தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 8 augustus 2014

2007ம் ஆண்டு கடலுக்குச் சென்ற மகன் இதுவரை வீடு திரும்பவில்லை! கடற்படையினரே காரணம் என்கிறார் தாய்!!!

காணி ஆட்சியுரிமை சட்டமூலத்தில் திருத்தம் - ஒரு வருடத்திற்கு அமுலில் இருக்கும்
[ வெள்ளிக்கிழமை, 08 ஓகஸ்ட் 2014, 10:20.16 AM GMT ]
போர்ச் சூழலினால் பாதிக்கப்பட்டு தமது காணிகளை இழந்தவர்கள் அதனை மீள பெற்றுக்கொள்ள, காணி ஆட்சியுரிமைச் சட்டமூலத் திருத்தம் ஒன்றை நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் நேற்று பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார். 
பயங்கரவாதம் மற்றும் ஆயுதக்குழுக்களின் செயற்பாடுகளினால் தமது சொந்தக் காணிகளிலிருந்து இடம்பெயர்ந்துள்ளவர்கள் தமது காணியில் தற்போது வேறு யாராவது குடியிருந்தால், அவர்களை அப்புறப்படுத்தி மீள தமது காணி உரிமையைப் பெற்றுக்கொள்ள இந்த சட்ட திருத்தம் வழி வகுக்கும் என அமைச்சர் குறிப்பிட்டார்.
எனினும் இதற்கான காலம் ஒரு வருடத்திற்கு வரையறுக்கப்பட்டுள்ளதால். இதில் சம்பந்தப்பட்ட மக்கள் தமது கவனத்தை அதிகரிக்கச் செய்வதற்காக மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் செயற்பாடுகளை நீதியமைச்சு மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ஒரு வருட கால அவகாசமே உள்ளதால், சம்பந்தப்பட்டவர்கள் தமது காணி உரிமைகள் தொடர்பில் விரைவாக நீதிமன்றங்களில் வழக்குத் தாக்கல் செய்ய வேண்டியதன் அவசியத்தையும் அமைச்சர் இதன்போது வலியுறுத்தினார்.
தற்போதுள்ள ஆட்சியுரிமைச் சட்டத்தின் கீழ் 10 வருடங்கள் ஒருவர் ஒரு காணியில் இருந்தால், அதற்கு உரிமைகோர முடியும். யுத்தம் காரணமாக சொந்த இடங்களில் இருந்த பலர் இடம்பெயர்ந்துள்ளனர்.  அவ்வாறு இடம்பெயர்ந்தவர்களின் காணிகளில் வேறு நபர்கள் வசித்து வருவதால் பல பிரச்சினைகள் தோன்றியுள்ளன. இது தொடர்பில் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழுவாலும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
எனவே காணி உரிமையாளர்களுக்கு பாதிப்பு ஏற்படுவதை தடுக்கும் வகையில் ஆட்சியுரிமை சட்டத்தில் மாற்றம் கொண்டுவர சட்ட ஆணைக்குழு 2009 ஆம் ஆண்டே சிபாரிசு செய்திருந்தது. இதற்கமைய ஆட்சியுரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர நீதியமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
இது தொடர்பில் மக்களுக்கு தெளிவுபடுத்தும் வேலைத்திட்டங்களை அமைச்சு முன்னெடுக்கவுள்ளது.
இச்சட்டத் திருத்தத்துக்கு அமைய காணிகளில் பிரச்சினை உள்ள உரிமையாளர்கள் ஒரு வருடத்துக்கு நீதிமன்றம் செல்ல முடியும் எனவும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmsyITcLdmo0.html
போரினால் பாதிக்கப்பட்ட இடங்களில் மறுசீரமைப்பை ஏற்படுத்துவதே எங்கள் குறிக்கோள்! வடமாகாண முதலமைச்சர்
[ வெள்ளிக்கிழமை, 08 ஓகஸ்ட் 2014, 10:36.54 AM GMT ]
போரினால் வெகுவாகப் பாதிக்கப்பட்ட இந்த இடங்களில் ஒரு மறுமலர்ச்சியை மறுசீரமைப்பை ஏற்படுத்துவதே எங்கள் குறிக்கோளாக இருக்கின்றது. இவ்வாறு வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள குமுழமுனை கிராமத்தில் இன்று பிற்பகல் 3 மணிக்கு ஆரம்ப மருத்துவ பராமரிப்பு நிலையத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில்  பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 
முதலமைச்சர் ஆற்றிய உரை வருமாறு,
கௌரவ சுகாதார அமைச்சர் அவர்களே, வடமாகாணசபை பிரதிப் பேரவைத் தலைவர் அவர்களே, கௌரவ வடமாகாணசபை உறுப்பினர்களே, செயலாளர்களே, வைத்திய நிபுணர்களே, வைத்தியர்களே, அலுவலர்களே, எனதருமைச் சகோதர சகோதரிகளே!
