கிழக்கு மாகாணத்தில் ஆட்சி மாற்றம் வரப் போகின்றதாம், முஸ்லிம் காங்கிரஸ் அரசுக்கு வழங்கி வரும் ஆதரவை வாபஸ் பெறப் போகின்றதாம், என்று ஒரு புரளியை எடுத்து விட்டுள்ளது முஸ்லிம் காங்கிரஸ் வகையறாக்கள்.
இப்படித்தான் கடந்த மாதமும் இப்படியான புரளியொன்று ஊடகத்தில் வெளியானது. நாங்கள் அவைகளை நம்பவேயில்லை. இப்பவும் மக்களும் நம்பவில்லை. அதன் உண்மைத் தன்மைகளை வாசகர்களுக்கு விளக்க வேண்டும் என்பதற்காக அந்தக் கட்டுரையை சமர்ப்பணம் செய்கின்றேன்.
தற்போதைய கிழக்கு மாகாண ஆட்சியின் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் கூட்டமைப்பினர் ஆட்சி அமைக்கக் கூடாது என்று அரச அணியினர் தில்லு முல்லு வேலைகளில் ஈடுபட்டு, கூட்டமைப்பின் ஒரு ஆசனம் திருடப்படாவிட்டால் 12 ஆசனங்களுடன் 2 போனஸ் ஆசனங்களுமாக கூட்டமைப்பு 14 ஆசனங்கள் பெற்றிருக்கும். ஐ.தே.க. யின் 5 ஆசனங்களுடன் கூட்டமைப்பு கிழக்கில் ஆட்சி அமைத்திருக்கும்.
முஸ்லிம் காங்கிரஸ் இல்லாது கூட்டமைப்பின் 14 ஆசங்களுடன் ஐ.தே.க. யின் 5 ஆசனங்களும் இணைந்து 19 ஆசனங்களுடன் நல்லதொரு ஆட்சியை கிழக்கு மக்கள் கண்டிருக்கலாம். அந்தப் பொன்னான சந்தர்ப்பத்தை இழந்த துர்ப்பாக்கிய மக்களாக கிழக்கு மக்கள் உள்ளார்கள்.
ஆனாலும் கூட்டமைப்புடன் இணைந்து முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சி அமைக்கக் கூடிய நல்லதொரு சூழல் அன்று தொட்டு இன்று வரையும் உள்ளது. அந்த நல்ல வாய்ப்பு இன்னும் உள்ளது.அந்த வாய்ப்பு இன்னும் நழுவிப் போகவில்லை என்பதுதான் உண்மை.
ஹக்கீம் ஐயா விரும்பினால் இந்த நிமிடமே கிழக்கு மாகாணத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தலாம். ஆனால் ஹக்கீம் என்ற தனிமனிதன் தனது சுயநலனுக்காக எந்தக் காரணம் கொண்டும் கூட்டமைப்புடன் இணைந்து ஆட்சியமைக்க ஒரு போதும் விரும்பமாட்டார். இது நடக்கவே மாட்டாது. ஹக்கீம் ஏன் கூட்டமைப்பில் இணையமாட்டார் என்பதை வேறு ஓரு கட்டுரையில் பின்பு பார்ப்போம்.
கிழக்கு மாகாண ஆட்சியின் ஆசனங்களின் எண்ணிக்கை
கிழக்கு மாகாணத்துக்கான மொத்த ஆசனம் 37. அதாவது 35 ஆசனங்களும் 2 போனஸ் ஆசனங்களுமாகும். ஆட்சியமைப்பதற்கு 19 ஆசனங்கள் போதுமானது. இதில் தற்போதைய அரசு அணி 14, அதாவது 12 ஆசனங்களும் 2 போனஸ் ஆசனங்களும் பெற்றுள்ளது. கூட்டமைப்பு 11 ஆசனங்களும், மு.கா 7 ஆசனங்களும், ஐ.தே.க. 5 ஆசனங்களும் அமைச்சர் விமல் வீரவன்சவின் கட்சி 1 ஆசனமும் ( திருகோணமலை)உள்ளது.
தற்போதைய அரசு அணி 14 ஆசனங்களுடன் மு.கா சின் 7 ஆசனங்களும் விமல் வீரவன்சவின் கட்சியின் 1 ஆசனமுமாக 22 ஆசனங்களுடன் அரசின் ஆட்சி நடந்து கொண்டிருக்கின்றது.
