இந்தியப் பிரதமர் மோடியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சந்தித்தபோது கூட்டமைப்பிடம் அவர் கூறியது என்ன?, பிரதமர் மோடியிடம் கூட்டமைப்பு கூறியது யாது என்பன பற்றித் தமிழ் மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டிய தார்மீகப் பொறுப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு உண்டு.
ஏனெனில் பிரதமர் மோடியுடனான சந்திப்பு மிகவும் முக்கியமானது. அதேநேரம் அடுத்துவரும் ஐந்து ஆண்டுகளுக்கு இந்தியாவின் ஆட்சி மோடியின் கைகளில் என்பதும் தெரிந்த விடயம்.
எனவே எங்களின் பிரச்சினைக்குத் தீர்வு காணுதல் என்ற காலப்பகுதியில் இந்தியாவின் பிரதமராக இருக்கக்கூடிய மோடி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் கூறியவை என்ன? என்பதை முழுமையாக அறிக்கைப்படுத்தி அதனை வெளிப்படுத்துவதன் மூலம், தமிழ் மக்கள் அறியமுடிவதுடன் மோடியுடனான சந்திப்பில் கலந்து கொண்டவர்கள், சந்திப்பில் பிரஸ்தாபிக்கப்பட்ட விடயங்களை எதிர்காலத்தில் திரிபுபடுத்திக் கூறுகின்ற துர்ப்பாக்கிய நிலைமைகளையும் தடுக்க முடியும்.
எனவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பிரதிநிதிகள் நாடு திரும்பியதும் பிரதமர் மோடியுடனான சந்திப்பின் முழு விபரத்தையும் வெளிப்படுத்துவது கட்டாயம்.
கடந்த காலங்களில் வெளிநாட்டுப் பிரதிநிதிகளுடனான சந்திப்பின் விடயங்களை வெளிப்படுத்தாமல் விட்ட தவறைத் தொடர்ந்தும் சம்பந்தர் ஐயா விடலாகாது.
மேலும் மாகாணசபைச் சட்டங்கள் இடம் கொடுக்குமாயின் பிரதமர் மோடியுடன் நடந்த சந்திப்பின் முழு விபரத்தையும் வடக்கு மாகாண சபையின் கூட்டத் தொடரில் தெரியப்படுத்துவது மிகவும் பொருத்துடையதாக இருக்கும்.
இனப்பிரச்சினை என்பது எந்த அரசியல் கட்சியினதும் பிரச்சினை அன்று. அது தமிழ் மக்களின் பிரச்சினை.
தமிழ்த் தாயகத்திற்காகத் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்த பல்லாயிரக் கணக்கானவர்களின் குடும்பங்கள், தங்கள் பிள்ளைகளின் தியாகம் எப்போது வெற்றிதரும் என்ற வேட்கையுடன் காத்திருக்கின்றனர்.
அவர்களின் தியாகம் வீண் போகக்கூடாது என்பதற்கான பிரார்த்தனையில் தங்களை அர்ப்பணித்திருக்கக் கூடிய தமிழ் மக்களுக்கு இனப்பிரச்சினை தொடர்பில் பேசப்படும் அத்தனை விடயங்களும் தெரியப்படுத்த வேண்டும்.
அந்த விடயங்ளைத் தெரிந்து கொள்கின்ற பூரண உரிமை தமிழ் மக்களுக்கு உண்டு. எந்த விடயத்தையேனும் மறைக்க வேண்டும் என நினைப்பதோ, அல்லது இரகசியம் பேண வேண்டும் என்று கருதுவதோ அர்த்தமற்றவை. எங்கள் விடயத்தில் இரகசியம் என்ற பேச்சுக்கே இடமில்லை.
எங்கள் இனத்தின் உயிரெடுப்பு பகிரங்கமாக நிறைவேற்றப்பட்டமை உலகறிந்த உண்மை.
எனவே எங்கள் இனம் இனியும் ஓர் அழிவைச் சந்திக்காமல் இருக்க வேண்டும். அதற்கான ஒரேவழி தமிழ் மக்களை ஆளுகின்ற அதிகாரம் தமிழ் மக்களிடம் இருப்பதாகும்.
அதற்காக நாங்கள் உள்நாட்டில் அரசுடன் பேசலாம். அது வெற்றி தராவிட்டால் உலகிடம் முறையிடலாம். இந்த நாட்டின் எல்லைக்குள் பிரச்சினையை பேசித்தீர்ப்பது உத்தமமானது.
ஆனால் அதற்கான எத்தனையோ சந்தர்ப்பங்கள் வழங்கப்பட்டும் அதிகாரவர்க்கம் தமிழர்களை ஏமாற்றிக் கொண்டே இருக்கிறது.
அதிகாரத்தைத் தரவேண்டியவர் பின்னடிக்கும் போது அண்டை நாட்டிடம் முறை யிடுவதில் எந்தத் தவறும் இல்லை. இந்த முறையீடு இலங்கையில் இன்னுமொரு போருக்குச் சந்தர்ப்பம் கொடுக்காமல் இருக்க வேண்டும் என்பதற்கானது.
ஆகவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது தனிப்பட்ட விடயம் தவிர்ந்த, தமிழ் மக்களோடு சம்பந்தப்பட்ட அனைத்துச் சந்திப்புக்கள், திட்டமிடல்கள் குறித்து உட னுக்குடன் தமிழ் மக்களுக்குத் தகவல் கொடுக்க வேண்டும்.
இது கூட்டமைப்பின் மீதான நம்பகத்தன்மையையும் வலுப்படுத்தும்.
என்னிடம் விட்டுவிடுங்கள்! அதை நான் பார்த்துக் கொள்கிறேன்: கூட்டமைப்பிடம் மோடி தெரிவிப்பு
இலங்கையின் அரசியல் தீர்வு விடயத்தில் 13வது அரசியல் திருத்தச் சட்டத்திற்கு அப்பால் போக வேண்டும் என்பதில் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ், அக்கறை கொண்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா தெரிவித்தார்.
எனினும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியே இது குறித்த தீர்மானத்தை எடுக்க வேண்டும் எனவும் சுவராஜ் கூறியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதன் பின்னர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த போது, 13வது திருத்தச் சட்டமா? அல்லது அதற்கு அப்பால் சென்ற தீர்வா என்பதை தான் ஆராயவதாகவும் அதனை தன்னிடம் விட்டு விடுமாறும் மோடி கூறியதாகவும் செல்வராசா கூறினார்.
அத்துடன் இந்தியா 100க்கு 100 வீதம் தம்முடன் இருப்பதாகவும் மோடி குறிப்பிட்டதாக அவர் தெரிவித்தார்.
லங்காசிறி வானொலிக்கு வழங்கிய விசேட செவ்வியில் பொன். செல்வராசா இந்த தகவல்கள் வெளியிட்டார்.
http://www.tamilwin.com/show-RUmsyIRaLdev0.html
Geen opmerkingen:
Een reactie posten