வன்னியில் உள்ளான ஒரு சுழல்காற்றுப் பிரயாணத்தின் கடைசிக் கட்டத்தில் நிற்கின்றேன். குமுழமுனையில் ஒரு ஆரம்ப மருத்துவ பராமரிப்பு நிலையம் ஒன்றிற்கான அடிக்கல் நாட்டு விழாவில் பங்கு பற்றியுள்ளமை மனமகிழ்வை அளிக்கின்றது.
இந்த நிகழ்வானது எமது முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த சகல உறுப்பினர்களையும் ஒன்று சேர்ந்து கூட ஒரு சந்தர்ப்பத்தை வழங்கியுள்ளது.
உங்கள் மாவட்டம் பல தேவைகளைக் கொண்ட மாவட்டம் என்பது எனக்குத் தெரியாத விடயமல்ல. உங்கள் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரை நான் அமைச்சர் ஆக்கவில்லை என்பதில் என்மீது மனவருத்தம் கொண்டுள்ளீர்கள் என்பதும் எனக்குத் தெரியாததல்ல.
ஆனால் மற்றைய மாவட்டங்களுக்குக் கிடைக்காத ஒரு சிறப்பை நீங்கள் கொண்டுள்ளீர்கள். மற்றைய மாவட்டங்களைப் பற்றி கூறாத ஒரு விடயத்தை நான் என் அமைச்சர்களிடம் மிகவும் ஆணித்தரமாகக் கூறியுள்ளேன்.
எந்த ஒரு நடவடிக்கையிலும் முல்லைத்தீவு மக்கள் பற்றிய கூடிய கரிசனையை நீங்கள் காட்ட வேண்டும் என்பதே அது.
கௌரவ டெனீஸ்வரனாக இருந்தால் என்ன, கௌரவ ஐங்கரநேசனாக இருந்தால் என்ன, இன்று இங்கு கதாநாயகனாக வீற்றிருக்கும் வைத்திய கலாநிதி சத்தியலிங்கமாக இருந்தால் என்ன, அல்லது கௌரவ குருகுலராஜாவாக இருந்தால் என்ன அல்லது நானாகத்தான் இருந்தால் என்ன எமது நடவடிக்கைகளில் முல்லைத்தீவு மாவட்டத்திற்குக் கூடிய கவனத்தையும் கவனிப்பையும் நாம் கொடுத்துக் கொண்டேதான் இருக்கின்றோம்.
கொக்கிளாய், கொக்குத் தொடுவாய் போன்ற பிரதேசங்களைப் பார்வையிட்டபின் மத்தியில் உள்ள மீன்பிடி அமைச்சர் ராஜித சேனரத்ன அவர்களைக் கொண்டுவந்து அந்த இடங்களைக் காட்டி உரிய நடவடிக்கைகள் எடுக்க திரு. டெனீஸ்வரன் அவர்களும் நாங்களும் பிரயத்தனங்களில் ஈடுபட்டுக் கொண்டுதான் இருக்கின்றோம்.
திரு. ஐங்கரநேசனும் நாங்களும் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களின் உள்நாட்டு நீர், நிலம் சம்பந்தமாக உரிய நடவடிக்கைகளில் இறங்கியுள்ளோம். கல்வி மேம்பாட்டைப் பற்றி கௌரவ குருகுலராஜா அவர்கள் தம்மால் இயன்றவற்றைச் செய்து கொண்டுதான் இருக்கின்றார்.
இன்று எமது சுகாதார அமைச்சர் இந்தக் கைங்கரியத்தில் ஈடுபட்டுள்ளார். போரினால் வெகுவாகப் பாதிக்கப்பட்ட இந்த இடங்களில் ஒரு மறுமலர்ச்சியை மறுசீரமைப்பை ஏற்படுத்துவதே எங்கள் குறிக்கோளாக இருக்கின்றது.
