தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 9 augustus 2014

ஆட்சிமாற்றம் எங்கள் நோக்கமல்ல! ஐ.நா.விசாரணைக்குழுவினர் சிறப்பாக செயற்படுவர்!- பிரித்தானியத் தூதுவர்!

பொதுபல சேனாவிற்கு எதிராக அமைச்சர்கள் அணி திரளத் தீர்மானம்
[ சனிக்கிழமை, 09 ஓகஸ்ட் 2014, 04:33.23 AM GMT ]
பொதுபல சேனா அமைப்பிற்கு எதிராக அமைச்சர்கள் அணி திரள்வதற்கு தீர்மானித்துள்ளனர்.
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரிற்கும் மீன்பிடி வள அமைச்சர் ராஜித சேனாரட்னவிற்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.
இருவரும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
பொதுபல சேனா அமைப்பு அமைச்சர் ராஜிதவிற்கு எதிராக சுமத்தி வரும் குற்றச்சாட்டுக்களை முறியடிக்க அமைச்சர்கள் குழுவொன்று அணி திரண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த அமைச்சர்கள் குழாம் அமைச்சர் ராஜிதவிற்கு பக்கபலமாக செயற்படத் தீர்மானித்துள்ளனர்.
ஆளும் கட்சி அமைச்சர்களுக்கு எதிராக இவ்வாறு சுமத்தப்பட்டு வரும் குற்றச்சாட்டுக்கள் அரசாங்கத்தை பலவீனப்படுத்தக் கூடிய வகையில் அமைந்துள்ளதாகவும் இதனை ஓர் சூழ்ச்சித் திட்டமாக கருதப்பட வேண்டுமெனவும் தெரிவித்துள்ளனர்.
எனவே இந்த சூழ்ச்சியை முறியடிக்க அமைச்சர்கள் ஒன்றிணைந்து செயற்படத் தீர்மானித்துள்னர்.
எதிர்காலத்தில் இது தொடர்பில் விரிவான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட உள்ளதாக அமைச்சர்கள் ஊடகங்களுக்கு குறிப்பிட்டுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmsyITdLdmrz.html
ஊவா தேர்தல் முடிவின் அடிப்படையில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும்- ஊவா மாகாணத்திற்கு அதிரடிப்படையினரின் பாதுகாப்பு
[ சனிக்கிழமை, 09 ஓகஸ்ட் 2014, 04:37.34 AM GMT ]
ஊவா தேர்தல் முடிவின் அடிப்படையில் ஜனாதிபதித் தேர்தலை நடாத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் 20ம் திகதி ஊவா மாகாணசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது.
தேர்தலில் ஆளும் கட்சி அடையும் வெற்றியை அடிப்படையாகக் கொண்டு ஜனாதிபதித் தேர்தலை எப்போது நடாத்துவது என்பது நிர்ணயிக்கப்பட உள்ளது.
ஊவா மாகாணசபைத் தேர்தலில் அரசாங்கம் பெரிய வெற்றியை பதிவு செய்தால் விரைவில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி வருட இறுதியில் தேர்தல் குறித்து அறிவித்து ஜனவரி மாத முதல் பகுதியில் ஜனாதிபதி தேர்தலை நடாத்த வேண்டுமென அரசாங்கத்தின் ஆலோசகர்கள் தெரிவித்துள்ளனர்.
ஊவா தேர்தல் முடிவு எதிர்பார்த்தவாறு அமையாவிட்டால் பொருத்தமான நேரத்தில் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் அறிவிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.
எவ்வாறெனினும் நாடாளுமன்றத் தேர்தல்களுக்கு முன்னதாக ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது.
ஊவா மாகாணத்திற்கு அதிரடிப்படையினரின் பாதுகாப்பு
ஊவா மாகாண சபைத் தேர்தல் முடியும் வரை அந்த மாகாணத்தின் பாதுகாப்புக்காக விசேட அதிரடிப்படையினரை நிலை நிறுத்த பொலிஸ் தலைமையகம் தீர்மானித்துள்ளது.
பாதுகாப்பு தொடர்பாக உள்ளூர் பொலிஸாருடன் இணைந்து பணியாற்றும் வகையில் அதிரடிப்படையினர் அங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
ஊவா மாகாணத்தில் தேர்தல் வன்முறைகளை தடுக்கும் நோக்கில் தேர்தல் ஆணையாளர் விடுத்த கோரிக்கைக்கு அமையவே அதிரடிப்படையினரின் பாதுகாப்பை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அரசியல்வாதிகள் இருவர் கடந்த செவ்வாய் கிழமை தேர்தல் அதிகாரிகளை அச்சுறுத்தி இருந்தமையும் இந்த தீர்மானத்திற்கு காரணம் என கூறப்படுகிறது.
ஊவா தேர்தல் களத்தில் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினர்
ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் (பி.எஸ்.டி) வாகனங்கள் மற்றும் அதிகாரிகள் ஊவா மாகாண தேர்தல் பணிகளுக்காக ஜனாதிபதியினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
