[ வெள்ளிக்கிழமை, 01 ஓகஸ்ட் 2014, 06:15.24 AM GMT ]
தமிழக மீனவர்களை அடிக்கடி இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து செல்லும் சம்பவம் வாடிக்கையாக இருந்து வருகிறது. மேலும் அவர்களது படகுகளையும் பறித்து செல்லும் செயலும் தொடர்ந்து அரங்கேறி வருகிறது.
இந்த நிலையில் இலங்கை கடற்படை பறிமுதல் செய்து கொண்டு செல்லப்பட்ட விசை படகுகளை மீட்கவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 25–ந்தேதி முதல் புதுக்கோட்டை மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அதே போன்று இராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்களும் 6–வது நாளாக வேலை நிறுத்தம் செய்து வருகிறார்கள்.
இதன் தொடர்ச்சியாக அனைத்து விசைபடகு மீனவர்கள் சங்கங்கள் சார்பில் மீனவர்களின் படகு உரிமத்தை ஒப்படைக்கும் போராட்டத்தை அறிவித்தனர்.
அதிகாரிகளின் பேச்சுவார்த்தையை தொடர்ந்து இந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. இருப்பினும் மீனவர்களின் வேலை நிறுத்த போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது.
இந்த நிலையில் இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்து கொண்டு செல்லப்பட்ட விசைபடகுகளை மீட்பதற்காக திட்டமிட்டப்படி வெள்ளை கொடி கட்டி குடும்பத்துடன் படகுகளில் கச்சத்தீவு செல்ல முடிவு செய்துள்ளனர்.
இந்த போராட்டம் நாளை சனிக்கிழமை திட்டமிட்டபடி நடைபெறவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
இதற்காக படகுகளில் வெள்ளை கொடிகளை கட்டும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். இந்த போராட்டத்தில் ராமேஸ்வரம் மீனவர்களுடன் புதுக்கோட்டை மீனவர்களும் கை கோர்க்க தயாராகி உள்ளனர்.
இது தொடர்பாக கோட்டை பட்டினத்தில் மீனவர் பிரதிநிதிகள் ஆலோசனை மேற்கொண்டனர். கச்சசத்தீவு நோக்கி மீனவர்கள் செல்லும் போராட்டம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை நோக்கி வரஉள்ள தமிழக மீனவர்களை பாதியிலேயே தடுக்க இலங்கை கடற்படையும் இந்திய எல்லையில் முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
அதே நேரத்தில் இந்திய கடற்படையும் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தயாராகி வருகிறது.
போராட்டத்தை நடத்தியே தீருவோம் என்று அறிவித்துள்ள மீனவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை தடுத்து நிறுத்தவும் அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmsyITVLcguz.html
வீரவன்ஸவை வெளியேறுமாறு மறைமுகமாக கூறும் அரசு!- கோத்தாவின் துதி பாடும் வீரவன்ஸ
[ வெள்ளிக்கிழமை, 01 ஓகஸ்ட் 2014, 07:10.00 AM GMT ]
ஊவா மாகாண சபைத் தேர்தல் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பட்டியலில் போட்டியிட தேசிய சுதந்திர முன்னணிக்கு வேட்புமனு வழங்கப்படுவது நிராகரிக்கப்பட்டது.
இதனால் அவர், ஊவா மாகாண சபைத் தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக அமைச்சர் விமல் வீரவன்ஸ பிரசாரம் செய்து வருகிறார்.
எனினும் தேசிய சுதந்திர முன்னணி சார்பில் பதுளை மற்றும் மொனராகலை மாவட்டங்களில் நிறுத்தும் வேட்பாளர் பட்டியலை தயார் செய்ய முடியாத நிலைமை காணப்படுவதாக பேசப்படுகிறது.
இந்த நிலையில், ராஜபக்சவினரின் ஆதரவை ஈர்க்கவும் பிரசாரத்தை பெறும் நோக்கிலும் அமைச்சர் வீரவன்ஸ, பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை துதி பாட ஆரம்பித்துள்ளதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அரசாங்கத்தை விமர்சித்து மேற்கொண்டு வரும் நடிப்பை ஒரு படி முன்னோக்கி நகர்த்தியுள்ள வீரவன்ஸ, பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச அரசியலுக்கு வர வேண்டும் என்று கூறியிருப்பதாக அரசியல் அவதானிகள் குறிப்பிட்டுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmsyITVLcgu2.html
ஆளும் கட்சியின் அமைச்சர்களுக்கு இடையிலான முறுகல் முற்றுகிறது- சிறிய கட்சிகள் அரசில் இருந்து விலகி வருகின்றன: ஜே.வி.பி
[ வெள்ளிக்கிழமை, 01 ஓகஸ்ட் 2014, 07:13.29 AM GMT ]
ஊவா மாகாண சபை தேர்தலுக்கு தயாராகி வரும் சூழலில், அந்த மாகாணத்தின் மாவட்டங்களில் ஒன்றான பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான அமைச்சர்கள் நிமால் சிறிபால டி சில்வா மற்றும் டிலான் பெரேரா இடையிலான மோதல்கள் வெளியில் தெரியவரும் அளவுக்கு அதிகரித்துள்ளன.
