தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 4 augustus 2014

ஜெயலலிதா அவதூறு! இலங்கை தூதரிடம் கண்டனம் தெரிவிக்கப்படும்!- வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உறுதி

 தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து இலங்கை பாதுகாப்புத் துறை அமைச்சக இணையத்தளத்தில் அவதூறு கட்டுரை வெளியிடப்பட்டதற்காக இலங்கை தூதர் நேரில் வரவழைக்கப்பட்டு, அவரிடம் முறைப்படி இந்தியாவின் கண்டனம் தெரிவிக்கப்படும் என இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உறுதி அளித்துள்ளார்.
இலங்கை பாதுகாப்பு அமைச்சு இணையத்தளத்தில் ஜெயலலிதா குறித்த அவதூறு கட்டுரை வெளியிட்டதற்கு இந்தியா கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது. இது தொடர்பாக இலங்கை தூதரக அதிகாரி நிச்சயம் நேரில் வரவழைக்கப்பட்டு அவருடன் இது குறித்து விவாதிக்கப்படும் என்று நாடாளுமன்றத்தில் சுஷ்மா தெரிவித்தார்.
முன்னதாக முதல்வர் ஜெயலலிதா குறித்து இலங்கை இணையத்தளத்தில் வெளியான அவதூறு கட்டுரை தொடர்பாக அ.தி.மு.க உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்ற நடவடிக்கைகள் முடங்கின.
மாநிலங்களவை இன்று காலை கூடிய சிறிது நேரத்தில், இது பற்றி பிரச்சினை எழுப்பிய அவர்கள், அவையின் மையப்பகுதிக்குச் சென்று கூச்சலிட்டனர். இலங்கை பாதுகாப்பு அமைச்சகத்தின் இணையத்தளத்தில் ஜெயலலிதா பற்றி அவதூறான செய்தி வெளியிட்டதை கண்டித்தும், இலங்கை அதிபருக்கு எதிராகவும் அவர்கள் முழக்கமிட்டனர்.
இதனால் கடும் கூச்சல் குழப்பம் நிலவியதால், அவை 15 நிமிடங்களுக்கு முதலில் ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் அவை கூடிய போதும், இதே பிரச்சினையை மீண்டும் கிளப்பி அ.தி.மு.க உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.
அப்போது, 10 உறுப்பினர்களால் அவை நடவடிக்கைகள் முடக்கப்படுவது கண்டிக்கத்தக்கது எனக் கூறியஅவை தலைவர் ஹமீது அன்சாரி, நண்பகல் 12 மணி வரை மாநிலங்களவையை ஒத்திவைத்தார்.

மக்களவையும் ஒத்திவைப்பு
இதே பிரச்சினையை மக்களவையிலும் அ.தி.மு.க உறுப்பினர் தம்பிதுரை எழுப்பி பேசினார். அப்போது, இலங்கை அரசின் செயல் தொடர்பாக மத்திய அரசு எடுத்த நடவடிக்கை என்ன என்று கேள்வி எழுப்பினார்.
பின்னர், இலங்கை அரசுக்கு எதிராக அ.தி.மு.க உறுப்பினர்கள் முழக்கமிட்டதால் மக்களவையை நண்பகல் 12.30 மணி வரை சபாநாயகர் ஒத்திவைத்தார்.
இதைத் தொடர்ந்து மாநிலங்களவை மீண்டும் கூடியது. அப்போதும், அ.தி.மு.க.வினர் இலங்கைக்கு எதிராக முழக்கமிட்டு அமளியில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து அவை நடவடிக்கை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
மக்களவை மீண்டும் கூடியதும் அ.தி.மு.க உறுப்பினர் தம்பிதுரை பேசுகையில், இலங்கை அரசுக்கு எதிராக மக்களவையில் தீர்மானம் கொண்டு வரவேண்டும் என்று வலியுறுத்தினார்.
இதைத் தொடர்ந்து விளக்கம் அளித்த நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் வெங்கையாநாயுடு, இலங்கை அரசின் செயல் தொடர்பாக வெளியுறவுத்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
மேலும் அவர் கூறுகையில், அவதூறு கட்டுரை இருநாட்டு தூதரகம் தொடர்பான பிரச்னை என்றும், இலங்கை பாதுகாப்புத்துறை இணையதளத்தில் முதல்வர் ஜெயலலிதா பற்றி அவதூறு வெளியிட்டது கண்டிக்கத்தக்கது என்றும் தெரிவித்தார்.
அமைச்சரின் இந்த விளக்கத்தை ஏற்றுக் கொள்ள மறுத்த அ.தி.மு.க உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து, அவை நடவடிக்கையை பிற்பகல் 2 மணி வரை சபாநாயகர் ஒத்திவைத்தார்.
http://www.tamilwin.com/show-RUmsyITYLceq0.html

Geen opmerkingen:

Een reactie posten