தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 9 augustus 2014

திருக்கேதீஸ்வர மனித புதைகுழி! ரணகோச இராணுவ நடவடிக்கையில் ஏற்பட்டதா?: அனந்தி சசிதரன்!

எஸ்.பி. திஸாநாயக்கவே மாணவர்களை தூண்டி வருகிறார் - சுனில் அந்துன்நெத்தி
[ சனிக்கிழமை, 09 ஓகஸ்ட் 2014, 09:30.29 AM GMT ]
பல்கலைக்கழக மாணவர்கள் தவறாக வழி நடத்தப்பட்டு சதித்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுவதாக உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க சுமத்தியுள்ள குற்றச்சாட்டை ஜே.வி.பி நிராகரித்துள்ளது.
பல்கலைக்கழக மாணவர்களை தூண்டுவது ஜே.வி.பியோ வேறு எவருமோ அல்ல எஸ்.பி . திஸாநாயக்கவே தூண்டி வருகிறார் என ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் அந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.
எஸ்.பி. திஸாநாயக்கவே மாணவர்களை தூண்டிவிட்டு வருகிறார் என்பதை முன்பள்ளிக்கு செல்லும் பிள்ளையிடம் கேட்டாலும் கூறும்.
முன்பள்ளி மாணவர்களுக்கு எஸ்.பி.திஸாநாயக்க யார் என்று தெரியாவிட்டாலும், தொலைக்காட்சியை காட்டி அதில், பைத்தியகாரன், கழுதை, நரியன், மாடு என மிருங்ளின் பெயரை யார் கூறினார் என்று கேட்டால் பிள்ளைகள் எஸ்.பி. திஸாநாயக்கவை காட்டுவார்கள்.
இவர்தான் பல்கலைக்கழக மாணவர்களை குழப்பி விடுகிறார் என்று அந்த பிள்ளைகள் கூறும். எஸ்.பி. திஸாநாயக்கவின் கருத்துக்களுக்கு பதிலளிப்பது, பெறுமதியான எமது நேரத்தை வீணடிப்பதாகவே நான் கருதுகிறேன் எனவும் சுனில் அந்துன்நெத்தி குறிப்பிட்டுள்ளார்.
சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் பயிலும் தமிழ் மாணவர் ஒருவரை இனந்தெரியாதோர் தாக்கியுள்ளதாக ஜே.வி.பி மற்றும் முன்னிலை சோசலிசக் கட்சி என்பன குற்றம் சுமத்தியிருந்தன.
இந்த குற்றச்சாட்டுக்கு பதிலளித்திருந்த அமைச்சர் திஸாநாயக்க, மாணவரை வேறு எவரும் தாக்கவில்லை எனவும் அவர் தன்னை தானே வெட்டிக்கொண்டதாக கூறியிருந்தார்.
இவ்வாறான பொய்களை வெளியிட்டு ஜே.வி.பியும் முன்னிலை சோசலிசக் கட்சியும் மீண்டும் நாட்டிற்குள் மோதலை ஏற்படுத்த முயற்சித்து வருகின்றன எனவும் அமைச்சர் குற்றம் சுமத்தியிருந்தார்.
http://www.tamilwin.com/show-RUmsyITdLdms2.html
காலிமுகத்திடல் நிலம் விற்பனை!- 156 கோடியை விழுங்கிய கோத்தபாய
[ சனிக்கிழமை, 09 ஓகஸ்ட் 2014, 09:30.33 AM GMT ]
ஷாங்கிரிலா ஹோட்டல் நிறுவனம் அரசுக்குச் செலுத்திய பெருந்தொகைப் பணத்தை சுருட்டிக் கொள்ளும் முயற்சியில் கோத்தபாய ராஜபக்ஷ ஈடுபட்டுள்ளார்.
சீனாவின் பிரபல ஹோட்டல் நிறுவனமான ஷாங்கிரிலா நிறுவனத்துக்கு கொழும்பு, காலிமுகத்திடல் நிலத்தின் ஒரு பகுதி விற்பனை செய்யப்பட்டது. இதற்கான மத்தியஸ்தராக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ ஈடுபட்டிருந்தார்.
நிலத்தின் மதிப்பை விட பன்மடங்கு குறைவான விலையில் இந்த நிலம் விற்கப்பட்ட விவகாரத்தில், கோத்தபாய உள்ளிட்ட ஜனாதிபதியின் குடும்பத்தினர் தலா 400 மில்லியன் ரூபாக்களை கமிஷனாக பெற்றுக் கொண்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்நிலையில் ஹோட்டல் நிறுவனம் அரசுக்குச் செலுத்திய 160 கோடி ரூபாவும் இதுவரை அரச திறைசேரியில் செலுத்தப்படவில்லை என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தப் பணம் பாதுகாப்பு அமைச்சின் ஊடாகவே செலுத்தப்பட்டிருந்தது. இந்தக் கொடுக்கல் வாங்கல் முடிந்து வருடங்களும் கடந்து விட்டது. தற்போது இந்தப் பணம் பாதுகாப்பு அமைச்சின் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
