தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 2 juli 2014

153 அகதிகள் இன்றிரவு இலங்கை அதிகாரிகளிடம் கையளிக்கப்படலாம்!- அவுஸ்திரேலிய செய்தித்தாள்

இன, மத வெறுப்புகள் தூண்டப்படுவதை இலங்கை நிறுத்த வேண்டும்: ஐ.நா
[ புதன்கிழமை, 02 யூலை 2014, 01:18.12 PM GMT ]
இன மற்றும் மத நம்பிக்கை ரீதியான வெறுப்புணர்வுகள் தூண்டப்படுவதை நிறுத்த இலங்கை துரிதமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மத சுதந்திரம், சிறுபான்மை பிரச்சினைகள் மற்றும் விசாரணையற்ற கொலைகள் சம்பந்தமான மூன்று ஐ.நா நிபுணர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ சமூகங்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு பொறுப்பான தீவிரவாத பார்வை கொண்ட பௌத்த குழுக்கள் சட்டத்திற்கு முன் கொண்டு வரப்பட வேண்டும் எனவும் அவர்கள் கேட்டுள்ளனர்.
இலங்கையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் முஸ்லிம்களுக்கு எதிரான 350க்கும் மேற்பட்ட வன்முறைகளும், கிறிஸ்தவர்களுக்கு எதிரான 150க்கும் மேற்பட்ட வன்முறைகளும் பதிவாகியுள்ளன.
முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களுக்கு எதிராக நாடு முழுவதும் அடிக்கடி நடத்தப்படுவதாக கூறப்படும் பேச்சு, பாகுபாடுகள், தாக்குதல் காரணமாக இந்த சமூகங்கள் வெறுப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
பொதுபல சேனா அமைப்பு என்ற சிங்கள தீவிரவாத போக்குடைய அமைப்பு கடந்த ஜூன் 15 ஆம் திகதி அளுத்கமவில் நடத்திய பாரிய கூட்டத்திற்கு பின்னர், இன வன்முறைகள் ஏற்பட்டன.
இதன் காரணமாக குறைந்தது 4 பேர் கொல்லப்பட்டு, சுமார் 80 பேர் காயமடைந்தனர்.
முஸ்லிம்களுக்கு சொந்தமான வீடுகள், வர்த்தக நிலையங்கள், பள்ளிவாசல்கள் கொள்ளையிடப்பட்டதுடன் எரியூட்டப்பட்டன.
இலங்கையில் இந்த வன்முறைகள், சுதந்திர சமூகத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் விலக்களிப்பதற்கான சூழ்நிலையை வளர்க்கின்றன என மத அல்லது நம்பிக்கை தொடர்பான விசேட அறிக்கையாளர் ஹெய்னர் பொல்லிபெல்ட் தெரிவித்துள்ளார்.
இந்த சமூகங்களின் உடல் ரீதியான பாதுகாப்பு, வழிப்பாட்டுத் தலங்கள், சொத்துக்களை பாதுகாப்பது பொலிஸ் மற்றும் நீதித்துறை போதுமான முனைப்புகளை மேற்கொள்ளவில்லை.
சிறுபான்மை சமூகங்களில் நம்பிக்கை, சுதந்திரம், உரிமைளுக்கு உத்தரவாதம் வழங்கும் அதேவேளை, இன மற்றும் மத வெறுப்புகள் தூண்டப்படுவதை நிறுத்த இலங்கை உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyHTWLbkt7.html
அனுமதிப் பத்திரத்தை பெற்று விலங்கு பலி பூஜையை நடத்தலாம்: பிரதம நீதியரசர்
[ புதன்கிழமை, 02 யூலை 2014, 01:28.14 PM GMT ]
உரிய அனுமதிப் பத்திரத்தை பெற்றுக்கொண்ட பின்னர், விலங்கு பலி பூஜைகளை நடத்த இடமளிக்க முடியும் என பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
தேசிய சங்க சம்மேளனம் தாக்கல் செய்திருந்த மனுவொன்றை விசாரித்த மேன்முறையீட்டு நீதிமன்றம் சிலாபம், முன்னேஸ்வரம் காளியம்மன் ஆலயத்தின் வருடாந்த விலங்கு பலி பூஜைக்கு இடைக்கால தடைவிதித்து உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்த உத்தரவை இரத்துச் செய்யுமாறு கோரி காளியம்மன் ஆலய தரப்பினரால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு எடுத்து கொண்ட போதே மொஹான் பீரிஸ் அனுமதிப் பத்திரம் பெற்று பலி பூஜையை நடத்த இடமளிக்கலாம் கூறியுள்ளார்.
