, இலங்கை அரசாங்கம் அனுமதி அளித்தால் தான், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பேசுவார் என்று கொளுத்திப் போட்டுப் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.
அதைவிட இலங்கை அரசின் விருந்தினர்களாக கொழும்பு வந்திருந்த பா.ஜ.க. கொள்கை வகுப்பாளர்களான கலாநிதி சேஷாத்ரி சாரி போன்றவர்கள் கூட, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இந்தியா முக்கியத்துவம் கொடுக்காது, என்பது போலவே கருத்துக்களை வெளியிட்டிருந்தனர்.
இதனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு புதுடில்லியின் புதிய அரசாங்கம் அவ்வளவு இலகுவாக கதவைத் திறக்காது என்ற கருத்து மெல்ல மெல்ல உருவாகத் தொடங்கியிருந்தது.
எவ்வாறாயினும், புதுடில்லியில் ஆட்சியமைக்கப்பட்டு மூன்று மாதங்களுக்குள், இலங்கை தொடர்பான முடிவுகள் எடுக்கப்படுவதற்கு முன்னதாக, கொழும்புடனான புதுடில்லியின் காய்நகர்த்தல்கள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னதாக, பா.ஜ.க. அரசாங்கம் தமிழர் தரப்பின் கருத்துக்களையும் செவிமடுக்க இணங்கியிருப்பது குறிப்பிடத்தக்க விடயமே.
கடந்த வெள்ளிக்கிழமை முற்பகல், இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் குழு, நேற்று முற்பகல் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது.
புதுடில்லிச் சந்திப்புகளின் போது, 13வது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவது, அதற்கு அப்பால் சென்று அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வை வழங்கும் அரசியல் தீர்வை நடைமுறைப்படுத்தல் என்பன, தமது முக்கியமான கோரிக்கைகளாக இருக்கும் என்று கொழும்பில் இருந்து புறப்பட முன்னரே கூட்டமைப்புத் தலைவர்கள் தெரிவித்திருந்தனர்.
இவற்றை செயற்படுத்தும் படி, இலங்கை அரசாங்கத்துக்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எதிர்பார்ப்பு. ஆனால், இந்தியாவின் கருத்து என்ன என்று இந்தப் பத்தி எழுதப்படும் வரையில் வெளியாகவில்லை.
புதுடில்லியில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பின் போது பேசப்பட்ட விடயங்கள் என்ன என்பது வெளிவருவதற்கு முன்னரே இந்தப் பத்தி எழுதப்பட்டது என்பதால், அதுபற்றிய விபரங்கள் எதையும் இங்கு அலசுவது பொருத்தமல்ல.
ஆனால், இந்தியா எடுத்த எடுப்பிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கைகளுக்குச் செவி சாய்த்து விடும் என்று கருதுவதற்கில்லை. பா.ஜ.க. அரசாங்கம் தனது முதல் மூன்று மாதகால பதவிக்காலத்திலும், பெரியளவில் கொள்கை சார்ந்த முடிவுகள் எதையும் எடுக்கவில்லை என்றே கூறலாம்.
இலங்கை உள்ளிட்ட விவகாரங்களில், தமது நிலைப்பாட்டைத் தீர்மானிப்பதற்கு முன்னர், நிலைமைகளை அவதானிப்பதற்கே இந்தக் காலகட்டத்தைப் பயன்படுத்திக் கொண்டுள்ளது.
எனவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான சந்திப்பின்போது பெரியளவிலான வாக்குறுதிகள் எதையும் எதிர்பார்ப்பது கடினம். ஏற்கனவே இலங்கை அரசினது நிலைப்பாட்டை கேட்டறிந்து கொண்டுள்ள, இந்திய அரசாங்கம், இப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கருத்துக்களையும் அறிந்து கொண்டுள்ளது.
இனிமேல் தான், புதுடில்லி எவ்வாறு நடந்து கொள்வது என்று தீர்மானிக்கும்.
எவ்வாறாயினும், புதுடில்லி இந்த விவகாரத்தில் எவ்வாறு செயற்படப் போகிறது என்பது, கொழும்புடனான உறவுகளை மையப்படுத்தியே தீர்மானிக்கப்படும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.
இலங்கையை தனது மூலோபாயப் பங்காளியாக சீனா எவ்வாறு அரவணைத்துக் கொண்டுள்ளதோ, அதுபோலவே, இலங்கையை அரவணைத்துச் செல்லவே இந்தியாவும் முற்படும்.
எனவே, கொழும்புடன் விரோதப்போக்கை வளர்த்துக் கொள்ளும் அளவுக்கு, இந்தியாவின் அணுகுமுறை அமைவதற்கு வாய்ப்பில்லை.
13வது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜூம் இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்தியிருந்தனர்.
ஆனால், அண்மையில் அலரி மாளிகையில், வெளிநாட்டுச் செய்தியாளர்களுடனான சந்திப்பின் போது கூட, 13வது திருத்தச்சட்டம் ஏற்கனவே முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டு விட்டதாகவும், இனிமேல், நடைமுறைப்படுத்துவதற்கு எதுவுமில்லை என்றும் கையை விரித்திருந்தார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச.
காணி அதிகாரங்கள் குறித்து அவர் எதையும் பேசவில்லை. ஆனால், பொலிஸ் அதிகாரங்களை வழங்க முடியாது என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்து விட்டார்.
இந்தநிலையில் தான், 13வது திருத்தச்சட்டம் குறித்து என்ன முடிவை இந்தியா எடுக்கப் போகிறது?. என்ற கேள்வி எழுந்துள்ளது.
13வது திருத்தச்சட்டத்துக்கு அப்பால் சென்று அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பதாக, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இந்தியாவுக்கு கொடுத்த வாக்குறுதிகள் குறித்து, இப்போது அரசாங்கம் எதையுமே பேசுவதில்லை.
இந்தச் சூழலில், கடந்த வாரம் இலங்கை இராணுவத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட வருடாந்த பாதுகாப்புக் கருத்தரங்கில் உரையாற்றிய பா.ஜ.க.வின் முக்கிய தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியசுவாமி, 13வது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்தும்படி, இலங்கையிடம் இந்தியா அழுத்தம் கொடுக்க முடியாது என்று கூறியிருக்கிறார்.
அவ்வாறாயின், 13வது திருத்தச்சட்டத்தின் மூலம் இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு அதிகாரங்களைப் பெற்றுக் கொடுப்பதாக இந்தியாவினது கடப்பாடு, வாக்குறுதி கேள்விக்குள்ளாகும்.
பா.ஜ.க. அரசாங்கம், ஏற்கனவே 13வது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு இலங்கையிடம் கோரியிருக்கிறது. அதுவும், இந்தியப் பிரதமரும், வெளிவிவகார அமைச்சருமே இந்த விவகாரத்தை ஆரம்பித்திருந்தனர்.
எனவே, 13வது திருத்தச்சட்டத்தின் மூலம் அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்கும் கடப்பாட்டில் இருந்து இந்தியாவினால் அவ்வளவு இலகுவாக விலகிக் கொள்ள முடியாது.
அவ்வாறு விலகிக் கொண்டால், வலுவானதொரு தலைவர் என்று மதிக்கப்படும், இந்தியப் பிரதமர் மோடிக்கும் அவரது அரசாங்கத்துக்கும் சின்னஞ்சிறிய இலங்கையிடம் கூட மண்டியிட்டவர் என்ற கெட்ட பெயரை ஏற்படுத்தி விடும்.
எனவே இந்த விவகாரத்தில் இந்தியா, மிகவும் நிதானமாகவும், அதேவேளை உறுதியாகவும் முடிவெடுக்க வேண்டிய நிலை ஒன்று ஏற்பட்டுள்ளது.
வரும் நவம்பர் மாதம், இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் குமார் டோவலும், டிசம்பர் மாதம் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜூம் இலங்கைக்குப் பயணம் மேற்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதுபோல, வரும் ஜனவரியில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கை வருவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியப் பிரதமரை கொழும்புக்கு அழைத்து வந்து, அவர் தனது பக்கத் தில் இருப்பதாக காட்டிக் கொள்ளவே இலங்கை அரசாங்கமும் விரும்புகிறது.
இந்தச் சூழலில், 13வது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தல் மற்றும், அதிகாரப்பகிர்வு விடயங்களில், இந்தியா எவ்வாறு இலங்கையை இணங்க வைக்கப் போகிறது என்பது கேள்விக்குரிய விடயமாகவே உள்ளது.
இந்தியா தனது நலன்களையும் பாதிக்காமல், அதேவேளை தமிழர்களின் நலன்களையும் பாதிக்காமல் ஒரு முடிவை எடுக்கவே முனையும். எது எவ்வாறாயினும், இலங்கைத் தமிழர் நலனை முற்றிலுமாக புறக்கணித்து ஒரு முடிவை பா.ஜ.க. அரசாங்கத்தினால் எடுத்து விடமுடியாது.
மத்தியில் ஆட்சி நடத்துவதற்கு வேண்டுமானால் மாநிலங்களின் தயவு பா.ஜ.கவுக்குத் தேவையில்லாமல் இருக்கலாம். ஆனால், அடுத்த தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் ஒரு பெரிய குறியை வைத்திருக்கிறது பா.ஜ.க.
இலங்கைத் தமிழர் நலன்களைப் புறக்கணித்து விட்டு, பா.ஜ.க.வினால், தமிழ்நாட்டில் காலூன்றுவது மிகக்கடினம்.
காங்கிரஸின் நிலை வேறு. அதற்கென்றொரு வாக்கு வங்கி தமிழ்நாட்டில் உள்ளது.
ராஜீவ் மரணத்தின் பின்னர், காங்கிரஸ்காரர்கள், இலங்கைத் தமிழர் நலன் மீது அக்கறை கொள்வதில்லை.
அதனால் காங்கிரஸினால் அதை அலட்சியம் செய்ய முடியும். ஆனால் பா.ஜ.க.வின் நிலை அவ்வாறில்லை. அது பிராந்தியக் கட்சிகளையும், இலங்கைத் தமிழர் ஆதரவு வாக்குகளையும் நம்ப வேண்டும்.
எனவே இலங்கை தொடர்பான கொள்கையை புதுடில்லி வகுக்கும் போது, நிச்சயம், தமிழர் பிரச்சினையையும் மனதில் கொண்டேயாக வேண்டிய கட்டாயம் பா.ஜ.க. தலைமைக்கு உள்ளது.
அதன் வழியாகத் தான், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புதுடில்லிக்கு அழைக்கப்பட்டது. எனினும், இந்த விவகாரத்தை எந்தளவுக்கு அர்ப்பணிப்புடன் புதுடில்லி கையாளப் போகிறது என்பதை சற்றுப் பொறுத்திருந்து பார்க்கலாம்.
- ஹரிகரன்
http://www.tamilwin.com/show-RUmsyIRYLdfu0.html
Geen opmerkingen:
Een reactie posten