[ வெள்ளிக்கிழமை, 01 ஓகஸ்ட் 2014, 09:23.44 AM GMT ]
ஈழத்துப் போராட்டப் பாடகர்களில் தனக்கென்று தனித்துவமான இடத்தைப் பெற்றிருப்பவர் மேஜர் சிட்டு போராளியாகப் பணியாற்றி களமொன்றில் வீரச்சாவடைந்தது கலையுலகிற்கு இழப்புத்தான் என்றாலும் மக்கள் மனங்களில் என்றும் நீங்கா இடம்பெற்ற வாழ்க்கை அவருடையது.
தொன்னூறுகளின் தொடக்கத்தில் மேஜர் செங்கதிர் என்ற போராளியின் பாடல்வரிகளைத் தன் குரலிற் பாடி இசையுலகிற்குள் நுழைந்தார்.
அருமையான போராளிக்கலைஞனை இனங்காட்டியதும் தொடக்கி வைத்ததும் “கண்ணீரில் காவியங்கள் செந்நீரில் ஓவியங்கள்” என்ற அப்பாடலே, சிட்டண்ணனின் நுழைவின்போது இன்னோர் ஈழத்துப்பாடகர் சாந்தன் புகழ்பெற்றிருந்தார்.
பின்வந்த காலத்தில் கேணல் கிட்டு அவர்கள் நினைவாகப் பாடப்பட்ட பாடல்கள் வெளிவந்தபோது சிட்டண்ணன் புகழின் உச்சிக்குச் சென்றார். அவசரமாக உருவாக்கப்பட்டு இருநாட்களுள் வெளிவந்த பாடலான “கடலம்மா.. எங்களுக்கு நீதி சொல்ல எவருமில்லையா?” என்ற பாடல் மிகப்பிரபலமானது. அதன்பின் சிட்டண்ணன் என்றுமே நீங்காத இடத்தைப் பெற்றுவிட்டார். அதன்பின் அவருக்கு இறங்குமுகமேயில்லை.
போராளியாக தன் கடமையைச் செய்துகொண்டிருந்தார். கலைபண்பாட்டுக் கழகப்பொறுப்பு தொடக்கம் பல கடமைகளைச் செய்திருக்கிறார்.
விடுதலைப்புலிகளால் தயாரிக்கப்பட்ட ஒரு திரைப்படம் ‘உயிர்ப்பூ’. இப்படத்தில் சிட்டண்ணன் பாடும் ஒரு பாடல் வருகிறது.
ஒருமுறை கேட்டால் யாரையும் கட்டிப்போட்டுவிடும் பாடல். “சின்ன சின்ன கண்ணில் வந்து மின்னல் விளையாடிடும்” சிட்டண்ணனின் புகழ்பெற்ற பாடல்களில் இப்பாடல் எப்போதும் முதன்மையாக இருக்கும்.
கண்ணீரில் காவியங்கள் தொடங்கி இறுதியாக அவர் பாடிய பாடல் . ‘சிறகு முளைத்து உறவை நினைத்துப் பறக்கும் குருவிகள்’ என்ற சோலைச் சிறுவர்களின் இசைத்தட்டில் இடம்பெற்ற பாடல்வரையும் சுமார் 75 பாடல்களைப் பாடியிருக்கிறார்.
தமிழீழ இசைக்குழு என்ற பெயரில் போராளிக் கலைஞர்களைக் கொண்ட இசைக்குழு மக்களிடத்தில் விடுதலைகானங்களை இசைக்கும். ஏராளமான மக்கள் கூடுவர். சிட்டண்ணன் இருந்தவரை மிகப்பெரும் வரவேற்பு இவ்விசை நிகழ்ச்சிக்கு இருந்தது. சிட்டண்ணையின் வீரச்சாவின்பின் மக்கள் இசைநிகழ்ச்சிக்குச் செல்வதைக் குறைத்துக்கொண்டனர்.‘சிட்டு இல்லாத கோஷ்டிக்கு ஏன் போவான்? என்று மக்கள் பேசிக்கொண்டார்கள்.
அக்காலகட்டம், மேடை அரங்குகள் செயலிழந்து போகத் தொடங்கிய காலம். மக்களிடத்தில் செய்தியைச் சொல்ல 'தெருக்கூத்து' எனப்படும் வீதி நாடகத்தைப் பரவலாகப் பாவிக்கத் தொடங்கிய காலம். மிகப்பெரும் வீரியத்துடன் வீதிநாடகங்கள் வன்னியில் செழிப்புற்ற காலத்தில் இசைக்குழுக்களோ பெரிய மேடை நிகழ்வுகளோ நடத்தப்படுவதைத் தவிர்த்தனர்.
