யுத்தத்திற்கு பின்னர் குடி போதையில் இலங்கையில்
"யுத்தத்திற்குப் பின்னர் மதுசாரப் பாவனையில் இலங்கையில் 2ஆம் இடம் முல்லைத்தீவுக்கு என்று இன்டெர் பிரஸ் சர்வீஸ் செய்தித்தளம் http://www.ipsnews.net/2014/08/former-war-zone-drinking-its-troubles-away/ கூறுகிறது.
இது பற்றி குறித்து கருத்து வெளியிட்டுள்ள சமூக ஆர்வலரான குமாரவடிவேல் குருபரன், சனத்தொகையில் 34.4 வீதமானவர்கள், முல்லைத்தீவில் மதுபானத்தை பொதுவில் அருந்துபவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள குறிப்பில், தருமபுரம் கள்ளச் சாராயத்தின் தலைமை இடமாக மாறிவிட்டது என்கிறது இந்தச் செய்தி. குறிப்பாக பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள் கள்ளச் சாராயத்தை இலகு வருமானம் ஈட்டும் தொழிலாக வரித்துள்ளனர் என்பது இதில் மேலும் வருந்தக்கதக்க செய்தியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகள் சாராய உற்பத்தியையும் பாவிப்பையும் கட்டுபடுத்தி வைத்திருந்தனர் என்பதையும் இந்தச் செய்தி ஞாபகப்படுத்துகிறது. வறுமை, யுத்த வடு, வேலை வாய்ப்பின்மை போன்றவை மதுபானப் பாவனை அதிகரிப்பிற்கான காரணம் என்கிறது செய்தி.
தராகி சிவராம் மது, போதைவஸ்துக்கள், ஆபாசப் படங்கள் தமிழ் மக்களுக்கு எதிரான யுத்தத்தின்(counter- insurgency) கருவிகள் என்று சுட்டிக் காட்டியிருந்தார். 'யுத்தத்திற்குப் பின்' தொடரும் தமிழ் மக்களுக்கெதிரான யுத்தத்திலும் அதிக அளவில் இராணுவத்தினர் நிலை கொண்டுள்ள முல்லைத்தீவில் கள்ளச் சாராயம் உற்பத்தி செய்யப்படுவது அல்லது ஊக்குவிக்கப்படுவது ஒரு திட்டமிட்ட நடவடிக்கையாகவே அவதானிக்கப் பட வேண்டும்.
முறையான வேலைவாய்ப்புக்களை வேண்டுமென்றே உருவாக்காமல், மக்களுக்குத் தேவையான உள வள சேவைகளைத் தடை செய்து மட்டுப்படுத்தி இத்தகைய ஒரு சூழல் உருவாவது ஊக்குவிக்கப்படுகின்றது. நீண்ட காலத்தில் தமிழ் தேசத்தின் முழுமையான வீழ்ச்சிக்காக திட்டமிட்டு இவை செய்யப்படுகின்றன.
புனிதத்துவத்தை வலியுறுத்தியன்றி எம்மீது தொடரப்படும் போரின் அங்கம் என்ற வகையில், பொது சுகாதாரப் பிரச்சனை என்ற வகையில் நாம் இப்பிரச்சனையை அணுக வேண்டும், மாற்று உத்திகளை கண்டறிய வேண்டும். மது தவிர்ப்பு பற்றி விழிப்புணர்வு உடனடியாகச் செய்யப்பட வேண்டியது. ஆனால் அது போதாது. யுத்த வடுவை போக்க சமூக உள நள சேவைகள் கட்டாயம் முன்னெடுக்கப்பட வேண்டும். இறுதியில் வேலைவாய்ப்பும் பொருளாதார வாய்ப்புகளுமே நிரந்தரத் தீர்வு. ஆனால் இதனை செய்வதற்கு அரச அதிகாரம் வேண்டும். அது எம்மிடத்தில் இல்லை (நிலையான அரசியல் தீர்வுக்கும் மக்களின் நாளாந்த பிரச்சனைகளுக்கும் உள்ள தொடர்பு இதில் உணரப்படுகின்றது).
ஆனால் நிரந்தரத் தீர்வுக்காக காத்திருப்பது புத்திசாலித்தனம் இல்லை. அரச கட்டமைப்புக்கு வெளியில் சிறு குழுமங்களாக வேலைத் திட்டங்களைத் தொடங்க வேண்டும். அரசுக்கு சமாந்திரமாக நிறுவனங்களை (parallel institutions) உருவாக்கி வேலை செய்வதைத் தவிர வேறு வழியில்லை. ஜெனீவாவே தஞ்சமென்று இருந்து விடாது இந்த பணிகளைச் முன்னெடுக்க வேண்டுமெனவும் அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten