தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 9 augustus 2014

மன்னார் அமர்வில் காணாமற் போனவர் குறித்த ஆதாரத்தை அலட்சியப்படுத்திய அதிபர் ஆணைக்குழு..!!

காணாமற்போன மகன் தொடர்பாக தாய் ஒருவர் முன்வைத்த ஆதாரத்தை, காணாமற்போனோர் குறித்து விசாரிக்கும் அதிபர் ஆணைக்குழுவினர் அலட்சியம் செய்யும் வகையில் நடந்து கொண்டுள்ளனர்.

காணாமல் போனவர்களை கண்டறியும் அதிபர் ஆணைக்குழுவின் விசாரணைகள் மன்னார் மாவட்டத்தில் மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தில் நேற்று இடம்பெற்றது. நேற்றுக்காலை 9 மணிக்கு ஆரம்பமாகிய விசாரணை மாலை 5 .30 மணிவரை நடைபெற்றது. மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள காணாமல் போனவர்கள் தொடர்பாக பதிவுகளை மேற்கொண்டவர்களுள் 65 பேர் நேற்று ஆணைக்குழுவால் அழைக்கப்பட்டிருந்தனர்.
எனினும் 48 பேரே விசாரணைக்கு சமுகமளித்தனர்.மேலும் 25 பேர் புதிய முறைப்பாடுகளை ஆணைக்குழுவில் பதிவு செய்துள்ளனர். நேற்றைய விசாரணைகளின் போது, விடுதலைப் புலிகள் பலவந்தமாக ஆட்சேர்ப்பதற்காகப் பிடித்துச் செல்லப்பட்ட பின்னர் தமது பிள்ளைகள் காணாமல் போயிருப்பதாகவும், இராணுவ கட்டுப்பாட்டுப் பிரதேசத்தினுள் வந்த பின்னர் காணாமல் போயிருப்பதாகவும், இராணுவத்தினரால் விசாரணைக்கென அழைத்துச் செல்லப்பட்ட பின்னர், காணாமல் போயிருப்பதாகவும், வீடுகளுக்கு வந்து கடத்திச் செல்லப்பட்ட அல்லது பிடித்துச் செல்லப்பட்டவர்களைக் காணவில்லை என்றும் பலரும் சாட்சியமளித்துள்ளனர்.
நேற்றைய விசாரணைகளின் போது சாட்சியமளித்த தாய் ஒருவர், அரசாங்கத்தால் வெளியிடப்படும் பாடப்புத்தகத்தில் கூட எனது மகனின் படம் இருக்கும் போது எப்படி அவரைக் காணவில்லை என்று அரசு கூறுகிறது என ஆணைக்குழு முன் கேள்வி எழுப்பினார். “2007 இல் இயக்கம் பிடிச்சது. பிறகு நாங்கள் போனபோது காட்டவில்லை. பின்னர் இரண்டு நாள் பார்த்தோம்.
சண்டை தொடங்கிவிட்டது மகனை காணவில்லை. அரசாங்கத்தினால் வெளியிடப்படும் க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கான புத்தகத்தில் எனது மகனின் படம் உள்ளது. அதனையடுத்து எல்லா இடமும் தேடினோம் காணவில்லை. சிறிலங்கா அதிபருக்குக் கூட கடிதம் அனுப்பினோம், பதில் ஒன்றும் வரவில்லை. எங்களுக்கு எந்தவொரு உதவியும் வேண்டாம், என்ர பிள்ளையை தந்தா போதும். எப்படி எண்டாலும் வைச்சிருக்கட்டும் எனக்கு மகன் உயிரோட வேணும் என்றார்.
பாடப்புத்தகத்தில் வெளியான காணாமற்போன தனது மகனின் படத்தை ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு காண்பித்த போதும், அவர்கள் அதனை ஒரு ஆதாரமாக எடுத்துக் கொண்டதாக தெரியவில்லை. அலட்சியப் போக்குடன் நடந்து கொண்டனர். இதற்கிடையே, இன்றும் இந்த விசாரணை தொடர்ந்து நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளையும், மன்னார் பிரதேச செயலகத்திலும், நாளை மறுநாள் மடு பிரதேச செயலகத்திலும் விசாரணை நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக ஆணைக்குழுவின் செயலாளர் கூறினார்.


mannar-missing-witness-1-450x708mannar-missing-witness-2-450x252mannar-missing-witness-3-450x300mannar-missing-witness-4-450x300mannar-missing-witness-5-450x252mannar-missing-witness-6-450x338
http://www.jvpnews.com/srilanka/78955.html

Geen opmerkingen:

Een reactie posten