வடக்கில் காணாமல் போனவர்களைக் கண்டுபிடிப்பதற்கான அமைப்பின் உறுப்பினர்களுக்கு பொதுபல சேனா அமைப்பினர் கடுமையான அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.
காணாமல்போன தமது உறவுகளைத் தேடியலையும் உறவினர்களின் அமைப்பு இன்று கொழும்பு, மருதானையில் கலந்துரையாடல் ஒன்றை ஏற்பாடு செய்திருந்த்து.
இதில் அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் இராஜதந்திரிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.
கலந்துரையாடலின் இடையில் திடீரென அத்துமீறி உள்நுழைந்த பொதுபல சேனா அமைப்பின் எட்டுப் பேர் அடங்கிய பௌத்த தேரர்களுடன் மேலும் சில குண்டர்களும் அங்கிருந்தவர்களை கெட்ட வார்த்தைகளால் திட்டி, அச்சுறுத்தினர்.
அமெரிக்காவின் டொலர்களுக்கு ஆசைப்பட்டு இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக குற்றம் சாட்டிய அவர்கள், உடனடியாக கலந்துரையாடலை நிறுத்துமாறும் அச்சுறுத்தினர்.
அத்துடன் இராஜதந்திரிகள் உள்ளிட்ட வெளிநாட்டவர்கள் மீதும் கடுமையான வார்த்தைப் பிரயோகங்கள் மேற்கொள்ளப்பட்டன.
சம்பவம் தொடர்பில் தகவலறிந்து அவ்விடத்துக்கு வந்த பொலிசார், பௌத்த தேரர்களை கலைந்து போகச் சொல்வதற்குப் பதிலாக அவர்களுக்கு ஆதரவாக நடந்து கொள்ளத் தலைப்பட்டனர்.
கூட்டத்தை இடைநிறுத்தி அனைவரையும் கலைந்து செல்லுமாறு கோரிக்கை விடுத்த பொலிசார், மீறி கூட்டம் நடைபெற்றால் பாதுகாப்பு வழங்க முடியாது என்றும், அசம்பாவிதங்கள் நடைபெற்றால் தாம் பொறுப்பல்ல என்றும் அறிவித்தனர்.
இதனையடுத்து ஏற்பாட்டாளர்களின் தீர்மானத்தின் பிரகாரம் கலந்துரையாடல் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.
இதற்கிடையே வழக்கம் போன்று இந்த சம்பவத்துக்கும் தமக்கும் தொடர்பு இல்லை என்று பொது பல சேனா அமைப்பு மறுத்துள்ளது.
தமது அமைப்பின் பெயரைப் பயன்படுத்தி வேறு அமைப்பினர் குழப்பங்களை விளைவிப்பதாகவும், அவர்களைக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துமாறு தாம் வேண்டுகோள் விடுப்பதாகவும் அந்த அமைப்பு அறிவித்துள்ளது.
கொழும்பில் அமெரிக்க அதிகாரிகளும் பங்கேற்ற கூட்டத்தை நிறுத்தியமை குறித்து அமெரிக்க தூதரகம் கண்டனம்!
கொழும்பு கத்தோலிக்க தேவாலயத்தில் இன்று அமெரிக்க அதிகாரிகள் உட்பட்டவர்கள் பங்கேற்ற கூட்டம் ஒன்றுக்கு பௌத்த பிக்குகள் உட்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் இடையூறு செய்தமையை அமெரிக்க தூதரகம் கண்டித்துள்ளது.
கொழும்பு கத்தோலிக்க தேவாலயத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்வின் போது போரினால் காணாமல் போனவர்களின் உறவினர்கள் தமது கவலைகளை சமூக அமைப்பினர் மற்றும் சர்வதேச சமூகத்தினரிடம் பகிர்ந்துக்கொண்டனர்.
இதன்போது அங்கு வந்த பௌத்த பிக்குகள் உட்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் கூட்டத்துக்கு இடையூறை ஏற்படுத்தினர். இதனையடுத்து அங்கு வந்த பொலிஸார் நிலைமையை கட்டுப்படுத்தாமல், கூட்டத்தை நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டமையை தூதரகம் விமர்சித்துள்ளது.
குறித்த ஆர்ப்பாட்டக்காரர்கள், கோசம் எழுப்பியதுடன் அச்சுறுத்தும் வகையிலும் நடந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் தமது ஆர்ப்பாட்டத்தை அமைதியாக மேற்கொள்ள முடியும்.
எனினும் சிறுவர்களும் பங்கேற்றிருந்த குறித்த அமைதியான அமர்வுகளுக்கு இடையூறு ஏற்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று தூதரகம் குறிப்பிட்டுள்ளது.
இந்தநிலையில் இலங்கை அரசாங்கம் நாட்டில் சட்டம் ஒழுங்கை சீராக்கி பொதுமக்களின் உரிமைகளுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும் என்று அமெரிக்க தூதரகம் கோரியுள்ளது.
அத்துடன் குறித்த அமர்வுக்காக வந்திருந்த வடக்கு கிழக்கின் மக்கள் பாதுகாப்புடன் செல்வதற்கான நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் செய்து கொடுக்க வேண்டும் என்றும் அமெரிக்க தூதரகம் கோரியுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyITYLcer3.html
Geen opmerkingen:
Een reactie posten