தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 26 augustus 2014

குற்றத்தை ஏற்றதால் சாதாரண சிறை! மட்டு. மேல் நீதிமன்றத்தில் தீர்ப்பு!


பயங்கரமான அபாயத்தை விளைவிக்கக்கூடிய துப்பாக்கிகள், வெடிபொருள்கள், ரவைகள் போன்றவற்றை அனுமதிப்பத்திரமின்றி வைத்திருந்தார் எனக் குற்ஞஞ்சாட்டப்பட்டு 5 வருடங்கள் விளக்கமறியலில் இருந்து வந்த நபர் ஒருவர் தன்மீது சுமத்தப்பட்ட இரு குற்றச்சாட்டுக்களையும் ஏற்றுக்கொண்டதால் இரு குற்றச்சாட்டுக்கும் தலா மூன்று மாத கால சாதாரண சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டது.

அத்துடன் சிறைத்தண்டனை முடிவடைந்ததும் ஒரு வருடம் புனர்வாழ்வுக்குச் செல்லவெண்டுமெனவும் தீர்ப்பில் உத்தரவிட்டப்பட்டது. மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருந்த இந்த வழக்கில் மட்டக்களப்பு மேல்நீதிமன்ற நீதிபதி சந்திரமணி விஸ்வலிங்கம் மேற்படி தீர்ப்பை நேற்று திங்கட்கிழமை வழங்கினார்.

மட்டக்களப்பு நாவற்குடா, ஈச்சத்தீவைச் சேர்ந்த நல்லரத்தினம் மகேந்திரராஜா எனும் சந்தேகநபர் மீது குற்றஞ்சாட்டப்பட்டு 2009 நடுப் பகுதியில் பொலிஸாரால் அவர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். அவசரகால ஒழுங்குவிதிகளின் 34ஆம் கட்டளைப்படி தண்டிக்கப்படக்கூடிய குற்றம் புரிந்தார் என சட்டமா அதிபரால் இவர் மீது மட்டக்களப்பு மேல்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இதன்படி பயங்கரமான துப்பாக்கிகளை அனுமதிப்பத்திரம் இன்றி தம் உடமையில் வைத்திருந்ததார் எனவும், துப்பாக்கிரவைகள், வெடிமருந்தகள், யுத்ததளபாடங்கள் போன்றவற்றை அனுமதிப்பத்திரமின்றி வைத்திருந்தார் எனவும் எதிரியான நல்லரத்தினம் மகேந்திரராஜா மீது இரு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தன.

இந்த வழக்கு மட்டக்களப்பு மேல்நீதிமன்றத்தில் நீதிபதி சந்திரமணி விஸ்வலிங்கம் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது எதிரி தம்மீதான இரு குற்றச்சாட்டுக்களையும் சுயமாக விரும்பி ஏற்றுக்கொண்டார். இதேவேளை, எதிரி கடந்து ஐந்துவருட காலமாக விளக்கமறியலில் இருந்து வருவதை அவர் தரப்பு சட்டத்தரணி சுட்டிக்காட்டியிருந்தார்.

அவரைப் புனர்வாழ்வுக்குட்படுத்தும் வண்ணம் குறைந்த பட்ச தண்டனை வழங்குமாறும் விண்ணப்பித்திருந்தார் திருமணமாகி ஒரு பிள்ளையின் தந்தையான எதிரி இடது கண் பார்வையை இழந்தவரென்பதும் முன் குற்றம் ஏதும் இழைக்காதவரென்பதும் நீதிமன்றின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது.

இவற்றைப் பரிசீலித்து கவனத்தில் கொண்ட நீதிபதி, குற்றங்களை எதிரி ஏற்றுக்கொண்ட நிலையில் இரு குற்றங்களுக்கும் தலா மூன்று மாத கால சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார்.

அத்துடன் ஏககாலத்தில் குறித்த சாதாரண சிறைத்தண்டனையை அனுபவித்து முடிந்த அடுத்த நாள் முதல் ஒரு வருடம் வெலிகந்த புனர்வாழ்வு முகாமில் புனர்வாழ்வுக்கு உட்படுத்த வேண்டுமெனவும் உத்தரவிட்டார்.
26 Aug 2014

Geen opmerkingen:

Een reactie posten