எனினும் அனுமதிப் பத்திரத்தை பெற்று விலங்குகளை பலியிடும் பூஜை நடத்த இடமளிப்பதை தாம் எதிர்ப்பதாக தேசிய சங்க சம்மேளத்தின் தேசிய அமைப்பாளர் பஸ்ஸரமுல்லே தயாவங்ஸ தேரர் கூறியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyHTWLbkuy.html
எமது சமூகத்தில் புரையோடியுள்ள களைகளை அகற்ற வேண்டும்: பா.கஜதீபன்
[ புதன்கிழமை, 02 யூலை 2014, 03:08.50 PM GMT ]
எமது சமூகத்தில் இன்று திட்டமிடப்பட்டு உள்நுழைக்கப்பட்டிருக்கும் பல்வேறு வகையிலான களைகளை நாம் இனங்கண்டு அகற்றவேண்டியிருக்கின்றது என வட மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் தெரிவித்தார்.
பாத்தீனியம் செடி ஒழிப்பில் முன்னிலை பெற்றவர்களுக்கான பரிசில் வழங்கும் நிகழ்வு இன்று சிறுப்பிட்டி ஜனசக்தி சனசமூக நிலையத்தில் வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளர் ஹால்தீன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
பல்வேறு வகையான கிண்டல் பேச்சுக்கள், நாகரீகமற்றவர்களின் விமர்சனங்கள் என்பவற்றினையும் தாங்கி, அவற்றையெல்லாம் தாண்டி வடமாகாணம் முழுவதும் கிட்டத்தட்ட 38,000 கிலோகிராம் பாத்தீனிய விஷச்செடியை இல்லாமற் செய்த ஒரு திருப்தியோடு இன்றைய நிகழ்வில் கலந்து கொண்டிருக்கின்றார் எமது வடமாகாண விவசாய அமைச்சரும் சூழலியலாளருமான ஐங்கரநேசன்.
சிலநேரங்களில் அவர் மீதான பாத்தீனியம் செடி ஒழிப்பு தொடர்பான விமர்சனத்தை மிகவும் கவலையோடு என்னிடம் பகிர்ந்துகொண்ட போது, அவருக்கு நான் சொன்னேன் “எமக்கு எதிராகவும், எமது மக்களுக்கு எதிராகவும் செயற்பட்டு வருபவர்கள் எம்மைப் புகழ்ந்தாலோ அல்லது அவர்கள் எம்மை விமர்சிக்காமல் இருந்தாலோ தான் நாம் தவறாக இருக்கின்றோம் அல்லது சரியானமுறையில் செயற்படவில்லை என்று அர்த்தமாகும்.
எனவே எம்மை எதிர்ப்பவர்களால் நாம் விமர்சிக்கப்படுகின்றபோது நாம் எமது பாதையில் சரியாகப் பயணிக்கின்றோம் என்பது தானே அர்த்தம். எனவே நாம் வீணர்களின் வெட்டிப் பேச்சுகளைப் புறந்தள்ளி துணிச்சலுடன் செயற்படுவோம்” என்றேன்.
எனவே தான் எம்மிடமிருக்கும் மிகவும் அற்ப சொற்ப அதிகாரங்களை வைத்தே, பலரது தடைகளையும் தாண்டி நாம் இவ்வளவிற்கு முயன்று பார்க்கின்றோம்.
முழு அதிகாரங்களையும் எமக்கு வழங்குவர்களாயின் பாதிக்கப்பட்டுள்ள எமது மக்களுக்கு சிறந்ததொரு சேவையை வழங்க முடியுமாக இருக்கும்.
கடந்த மாதம், சிறுகைத்தொழில் அமைச்சரும், அவரது கூட்டாளிகளும் “நீங்கள் மாகாணசபையைக் கைப்பற்றி 07 மாதங்களாகி விட்டன, இக்காலப் பகுதிக்குள் பல்வேறு வகையான நியதிச்சட்டங்களை உருவாக்கிச் செயற்பட்டிருக்க வேண்டும்” என்றார்கள். அதைவிட நேரடியாகவே முடியாவிட்டால் சொல்லுங்கள் நாங்கள் உருவாக்குகின்றோம் எனவும் சொன்னார்கள்.
ஆனால் நாம் சாதாரணமாக உருவாக்கிக் கொடுத்த எந்தச்சட்டச் சிக்கல்களும் இல்லாத நியதிச்சட்டங்களுக்கான அனுமதிகூட அரச தரப்பால் இன்னும் வழங்கப்படவில்லை என்பதைக்கூட அவர்கள் அறியாமல் உள்ளனர்.
