தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 25 augustus 2014

'மோடியின் உறுதிமொழி: இலங்கை தமிழர்களுக்கு இன்பத்தேன்'


இலங்கை தமிழர் பிரதிநிதிகளின் கோரிக்கைகளை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, உன்னிப்பாகவும், பரிவுடனும் கேட்டறிந்தார் என்னும் செய்தி, தமிழினத்திற்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. அது இலங்கை தமிழர்களின் காதுகளில் இன்பத்தேனாக பாய்ந்திருக்கும் என்று புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி. சண்முகம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில், மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பிரதமர் நரேந்திர மோடியை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான குழுவினர் சந்தித்துப்பேச்சுவார்த்தை நடத்தினர்.

இலங்கை தமிழர்களுக்கு சம உரிமை வழங்க இந்தியா நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் இச்சந்திப்பின் போது கோரிக்கை விடுத்தனர்.

இலங்கை தமிழர்களுக்கு உரிய அதிகார பகிர்வு கிடைப்பது குறித்தும், 13ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும், இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணத்தை சேர்ந்த மக்களின் பல்வேறு பிரச்சினை நிரந்தரமாக தீர்ப்பது குறித்தும் வலியுறுத்தினார்கள்.

இலங்கை தமிழர்கள் சம உரிமை பெற இந்தியா துணை நிற்கும் என்று உறுதியாக தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு உலகில் உள்ள ஒட்டுமொத்த தமிழனமே நன்றி கூற கடமைப்பட்டுள்ளது.

தங்களுக்கு என்று நிரந்தர விடியல் கிடைக்கும் என்று ஏங்கி கொண்டிருக்கும் இலங்கை தமிழர்களின் செவிகளில் பிரதமர் மோடியின் உறுதிமொழி இன்பத்தேனாக பாய்ந்திருக்கும் என்பதில் வியப்பில்லை.

இலங்கை அரசியல் அமைப்பின் 13ஆவது திருத்தத்தை இரு பிரிவினருக்கும் ஏற்கும் வகையில் அரசியல் தீர்வை காண தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும், வடக்கு கிழக்கு பகுதியில் மறு சீரமைப்பு, மீள்குடியமர்வு, மறுவாழ்வு ஆகியவற்றிற்கு இந்தியா தொடர்ந்து உதவும் என்று அறிவித்துள்ள பிரதமர் மோடியை பாராட்ட வார்த்தைகளே இல்லை.

''வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன்'' என்று அருட்பெரும் ஜோதி ராமலிங்க அடிகளார் பாடியுள்ளார். அவரது கருத்தை பிரதி பலிப்பது போல் இலங்கை தமிழரின் துயரை கண்டு வாடியதோடு மட்டுமின்றி, அத்துயரை நிரந்தரமாக தீர்க்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அறிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு புதிய நீதிக்கட்சியின் சார்பில் பாராட்டுக்களையும், நன்றியினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

துன்பக் கடலில் மூழ்கியுள்ள இலங்கை தமிழர்களுக்கு கலங்கரை விளக்கமாக அவர்களின் எதிர்கால வாழ்வின் நம்பிக்கை நட்சத்திரமாக பிரதமர் மோடி திகழ்கின்றார்''என்று கூறப்பட்டுள்ளது.
25 Aug 2014

http://www.lankaroad.net/index.php?subaction=showfull&id=1408961525&archive=&start_from=&ucat=1&

Geen opmerkingen:

Een reactie posten