எதிர்த்தரப்பு அணியாக கூட்டமைப்பு 11 ஆசனங்களும், ஐ.தே.க. யின் 5 ஆசனங்க்ளுமாக 16 ஆசனங்கள் உள்ளது.
மட்டக்களப்பில் தில்லு முல்லு வேலைகள் இல்லாது போனால் கூட்டமைப்பு 14 ஆசனங்கள் பெற்றிருக்கும். மு.கா சின் ஆதரவு இல்லாது போனாலும் ஐ.தே.க. யின் 5 ஆசனங்களுடன் 19 ஆசனங்களாக கூட்டமைப்பு ஆட்சி அமைத்திருக்கும். ஆனாலும் கூட்டமைப்பு 14 ஆசனங்கள் பெற்று ஆட்சி அமைத்திருக்குமானால் மு.கா தானாக முந்திக் கொண்டு கூட்டமைப்புடன் இணைந்திருக்கும் என்பது மற்றுமொரு வெளிவராத உண்மை.
ஹக்கீம் முதலமைச்சராகும் திட்டம்
கிழக்கில் கூட்டமைப்பு 12 ஆசனங்கள் பெற்றிருக்குமானால் கூட்டமைப்புக்கு 2 போனஸ் ஆசனங்கள் கிடைத்திருக்கும். அந்த 2 போனஸ் ஆசனத்தில் இருந்து ஒரு ஆசனத்தை ஹக்கீம் பெற்று அந்த ஆசனத்தின் மூலமாக முதலமைச்சர் பதவி பெறும் திட்டத்தில் ஹக்கீம் இருந்தார்.
ஆனால் கூட்டமைப்புக்கு போனஸ் ஆசனம் கிடைக்காத காரணத்தால் ஹக்கீமின் கூட்டமைப்பு மூலமாக முதலமைச்சர் பெறும் திட்டம் கைவிடப்பட்டது. மறுபுறம் அரசின் பக்கமாகக் கிடைத்த 2 போனஸ் ஆசனங்கள் மூலமாக முதலமைச்சர் பதவி பெறுவதற்காக அரசின் பக்கமாக பெரும் முயற்சி மேற்க் கொள்ளப்பட்டது.
ஆனால் அமைச்சர்களான அதாவுல்லா மற்றும் ரிஷாத் பதியூதீன் மற்றும் அமைச்சர் பசில் ராஜபக்ச ஆகியோர்களின் கடும் எதிர்ப்பு உருவானது. அதன் எதிரொலிதான் உடனடியாக அரசு 2 போனஸ் ஆசனங்களையும் முன்னாள் மாகாண அமைச்சர் நவரட்னராஜா நியமனம் செய்யப்பட்டார்.
தற்போது நவரட்னராஜா நீக்கப்பட்டு கருணா அம்மானின் வலது கை என்று சொல்லப்படுகின்ற இனியபாரதி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்தவுக்கு வாக்குப் பெற்றுக் கொடுப்பார் என்ற நப்பாசையில் இனிய பாரதிக்கு இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
மற்றும் அம்பாறை தெகியத்தக்கண்டிய ஜெயந்த என்பவரையும் கொண்டு இரண்டாவது ஆசனத்தையும் அரசு நிரப்பி நியமனம் செய்தது. அதன் மூலம் ஹக்கீம் முதலமைச்சராக எடுக்கப்பட்ட முயற்சிகள் கைகூடாமல் போய்விட்டது.
வடக்கில் இருந்து கிழக்கு மாகாணம் தனியாகப் பிரிக்கப்பட்ட போது முதன் முதலாக நடைபெற்ற கிழக்கு மாகாணத் தேர்தலின் போது ஐ.தே.க.யில் இணைந்து மு.கா 2008 ஆம் ஆண்டு போட்டியிட்டது.
ஹக்கீம் மத்தியில் தனது எம்.பி; பதவியை இராஜினாமாச் செய்து விட்டு கிழக்கில் முதலமைச்சர் பதவியை நோக்கி திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிட்டுக் களமிறங்கினார். வெற்றியும் பெற்றார். ஆனால் அப்போது அரசு 20 ஆசனங்களைக் கைப்பற்றி பிள்ளையானை முதலமைச்சராக்கியது. ஐ.தே.க. அணி 17 ஆசனங்களைக் கைப்பற்றியது. அப்போது தமிழ் கூட்டமைப்பு கிழக்கு மாகாணத் தேர்தலில் போட்டியிடவில்லை.