இன்று அடிக்கல் நாட்டித் தொடங்கும் இந்தக் கைங்கரியம் காலப்போக்கில் உங்கள் கிராமத்தின் மக்களுக்கு பயனுள்ளதாக அமையும் என்பதில் ஐயம் இருக்க முடியாது. எனினும் உங்கள் கிராமத்தை நவீன மயப்படுத்த நிதிதான் பெரும் பிரச்சனையாக உள்ளது.
எவ்வகையிலேனும் உரிய நிதியைப் பெற்று மேலும் மேலும் உங்கள் கிராமங்களையும் அதில் வாழும் மக்களையும் மறுமலர்ச்சி பெற வைப்பதே எமது குறிக்கோளாகும்.
உங்கள் மாகாணசபை உறுப்பினர்கள் என்னுடன் தொடர்புடன் இருக்கின்றார்கள். எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் அவர்கள் ஊடாக எமக்குத் தெரிவியுங்கள். நாம் எம்மால் முடியமானவற்றைச் செய்வோம்.
ஆனால் பல தடவைகளில் இந்த மாவட்டத்தில் இருந்து எனக்குக் கேட்கும் முறைப்பாடுகள் தனிப்பட்ட குரோதங்கள், முரண்பாடுகள், பிணக்குகள், போட்டி பொறாமைகள் சம்பந்தமானவையே.
நாங்கள் யாவரும் இன்று உயிர் வாழ்கின்றோம் என்றால் எம்மை இறைவன் தொடர்ந்து வாழ இடமளித்துள்ளானானால் அது மற்றவர்களுக்கு எம்மால் ஆன உதவிகளைச் செய்யவே என்ற எண்ணம் எம்முள் மேலோங்கிற்றானால் சில்லறைப் பிணக்குகளை, தனிப்பட்ட போட்டி பொறாமைகளை நாங்கள் கைவிட்டு விடுவோம் என்று நம்புகின்றேன்.
நான் சாகவேண்டியவன், இன்று உண்மையில் உயிருடன் இருந்திருக்க அருகதை அற்றவன், எனினும் இறைவன் என்னை உயிருடன் இருக்க ஏன் அனுமதி அளித்தான் என்று நீங்களே உங்களிடம் கேட்டுப் பாருங்கள். விடை வரும். இந்த உலகம் வாழவே எங்களுக்கு உயிர்ப் பிச்சை அளித்துள்ளான் இறைவன் என்பது தெரியவரும்.
எனவே எமது கிராமங்களை முன்னணிக் கிராமங்களாக மாற்ற நாங்கள் யாவரும் ஒன்றுபடுவோமாக! போட்டி பொறாமைகளைத் தவிர்த்து கிராம நலனுக்காகப் பாடுபட முன்வருவோமாக!
எம்மைப் பொறுத்த வரையில் உங்கள் சமூக வாழ்க்கையை, நாளாந்த மனித வாழ்க்கையை மேம்படுத்த என்னவெல்லாம் செய்ய முடியுமோ அவற்றைச் செய்யக் காத்திருக்கின்றோம். நிதி வசதிகள் கிடைத்தவுடன் உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்ய நாம் கடமைப்பட்டுள்ளோம் என்று கூறி என்னை இன்று அழைத்தமைக்காக நன்றி கூறி அமர்கின்றேன்.
வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை வைத்திய நிபுணர்களுக்கான விடுதி திறப்பு விழா - முதலமைச்சர் உரை
08.08.2014 அன்று காலை 10 மணிக்கு பிரதம அதிதியாக பங்குபற்றி ஆற்றிய  உரை வருமாறு!

கௌரவ அமைச்சர் அவர்களே, பாராளுமன்ற உறுப்பினர்களே, மாகாணசபை உறுப்பினர்களே, வைத்திய நிபுணர்களே, வைத்தியர்களே மற்றும் கூடியிருக்கும் அலுவலர்களே, சகோதர சகோதரிகளே,
இன்று இந்த விடுதித் திறப்பு விழாவில் கலந்து கொள்வதில் மகிழ்வடைகின்றேன்.
புதிதாகக் கட்டப்பட்டுத் திறக்கப்பட்டிருக்கும் இந்த விடுதிகள் ஆறு குடும்பங்கள் வசிக்கக் கூடிய வகையில் அனைத்துத் தளபாடங்களுடன் கூடிய வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளன.
