[ வியாழக்கிழமை, 07 ஓகஸ்ட் 2014, 01:17.53 AM GMT ]
வெளிநாட்டு தூதரகங்கள் மற்றும் உயர்ஸ்தானிகராலயங்களில் ஜனாதிபதியின் உறவினர்கள் பதவி வகிப்பதில் பிழையில்லை.
ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக் காலத்திலும் இவ்வாறு இராஜதந்திர சேவையில் அரசியல்வாதிகளின் உறவினர்கள் பதவி வகித்துள்ளனர். கடந்தகால இராஜதந்திர சேவை பட்டியலை அவதானித்தால் இதனை காண முடியும்.
சுதந்திரமான நாடாக செயற்பட்ட காரணத்தினால்தான் போரை வெற்றிகொள்ள முடிந்தது. போர் வெற்றி காரணமாகவே நாடு பாரியளவில் அபிவிருத்திப் பாதையை நோக்கி நகர்ந்துள்ளது.
வரலாற்றில் என்றும் இல்லாத அளவிற்கு உலக நாடுகளுடன் நெருங்கிய பிணைப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு வெளிவிவகார அமைச்ருக்கும் ஜனாதிபதிக்குமே நன்றி பாராட்ட வேண்டும்.
30 ஆண்டுகளாக நாடு பாரிய இன்னல்களை எதிர்நோக்கி வந்தது. 2010ம் ஆண்டின் பின்னர் ஓர் குண்டு வெடிப்புச் சம்பவம் கூட பதிவாகவில்லை என உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க நாடாளுமன்றில் நேற்று தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyITbLdnr1.html
இராணுவத்திலிருந்து தப்பியோடியவர்கள் சட்ட பூர்வமாக விலக மீண்டும் சந்தர்ப்பம்
[ வியாழக்கிழமை, 07 ஓகஸ்ட் 2014, 01:24.56 AM GMT ]
இராணுவத்திற்கு முறையாக அறிவித்து பதவி விலகிச் செல்ல தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இராணுவத்திற்கு அறிவிக்காது தப்பிச் சென்ற படைவீரர்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் உத்தியோகபூர்வமாக பதவி விலக முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒழுக்க விதிகளை மீறிச் செயற்பட்டவர்கள் அதற்கான தண்டனையை அனுபவித்து அதன் பின்னர் பதவி விலக முடியும் என இராணுவப் பேச்சாளர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் சகல படையணிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரையில் 30,000 ற்கும் மேற்பட்ட படைவீரர்கள் இராணுவத்திலிருந்து விலகியுள்ளனர்.
இராணுவத்திலிருந்து தப்பியோடிய படைவீரர்கள் கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyITbLdnr2.html
கோத்தபாயவுக்கு எதிராக அமெரிக்காவினால் வழக்குத் தொடர முடியாது! ஜெயலலிதாவை அவதூறுபடுத்தும் வகையில் கட்டுரை இல்லை!- ருவான் வணிகசூரிய
[ வியாழக்கிழமை, 07 ஓகஸ்ட் 2014, 01:34.20 AM GMT ]
பாதுகாப்பு அமைச்சின் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள பாதுகாப்பு அமைச்சில் நேற்று புதன்கிழமை நடைபெற்றது.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பின்போது, இலங்கையில் இடம்பெற்றவை எனக் கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமெரிக்க ஆங்கில ஊடகமொன்று அண்மையில் செய்தி வெளியிட்டுள்ளமை குறித்து ஊடகவியலாளர்கள் பேச்சாளரிடம் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:-
ஒரு நபரை கைதுசெய்ய அல்லது விசாரணைக்குட்படுத்த வேண்டுமெனில் விசாரணை செய்யும் தரப்பிடம் அந்நபருக்கு எதிரான ஆதாரங்கள் மற்றும் சாட்சியங்கள் இருத்தல் அவசியமாகும்.
அதை விடுத்து ஒருநபரை எவ்வித ஆதாரங்களுமின்றி கைது செய்வதானது சட்டத்திற்குப் புறம்பான காரியமாகும். அதேபோல்தான், இந்த விவகாரமும் காணப்படுகிறது.
கோத்தபாய ராஜபக்சவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டுமெனில், அவருக்கெதிராக சாட்சியங்களும், ஆதாரங்களும் நிச்சயமாக இருக்க வேண்டும்.
ஆகவே, அமெரிக்காவால் இவருக்கெதிராக வழக்குத் தொடர முடியாது என்றார்.
அதேவேளை, இந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது, பாதுகாப்பு இணையத்தளத்தில் வெளியான இந்தியாவுக்கு எதிரானது என்ற சர்ச்சையை ஏற்படுத்திய கட்டுரை குறித்து ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பியக் கேள்விக்கு, அக்கட்டுரையில் பிரசுரிக்கப்பட்டுள்ள கிராபிக்ஸ் படமே சர்ச்சைக்குரியதென்றும், அக்கட்டுரையானது மீனவர் மற்றும் இனப்பிரச்சினை போன்ற வழமையான பிரச்சினைகளையே பதிவு செய்துள்ளதாகவும் அவர் பதிலளித்தார்.
மேலும், இவ்விவகாரம் குறித்து பாதுகாப்பு அமைச்சு தனது விசாரணைகளை தற்போது மேற்கொள்வதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஜெயலலிதாவை அவதூறுபடுத்தும் வகையில் கட்டுரை இல்லை: நியாயம் கற்பிக்கும் இலங்கை
தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில், எந்த கருத்துக்களும் பாதுகாப்பு இணையதளத்தில் வெளியாகவில்லை என இலங்கை இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய நியாயம் கற்பித்துள்ளார்.
கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசியபோது இதனை தெரிவித்த அவர்,
பாதுகாப்பு அமைச்சக இணைய தளத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தமிழக முதல்வர் ஜெயலலிதா தொடர்பாக அவதூறான கருத்துக்கள் இடம்பெறவில்லை. அந்தக் கட்டுரையில் இலங்கை தொடர்பான இந்திய மத்திய அரசின் நிலைப்பாடு குறித்தும், சேது சமுத்திர திட்டம் குறித்தும் தெற்காசிய கடற்பிராந்தியத்தில் மீனவர்களின் பாதுகாப்பு தொடர்பான தகவல்களுமே இடம்பெற்றிருந்தது.
இந்திய அரசுக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையிலான கருத்துக்கள் எவையும் அதில் இடம்பெறவில்லை. இந்த கட்டுரை தொடர்பாக எதிர்ப்பு வெளியிட்டவர்களில் நூற்றுக்கு 90 சதவீதம் பேர்கள் இணைய தளத்தில் வெளியான கட்டுரையை முழுமையாக வாசிக்கவில்லை.
அவர்கள் அந்த கட்டுரையுடன் வெளியான ஒளிப்படத்தை பார்த்தே தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். உண்மையில் குறித்த படம் பாதுகாப்பு இணையத்தளத்தினை பராமரிக்கும் நபரின் ஊடாகவே பதிவேற்றப்பட்டிருந்தது. இது தொடர்பான விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றார்.
http://www.tamilwin.com/show-RUmsyITbLdnr3.html
Geen opmerkingen:
Een reactie posten