அனேகமாக ஓயாத அலைகள்-3 தொடங்கப்பட்டும்வரை வீதி நாடகமே முதன்மைக் கலையாகவும் பரப்புரை ஊடகமாகவும் வன்னியில் இருந்ததுசிட்டண்ணையின் இழப்பு மக்கள் மத்தியில் பேரிழப்பாகவே உணரப்பட்டது. சிட்டண்ணை ஏன் சண்டைக்குப் போனார் என்றுகூட விசனப்பட்டுக் கதைத்தனர் மக்கள்.
01.08.1997 அன்று ஜெயசிக்குறு நடவடிக்கைமூலம் முன்னேறி ஓமந்தையில் நிலைகொண்டிருந்த சிங்களப்படைகள் மீதான வலிந்த தாக்குலொன்று புலிகளால் தொடுக்கப்பட்டது. அந்நடவடிக்கை எதிர்பார்த்ததைப் போல் வெற்றியாக அமையவில்லை. அச்சமரில்தான் எங்கள் அன்புக்குரிய பாடகன் மேஜர் சிட்டு வீரச்சாவடைந்தார்.
“சோகப்பாட்டுக்கு சிட்டண்ணை” என்ற எடுமானம் பொதுவாக எல்லோரிடமுமுண்டு. அவர் பாடிய பாடல்கள் பெரும்பாலானவை அப்படித்தாம். கரும்புலிகள் நினைவுப்பாடல்கள் பல பாடியுள்ளார்.
தமிழீழ எழுச்சிப் பாடல்களில் எழுபதுக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடிய இம்மாவீரன் 01.08.1997 அன்று ஓமந்தை இராணுவ முகாம் மீதான தாக்குதலில் வீரச்சாவடைந்தார்.இவர் பாடிய அனைத்துமே அருமையான பாடல்கள். என்றாலும் || உயிர்ப்பூ || படத்தில் இவர் பாடிய ” சின்னச் சின்னக் கண்ணில்” என்ற பாடல் அனைவரையும் உருக்கியது. தனியே பாடலைக் கேட்பதைவிட படத்தோடு பார்த்தால் அப்பாடலின் முழு அனுபவத்தையும் பெற முடியும்.
அப்படத்தில் மூத்த பிள்ளை (நகுலன்) ஊர்ப்பெண்ணொருத்தியின் தண்ணீர்க்குடத்தை விளையாட்டுத் தனமாக உடைத்ததால் தந்தையால் வீட்டை விட்டுத் துரத்தப்படுகிறான். அவன் மீது அளவற்ற பாசம் கொண்ட தம்பி, தமையனை நினைத்து நொடித்துப்போகிறான். ஒரு குந்தில் இருந்து கொண்டு தமையன் (நகுலன்) தம்பியை நினைத்துப்பாடும் பாடல் தான் இது.
சிட்டுவின் குரல் அழகாக இழைந்தோடும். அந்தப் பாத்திரமாகவே மாறிவிட்ட தமையன், தம்பி இருவரின் நடிப்பும் பாடலுக்கு மேலும் மெருகூட்டும். அந்த நகுலன் பற்றியும் சிறிது சொல்ல வேண்டும்.அந்தப் படத்தின் கதையின்படி, எந்தப்பொறுப்புமற்றுச் சுற்றித் திரியும் மூத்தபிள்ளை தான் நகுலன். ஒரு நேரத்தில் உணர்ந்து கடற்றொழிலுக்குச் செல்கிறான். தன் தம்பியை சிங்களக் கடற்படையினரின் துப்பாக்கிக் குண்டுக்குப் பலிகொடுக்கிறான். பின்னொரு நாள் தந்தையையும் அவ்வாறே கண்ணெதிரில் பலிகொடுக்கிறான். பின் போராட்டத்திலிணைந்து ஒரு கட்டத்தில் கரும்புலியாக எதிரியின் கப்பலை மோதி அழிக்கிறான்.
இதுதான் அடிப்படைக்கதை. இதில் நகுலன் நடிக்கும்போதே போராளி. பின்னொரு நாளில் அப்படத்தில் நடந்தது போலவே சம்பவம் நடந்தது. ஆம் ‘உயிர்ப்பூ’ படத்தில் இறுதியாக கரும்புலியாக எதிரியின் கப்பலைத் தகர்ப்பதாய் நடித்த அதே நகுலன், புல்மோட்டைக் கடற்பரப்பில் எதிரியின் டோறாப் பீரங்கிப்படகொன்றைத் தாக்கி மூழ்கடித்து கடற்கரும்புலி மேஜர் நகுலனாக வீரச்சாவடைந்தான்.
