தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 7 augustus 2014

புதைகுழி தொடர்பாக மன்னாரில் வைத்தே வாக்குமூலம் பதிய வேண்டும்! புலனாய்வு பிரிவுக்கு நீதிமன்றம் உத்தரவு!



ராஜபக்ஷ யுகம் ஏனைய யுகங்களை விட முன்னணியில்: மைத்திரிபால சிறிசேன
[ வியாழக்கிழமை, 07 ஓகஸ்ட் 2014, 12:50.47 PM GMT ]
நாடு சுதந்திரம் பெற்ற பின்னர் நாட்டில் பல்வேறு திட்டங்கள் செயற்படுத்தப்பட்ட போதிலும் மகிந்த ராஜபக்ஷ யுகமானது ஏனைய யுகங்களை முன்னணியில் இருப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளரும் அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நடைபெறவுள்ள ஊவா மாகாண சபைத் தேர்தல் நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலாக நடத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,

செப்டம்பர் 2 ஆம் திகதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 63 வது ஆண்டு நிறைவு விழா பதுளை நகரில் நடைபெறும்.
அத்தோடு தேர்தல் பிரச்சாரங்களுக்கு உரிய முறையில் திட்டமிட்டு ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
ஊவா மாகாணத்தில் சில பகுதிகளில் வறட்சி நிலவும் சூழ்நிலையில், தேர்தலில் வெற்றி பெறுவதற்கான நியாயமான முறையில் தேர்தல் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படும்.
வறட்சியுடன் தேர்தல் பிரச்சாரங்களை செய்தமை தொடர்பில் அனுபவங்கள் உள்ளன. வட மத்திய மாகாண சபைத் தேர்தலில் இவ்வாறான நிலைமையை அரசாங்கம் எதிர்நோக்கியது.
அரசாங்கத்திற்கு எதிரான தேர்தல் பிரசாரத்திற்காக எதிர்க்கட்சிகள் வறட்சி என்ற கருப்பொருளை பயன்படுத்தி வருகின்றன.
வறட்சி ஏற்படும் போது நிவாரணங்களை வழங்க மட்டுமே அரசாங்கத்திற்கு முடியும்.
இதனடிப்படையில் அரசாங்கம் என்ற வகையில் மக்களுக்கு தேவையான நலன்புரி நடவடிக்கைகளை மேற்கொண்டு தேர்தலில் வெற்றி பெறுவோம் எனவும் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.
உயர்தரத்தில் பாலியல் கல்வி போதிக்கப்பட வேண்டும்- சுகாதார அமைச்சர்
கல்விப் பொதுத் தராதர உயர்தரத்தில் பாலியல் கல்வியை அறிமுகம் செய்ய வேண்டும் என்று சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன பரிந்துரை செய்துள்ளார்.
நாட்டில் தொடர்ந்து கொண்டிருக்கும் பாலியல் குற்றச்செயல்களுக்கு இதன் மூலமே தீர்வு காணமுடியும் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை தாய்ப்பாலூட்டல் தொடர்பிலும் மாணவர்களுக்கு கல்வியூட்டப்பட வேண்டும்.
அதேநேரம் இளவயதிலேயே மாணவர்களும் மாணவிகளும் தாய்ப்பாலூட்டல் தொடர்பி;ல் தெளிவாக்கப்பட வேண்டும் என்றும் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்
கொழும்பில் தாய்ப்பாலூட்டலை ஊக்குவிக்கும் நிகழ்வு ஒன்றிலேயே அமைச்சர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyITbLdnu1.html

தமிழ்ப் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளைக் கண்டித்து லண்டனில் போராட்டம்
[ வியாழக்கிழமை, 07 ஓகஸ்ட் 2014, 02:18.26 PM GMT ]
இனவழிப்பின் ஓர் ஆயுதமாகத் தமிழ்ப் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்படுவதைக் கண்டித்தும் செஞ்சோலைச் சிறுமிகள் படுகொலை செய்யப்பட்டதன் 8ம் ஆண்டை நினைவு கூருவதற்காகவும் எதிர்வரும் 23ம் திகதி லண்டனில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பிரித்தானியா தமிழர் ஒருங்கிணைப்புக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ் இனவழிப்பின் நீண்ட வரலாற்றில், 14.08.2006இல் செஞ்சோலை மாணவச் செல்வங்கள் சிறிலங்கா வான்படையால் திட்டமிட்டு இலக்கு வைத்துத் தாக்கப்பட்டதில் 53 மாணவிகளும் 03 ஆசிரியர்களும் கோரப் படுகொலை செய்யப்பட்டதுடன் 155 இற்கும் அதிகமான மாணவிகள் படுகாயமுற்றிருந்தனர்.