இவை முக்கியமாகத் தெற்கிலிருந்து வந்து எமது மக்களிற்கு நிபுணத்துவ வைத்திய சேவையைத் தந்து கொண்டிருக்கும் வைத்திய நிபுணர்களுக்குப் பேருதவியாக அமைவன என்பதில் எந்தவித ஐயமும் இருக்கத் தேவையில்லை.
சுமார் இருபத்தைந்து வருடங்களுக்கு முன் வவுனியாவிற்குத் தெற்கிலிருந்து எவரையேனும் இடம்மாற்றி அனுப்புவதென்றால் அது தண்டனை இடமாற்றமாகவே கருதப்பட்டது.
உதாரணத்திற்கு அப்பொழுது நான் கொழும்பில் மேல் நீதிமன்ற நீதிபதியாகக் கடமையாற்றினேன். றோகண விஜேவீராவின் உறவினரான சுபாஷ் சந்திரா ஃபர்ணாண்டோ என்ற வைத்தியருக்கு எதிராக பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்தார்கள்.
சிறைச்சாலையில் மிகவும் சித்திரவதைக்கு உட்பட்ட அவரின் வழக்கில் சாட்சியம் அளித்த பொலிஸ் அலுவலர் என்னிடம் வெகுவாக மாட்டிக் கொண்டார்.
பல கேள்விகள் கேட்டபோது குறித்த வைத்தியருக்கு எதிராக அரசியல் காரணங்களுக்காகவே அந்த வழக்குப் பதியப்பட்டது  என்ற உண்மையைச் சுற்றிவளைத்து அவர் ஏற்றுக் கொண்டார். அந்தப் பொலிஸ் அலுவலரை மிகவும் கடுமையாக விமர்சித்து, எச்சரித்து வைத்தியர் சுபாஷ் சந்திரா ஃபர்ணாண்டோவை விடுதலை செய்தேன்.
ஒரு கிழமைக்குள் அந்தப் பொலிஸ் அலுவலர் வவுனியாவிற்கு மாற்றம் செய்யப்பட்டதாக அறிந்தேன். ஏன் என்று கேட்டதற்கு அரசியல் காரணங்களுக்காகவே அவ்வழக்குப் பதியப்பட்டது என்பதை வெளிக்கொண்டுவந்து அரசாங்கத்தைத் தலைகுனிய வைத்ததால் அதற்குத் தண்டனையாகவே அவரை வவுனியாவிற்கு மாற்றியதாகக் கூறினார்கள்.
தண்ணீர் இல்லாக் காட்டிற்கு அனுப்புவதும் வவுனியாவிற்கு அனுப்புவதும் ஒரே மாதிரியானவையே என்ற கருத்து அந்தக் காலத்தில் கொழும்பில் இருந்தோர் மனதில் குடி கொண்டிருந்தது.
இன்று அப்பேர்ப்பட்ட தவறான எண்ணங்களை நீக்கும் வண்ணமாக இந்த விடுதிகள் ஆக்கித் தரப்பட்டுள்ளன. மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி கொடை நிதியிலிருந்து 22 மில்லியன் செலவழித்து இவ்விடுதிகள் கட்டப்பட்டுள்ளன.
தெற்கில் இருந்து வரும் எமது வைத்திய சமுதாயம் வவுனியாவிற்கு வருவது ஒரு வரப்பிரசாதம் என்று எண்ணும் அளவிற்கு எமது வசதிகள் அவர்களுக்குச் செய்து கொடுக்கப்பட வேண்டும். வைத்தியர்கள் வளமுடன் வாழ்ந்தால்த்தான் அவர்கள் வினைத்திறன் மேலும் மேலும் ஜொலிக்கும் என்பதை நாங்கள் மறந்து விடக் கூடாது.
மொத்தமாக 19 விசேட வைத்திய நிபுணர்கள் இந்த வைத்தியசாலையில் பணியாற்றி வருகின்றார்கள். வடமாகாணத்தில் மத்திய அரசிற்குட்பட்ட யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அடுத்ததாக சகல வசதிகளையுங் கொண்ட வைத்தியசாலையாக இந்த வைத்தியசாலை இயங்குகின்றது.
