சீனாவுடன் நெருங்கிய உறவை பேணும் இலங்கை அரசாங்கம், திருகோணமலையில் அமைந்துள்ள சீனன்குடாவில் பகுதியில் 1500 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலப்பரப்பை சீனாவுக்கு தாரைவார்க்க தயாராகி வருவதாக கடந்த வாரம் பரவரலாக பேசப்பட்டு வந்தது.
இது பற்றிய திறந்த ஆய்வொன்றை கனடாவிலிருக்கும் ஆய்வாளர் சுதர்மா, லங்காசிறி வானொலியின் நிஜத்தின் தேடல் நிகழ்ச்சியினூடாக பகிர்ந்து கொண்டார். அவர் கூறிய கருத்துக்களில்,
சீனன்குடா விவகாரம் இலங்கையின் வரலாற்றை மாற்றியெழுதப் போகும் சம்பவங்களின் அணிவகுப்பில் ஒரு அங்கமே தவிர. இதுவே முழுமையாக இலங்கையை மாற்றப் போகும் விடயமல்ல.
சர்வதேசத்தின் பிடியிலிருந்து தன்னைத் தற்காத்துக் கொள்ள இலங்கை சீனாவையும் இந்தியாவையும் வளைத்துப் போடுகின்ற செயற்பாட்டின் ஒரு அங்கமாக, சீனாவின் பிரசன்னத்தை நிரந்தரமாக்குவதன் ஒரு அங்கமாக இந்த சீனன்குடா விவகாரத்தைக் கூறலாம்.
சீனாவின் எப்-7 என்ற சண்டை விமானங்கள் 12ம், இலகு ரக வான்படை போக்குவரத்து விமானங்கள் 21ம், ஆக மொத்தம் 33 விமானங்கள் தற்போது இலங்கையின் பாவனையில் இருக்கிறது. இவற்றை திருத்துவதற்கான நிலையம் என்று கூறியே இத்திட்டம் நடைமுறைக்கு வருகிறது.
இந்தியா, சம்பூர் அனல் மின்நிலையம், மற்றும் திருமலைத் துறைமுகத்திலுள்ள எண்ணெய் தாங்கிகளில் 15 என திருமலை மாவட்டத்தில் முதலிட்டுள்ளது. எனவே இந்தியாவை பொறுத்தவரை இந்த சீன விமானப் பாராமரிப்புக் குறித்து அக்கறை செலுத்தாது.
இலங்கையில் 2009ம் ஆண்டு போர் முடிவுற்றதில் இருந்து இன்றைய திகதிவரை சீனா 16 ஆயிரம் மில்லியன் டொலர்களை பல திட்டங்களில் நீண்ட கால அடிப்படையாக முதலிட்டுள்ளது.
நுரைச்சோலை அனல் மின் நிலையம், விமான நிலையம் அமைத்தல், பெருந்தெருக்கள் போடுதல் போன்றவையும் இத் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டிருந்தன.
1973ல் எதிர்காலத் தலைவர்கள் என அடையாளம் காணப்பட்ட 10 பேரை சீனா அழைத்தது. அந்தக் குழுவிற்கு மகிந்த ராஜபக்சவே தலைமைப் பொறுப்பேற்று வழிநடத்தியிருந்தார்.
சுமார் ஒரு மாத காலம் தங்க வைத்து தங்களது நாட்டின் வளர்ச்சி மற்றும் உலக அரங்கில் தங்கள் நாடு எவ்வாறு இருக்கப் போகிறது என்ற எதிர்வுகூறல் உள்ளிட்ட இதுவரை ஊடகத்தின் பார்வைக்கு வராத முக்கிய விடயங்களை இந்த நிஜத்தின் தேடல் ஆய்வு நிகழ்ச்சியின் போது பகிர்ந்து கொண்டார்.
http://www.tamilwin.com/show-RUmsyITYLcery.html
Geen opmerkingen:
Een reactie posten