அரசியல்வாதிகள் விளையாட்டுக் கழகங்களுக்குள் தலையீடுகளை மேற்கொள்ள கூடாது என அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா, அமைச்சர் டிலான் பெரேராவுக்கு எதிராக கருத்து வெளியிட்டிருந்தார்.
அத்துடன் அமைச்சர் டிலான் பெரேரா, சில அமைச்சர்கள் அமைச்சு அலுவலகத்தையும் படுக்கை அறையையும் குழப்பிக்கு கொண்டுள்ளதாக அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா மீது மறைமுகமாக குற்றம் சுமத்தியுள்ளார்.
அதேவேளை ஊவா மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா, மாகாணத்திற்கு சேவைகளை செய்த டாசன்கள் எஞ்சுவார்கள் எனவும் ஏனையோர் சிதறுண்டு போவார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அதிகாரம் குறைவாதல் சிறிய கட்சிகள் அரசில் இருந்து விலகி வருகின்றன
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கும் சிறிய கட்சிகள் அரசாங்கத்தில் இருந்து விலகி வருவது மக்கள் மீதுள்ள அன்பு காரணமாக அல்ல என ஜே.வி.பியின் பிரதான செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
அதிகாரம் குறைந்து வருவதே சிறிய கட்சிகள் அரசாங்கத்தில் இருந்து விலகி நிற்தற்கான உண்மையான காரணம்.
தேசிய சுதந்திர முன்னணி ஊவா மாகாண சபைத் தேர்தலில் தனித்து போட்டியிடுவதற்கான காரணமும் இதுவே எனவும் ரில்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyITVLcgu3.html
தமிழக முதல்வரை இழிவுபடுத்திய இலங்கை அரசின் அக்கிரமம்!- வைகோ கடும் கண்டனம்
[ வெள்ளிக்கிழமை, 01 ஓகஸ்ட் 2014, 07:14.03 AM GMT ]
அதுமட்டுமின்றி, ‘நரேந்திர மோடிக்கு ஜெயலலிதா எழுதும் காதல் கடிதங்களுக்கு என்ன பொருள்?’ என்று தலைப்பிட்டு ஒரு கட்டுரையும், இலங்கை பாதுகாப்புத்துறை இணையத்தளத்தில் வெளிவந்துள்ளது.
இலங்கை இராணுவ அமைச்சகத்தின் கொடூரமான வக்கிர புத்தியை அப்படியே வெளிப்படுத்தும் விதத்தில் இவை அமைந்து இருக்கின்றன.
ஹிட்லரின் நாஜிப்படைகள் கூடச் செய்யத் துணியாத அக்கிரமத்தை ஈழத்தமிழ் மக்களுக்கும், தமிழ்ப் பெண்களுக்கும் இழைத்த இலங்கை இராணுவம், தமிழ்நாட்டின் முதல்வர் பொறுப்பில் உள்ள மாண்புமிகு ஜெயலலிதா அவர்களை இழிவு படுத்தத் துணிந்து இருக்கின்றது.
இத்தகைய கேவலமான வக்கிர எண்ணம் படைத்த இலங்கை அரசாங்கத்தின் செயல்பாடு மன்னிக்கவே முடியாத வன்மையான கண்டனத்துக்கு உரியது ஆகும்.
தமிழக முதலமைச்சர், பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதுவது வெறும் கடிதங்கள் அல்ல. இலங்கை அரசால் இனப்படுகொலைக்கு ஆளாகி, இன்னமும் இராணுவ முற்றுகைக்குள் சுதந்திரத்தைப் பறிகொடுத்துவிட்டுத் திறந்தவெளிச் சிறையில் வாடிக் கொண்டு இருக்கின்ற ஈழத் தமிழர்களின் கண்ணீரைத் துடைக்கவும், வாழ்வாதாரத்தை மீட்டு எடுக்கவும் வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா கடிதம் தீட்டுகிறார்.
இனப்படுகொலை நடத்திய ராஜபக்சவை சர்வதேச குற்றக் கூண்டில் நிறுத்த வேண்டும் என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியதைச் சுட்டிக்காட்டிப் பிரதமருக்குக் கடிதம் எழுதினார்.
ஏழரைக் கோடித் தமிழ் மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் கடிதங்கள் அவை.