பார்ப்பதற்குத் தனியார் வைத்தியசாலைகள் போன்று மிகவும் அழகான உட்கட்டமைப்பையுஞ் சிறந்த நிர்வாகத்தையும் ஏற்படுத்திய முன்னைநாள் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் சத்தியமூர்த்தி அவர்களுக்கு இந்த சந்தர்ப்பத்தில் பாராட்டுதல்களைத் தெரிவிக்கிறேன்.
ஏனோ தானோ என்று அரச சேவையில் பணியாற்றாது மக்கள் நலம் கருதி சேவை மனப்பான்மையுடன் எமது வைத்தியர்களும் அலுவலர்களும் கடமைகளைப் புரிய முன்வர வேண்டும் என்று இத்தருணத்தில் கூறி வைக்கின்றேன். உழைப்பால் சிறந்த வைத்தியர்களாலும் அலுவலர்களாலுந் தான் இந்த வைத்தியசாலை முன்னேறி இவ்வாறான நல்ல நிலைக்கு வந்துள்ளது.
எமது முன்னோர்கள் மாங்கொட்டைகளை நாட்டி மாமரங்களை வளர்க்காதிருந்தால் இன்று எமக்கு மாம்பழங்கள் கிடைத்திருக்கமாட்டா. அதே போல் அவர்கள் அன்று செய்த தன்னலம் கருதாத வைத்திய, நிர்வாக சேவையே இன்று எமக்கு ஒரு நல்ல விதமான வைத்தியசாலையையும் சேவையையும் தந்துதவி உள்ளது.
தற்போதைய இந்த வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் அகிலேந்திரன் அவர்களின் சிறந்த நிர்வாகமே எமது வருங்காலச் சந்ததியினருக்கு ஒரு சிறந்த வைத்தியசேவையைக் கொடுத்துதவப் போகின்றது.
அவரின் தற்போதைய சிறந்த சேவைக்கு எமது பாராட்டுக்கள். அவரின் கீழ் பணியாற்றும் சகல வைத்தியர்களுக்கும் அலுவலர்களுக்கும் பணியாளர்களுக்கும் சிற்றூழியர்களுக்கும் எனது பாராட்டுக்கள்.
இவை யாவற்றிற்கும் அடிப்படைக் காரண கர்த்தா இங்கு கடமையாற்றி தற்போது சுகாதார அமைச்சராகப் பரிணாமம் பெற்றிருக்கும் எமது சுகாதார அமைச்சரே என்றால் அது மிகையாகாது.
ஆனால் அவரின் பங்களிப்பைப் பற்றி நான் கூறக் கூடாது. அதை நீங்கள் கூற வேண்டும். ஏனென்றால் அவர் எங்க வீட்டுப் பிள்ளை. வீட்டுக்கு வாக்களித்து எமது வவுனியா முதன்மை உறுப்பினராக அவரை ஆக்கிய பெருமை உங்களுடையது.
அவரின் விடாமுயற்சியால் மிக விரைவில் இந்த வைத்தியசாலையானது மாகாண வைத்தியசாலையாகத் தரமுயர்த்தப்படவுள்ளதை தெரிவித்துக் கொள்கின்றேன்.
என்னை இன்று அழைத்து இந்த நல்லதொரு கைங்கரியத்தில்  ஈடுபடச் செய்த சகலருக்கும் எமது பாராட்டுக்களைத் தெரிவித்து அமர்கின்றேன்.
நன்றி. வணக்கம்.
நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்
முதலமைச்சர்
வடமாகாணம் 
http://www.tamilwin.com/show-RUmsyITcLdmo1.html
யாழ் கொலைகளுக்கு பயன்படுத்தப்படும் பிரேசில் கத்தி!
[ வெள்ளிக்கிழமை, 08 ஓகஸ்ட் 2014, 11:09.23 AM GMT ]
பிரேசில் நாட்டில் தயாரிக்கப்பட்ட நீளமான கத்தி வகை ஒன்று யாழ்ப்பாணத்தில் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும், அந்த கத்தி பிரதேசத்தில் நடக்கும் பல கொலைகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் யாழ் பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யூ.பீ. விமலசேன தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் பொலிஸ் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக நடைபெற்ற கொலை மற்றும் காயம் ஏற்படுத்தும் சம்பவங்களில் இந்த கத்தி அதிகளவில் பயன்படுத்தப்பட்டிருப்பது கைது செய்யப்பட்ட நபர்கள் மூலம் தெரியவந்துள்ளது.
