முகமாலைப் பகுதியில் பெண் விடுதலைப் புலிகளின் எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முகமாலை புகையிரதக் கடவையில் இருந்து 15 மீற்றர் தூரத்தில் பெண் விடுதலைப் புலிகளின் சீருடைகளும் எலும்புக் கூடுகளும் மீட்கப்பட்டுள்ளன.
அப் பகுதியில் மிதி வெடி அகற்றும் பணியாளர்களே இந்த எச்சங்களை மீட்டுள்ளனர்.
மேலும் அவர்கள் 40 எம்.பி.எம்.ஜி( நவீன ரக துப்பாக்கி) ரவைகள் 40 , சலவைத்தூள் பைகள் , சில்லறைக்காசு போன்றவற்றையும் அதன் போது மீட்டுள்ளனர்.
அதன் பின்னர் பளை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதுடன் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகை தந்துள்ளதாகவும் நீதவானின் விசாரணைக்காக இதுவரை பொலிஸார் எச்சங்களை மீட்கவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, குறித்த பகுதியில் யுத்தகாலத்தில் விடுதலைப்புலிகளது பாரிய சோதனைச் சாவடி அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் இணைப்பு
கிளிநொச்சி- முகமாலை பகுதியில் இன்றைய தினம் மீட்கப்பட்டுள்ள சடல எச்சங்கள் விடுதலைப் புலிகளுடையது என்றோ, அது பெண் ஒருவருடையது என்றோ முழுமையான முறையில் அடையாளப்படுத்த முடியாது என பளை பொலிஸாரை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியிருக்கின்றன.
இத்தாவில்- முகமாலை ஆகிய இரு கிராமங்களுக்கும் மத்தியில் கலோரஸ்ட் நிறுவனத்தினால் கடந்த 2 வருடங்களுக்கும் மேலாக கண்ணி வெடியகற்றும் தன்னார்வ பணிகள் படையினரின் கண்காணிப்புடன் நடைபெற்று வருவதுடன், இந்தப் பகுதியில் அந்தப் பணி நிறைவாக 20 வருடங்கள், கால அவகாசம் வேண்டும் என குறித்த நிறுவனம் முன்னர் அரசாங்கத்தை கேட்டிருந்தமையும் ஊடகங்களில் வெளியாகியிருந்தன.
இந்நிலையில் குறித்த நிறுவனத்தின் பணியாளர்களே இன்றைய தினம் காலை கைவிடப்பட்ட பதுங்கு குழி ஒன்றிலிருந்து சடல எச்சத்தை மீட்டுள்ளனர்.
மேற்குறித்த இத்தாவில்- முகமாலை ஆகிய இரு கிராமங்களுக்கிடையிலான இந்த முன்னரங்க சூனியப் பகுதியிலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் 2006ம் ஆண்டு 08ம் மாதம் முதல் தங்கள் முன்னரங்க பகுதிகளை சற்றுப் பின்னகர்த்திய நிலையில், இந்தப் பகுதி அடிக்கடி போர் நடைபெறும் இரு தரப்பினரும் முன்னகர்வுகளை மேற்கொள்ளும் ஒரு பகுதியாக இருந்தது என முன்னாள் போராளிகள் தெரிவிக்கின்றனர்.
இதனோடு மீட்கப்பட்டிருக்கும் சடல எச்சத்துடன் உள்ள உடை விடுதலைப் புலிகளுடைய சீருடையா என்பதில் சந்தேகங்கள் உள்ளதாக பொலிஸாரும், முன்னாள் போராளிகள் சிலரும் தெரிவிக்கின்றனர்.
மேலும் அந்தப் பகுதியில் இருந்து படையினர் அணியும் தலைக்கவசம் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.
இதனைவிட குறித்த எலும்பு எச்சம் பெண் போராளி ஒருவருடையதாக இருக்கலாம் என கூறப்படுகின்றமைக்கு காரணம் சடல எச்சத்துடன் ஒரு பெண்கள் அணியும் உள்ளாடை ஒன்றும் காணப்பட்டமையே. இதனை தவிர வேறு எவ்விதமான ஆதாரங்களும் பெண்ணுடையது என்பதை நிரூபிப்பதற்கு இல்லை.
மேலும் அக்கராயன் பகுதியில் போர் நடைபெற்ற பகுதியில் கடந்த 2010ம் ஆண்டு மீட்கப்பட்ட எலும்பு எச்சங்களுடன் விடுதலைப் புலிகளின் சீருடை மற்றும் கழுத்தில் அணியும் தகடு மற்றும் குப்பி ஆகியனவும் கண்டுபிடிக்கப்பட்டன.
ஆனால் இந்த எச்சங்களில் அவை இல்லை. இதனைவிட போர் முனைப்பு பெற்றிருந்த காலப்பகுதியில் முகமாலை முன்னரங்கப் பகுதியிலிருந்து விடுதலைப் புலிகளுடன் படையினர் நேரடியாக மோதலில் ஈடுபட்டு தோற்கடிக்கப்பட்டு பின்வாங்கவில்லை.
பூநகரி பகுதிக்குள் படையினர் வந்த பின்னர் விடுதலைப் புலிகள் தன்னிச்சையாகவே பின்வாங்கினர்.
எனவே காயமடைந்த அல்லது வீரமரணமடைந்த போராளிகளை கைவிட்டு செல்லவும் வாய்ப்புக்கள் அப்போது இருக்கவில்லை.
எனவே இது விடுதலைப் புலிகளுடையது என்றோ, பெண் போராளியினுடையது என்றோ நிரூபிப்பதற்கான எந்த ஆதாரங்களும் இல்லை. என அந்த செய்திகள் மேலும் சுட்டிக்காட்டியிருக்கின்றன.
http://www.tamilwin.com/show-RUmsyHTWLbks5.html
Geen opmerkingen:
Een reactie posten