வேட்புமனு தாக்கல் செய்யப்பட்ட பின்னர், நாடாளுமன்ற உறுப்பினர் அனுர வித்தானகமகே நடத்திய சட்டவிரோதமான ஊர்வலத்தை தடுத்து நிறுத்த, உதவித் தேர்தல் ஆணையாளருடன் சென்ற பொலிஸார் முயற்சித்த போதே இந்த விடயம் தெரியவந்தது.
அனுர வித்தானகமகேவின் ஊர்வலத்தில் 80 முதல் 100 வரையான டிப்பெண்டர் வாகனங்கள் இருந்ததாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு இந்தளவில் வாகனங்கள் இருக்க வாய்பில்லை எனவும் கூறப்படுகிறது.
இதனால், ஜனாதிபதியின் பாதுகாப்பு பிரிவிற்கு சொந்தமான டிப்பெண்டர் வாகனங்களே ஊர்வலத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளதாக பேசப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmsyITdLdmr0.html
இலங்கையின் இராஜதந்திரிகள் சேவையில் நீதிமன்ற குற்றவாளிகளே இன்று உள்ளனர்!- சோபித தேரர்
[ சனிக்கிழமை, 09 ஓகஸ்ட் 2014, 05:09.01 AM GMT ]
இலங்கையின் இராஜதந்திரிகளாக கல்வியறிவு படைத்தவர்களை நியமித்து நாட்டின் செல்வாக்கை உயர்த்த வேண்டியது நமது தாய் நாட்டிற்கு செய்யவேண்டிய மிக முக்கிய பொறுப்பாகும் என்று சோபித தேரர் தெரிவித்துள்ளார்.
ஆனால் இன்று இந்த நாட்டில் நீதிமன்றங்களால் குற்றவாளிகள் என தண்டனை பெற்றவர்கள்,  அரசின் ஆதரவாளர்கள், போதிய கல்வி ஆற்றல் இல்லாதவர்களையே இந்த அரசு இராஜதந்திரிகளாக  நியமனம் செய்துள்ளது.
இதுவே சர்வதேச நாடுகளில் நமது நாட்டுக்கு ஏற்பட்டுள்ள அபகீர்த்திக்கு காரணமென நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் சோபித தேரர் கவலை தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பில் ஐ.தே. கட்சியை சேர்ந்த கரு ஜயசூரியவும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyITdLdmr1.html
ஆட்சிமாற்றம் எங்கள் நோக்கமல்ல! ஐ.நா.விசாரணைக்குழுவினர் சிறப்பாக செயற்படுவர்!- பிரித்தானியத் தூதுவர்
[ சனிக்கிழமை, 09 ஓகஸ்ட் 2014, 05:24.33 AM GMT ]
இலங்கையில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பது எமது நோக்கமல்ல, இலங்கை அரசாங்கமும் ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்டது. நாம் நீண்ட கால ஸ்திரத்தன்மைக்கான அர்ப்பணிப்பை வெளிப்படுத்துமாறே கூறுகின்றோம் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜோன் ரன்கின் தெரிவித்தார்.
கொழும்பிலிருந்து வெளிவரும் தமிழ் நாளிதழ் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாற கூறினார். அவர் தொடர்ந்து தெரிவித்துள்ளதாவது,
ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகத்தின் விசாரணை செயற்பாடுகளுடன் இலங்கை அரசாங்கம் ஒத்துழைக்கும் என்று நாங்கள் தொடர்ச்சியாக நம்புகின்றோம்.
எனினும் அவர்கள் ஒத்துழைக்காவிடினும் ஐக்கிய நாடுகளின் விசாரணை முன்னெடுக்கப்படும், இந்த விசாரணைக் குழுவானது அனுபவம் கொண்ட அதிகாரிகளுடன் ஆலோசனைக் குழுவொன்றையும் கொண்டுள்ளது.
அவர்கள் சிறப்பான செயற்பாட்டை முன்னெடுப்பார்கள் என்பதில் ஐயமில்லை என்று இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜோன் ரன்கின் தெரிவித்தார்.
காணாமல் போனோர் தொடர்பாக விசாரிக்கும் ஆணைக்குழுவின் ஆணை விரிவுபடுத்தப்பட்டுள்ளமை தொடர்பாக அவதானித்துள்ளோம். அத்துடன் மூன்று நிபுணர்களைக் கொண்ட ஆலோசனைக் குழு
வும் நியமிக்கப்பட்டுள்ளது.
இவற்றை நாம் பொறுத்திருந்து பார்ப்போம். அந்த செயற்பாடு நம்பகரமாகவும் சுயாதீனமாகவும் வெளிப்படையாகவும் இருந்தால் அதனை நாங்கள் வரவேற்போம்.
இலங்கையில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பது எமது நோக்கமல்ல, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்டவர். இலங்கை அரசாங்கமும் ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்டது.
நாம் நீண்ட கால ஸ்திரத்தன்மைக்கான அர்ப்பணிப்பை வெளிப்படுத்துமாறே கூறுகின்றோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
http://www.tamilwin.com/show-RUmsyITdLdmr2.html

Geen opmerkingen:

Een reactie posten