இந்த கத்திகளை யாழ்ப்பாணத்தில் கொள்வனவு செய்ததாக சந்தேக நபர்கள் கூறியுள்ளனர்.
பிரேசில் நாட்டில் இந்த கத்திகள் தயாரிக்கப்படுவதுடன், அவற்றை இலங்கைக்கு கொண்டு வந்து யாழ்ப்பாணத்திற்கு விநியோகிப்பவர் பற்றி தகவல் கிடைக்கவில்லை.
இது சம்பந்தமாக நடத்தும் விசாரணைளுக்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் எனவும் பொலிஸ் அத்தியட்சகர் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyITcLdmo2.html
உபுல் ஜயசூரியவுக்கு பொலிஸ் பாதுகாப்பு - நீதிமன்றம் உத்தரவு
[ வெள்ளிக்கிழமை, 08 ஓகஸ்ட் 2014, 12:07.58 PM GMT ]
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் உபுல் ஜயசூரியவின் பாதுகாப்பு சம்பந்தமான பொறுப்பை எதிர்வரும் 11 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மத்திய கொழும்பு பிராந்தியத்திற்கான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பாலித சிறிவர்தனவுக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்டிய இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சின் செயலாளரை இன்று நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நீதிமன்றம் அழைப்பாணை விடுத்திருந்தது. எனினும் அவர் ஆஜராகவில்லை.
அமைச்சின் செயலாளர் நந்த மல்லவஆராச்சி வெளிநாடு சென்றுள்ளதாக பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
அதேவேளை எதிர்வரும் 11 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அமைச்சின் செயலாளருக்கும், மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அனுர சேனாநாயக்கவுக்கும் அழைப்பாணை அனுப்பவும் உத்தரவிடப்பட்டது.
இராணுவத்தில் இருந்து தப்பித்து போலி டிக்கட் விற்றவர் கைது
இராணுவத்தில் இருந்த தப்பியோடி போலி டிக்கட் விற்பனை செய்த ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த நபர் இராணுவத்தின் பாபல மேலா என்ற வருடாந்த நிகழ்வுக்கான நிதியுதவி சேகரிக்கும் போலியாக அச்சிட்டப்பட்ட டிக்கட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்த போது மகரகம, பிரதேசத்தில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் சுமார் ஒரு மாதத்திற்கு முன்னர் வெலிகந்த சிங்கபுர இராணுவ முகாமில் இருந்து தப்பிச் சென்றவர் எனவும் அவர் இராணுவ சீருடையில் டிக்கட்களை விற்பனை செய்து கொண்டிருந்ததாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கைது செய்யப்படும் போது அவர் சுமார் ஐயாயிரம் ரூபாவுக்கான டிக்கட்டுக்களை விற்பனை செய்திருந்தார் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmsyITcLdmo3.html

2007ம் ஆண்டு கடலுக்குச் சென்ற மகன் இதுவரை வீடு திரும்பவில்லை! கடற்படையினரே காரணம் என்கிறார் தாய்
[ வெள்ளிக்கிழமை, 08 ஓகஸ்ட் 2014, 12:09.28 PM GMT ]
மன்னாருக்கு கடல் வழியாக மீன்பிடிக்கச் சென்ற எனது மகன் இன்றுவரை வீடு திரும்பவில்லை என மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தில் இன்று இடம்பெற்ற ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணையின் போது தாயொருவர் சாட்சியமளித்துள்ளார்.
ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பராக்கிரம பரணகம தலைமையில் மனோ ராமநாதன், எஸ்.வித்தியாரத்தின ஆகியோர் முன்னிலையில், காணாமல் போனவர்களின் உறவினர்கள் சாட்சியமளித்தனர்.
இதன்போது, கடலுக்குச் சென்று காணாமல்போன தனது மகன் தொடர்பில் சாட்சியமளித்த விடத்தல்தீவைச் சேர்ந்த டோமினிக் செல்வராணி என்ற தாய் மேலும் தெரிவிக்கையில்,
மன்னார் கடற்பரப்பிலிருந்து எனது மகன் உட்பட ஐந்து பேர் கடந்த 2007ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 23ஆம் திகதி, மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர். அவ்வாறு சென்றவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து, கூடச் சென்றவர்களிடம் விசாரித்த போது, கடலில் வைத்து மகனை, கடற்படையினர் அழைத்துச் சென்றதாக தெரிவித்தனர்.