இது அரச தாபன விதிகள் மற்றும் சட்டக்கோவையின் 148 விதிகளின் கீழ் கடுமையான தண்டனைக்குரிய குற்றமாகும். எனினும் ஜனாதிபதி இதனைக் கண்டுகொள்ளாமல் மௌனமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஹோட்டல் நிறுவனத்தினால் செலுத்தப்பட்ட பணத்தையும் கோத்தபாயவே சுருட்டிக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தற்போது பரபரப்புத் தகவல் வெளியாகியுள்ளது.
அரசுக்குரிய காணியை விற்றதில் கிடைத்த 156 கோடி பணம் பாதுகாப்பு அமைச்சின் பொது வங்கி கணக்கில்!
இலங்கை அரசாங்கம் நாட்டின் சுற்றுலா துறையை வளர்க்கும் நோக்கில் மேற்கொண்ட காணி விற்பனை தொடர்பான கொடுக்கல் வாங்கலில் அரசின் கூட்டு நிதியத்திற்கு கிடைக்க வேண்டிய நிதி இன்னும் அதில் வைப்புச் செய்யப்படவில்லை என தெரியவருகிறது.
மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம், கொழும்பு காலிமுகத் திடலில் அமைந்துள்ள 10 ஏக்கர் காணியை சீனாவின் ஷாங்கிரிலா ஹோட்டல் திட்டத்திற்கு வழங்கியது.
இதற்காக கிடைக்க வேண்டிய 156 கோடி ரூபா இதுவரை அரசின் கூட்டு நிதியத்தில் வைப்புச் செய்யப்படவில்லை.
அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் தலையீட்டில் நடந்த இந்த கொடுக்கல் வாங்கல் மிகவும் மோசடிகள் நிறைந்தது என அப்போது பரவலாக பேசப்பட்டது.
எவ்வாறாயினும் இந்த கொடுக்கல் வாங்கல் மூலம் கிடைத்த 156 கோடி ரூபா அரசின் கூட்டு நிதியத்தில் வைப்புச் செய்யப்படாது, கோத்தபாய ராஜபக்ஷ செயலாளர் பதவியை வகிக்கும் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் பொது வங்கி கணக்கில் வைப்புச் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அரச சொத்து ஒன்றை விற்பனை செய்த பின்னர் கிடைக்கும் பணத்தை கூட்டு நிதியத்தில் வைப்புச் செய்யாது வெளியில் வைத்திருப்பது அரசியல் அமைப்புச் சட்டத்தின் 148 வது பிரிவின்படி சட்டவிரோதமானது என்பதுடன் அரச நிதியை கட்டுப்படுத்துவது சம்பந்தமான நாடாளுமன்றத்தின் அதிகாரத்தை இல்லாமல் செய்வதாகும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதேபோல் வருட இறுதியில் மேற்படி அமைச்சின் இறுதி கணக்காய்வில் இந்த நிதி பற்றி கணக்காய்வாளர் நாயகம் எதனையும் குறிப்பிடவில்லை.
அரசியல் அழுத்தங்கள் காரணமாக அவர் இதனை தவிர்த்திருக்கலாம் என்ற பலத்த சந்தேகம் எழுந்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyITdLdms3.html
திருக்கேதீஸ்வர மனித புதைகுழி! ரணகோச இராணுவ நடவடிக்கையில் ஏற்பட்டதா?: அனந்தி சசிதரன்
[ சனிக்கிழமை, 09 ஓகஸ்ட் 2014, 09:37.27 AM GMT ]
மூன்று தசாப்தங்களிற்கு மேலாக நடைபெற்ற யுத்தத்தில் பல ஆயிரக்கணக்கானோர் கொலை செய்யப்பட்டும் காணாமல்போயுமுள்ளனர். இவற்றுக்கு பலரது முகவரிகள் இன்னும் கண்டுகொள்ளப்படவில்லை என வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.
மன்னார் திருக்கேதீஸ்வரம் பகுதியில் மனித புதைகுழி அடையாளம் காணப்பட்ட போதும் அது தொடர்பில் அடுத்த கட்ட விசாரணைகள் மிக மந்தகதியிலேயே நடக்கின்றது.