ஹக்கீமினால் முதலமைச்சர் இலக்கை அடைய முடியவில்லை என்பதால் ஹக்கீம் தனது மாகாண உறுப்பினர் பதவியை இராஜினாமாச் செய்து அந்த வெற்றிடத்தை மூதூருக்கு கிடைக்கச் செய்துவிட்டு மீண்டும் தான் இராஜினாமாச் செய்த எம்.பி. பதவியைப் பெற்றுக் கொண்டு பாராளுமன்றம் சென்று விட்டார்.
கூட்டமைப்பின் ஆதரவுடன் முதலமைச்சர் பதவி
இப்படிப்பட்ட நிலையில்தான் எவ்விதமான முன்நிபந்தனைகளுமின்றி மு.கா. வுக்கு முதலமைச்சர் பதவி உட்பட மாகாண அமைச்சர்கள் மற்றும் ஏனைய சகல பதவிகளையும் பெற்றுக் கொண்டு கிழக்கை மு.கா அட்சி செய்யலாம் அதற்கு கூட்டமைப்பு முழு ஆதரவு வழங்கும் என்று பகிரங்கமாக கூட்டமைப்புத் தலைவர் சம்பந்தன் அழைப்பு விடுத்திருந்தார்.
மு.கா. கிழக்கில் ஆட்சியமைக்குமேயானால் கூட்டமைப்பு இதயசுத்தியுடன் எவ்விதமான முன்நிபந்தனைகளுமின்றி கூட்டமைப்பு ஆதரவு வழங்கும் என்று சம்பந்தன் மீண்டும் மீண்டும் பகிரங்க அறைகூவல் விடுத்திருந்தார். அல்லது கிழக்கில் கூட்டமைப்பு ஆட்சியமைப்பதற்கு மு.கா ஆதரவு வழங்குமாறு சம்பந்தன் மற்றுமொரு கோரிக்கையை விடுத்திருந்தார்.
ஆனால் மு.கா கூட்டமைப்பின் எந்தவொரு கோரிக்கைக்கும் செவிமடுக்காது அரசுக்கு ஆதரவளித்து ஆட்சியமைப்பதில்தான் குறியாக இருந்தது.
மு.கா வுக்கு அரசு பக்கமாக முதலமைச்சர் வாய்ப்பு வந்தது
கிழக்கில் தான் இல்லாத ஆட்சியை ஹக்கீம் ஒரு போதும் விரும்பவில்லை. ஹக்கீம் இம்முறை போனஸ் ஆசனம் ஒன்றின் மூலமாக முதலமைச்சர் பதவியை அடைவதற்காக இரண்டாவது முயற்சி மேற்க் கொண்டார். ஆனாலும் ஜனாதிபதி ஹக்கீமை முதலமைச்சராக்க விரும்பினார் என்ற ஒரு தகவலும் உள்ளது.
மு.கா வசமுள்ள 7 உறுப்பினர்களில் ஒருவரை முதலமைச்சராகத் தெரிவு செய்து தருமாறு அரச தரப்பால் மு.கா வுக்கு தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதாவது மு.கா வுக்கு முதலமைச்சர் பதவியும் தவிசாளர் பதவியாக ஒரு தெரிவும் 2 மாகாண அமைச்சர் பதவிகளாக இரண்டாவது தெரிவும் மு.கா வுக்கு அரசால் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் மு.கா. முதலாவது தெரிவை வேண்டாம் என்று சொல்லி விட்டு இரண்டாவது தெரிவான 2 மாகாண அமைச்சர் பதவிகளைத் தெரிவு செய்து தற்போது 2 மாகாண அமைச்சர்களுடன் கிழக்கில் ஆட்சி நடைபெற்று வருகின்றது.
மு.கா விரும்பினால் முதலமைச்சர் பதவியைப் பெற்றிருக்கலாம். இப்போதும் பெறலாம் ஆனால் ஹக்கீம் ஒரு போதும் விரும்பவில்லை. காரணம் தனக்குக் கிடைக்காத முதலமைச்சர் பதவி மு.கா சைச் சேர்ந்த வேறு யாருக்குமே கிடைக்கக் கூடாது என்று இன்னும் ஹக்கீம் அதே நிலைப்பாட்டில்தான் உள்ளார்.
பொம்மை ஆட்சியை ஒழிப்போம்
கிழக்கில் பொம்மை ஆட்சியை ஒழிப்போம் என்றுதான் கிழக்கில் அதிகமான பிரச்சாரத்தை மு.கா செய்தது. மற்றும் கிழக்கில் மு.கா முதலமைச்சரைப் பெற்று ஆட்சியமைக்கும் என்று மற்றுமொரு பிரச்சாரம் செய்தது. கிழக்கில் மூன்று மாவட்டங்களிலும் மு.கா தனது தேர்தல் பிரச்சாரமாக சகல தேர்தல் பிரச்சாரமாக சகல தேர்தல் மேடைகளிலும் முழங்கியது. ஆனால் நடந்தது என்ன.
தற்போதைய முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீட்டை முதன் முதலாக தெரிவு செய்தது ஹக்கீம்தான். இப்போது கிழக்கில் என்ன ஆட்சி நடக்கின்றது. பொம்மை ஆட்சிதானே நடக்கின்றது. முஸ்லிம் காங்கிரசின் முதலமைச்சர் எங்கே என்பதை முஸ்லிம் மக்கள் சிந்திப்பார்களா. மு.கா சின் 2 ½ வருட முதலமைச்சர் எங்கே என்பது பற்றியும் பின்னர் பார்ப்போம்.
அமீர் அலியை முதலமைச்சராக்க முயற்சி
முன்னாள் அமைச்சரும் தற்போதைய மாகாண சபை உறுப்பினருமான ஓட்டமாவடி அமீர் அலியை முதலமைச்சராக்க அமைச்சர் ரிஷாத் பதியுத்தீன் பெரும் முயற்சிகள் செய்தார். ரிஷாத்தின் முயற்சிக்கு அமைச்சர் அதாவுல்லா பூரண ஆதரவு வழங்கினார். ஆனால் ஹக்கீம் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனால் அந்த முயற்சி வெற்றியளிக்கவில்லை.
அதே வேளை மு.கா கட்சிக்குள் உள்ள யாரையும் மு.கா முதலமைச்சராக்க விரும்பவில்லை. அண்மையில் தற்போதைய முதலமைச்சர் நஜீட் மஜீட்டுக்கு எதிராக ஆளும் தரப்பு அணியும் மு.கா சின் இரண்டு அமைச்சர்களும் இணைந்து போர்க் கொடி தூக்கினார்கள்.
அத்துடன் அரச அணியினர் அமீர் அலிக்கு முழு ஆதரவு வழங்கினார்கள். ஆனால் அந்த முயற்சிக்கு மு.கா தலைவர் ஹக்கீம் எவ்விதமான ஆதரவும் வழங்கவில்லை. அதனால் அமீர் அலி முதலமைச்சராக்க எடுக்கப்பட்ட முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை.
எந்தத் தடையுமில்லை
மு.கா நினைத்தால் கிழக்கில் இந்த நிமிடமே ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தலாம்.மு.கா சொல்கின்ற பொம்மை முதல்வரை மாற்றலாம். மு.கா வசம் முதலமைச்சருடன் மாகாண அமைச்சர்களையும் பெறலாம் கூட்டமைப்பு எவ்விதமான முன் நிபந்தனைகளுமின்றி ஆதரவு வழங்கும் ஆனால் அதற்கான செயல்பாட்டை ஹக்கீம் செய்வாரா?
ஆக கிழக்கில் மு.கா விரும்பினால் எந்த நிமிடமும் ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வரலாம் அதற்கு எவ்விதமான தடையுமில்லை சட்டச் சிக்கலுமில்லை என்பது வெளிப்படையான உண்மை.
இணக்கம் காணப்பட்ட பிரதி அமைச்சர் பதவிகள்
கிழக்கு மாகாண ஆட்சியமைப்பின் போது அரசுடன் மு.கா முன்வைத்த கோரிக்கையானது மு.கா வுக்கு 1 கபினட் அமைச்சர் பதவியும் 3 பிரதி அமைச்சர் பதவிகளும் பெறுவதாக இணக்கம் காணப்பட்டது.