போர்க்குயில்களாய்ப் பாடித்திரிந்த மேஜர் சிட்டு, மேஜர் மாதவன் போன்றோர் (இன்னும் பலர்) களத்திலேயே சமரிட்டு வீரச்சாவடைந்தனர். அப்படியே நகுலனும் நடிகனாகவே இருந்துவிடவில்லை. அதேபோல் குட்டிக்கண்ணனும் வீரத்தின் சுவடாகி தமிழினத்தின் காவலராகி ஒளிரவிட்டு வீசுகின்றனர்.
உடுத்துறை மண்ணில் பிறந்த சிட்டு அழியாத வரலாறு
உடுத்துறை மண்ணில் பிறந்த சிட்டு அழியாத வரலாறு
http://www.tamilwin.com/show-RUmsyITVLcgv3.html
மகிந்த ராஜபக்சவை மன்னிப்பு கேட்க வைக்க வேண்டும்! மத்திய அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்
[ வெள்ளிக்கிழமை, 01 ஓகஸ்ட் 2014, 09:38.34 AM GMT ]
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இலங்கை பாதுகாப்புத்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மீனவர் பிரச்னை தொடர்பாக வெளியாகியுள்ள கட்டுரை தமிழக முதலமைச்சரை இழிவுபடுத்தும் வகையில் அமைந்திருக்கிறது.
நரேந்திர மோடிக்கு ஜெயலலிதா எழுதும் காதல் கடிதங்கள் எந்த அளவுக்கு அர்த்தமுள்ளவை? (How meaningful are Jayalalitha's love letters to Narendra Modi?) என்று மிகக் கீழ்த்தரமான ரசனையுடன் அந்தக் கட்டுரைக்கு தலைப்பிடப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியை நினைத்துக் கொண்டு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதுவதைப் போல அக்கட்டுரையுடன் சேர்த்து வெளியிடப்பட்டுள்ள படம் மனசாட்சி உள்ள அனைவரையும் கொந்தளிக்க வைத்திருக்கிறது.
முதலமைச்சரை இழிவுபடுத்தும் வகையிலான இலங்கை அரசின் இந்த செயல் கண்டிக்கத்தக்கது.
மத்தியில் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பதவியேற்ற பின் இதுவரை 15க்கும் மேற்பட்ட முறை தமிழக மீனவர்களை சிங்களக் கடற்படை கைது செய்திருக்கிறது.
பல முறை இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியிருக்கிறது. சிங்களப் படையினரின் இந்த செயலை தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் கடுமையாக கண்டித்திருக்கிறார்கள்.
தமிழக முதலமைச்சர் அவரது பங்கிற்கு இதுபற்றி பிரதமருக்கு இதுவரை 11 முறை கடிதம் எழுதியிருக்கிறார். முதலமைச்சர் என்ற முறையில் ஜெயலலிதா மேற்கொள்ளும் நடவடிக்கைகளை இலங்கையில் உள்ள ஊடகங்கள் விமர்சித்தால் கூட அதை கருத்து சுதந்திரம் என்ற அடிப்படையில் அனுமதிக்கலாம்.
ஆனால், இலங்கை அரசுத்துறை இணையத்தளத்தில், அதிலும் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சவின் சகோதரர் கோத்தபாய ராஜபக்சவின் கட்டுப்பாட்டில் உள்ள அந்நாட்டு பாதுகாப்புத்துறையின் இணையதளத்தில், அரசியலமைப்புச் சட்டத்தின்படி மக்களால் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அண்டை நாட்டின் முதலமைச்சரின் செயல்பாட்டை விமர்சித்து கண்ணியமற்ற மொழியில் கட்டுரை எழுதப்படுவது சரியா? இது இந்திய இறையாண்மையில் குறுக்கிடும் செயல் ஆகாதா? என்பதை மத்திய அரசு விளக்க வேண்டும்.
மீனவர்கள் பிரச்னை உட்பட தமிழக மக்கள் நலன் சார்ந்த பிரச்சினைகளை முதல்வர் ஜெயலலிதா கையாளும் முறை தொடர்பாக எனக்கு பல விமர்சனங்கள் உண்டு.
