வெளிநாட்டுத் தூதுவர்கள் கடப்பாடுகளை மீறிச் செயற்படுவார்களாயின், அது தொடர்பில் நாடாளுமன்றத்துக்கு அறிவித்து, எந்த நாட்டுத் தூதுவராக இருந்தாலும் அவரை நாட்டைவிட்டு வெளியேற்ற வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சி தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ரணில் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் உரையாற்றிய போது, பிக்குகள் குழுவினரை வைத்துக் கொண்டு வெளிநாட்டவர்களை விரட்டியடித்த அரசு, பின்னர் ஒவ்வொரு தூதரகங்களுக்கும் இரகசியமாகச் சென்று அங்குள்ளவர்களை வணங்கி மன்னிப்புக் கேட்கிறது.
"அளுத்கம தாக்குதல் சம்பவத்தால் உலகின் கவனம் இலங்கையின் பக்கம் திரும்பியுள்ளது. சில தேரர்களின் செயற்பாட்டால் இலங்கையின் பெளத்த சாசனத்திற்குப் பேரவமானம் ஏற்பட்டுள்ளது. ஏனைய சமயங்களுக்கு இலங்கையில் எந்த செயற்பாட்டையும் முன்னெடுக்க முடியாது என்ற எண் ணம் சர்வதேசத்தினரிடம் தோன்றியுள்ளது. காணாமல்போனோரின் உறவினர்கள் மற்றும் வெளிநாட்டுத் தூதுவர்களுக்கும் இடையில் அண்மையில் மருதானையில் சந்திப்பொன்று இடம்பெற்றது. பிக்குகள் குழுவினர் குழப்பம் விளைவித்து இந்தச் சந்திப்பைத் தடுத்து நிறுத்தினர்.
காணாமல்போனோரின் உறவினர்கள் வெளிநாட்டுத் தூதுவர்களிடம் சில தகவல்களைத் தெரிவிக்க முயற்சித்தனர். அதற்கு இடமளிக்க முடியாது என இந்தச் சம்பவம் தொடர்பில் வெளிவிவகார அமைச்சு பதிலளித்திருந்தது. எந்த சட்டத்தின் அடிப்படையில் வெளிவிகார அமைச்சு இவ்வாறு செயற்படுகிறது?
நாட்டில் தொடர்ச்சியாக அரசியல் பழிவாங்கல்கள் இடம்பெற்று வருகின்றன. இதை மாற்றியமைக்க வேண்டும். நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையின் பரிந்துரைகளை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண் டும். அத்துடன், 17 ஆவது திருத்தச் சட்டத்தை மீள் நடைமுறைப்படுத்த வேண்டும்" என்று தெரிவித்தார் ரணில். |
Geen opmerkingen:
Een reactie posten