கபினட் அமைச்சர் பதவியானது ஏற்கனவே பஷீர் சேகுதாவுத்திற்கு வழங்கப்பட்டு விட்டது. தற்போது 2 பிரதி அமைச்சர்களாக கல்முனை ஹரீஸ் எம்.பி.மற்றும் கிண்ணியா தௌபிக் எம்.பி ஆகியோரின் பெயர்கள் தெரிவுப் பட்டியலில் உள்ளதாம் மற்றும் 3 ஆவது பெயராக நிந்தவூர் பைஸல் காசீம் எம்.யின் பெயரும் உள்ளதாக தெரிகின்றது.
ஆக மு.கா கோரிக்கை விடுத்த பிரதி அமைச்சர்கள் பதவிகள் 2 அல்லது 3 கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதில் வேடிக்கை என்னவென்றால் மு.கா எம்பிக்களுக்கு பிரதி அமைச்சர் பதவிகள் பெறுவதை ஹக்கீம் விரும்பவில்லையாம். அதனால்தான் அரசிடம் ஹக்கீம் பிரதி அமைச்சர்கள் வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கவில்லையாம்.
அதனால்தான் அண்மையில் புதிதாக நியமனம் செய்யப்பட்ட பிரதியமைச்சர்கள் நியமனத்தின் போது மு.கா வகையறாக்களுக்கு அரை அமைச்சு வழங்கப்படவில்லை. ஐயோ பாவம் எவ்வளவு ஆசையும் கனவுடனும் இந்த எம்பிக்கள் இருந்திருப்பார்கள் இல்லையா?
இந்த நிலையில்தான் கிழக்கில் மு.கா ஆட்சி மாற்றம் செய்வதற்கான முன்னோட்டம் சமிக்ஞை என்றெல்லாம் கடந்த மாதங்கிளில் கதைகள் அடிபட்டது. அந்தக் கதைகளில் எவ்விதமான உண்மைகளும் இல்லை என்பதுதான் நிஜம். அரசை விட்டு ஹக்கீம் வெளியேற வேண்டும் என்று நினைத்தாலும் மத்தியிலோ அல்லது மாகாணத்திலோ அரசை விட்டு மு.கா. உறுப்பினர்கள் யாரும் வெளியேறும் நிலையில் இல்லை.
அப்படி மு.கா வெளியேற வேண்டும் என்று நினைத்தால் ஹக்கிம் மட்டும்தான் வெளியேற வேண்டும்.முஸ்லிம் எம்பிக்கள் சகலரும் அமைச்சர் பசில் ராஜபக்சவின் நிதியில் இருந்து மாதாந்தம் விசேட கொடுப்பனவாக அரை இலட்சத்திற்கு சற்றுக் குறைவகப் பெற்று வருகின்றார்கள்.
மாகாண ஆட்சியிலும் சகல உறுப்பினர்களும் இதே அளவு சன்மானம் மாதாந்தம் பெற்று வருகின்றார்கள். இப்படியாக நக்குண்டார் நாவிழந்தார் என்ற நிலையில் இருக்கும் போது எப்படி அரசை விட்டு வெளியேற முடியும். முடியுமா?
மு.கா வை வெளியேறலாம் தடையில்லை என்கிறது அரசு
மத்தியில் ஹக்கீம் அமைச்சராக உள்ளார். அரசுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் விதமாகவும், அரசுக்கு களங்கத்தையும், கெட்ட பெயரையும் ஏற்படுத்தம் விதமாகவும் ஹக்கீம் செயல்பட்டு வருவதாக அடிக்கடி ஜனாதிபதி ஹக்கீம் மீது கடிந்து கொள்கின்றார்.
இந்த நிலையில்தான் அரசின் கூட்டுக்கள் இருந்து கொண்டு அரசுக்கு விரோதமாகச் செயல்படாமல் அரசை விட்டு மு.கா வெளியேறலாம் என்று ஜனாதிபதி மீண்டும் மு.கா தலைவர் ஹக்கீம் மீது பகிரங்கமாகச் சொல்லி விட்டதாக அறிய முடிகின்றது. ஆனால் மு.கா அரசை விட்டு வெளியேறமாட்டாது என்று பகிரங்கமாகவே தெரிவிக்கின்றது.