இன்னும் கேட்டால் ஜெயலலிதா அரசின் தவறுகளை, மற்ற கட்சிகளின் தலைவர்களைவிட நான் தான் மிக அதிகமாக விமர்சனம் செய்திருக்கிறேன். விமர்சனங்கள் ஒருவரின் தவறைச் சுட்டிக்காட்டி திருத்தும் வகையில் இருக்க வேண்டுமே தவிர, இழிவுபடுத்தும் வகையில் இருக்கக் கூடாது.
ஆனால், தமிழக மீனவர்கள் சிங்களக் கடற்படையால் அத்துமீறி நுழைந்து தாக்கப்படுவது குறித்தும், கைது செய்யப்படுவது குறித்தும் இந்திய பிரதமருக்கு தமிழக முதலமைச்சர் கடிதம் எழுதுவது தொடர்பான உள்நாட்டு பிரச்சினையில், இலங்கை அரசு தேவையில்லாமல் கருத்து தெரிவிப்பது மட்டுமின்றி, பெண் என்றும் பாராமல் முதலமைச்சரை இழிவுபடுத்துவது முறையல்ல.
இலங்கை இணையதளக் கட்டுரையின் தலைப்பு தமிழக முதலமைச்சரை மட்டுமின்றி, பிரதமரையும் இழிவுபடுத்துவதைப் போல அமைந்திருக்கிறது. இதை ஏற்றுக்கொள்ளவே முடியாது.
அதுமட்டுமின்றி, பிரதமர் நரேந்திர மோடியை தங்களுக்கு நெருக்கமானவராகவும், அவரிடம் தமிழக அரசின் முயற்சி பலிக்காது என்பது போன்று மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் இடையே மோதலை ஏற்படுத்தும் வகையிலான கருத்துக்கள் இக்கட்டுரையில் இடம்பெற்றிருப்பது கண்டிக்கத்தக்கது.
இந்தியாவுக்கு எதிரான கட்டுரைகளும், கருத்துப் படங்களும் இலங்கை அரசு இணையதளத்திலும், ஊடகங்களிலும் வெளியாவது இது முதல்முறையல்ல.
2009 ஆம் ஆண்டு இனப்படுகொலைக்குப் பிறகு, அப்போதைய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவை கடுமையாக விமர்சித்து இலங்கை பாதுகாப்புத்துறை இணையதளத்தில் கட்டுரை வெளியிடப்பட்டது.
2012ஆம் ஆண்டில் தமிழக முதலமைச்சரையும், அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கையும் தொடர்புபடுத்தி மிகவும் மட்டமான ரசனையுடன் ‘லக்பிம’ என்ற ஊடகத்தில் கருத்துப்படம் வெளியிடப்பட்டது.
அதைத்தொடர்ந்து இப்போது தமிழக முதலமைச்சரை கொச்சைப்படுத்தி கட்டுரை எழுதப்பட்டிருக்கிறது.
பாரதிய ஜனதாவைச் சேர்ந்த சுப்பிரமணியசாமி, சேஷாத்ரி சாரி போன்றவர்கள் ராஜபக்சவின் விருந்தினர்களாக சென்று, இந்திய அரசின் ஏகபோக பிரதிநிதிகளைப் போன்று தமிழர்களுக்கும், தமிழகத்திற்கும் எதிராக கருத்துக்களைத் தெரிவித்து வருவதுதான், இத்தகைய கட்டுரைகளை வெளியிடும் அளவுக்கு இலங்கை அரசுக்கு துணிச்சலைத் தந்திருக்கிறது.
இலங்கையின் இத்தகைய தரம் தாழ்ந்த, நச்சுத்தன்மைக் கொண்ட, அருவருக்கத்தக்க போக்கை இனியும் அனுமதிக்கக் கூடாது.
இதற்காக டெல்லியில் உள்ள இலங்கைத் தூதரை இந்திய வெளியுறவுத்துறை உடனடியாக அழைத்து கண்டனம் தெரிவிக்க வேண்டும்.
இக்கட்டுரைக்காக இலங்கை அதிபரும், இலங்கை பாதுகாப்புத்துறை செயலாளரும் மன்னிப்பு கேட்கும்படி மத்திய அரசு வலியுறுத்த வேண்டும்.
மன்னிப்பு கேட்க இலங்கை அரசு மறுத்தால் அந்த நாட்டுடனான உறவை துண்டித்துக் கொள்ளவும் இந்திய அரசுத் தயங்கக்கூடாது என்று கூறியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyITVLcgv4.html
Geen opmerkingen:
Een reactie posten