தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 25 augustus 2014

கூட்டமைப்பிற்கு அம்மாவின் அருள் இல்லையாம்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை கையாள தமிழக முதலமைச்சரின் உதவியினை கோர கூட்டமைப்பு திட்டமிட்டுள்ளதாக தெரியவருகின்றது. இதனிடையே கூட்டமைப்பினர் நேரடியாக புதுடில்லியுடன் தொடர்புகளை பேணுவது தமிழக முதலமைச்சரிற்கு விருப்பத்திற்குரியதொன்றாக இருக்கவில்லையெனவும் அதனாலேயே கூட்டமைப்பினரை சந்திக்க அவர் ஆர்வமற்றிருப்பதாகவும் கூறப்படுகின்றது.

இதனிடையே நேற்று முன்தினம் சனிக்கிழமை டெல்லியில் மோடியினை நேரில் சந்தித்துப் பேச்சு நடத்திய சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுவினர் நேற்று அங்கிருந்து திடீரென தமிழகத்திற்குப் பயணமாகியுள்ளனர். சம்பந்தன், சுமந்திரன், சுரேஸ் பிறேமச்சந்திரன் ஆகியோரே தமிழகத்துக்குச் சென்றுள்ளனர். ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், பொன். செல்வராசா ஆகியோர் நேற்றிரவு நாடு திரும்பியுள்ளனர்.
தமிழக விஜயத்தின்போது அ.தி.மு.க. உட்பட இலங்கைத் தமிழர்களுக்காகக் குரல் கொடுக்கும் தமிழகக் கட்சிகளின் முக்கியஸ்தர்களைச் சந்தித்துக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் கலந்துரையாடுவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க பகீரத முயற்சிகளை அவர்கள் முற்பட்டுள்ள போதும் அவரிடமிருந்து சாதகமான தகவல்கள்; எதுவும் இதுவரை கிடைக்கவில்லை.
இந்தியப்பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பையேற்று டில்லி சென்ற கூட்டமைப்பினர் கடந்த வெள்ளிக்கிழமை, இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் சுஜாதா சிங், இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ், இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் மற்றும் இந்தியாவின் முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் கட்சியின் முக்கியஸ்தருமான மன்மோகன் சிங் ஆகியோரை அவர்கள் சந்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Geen opmerkingen:

Een reactie posten