அது தொடர்பான கோப்புகள் ஆளுனரிடம் உள்ளன. இதுதான் இன்றைய உண்மை நிலைமை. இதை எமது மக்கள் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும். இது தொடர்பான விழிப்புணர்வையும் எமது மக்கள் மத்தியில் மேற்கொள்ள உள்ளோம்.
சாதாரண நியதிச் சட்டங்களுக்கான அனுமதியைக்கூடப் பெறுவதில் தடங்கலான நிலைமையிலேயே இவ்வாறான செயற்பாடுகளை நாம் மிகவும் கஷ்டப்பட்டு முன்னெடுக்க வேண்டியுள்ளது.
போர் அழித்த எமது தாயக வளங்களை இன்று போர் ஓய்ந்த பின் இயற்கையிடமிருந்து கூட பாதுகாக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இப்பணியை பல தடைகளையும் தாண்டி எமது வடமாகாண விவசாய அமைச்சர் ஐங்கரநேசன் அவர்கள் மிகத்திறமையாக முன்னெடுத்து வருகிறார் என்றார்.
இந்நிகழ்வில் அதிகளவில் பாத்தீனிய நச்சுச்செடியை அழித்தவர்களுக்கான பணப் பரிசில்கள் விருந்தினர்களால் வழங்கிவைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினர்களான பா.கஜதீபன், அ.பரஞ்சோதி மற்றும் செடி ஒழிப்பில் முன்னலை வகித்தோர் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
http://www.tamilwin.com/show-RUmsyHTWLbku1.html
153 அகதிகள் இன்றிரவு இலங்கை அதிகாரிகளிடம் கையளிக்கப்படலாம்!- அவுஸ்திரேலிய செய்தித்தாள்
[ புதன்கிழமை, 02 யூலை 2014, 04:03.47 PM GMT ]
 153 தமிழ் அகதிகளை கொண்ட படகு பெரும்பாலும் இலங்கை அதிகாரிகளிடம் கையளிக்கப்படவுள்ளதாக இலங்கையின் கடற்படை அதிகாரி ஒருவரை கோடிட்;டு அவுஸ்திரேலிய செய்தித்தாள் ஒன்று தெரிவித்துள்ளது. இன்று புதன்கிழமை இரவு இந்த அகதி பரிமாற்றம் நடுக்கடலில் வைத்து இடம்பெறலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார் 
153 இலங்கை தமிழ் அகதிகளுடன் இந்தியாவில் இருந்து அவுஸ்திரேலியா சென்ற படகை அவுஸ்திரேலியா இலங்கை கடற்படையினரிடம் கையளித்ததாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. எனினும் இது தொடர்பில் அவுஸ்திரேலியா அரசாங்கம் உத்தியோகபூர்வ செய்தி எதனையும் வெளியிடவில்லை.
எனினும் 153 தமிழ் அகதிகள் படகும் 50பேரைக்கொண்ட மற்றும் ஒரு படகும் இன்னும் கடலில் தறித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதில் 153 தமிழ் அகதிகளை கொண்ட படகு பெரும்பாலும் இலங்கை அதிகாரிகளிடம் கையளிக்கப்படவுள்ளதாக இலங்கையின் கடற்படை அதிகாரி ஒருவரை கோடிட்;டு அவுஸ்திரேலிய செய்தித்தாள் ஒன்று தெரிவித்துள்ளது.
இன்று புதன்கிழமை இரவில் இந்த அகதி பரிமாற்றம் நடுக்கடலில் வைத்து இடம்பெறலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில் 50 பேரைக் கொண்ட படகில் உள்ளவர்களை படகில் வைத்து தொலைத்தொடர்பு கருவிகளின் மூலம் அடையாளம் காணும் பணிகளை அவுஸ்திரேலிய அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இதனை மனித உரிமைகள் சட்டத்தரணிகள் கண்டித்துள்ளனர். அவுஸ்திரேலியா சர்வதேச மனித உரிமை சட்டங்களை மீறுவதாக அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இதற்கிடையில் இதுவரை தமது கரையில் இருந்து அகதிகள் படகு அவுஸ்திரேலியாவுக்கு புறப்பட்டு செல்லவில்லை என்று கூறிவந்த இந்திய அதிகாரிகள் தற்போது பாண்டிச்சேரி கரையில் இருந்து மீனவப்படகு ஒன்றில் அகதிகள் புறப்பட்டு சென்றமையை உறுதிப்படுத்தியுள்ளதாக அவுஸ்திரேலிய செய்தித்தாள் ஒன்று தெரிவித்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyHTWLbku2.html

Geen opmerkingen:

Een reactie posten