[ valampurii.com ]
ஞானவான்களைத் தந்த ஞானபூமியாகிய இந்திய தேசத்தின் தலைமையை மிகப் பெரும்பான்மையான பலத்துடன் பொறுப்பேற்கும் மிகப் பெரும் சந்தர்ப்பம் மோடிக்கு இருந்தமைக்கு அவரின் ஆத்ம ஞானபலமே காரணம் எனலாம்.
எனவே இந்தியப் பிரதமர் மோடி தன்னைச் சந்திப்பவர்களின் மனநிலைகளைப் புரிந்து கொள்ளக் கூடிய மனோபலம் மிக்கவர் என்பதையும் அவர் பிரதமராகப் பதவி ஏற்ற பின்னர் அவரின் அணுகு முறைகளின் நுட்பங்கள் தொடர்பிலும் பிரதமர் மோடியை எவரும் ஏமாற்ற முடியாது என்பதும், பிரதமர் மோடி எவரையும் ஏமாற்ற மாட்டார் என்பதும் புலனாகும்.
இந்த அடிப்படையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை எந்த சலனமும் இல்லாமல் பிரதமர் மோடி சந்தித்திருந்தார்.
இலங்கை ஜனாதிபதியின் அனுமதி இல்லாமல் கூட்டமைப்பை பிரதமர் சந்திக்கமாட்டார் என சுப்பிரமணிய சுவாமி கூறிய வார்த்தைகள் செய்தியாக வெளிவந்த கையோடு கூட்டமைப்பினரை மோடி சந்தித்ததன் மூலம் ‘ நான் தனித்துவமானவன்’ என்ற செய்தியை பிரதமர் மோடி இலங்கைக்கு மிகத் தெளிவாகக் கூறியுள்ளார்.
எனவே, மன்மோகன் சிங்கின் ஆட்சியில் எதிர்பார்த்த எதனையும் பிரதமர் மோடியின் ஆட்சியில் இலங்கை அரசு எதிர்பார்க்க முடியாதென்ற உண்மை இலங்கை ஆட்சியாளர்களுக்கு மிகப் பெரும் கடுப்பை ஏற்படுத்தியிருக்கும்.
இது ஒரு புறம் இருக்க எங்கள் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களும் நிறைந்த ஆத்மபலம் உள்ளவர்.
எங்கள் கூக்குரல் அரசியல்வாதிகள் மத்தியில் அவர்களைச் சமாளித்து நடப்பது கூட அவரின் ஆத்மபலம் என்றே கூறவேண்டும்.
கூட்டங்களில் முன்வைக்கின்ற கருத்துக்கள், அரசின் போக்கை நாகரிகமாக விமர்சிக்கும் தன்மைகள், வடக்கு மாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றும் பேரவாவைச் சமாளித்துச் செல்லும் நுட்பங்கள் என அனைத்தும் அவரின் ஆத்மபலம் கொடுத்த தைரியம் எனலாம்.
அரசியல் ஊடான அறிமுகம் எதுவும் இல்லாமல் இரண்டு இலட்சத்து முப்பத்து இரண்டாயிரம் விருப்பு வாக்குகள் பெற்று வடக்கின் முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள ஓய்வுபெற்ற நீதியரசர் சீ.வி.விக்னேஸ்வரன் அவர்கள், ஆத்மபலம் மிக்க இந்தியப் பிரதமர் மோடியைச் சந்திக்கும் போது இருவருக்கு மிடையில் மிக நெருக்கமான உறவு நிச்சயம் ஏற்படும்.
தமிழ் மக்கள் பட்ட சொல்லொணாத் துயரங்களைப் பிரதமர் மோடிக்கு விக்னேஸ்வரன் எடுத்துக் கூறும் போது அதனைச் செவிமடுக்கும் அவதானிப்பு மிக அதிகமாகவே இருக்கும் எனலாம்.
அது மட்டுமன்றி, மீண்டும் மிகவிரைவில் நாங்கள் சந்திப்போம் என்று பிரதமர் மோடி கூறும் அளவில் நிலைமை மாறும்.
எனவே வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்கள் பிரதமர் மோடியையும் தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதாவையும் நிச்சயம் சந்திக்க வேண்டும். இச் சந்திப்பு மிக விரைவில் இடம்பெறுவது காலத்தின் முதன்மைத் தேவை.
இந்தியப் பிரதமரின் அலுவலகம் சந்திப்புக்கு அழைப்பு விடும் என்று காத்திராமல் வடக்கின் முதலமைச்சர் சந்திப்புக்கான கோரிக்கையை முன்வைக்கலாம்.
வடக்கு மாகாண அரசு என்பது தமிழ் மக்களின் உரிமை தொடர்பில் பேசுகின்ற அனைத்து அதிகாரத்தையும் கொண்ட தமிழ் அரசு.
எனவே, பிரதமர் மோடியை வடக்கின் முதல்வர் சந்திக்கின்ற போது அதனால் ஏற்படுகின்ற மாற்றங்கள் எங்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும் என்பது சத்தியம்.
http://www.tamilwin.com/show-RUmsyIRbKUno7.html
Geen opmerkingen:
Een reactie posten