இந்த நிலையில் கிழக்கில் மு.கா அரசுக்கு அளித்து வரும் ஆதரவை விலக்கிக் கொண்டு கூட்டமைப்புக்கு ஆதரவளித்து கூட்டமைப்பு மு.கா இணைந்த ஆட்சியை மு.கா தலைமை ஏற்படுத்தினால் ஹக்கீமின் அமைச்சுப் பதவி அடுத்த நிமிடமே பறிக்கப்பட்டு விடும். அப்படிப்பட்ட நிலையில் ஹக்கீம் ஒரு எம்.பி யாகவே வலம் வர வேண்டும். அதனால் கூட்டமைப்பு மு.கா இணைந்த ஆட்சியொன்று இப்போதைய நிலையில் எற்படக் கூடிய எந்தவொரு சூழ்நிலையும் இல்லவே இல்லை.
கிழக்கில் மு.கா. கூட்டமைப்புடன் இணைந்த ஆட்சியோ அல்லது கூட்டமைப்புடன் மு.கா சங்கமிக்கக் கூடிய எந்தவொரு நிலையோ தென்படவில்லை என்பதுதான் இப்போதைய நிலை. எப்போதைய நிலையும் அதுதான். இப்படிப்பட்ட நிலையில் கிழக்கில் எங்கிருந்து எப்படி எதற்காக ஆட்சி மாற்றம் ஏற்படப் போகின்றது. கிழக்கில் ஆட்சி மாற்றம் ஏற்படக் கூடிய நிலையே இல்லை.
கிழக்கில் முஸ்லிம்களிடம் மாற்றுச் சக்தி வேண்டும்
அடுத்த ஆண்டு எதிர்பார்க்கப்படுகின்ற பொதுத் தேர்தலில் போது கிழக்கில் முஸ்லிம்கள் மத்தியில் அரசு அணி.மு.கா அணி தவிர்ந்த மூன்றாவது அணியொன்று உருவாகுமேயானால் மட்டும்தான் எதிர்காலத்திலாவது கிழக்கில் கூட்டமைப்புடன் முஸ்லிம்கள் இணைந்த ஆட்சியை எதிர்பார்க்கலாம்.
தமிழர்களும் முஸ்லிம்களும் இணைந்துதான் உரிமைகளை வென்றெடுக்க முடியும் என்பதுதான் கூட்டமைப்பின் கருத்துக்கள். முஸ்லிம்கள் அந்தக் கருத்துக்களை நன்கு உணர்வுபூர்வமாக உணர வேண்டும்.
கிழக்கில் முஸ்லிம்களும் தமிழர்களும் இணைந்துதான் ஆட்சியமைக்க வேண்டும். இதற்குத் தடையாக இருக்கின்ற முஸ்லிம் காங்கிரசையும் ஹக்கீமையும் முஸ்லிம்கள் ஓரங்கட்டி ஒதுக்கிவிட்டு ஒரு புதிய அணியை உருவாக்க வேண்டும்.
கடந்த காலங்கள் என்பது ஆயுத காலமாகவும் கசப்பான காலமாகவும் பார்ப்போம். இனிவரும் காலங்கள் நல்ல காலங்களாக மாற்றலாம். அதற்காக முஸ்லிம் மக்கள் தயாராக வேண்டும். கூட்டமைப்பினர் இதய சுத்தியுடன் முஸ்லிம்களை கூட்டமைப்புடன் இணக்க அரசியலுக்கான அறைகூவல் விடுத்தவண்ணம் உள்ளார்கள்.
முஸ்லிம் அரசியலில் மக்களுக்கான அரசியல் இல்லை
இன்று முஸ்லிம் காங்கிரசில் உள்ள அதிகமானவர்கள் ஏதாவது சுகபோகம் தனக்குக் கிடைக்குமா என்ற நோக்கத்தில்தான் உள்ளார்கள். மக்களுக்காக இன்று முஸ்லிம்கள் மத்தியில் முஸ்லிம் அரசியல்வாதிகள் இல்லை.
மக்களுக்கான முஸ்லிம் அரசியல் இன்று இல்லை. நாங்கள் சொல்கின்ற இந்த மூன்றாவது அணியாக கூட்டமைப்புடன் இணக்க அரசியலுக்கான அணியாக ஒரு அணி கிளம்புகின்ற போதுதான் இந்த முஸ்லிம் அரசியல் வியாபாரிகள் தானாகவே காணாமல் போய்விடுவார்கள். மறைந்து விடுவார்கள் இந்த முயற்சிக்கு கிழக்கு முஸ்லிம்கள் தயாராக வேண்டும்.