நெருப்புக்குத் தன்னை இரையாக்கிய வீரத் தமிழ் இளைஞன் முத்துக்குமார் உள்ளிட்ட 19 தமிழ் இளைஞர்களை எரித்த நெருப்பின் சீறல் அந்தக் கடிதங்கள்.
நாள்தோறும் இலங்கைக் கடற்படையால் தாக்குதலுக்கு உள்ளாகும் தமிழக மீனவர்களை இந்திய அரசு காப்பாற்ற வேண்டும் என்று வைக்கப்படும் கோரிக்கைதான் முதல்வரின் மடல்கள்.
ஆனால், இலங்கை இராணுவ அமைச்சகத்திற்கு எத்தகைய மண்டைக் கொழுப்பும் ஆணவமும் இருந்தால், இந்திய அரசையும் தமிழக அரசையும் துச்சமாக நினைத்து தமிழக முதல்வர் மீது கீழ்த்தரமான முறையில் விமர்சனம் செய்யத் துணிவார்கள்?
தமிழக முதலமைச்சரைக் கிள்ளுக்கீரையாக இலங்கை அரசு நினைப்பதற்கு யார் காரணம்? எவர் கொடுத்த துணிச்சல்?
ராஜபக்சே கைக்கூலியும் தமிழினத் துரோகியுமான சுப்பிரமணிய சுவாமியை இந்திய அரசின் தூதராக இலங்கைக்கு அனுப்பி, ராஜபக்சவுடன் கைகுலுக்கச் செய்து சிங்கள அரசுக்கு இந்தியா துணையாக இருக்கும் என்று தெரிவித்ததுதான் இலங்கை அரசின் இத்தகைய அத்துமீறலுக்குக் காரணம்.
இதுமட்டுமின்றி, இலங்கை இராணுவ அமைச்சகத்தின் கட்டுரையில்,
பாரதிய ஜனதா கட்சியின் முழு அதிகாரமிக்க உயர்நிலைக்குழு சுப்பிரமணியன் சுவாமி தலைமையில் கொழும்பு வந்து, ராஜபக்சவைச் சந்தித்தது.
இந்திய - இலங்கை ராஜீய உறவுகளைத் தமிழ்நாடு தீர்மானிக்க முடியாது. இதில் ஜெயலலிதாவின் தந்திரோபாயங்கள் எதுவும் எடுபடாது.
இந்திய-இலங்கை கடல் எல்லை பற்றியும், கச்சதீவு குறித்தும் 1974 மற்றும் 1976ல் இரு அரசுகளும் செய்து கொண்ட உடன்பாடு இறுதியானது, மாற்றத் தக்கது அல்ல.
இதை மாற்ற வேண்டும் என்று ஜெயலலிதா கூப்பாடு போட்டு, புலம்புவதால் எந்தப் பயனும் இல்லை. இலங்கைக் கடல்வளத்தைத் தமிழக மீனவர்கள் கொள்ளை அடிப்பதை அனுமதிக்க முடியாது” என்றும் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
வரலாற்றில் தமிழ்நாட்டையோ, தமிழக முதலமைச்சரையோ இந்த அளவுக்கு இழிவுபடுத்த உலகில் இதுவரை எவரும் துணிந்தது இல்லை. ஜெயலலிதா போடும் தாளத்திற்கு ஏற்ப பிரதமர் மோடி ஒருபோதும் ஆட மாட்டார்.
எனவே, ஜெயலலிதா எந்தவிதமான நியாயப்படுத்த முடியாத வெற்றுக் கூச்சல் எழுப்ப வேண்டாம் என்று திமிரோடு இலங்கை இராணுவ அமைச்சகம் கூறி இருக்கின்றது.
இந்திய அரசு உடனடியாக இலங்கை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கை அரசுடனான தூதரக உறவுகளை முறிக்க வேண்டும்.
இல்லாவிடில் சிங்கள அரசோடு கைகோர்த்துக் கொண்டு தமிழ் இனத்தைத் தண்டிக்கவும், தமிழ் மக்களை இழிவுபடுத்தவும் நரேந்திர மோடி அரசு துணிந்து விட்டதோ என்ற குற்றச்சாட்டுக்கு ஆளாக நேரிடும்.
எனவே, இந்திய அரசு உடனடியாக இலங்கை அரசு மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
“தாயகம்” வைகோ
சென்னை - 8 பொதுச் செயலாளர்,
01.08.2014 மறுமலர்ச்சி தி.மு.க
சென்னை - 8 பொதுச் செயலாளர்,
01.08.2014 மறுமலர்ச்சி தி.மு.க
தொடர்புடைய செய்தி- மோடிக்கு ஜெயலலிதா தொடர்ந்தும் காதல் கடிதம்: இலங்கை பாதுகாப்பு இணையத்தளத்தில் கிண்டல்
http://www.tamilwin.com/show-RUmsyITVLcgu4.html
Geen opmerkingen:
Een reactie posten