செஞ்சோலைப் படுகொலையை நினைவுகூரும் அதேவேளை, தமிழீழ விடுதலைப் புலிகளின் நிழல் அரசாட்சிக்கு முன்னைய காலத்திலும், முள்ளிவாய்க்கால் இறுதிப் போரின்போதும் அதன் தொடர்ச்சியாகவும் திட்டமிட்ட ரீதியில் எமது தமிழ்ப் பெண்கள் பாலியல் வன்முறைகள், துன்புறுத்தல்கள் மற்றும் சித்திரவதைகளுக்கு நாளாந்தம் உட்படுத்தப்பட்டு வருவதைக் கண்டித்து சர்வதேசத்துக்கு இடித்துரைக்க வேண்டிய ஒரு அவசித் தேவை எமக்கு ஏற்பட்டுள்ளது.
இனவழிப்பில் ஒரு பாரதூரமான விழைவை ஏற்படுத்தக்கூடிய ஒரு மூலோபாய ஆயுதமாக “பாலியல் வன்முறைப் போர்” எமது சமுதாயத்தின் மீது சிறிலங்காப் படையினரால் அரங்கேற்றப்பட்டு வருவதை நாம் ஆதாரத்தோடு நிறுவி, தாயகத்தில் எமது பெண்கள் சமூகத்தைப் பாதுகாக்குமாறு சர்வதேச நாடுகளிடம் போராடி அழுத்தம் கொடுக்கவேண்டியது ஒரு அவசியத் தேவையாக உள்ளது.
யுத்தகாலத்தில் பாலியல் வன்முறையை ஆயுதமாகப் பயன்படுத்திய 21 நாடுகளின் பட்டியலில் சிறிலங்காவும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக கடந்த ஏப்ரல் மாதம் ஐக்கிய நாடுகள் சபையால் அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது.
“தமிழ்ப் பெண்களை எனது படையினர் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தவில்லை என்றால் மட்டுமே நான் ஆச்சரியப்படுவேன்” என கடந்த மே மாதம் என்.டி.ரி.வி. தொலைக்காட்சிக்கான ஒரு நேர்காணலின் போது, சிறிலங்காப் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச என்னும் போர்க்குற்றவாளி வெளிப்படையாக இனவழிப்பை ஏற்றுக்கொள்ளும் விதமாக அறிவித்திருந்தான்.
கடந்த ஆண்டு மனிதவுரிமைக் கண்காணிப்பகம் வெளியிட்ட அறிக்கையில், 2006 தொடக்கம் 2012 வரையான காலப்பகுதியில் சிறிலங்காவில் உள்ள தடுப்பு முகாம்களிலும் இரகசியச் சிறைகளிலும் பாலியல் வன்கொடுமைகளுக்கு உட்படுத்தப்பட்ட ஆண்கள், பெண்கள் என தப்பிவந்த மிகச் சிலரில் 75 பேரின் வழக்குகளை மட்டும் மருத்துவ ஆதாரங்களோடு ஆய்வுசெய்து வெளியிட்டிருந்தது.
டிசெம்பர் 27, 2012 மண்டைதீவில் நான்கு வயதேயான பச்சிளஞ் சிறுமி பாலியல் வன்முறைக்கு உட்படுத்தி கொலை செய்யப்பட்ட நிலையில், சடலமாக மீட்கப்பட்டிருந்தது. இதற்கு முன்னர் நெடுந்தீவிலும் அதேவகையான ஒரு சம்பவம் நிகழ்ந்திருந்தது.
இந்த மாதம் யூலை-16 - யாழ். காரைநகர்ப் பகுதியில் 11 வயதேயான சிறுமியொருவர் 12 நாட்களாக தொடர்ச்சியாக ஏழுபேர் கொண்ட கடற்படையினரால் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார். இதில் மேலும் 09 வயதுச் சிறுமியொருவரும் கற்பழிப்புக்கு உட்படுத்தப்பட்டிருந்தது என செய்திகள் தெரிவித்தன.
இரண்டு சிறுமிகளை பாலியல் வன்முறைக்குட்படுத்திய கொடுங் குற்றவாளிகளான அந்த 07 கடற்படையினரையும் நடவடிக்கை எதுவும் எடுக்கவேண்டாம் என சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவால் கட்டளை வழங்கப்பட்டதால், அவர்களுக்கு எந்தவித தண்டனையுமின்றி அங்கிருந்து காலித்துறைமுகத்துக்கு மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.