கூட்டமைப்பின் குரல்கள் ஒலிப்பு
அண்மைக் காலங்களாக முஸ்லிம்களுக்கு எதிரான சிங்களச் சக்திகள் செயல்படுகின்றது. முஸ்லிம்களின் உணவில், உடையில், மதத்தில் இந்தச் சக்திகள் கைவைத்த போது பாராளுமன்றத்தில் முஸ்லிம்களுக்காக பேசியது கூட்டமைப்புத் தலைவர் சம்பந்தன் மற்றும் கூட்டமைப்பு எம்.பி. சுமந்திரன் மற்றும் ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர்கள் முஸ்லிம்களுக்கு எதிரான செயல்களுக்குக் கண்டனம் தெரிவித்து முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளை நிறுத்த வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் உரையாற்றினார்கள். இந்த உரையை ஹக்கீம் செய்திருக்க வேண்டும்.
இத்தனை முஸ்லிம் அமைச்சர்கள் இருந்தும் முஸ்லிம்களுக்காக பேசியது இந்த மூன்று பேரும்தான். இது முஸ்லிம் மக்களுக்கு அவமானம் இல்லையா? முஸ்லிம் மக்கள் வாக்களித்து தங்களின் பிரதிநிதிகளாக பாராளுமன்றம் அனுப்பும் முஸ்லிம் எம்.பிக்கள் எதற்காக உள்ளார்கள்.
எதற்காக முஸ்லிம் மக்கள் முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு வாக்களிக்கின்றார்கள் என்பதையாவது முஸ்லிம் மக்கள் சிந்திக்க வேண்டும். முஸ்லிம் வாக்காளர்கள் மாறாதவரை இந்த முஸ்லிம் அரசியல் வியாபாரிகள் இப்படித்தான் முஸ்லிம்களை விற்று விடுவார்கள்.
முஸ்லிம் அரசியல் வியாபாரிகளின் வக்காளத்து
முஸ்லிம்களின் உயிரிலும் மேலான பள்ளிவாசல்கள் உடைக்கப்பட்ட போது இந்த மூவரும் முஸ்லிம் மக்களுக்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்தார்கள். ஆனால் முஸ்லிம்களின் ஏகபிரதிநிதி என்று மார்தட்டுகின்ற மு.கா அணி பள்ளிவாசல்கள் உடைக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளதா என்றும் நாட்டில் எந்தவொரு பள்ளிவாசல்களும் உடைக்கப்பட வில்லை என்றும் சம்பந்தனையும் ரணில் விக்கிரம சிங்கவையும் உரையாற்ற விடாது அரசுக்கு வக்காளத்து வாங்கினார்.
மற்றும் இன்னுமாரு முஸ்லிம் நியமன எம்.பியான அஸ்வர் இவர்களைப் பேச விடாது இடைஞ்சல் செய்து, குறுக்கீடு செய்து கொண்டிருந்தார் என்பதை கிழக்கு மக்கள் மறந்து விடுகின்றார்கள்.
முஸ்லிம்களை விற்று அரசியல் பிழைப்பு நடத்தும் முஸ்லிம் அரசியல் வியாபாரிகளை மக்கள் தூக்கியறிய வேண்டிய காலம் வந்து விட்டது. மத்திய, வடமேல் மாகாண முஸ்லிம் மக்கள் இவர்களை மறக்கவில்லை. அதனால்தான் அந்த மக்கள் நல்ல தீர்ப்பைக் கொடுத்துள்ளார்கள்.
அப்படியான தீர்ப்பை கிழக்கு மாகாண முஸ்லிம்களும் கொடுக்க வேண்டும். எப்போதும் கிழக்கு மாகாண முஸ்லிம் மக்கள் ஏமாந்த மக்களாகவே உள்ளார்கள். மக்கள் மாறாத வரை எந்த மாற்றமும் வராது.
ஹக்கீம் விரும்பினால் கிழக்கில் எந்த நிமிடமும் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தலாம். ஆனால் அது நடக்காது என்றுமே நடக்காது. கிழக்கு மாகாண முஸ்லிம் மக்கள் மாறாத வரை கிழக்கில் மாகாண ஆட்சியில் எந்த மாற்றமும் ஏற்படாது.
எம்.எம்.நிலாம்டீன்
mmnilamuk@gmail.com
mmnilamuk@gmail.com
http://www.tamilwin.com/show-RUmsyITbLdnu3.html
Geen opmerkingen:
Een reactie posten