ஓமானில் வேலைவாய்ப்பிற்காக சென்ற உதேனி தம்மிக்கா என்ற யுவதிக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பாக விசாரணைகளை நடத்துவதற்கு விசேட குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் டிலான் பெரேராவின் ஆலோசனைக்கு அமைய இந்த விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
அமைச்சின் செயலாளர் மற்றும் வெளிநாட்டு அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர், பொலிஸ் திணைக்களத்தின் மகளிர் பிரிவிலுள்ள பொலிஸ் அதிகாரி ஒருவர் ஆகியோர் இந்தக் குழுவில் அடங்குகின்றனர்.
2014 ஜனவரி மாதம் 10ம் திகதி பணியகத்தில் பதிவு செய்த பின்னர் ஓமானுக்கு வேலைவாய்ப்பிற்காக சென்ற குறித்த யுவதி, கடந்த மார்ச் மாதம் 31ம் திகதி தனது தொழில் வழங்குநரால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக 2014 ஏப்ரல் 14ம் திகதி அவரது கணவருக்கு தெரிவித்துள்ளார்.
பெண்ணின் கணவர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு செய்த முறைப்பாட்டை அடுத்து ஏப்ரல் மாதம் 29ம் திகதி ஓமானில் உள்ள இலங்கை தூதரகத்தின் பாதுகாப்பு இல்லத்திற்கு அப்பெண் கொண்டு வரப்பட்டார்.
தற்போது அந்தப் பெண் கர்ப்பமுற்றிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பாக அவர் இரண்டு தடவைகள் வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
இந்த இரண்டு வைத்திய பரிசோதனைகளிலும் இவர் கருவுற்றிருக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் மே மாதம் 22ம் திகதி அவரை வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தினர். இந்த வைத்திய பரிசோதனையிலும் அவர் கருவுற்றிருக்கவில்லை என்பதாக தெரிவிக்கப்பட்டது.
எனினும் தூதரகத்தில் உள்ள தொழிலாளர் பிரிவின் அதிகாரிகளினால் இந்த யுவதி கருக்கலைப்பு செய்யப்பட்டார் என ஊடகங்கள் குற்றம்சாட்டியிருந்தன.
இது தொடர்பாக அந்நாட்டிலுள்ள எமது தூதுவர் கடந்த ஏப்ரல் 23ம் திகதி முதல் விசாரணைகளை ஆரம்பித்திருந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக பல்வேறான தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.
எனவே, இந்த சம்பவம் தொடர்பாக ஓமானுக்கே சென்று விசாரணைகளை நடத்துவதற்கு அமைச்சர் டிலான் பெரேரா தீர்மானித்துள்ளார்.
இதனடிப்படையில் மேற்படி மூவர் கொண்ட விசாரணைக் குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இன்னும் சில தினங்களில் இக்குழு ஓமானுக்கு புறப்பட்டுச் செல்லும் என்று அமைச்சின் செயலாளர் நிஸங்க விஜேரட்ன தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyITZLcesy.html
Geen opmerkingen:
Een reactie posten