அதேவேளை, 13 வயதுச் சிறுமி விபூசிகா உட்பட தமிழ்ப் பெண்களில் பச்சிளஞ் சிறுமிகளிலிருந்து வயோதிபர் வரை போலிக்காரணங்களைக் கூறி கைதுசெய்து சிறையிலடைத்தல் மற்றும் கடத்தல், காணாமல் போதல், சடலமாக மீட்கப்படல் எனத் தமிழ்ப் பெண்களுக்கு எதிரான துன்புறுத்தல்கள் மற்றும் கொடுமைகள் படுமோசமாக அதிகரித்து வருவதன் பின்னணி என்பது இனவழிப்பின் ஒரு சூத்திரம் என்பதை நாம் ஓங்கிக் குரல்கொடுக்க வேண்டியுள்ளது.
யூலை, 2011 “சனல்-4” தொலைக்காட்சிக்கு ஒரு சிங்களப் படைச் சிப்பாய் சாட்சியமளிக்கும் போது, “சிறிலங்காப் பாடையினர் தமிழ் மக்கள் மீது சர்வசாதாரணமாகச் சுட்டனர், அந்த மக்களை கூரிய ஆயுதங்களால் குத்தினார்கள், அவர்களை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தினார்கள், அவர்களது நாக்குகளை வெட்டியெறிந்தனர், பெண்களின் மார்பகங்களை வெட்டித் துண்டாடினர்.
இந்த அனைத்து சம்பவங்களையும் எனது சொந்தக் கண்களால் நேரடியாகப் பார்த்தேன். பச்சிளங் குழந்தைகள் கொல்லப்பட்டுக் கிடந்ததையும் நான் பார்த்தேன்”
“அவர்கள் ஒரு தமிழ்ச் சிறுமியை பலியல் வன்முறைக்குட்படுத்த வேண்டுமாயின், சாதாரணமாக அந்தச் சிறுமிக்கு அடிபோட்டு, அதை அவர்களால் சாதிக்க முடியும். அந்த சிறுமியின் பெற்றோர் அவர்களைத் தடுக்க முற்பட்டால், அவர்களுக்கும் அடியைப் போட்டு அல்லது அவர்களைக் கொன்றுவிட்டு, அதைச் சாதிக்க முடியும். அது அவர்களது (சிங்களப் படைகளின்) இராட்சியம்.”
“ஒரு நாள் ஆறு பேர்கொண்ட ஒரு இராணுவக் குழுவினர் ஒரு இளம் தமிழ்ச் சிறுமியை பாலியல் வன்முறைக்குட்படுத்திக் கொண்டிருந்ததை நான் பார்த்தேன். எனது சொந்தக் கண்களால் அதை நேரடியாகப் பார்த்தேன்,” என அந்த சிங்களப் படைவீரன் தனது நேரடிச் சாட்சியைக்கூறி பதிவு செய்திருந்தார்.
இதுகுறித்த தகவல்களைச் சேகரிக்கச் செல்லும் ஊடகவியலாளர்களும் மோசமாக அடக்கப்பட்டு வருகிறார்கள். இவ்வாறான சூழலில், நாளாந்தம் அங்கு தமிழ்ப் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு வருகின்ற போதிலும் மிகச் சில சம்பவங்களே வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்ற ஒரு பேராபத்தான நிலையை எமது சமுதாயம் இன்று சந்தித்துவருகிறது.
ஆகவே, “பாலியல் வன்முறை” என்பது இனவழிப்பின் மூலோபாய ஆயுதமாகத் தமிழ்ப் பெண்கள் மீது அன்றுதொட்டு இன்றுவரை சிறிலங்கா அரச படைகளால் பயன்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை சர்வதேச நாடுகளுக்கும் ஐக்கிய நாடுகளுக்கும் இடித்துரைக்க ஒன்றுபட்டு எழுச்சிகொள்ள வேண்டிய ஒரு கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.
தாயகத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளால் நிறுவப்பட்ட தமிழீழ நிழல் அரசின் காலத்தில் தமிழ்ப் பெண்கள் பாதுகாப்பாகவும் கௌரவமாகவும் தமது கலாச்சார விழுமியங்களைப் பேணி சுதந்திரப் பறவைகளாக வாழ்ந்துவந்த காலம் ஒரு கனவாகிப் போய், இன்று எமது பெண்கள் சமுதாயமே இனவழிப்பின் ஒரு ஆயுதமாக பாலியல் வன்கொடுமைப் போருக்குள் அடக்கப்பட்டு வருகிறார்கள்.
“பாலியல் வல்லுறவு” என்ற சொல்லை உச்சரிக்கவே கூச்சப்படுகின்ற எமது சமுதாயத்தை அழிப்பதற்கு இன்று அதையே இனவழிப்பின் மூலோபாய ஆயுதமாக சிறிலங்கா அரச படைகளால் திட்டமிட்டுக் கையாளப்பட்டு வருகிறது.