தலைமன்னார் கடற்படையினரே இவர்களை அழைத்துச் சென்றதாக தலைமன்னார் பகுதி மக்கள் எங்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
இது தொடர்பாக தலைமன்னார் கடற்படையினரிடம் விசாரித்த போது அவர்கள் குறித்த சம்பவம் பற்றி தமக்குத் தெரியாது என்று தெரிவித்தனர்.
சுமார் இரண்டு மாதங்களுக்கு பின் இடம்பெயர்ந்து சென்றபோது தலைமன்னார் கடற்படையினரின் முகாமில் எனது மகன் இருந்ததை கண்டவர்கள் தெரிவித்தனர்.
இது சம்பந்தமாக ஐ.சி.ஆர்.சி.யில் நாங்கள் முறைப்பாடு செய்த போது மகனை தேடிக்கண்டுபிடித்து தருவதாக எங்களுக்கு தெரிவித்தனர். இருப்பினும், இதுவரை மகனுக்கு என்ன நடந்தது என்று எங்களுக்குத் தெரியாது.
குறிப்பிட்ட காலத்தில் தலைமன்னார் கடற்படையினருடன் தொடர்புகொள்ள முடியாத நிலையும் ஏற்பட்டது. சுமார் இரண்டு மாதங்கள் மட்டுமே மகனை தேடக்கூடிய நிலைமை எமக்கு அப்போது இருந்தது.
எங்கள் வீட்டிலிருந்து கடற்கரைக்கும் 10 நிமிடத்தில் நடந்து செல்ல முடியும். அப்பொழுது இக்கடற்கரைப் பகுதி புலிகளின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது. இப்பொழுது இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கின்றது.
2007ஆம் ஆண்டு புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த போது நாங்கள் தேவன்பிட்டி என்ற பகுதிக்கு அகதிகளாக சென்றோம். நாங்கள் இடம்பெயரும் போது எங்களை எவரும் தடுக்கவில்லை. உயிரை பாதுகாப்பதற்காகவே சென்றோம். அந்த நேரத்தில் இரு தரப்பினரும் சண்டையில் ஈடுபட்டுக் கொண்டிருந்ததாலேயே எமது உயிரை பாதுகாக்க எமது இடத்தில் இருந்து இடம்பெயர வேண்டிய நிலை ஏற்பட்டது.
2010ஆம் ஆண்டு நாங்கள் திரும்பி எமது விடத்தல்தீவு பகுதிக்கு மீண்டும் வந்த போது நாங்கள் தொழில் செய்யும் மீன்வாடியை இராணுவம் கையகப்படுத்தியிருந்தது. இப்பொழுதும் அது இராணுவத்தினர் வசமே உள்ளது.
2010.12.04 திகதி, நாங்கள் எங்களது வீட்டிற்கு வந்தபோது வீடு மட்டும் இருந்தது. பொருட்கள் எவையும் இருக்கவில்லை. அரசு எமக்கு எவ்வித உதவியும் செய்யவில்லை. யூ.என்.எச்.சி.ஆர் மட்டும் 25 ஆயிரம் ரூபாய் தந்துதவியது. வேறு யாரும் உதவி செய்யவில்லை. நாங்கள் கடன்பட்டு எங்கள் வீட்டை திருத்தி வாழ்ந்து வருகின்றோம்.
எனது கணவருக்கு இப்போது 61 வயதாகிறது. எனது மகனையும் காணவில்லை. எங்கள் வருமானமும் குடும்பத்திற்கு போதாமல் இருப்பதுடன் எங்கள் சொந்த மீன்வாடியையும் இராணுவம் தங்கள் வசம் வைத்திருப்பதால் நாங்கள் பிறருடைய மீன்வாடியையே குத்தகைக்கு பெற்று எங்கள் தொழிலை மேற்கொண்டு வருகின்றோம்.
இராணுவம் எங்களுக்கு எவ்வித பிரச்சினையும் கொடுப்பதில்லை. ஆனால் நாங்கள் தொழில் மேற்கொள்ளும் எமது வாடியை தராமல் இருப்பது கவலையை தருகின்றது. மகன் காணாமல் போன போது கடற்பகுதியை கடற்படையினர் கண்காணித்தார்களா என்பது எமக்குத் தெரியாது என அவர் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmsyITcLdmo4.html

Geen opmerkingen:

Een reactie posten