குறித்த விடயம் தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு விடுத்துள்ள செய்திக் குறிப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
1999ம் ஆண்டு 07ம் மாத முற்பகுதியில் “ரணகோச இராணுவ நடவடிக்கை” தீவிரப்படுத்தப்பட்டு மக்களை பல்வேறு துன்பங்களுக்கு உட்படுத்தி இடம்பெயர செய்த காலத்தில் போக்குவரத்து பாதைகள் அனைத்தும் வெளிமாவட்டங்களுக்கு துண்டிக்கப்பட்ட காலத்தில் விடுதலைப்புலிகளுடைய அனுமதி இன்றி ஜபுலவுபாஸ்ஸ போக்குவரத்தில் பலர் ஈடுபட்டதாக அக்காலத்தில் பேசப்பட்டது.
அவ்வாறு பயணம் செய்தவர்களில் பலருடைய தொடர்புகள் இல்லாமல் போயிருந்ததால் அவர்களும் மாந்தை புதைகுழியில் புதைக்கப்பட்டதாக வலுவான சந்தேகம் எழுகின்றது.
ஏனெனில் இந்தபிரதேசம் 1990ம் ஆண்டு 06ம் மாதத்தின் பின்னர் முழுமையான இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசத்தின் உயர்பாதுகாப்பு வலைய முன்னரங்கப்பகுதியாக இருந்துவருகின்றது.
இந்தப்பிரதேசம் எக்காலத்திலும் விடுதலைப்புலிகளது கட்டுப்பாட்டு பிரதேசமாக இருந்ததில்லை. எனவே குறித்த இடத்தில் வீதி அபிவிருத்தி திணைக்கள கட்டடம், பலநோக்கு கூட்டுறவு சங்க கிளை அலுவலகம், பாடசாலை, கிணறு போன்ற பல முக்கியமான அடையாளங்கள் இருந்துள்ளன.
1990ல் இராணுவம் இப் பிரதேசத்தை கைப்பற்றிய பின்னரே இவை மறைக்கப்பட்டிருக்கலாம். ஆகவே இதனை திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட மனித புதைகுழியாகவே கருதமுடிகிறது. 
இந்துக்களின் புனிதபூமியாக இருக்கின்ற காரணத்தினால் அந்த பிரதேசத்தில் கத்தோலிக்கர்கள், எந்த நூற்றாண்டிலும் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் எதுவும் இருக்க முடியாது அவ்வாறு எனில் எப்படி சேமக்காலை இருந்திருக்கமுடியும்? செம்மணி போன்று பல இடத்தில் இனப்படுகொலை புரிந்து புதைத்துவிட்டு ஏமாற்றிய அரசாங்கம் முள்ளிவாய்க்காலில் முழு இனப்படுகொலையை புரிந்துவிட்டு உலகை ஏமாற்றும் அரசாங்கம், மாந்தை புதைகுழியில் மட்டும் நியாயத்ததை பெற்றுத்தருமென நாங்கள் நம்புவதற்கு தயாரில்லை..
எனவே இவை சர்வதேச நிபுணர்கள் குழுவினை கொண்டு ஆராயப்பட்டு அதில் பெறப்பட்ட மனித எச்சங்கள் சர்வதேச நிபுணர்களின் பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டும்.
அதுவே எமது மக்களின் இழப்புக்களுக்கு ஒத்தடம் கொடுப்பதாக அமையும் குறித்த விடயத்தில் அந்த பிரதேச அரசியல்வாதிகள் மௌனமாக இருப்பது தமிழ் மக்கள் மத்தியில் வெறுப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது என அனந்தி சசிதரன் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmsyITdLdms4.html

Geen opmerkingen:

Een reactie posten