அதை சர்வதேசத்துக்கு ஆதாரங்களோடு நிறுவி, உலகளாவிய ரீதியில் பரந்துபட்ட ஆர்ப்பாட்டங்கள், கவனயீர்ப்புப் போராட்டங்கள் மற்றும் விழிப்புப் பரப்புரைகளைச் செய்து எமது இனத்தைப் பாதுகாப்பதற்காக எழுச்சிகொண்டு போராடுவதற்கு ஒவ்வொரு தமிழனும் தயாராக வேண்டிய காலகட்டமாக இது அமைந்துள்ளது.
இதன்மூலம் எமது இனத்தை அழிவிலிருந்து தடுக்கவும் இனப்படுகொலையாளிகளை சர்வதேசக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தவும் வழிவகை செய்ய அழுத்தம் கொடுப்பதாக அமையும் என்பதோடு, எமக்கு எதிராக இழைக்கப்பட்டு வருவது இனப்படுகொலை என்பதை துல்லியமான ஆதாரங்களோடு நிறுவி, இனப்படுகொலையின் தீர்வாக எமது தமிழீழத்தை மீட்டெடுப்பதற்காக ஒன்றுபட்டு போராடுவதற்கு ஒவ்வொருவரும் களத்தில் இறங்கவேண்டிய காலகட்டமாக இது அமைந்துள்ளது.
ஆகவே, எதிர்வரும் 23.08.2014 சனிக்கிழமை பிரித்தானிய நேரம் பிற்பகல் 03:00 தொடக்கம் 06:00 மணி வரை 10 டவுனிங் வீதி லண்டன் (10 DOWNING ST, LONDON) என்னும் முகவரியைக் கொண்ட இடத்தில் ஒரு கவனயீர்ப்புப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதால், அன்றைய நாள் குறித்த நேரத்தில் பிரித்தானியத் தமிழர்கள் அவ்விடத்துக்கு எழுச்சியோடு பங்கெடுத்துக் கொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyITbLdnu2.html
புதைகுழி தொடர்பாக மன்னாரில் வைத்தே வாக்குமூலம் பதிய வேண்டும்! புலனாய்வு பிரிவுக்கு நீதிமன்றம் உத்தரவு
[ வியாழக்கிழமை, 07 ஓகஸ்ட் 2014, 02:51.39 PM GMT ] [ பி.பி.சி ]
திருக்கேதீச்சரம் மனிதப் புதைகுழிகள் இருக்கும் பகுதியில் முன்னர் இடுகாடு இருந்ததற்கான பதிவுகள் இருக்கவில்லை என நீதிமன்றத்திற்குத் தெரிவித்திருந்த மன்னார் பிரதேச சபைத்தலைவரிடம் மன்னாரில் வைத்தே வாக்குமூலம் பதிய வேண்டும் என்று நீதிமன்றம் புலனாய்வு பிரிவினருக்கு உத்தரவிட்டுள்ளது.
அவரை, புலனாய்வு பிரிவினர் கொழும்பில் உள்ள நாலாம் மாடிக்கு வருமாறு அழைத்திருந்த போதிலும் அவர் அங்கு செல்லாத நிலையிலேயே, அவரது சார்பில் சட்டத்தரணிகள் இந்த விடயத்தை நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்ததையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் காணாமல்போனோர் மற்றும் மன்னார் பிரஜைகள் குழுவினரின் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த சட்டத்தரணிகள், அந்த மனிதப் புதைகுழியைத் தொடர்ந்தும் தோண்ட வேண்டும் என்றும், அதன் அருகில் முன்னர் மக்களுடைய பயன்பாட்டில் இருந்து பின்னர் மூடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்ற கிணறு ஒன்று தொடர்பாக விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்றும் நீதிமன்றத்திடம் கோரியிருந்தனர்.
இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் அந்தக் கிணறு தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு புலனாய்வு பிரிவினருக்கு உத்தரவிட்டுள்ளது.
அத்துடன், அந்தப் பகுதியில் முன்னர் பொது மயானம் அல்லது இடுகாடு எதுவும் இருந்ததில்லை என்பதற்கான ஆதாரங்களாக மன்னார் ஆயர் உட்பட மூன்று பேரிடமிருந்து பெறப்பட்டுள்ள சத்தியக் கடதாசிகளையும் இந்த சட்டத்தரணிகள் நீதிமன்றத்திடம் சமர்ப்பித்துள்ளனர்.
இந்த வழக்கு விசாரணை அக்டோபர் மாதம் 27ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyITbLdnu4.html

Geen opmerkingen:

Een reactie posten