தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 2 augustus 2014

தமிழ் அகதிகள் 157 பேரையும் இந்தியாவில் இறக்கி விட தயாரான திட்டம் அம்பலம்! - நௌரு தீவுக்கு மாற்றப்பட்டனர்!

நடுக்கடலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ்ப் புகலிடக் கோரிக்கையாளர்கள் 157 பேரையும் இந்தியாவில் இறக்கி விடுவதற்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் தயாரானமை குறித்து அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
157 தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த சுங்கக் கப்பல் இந்தியாவிற்கு சென்று கொண்டிருந்த சமயம் திடீரென்று, அவுஸ்திரேலிய உயர் நீதிமன்றம் விதித்த இடைக்காலத் தடை காரணமாக இவர்கள் இந்தியாவில் இறக்கி விடாமல் கொக்கோஸ் தீவிற்கு திருப்பி அழைத்து வரப்பட்டதாக சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளார்கள்.
புகலிடக் கோரிக்கையாளர்கள் நடத்தப்பட்ட விதம் சட்டவிரோதமானதென பிரகடனப்படுத்தக் கோரும் அவுஸ்திரேலிய உயர் நீதிமன்றத்தில் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் ஆஜராகும் அரச தரப்பு சட்டத்தரணிகள், படகில் வந்தவர்களை திருப்பி அனுப்பும் முயற்சிகள் பற்றி நீதிமன்றத்தில் விளக்கம் அளித்திருக்கிறார்கள்.
குடிவரவு அமைச்சர் ஸ்கொட் மொரிசன் இந்திய அதிகாரிகளுடன் புதுடெல்லியில் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்த சமயம், இந்த தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த சுங்கக் கப்பல் இந்தியாவிற்கு அருகில் இருந்ததாக தெரிகிறது.
இதில் முக்கியமான விடயம் என்னவென்றால், தாம் எங்கு கொண்டு செல்லப்படுகிறோம் என்று புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு அறிவிக்கப்படாதது தான்.
தாம் கப்பலில் இந்தியாவிற்கு அழைத்துச் செல்லப்படுகிறோம் என்பது புகலிடக் கோரிக்கையாளர்களுக்குத் தெரிந்திருந்தால், அவர்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக மாறியிருக்கக்கூடுமென அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் சார்பில் ஆஜராகும் சட்டத்தரணிகள் அறிவித்துள்ளார்கள்.
அரச வழக்குரைஞர் டொனேகியூ கருத்து வெளியிடுகையில், இந்தத் தமிழர்கள் தற்கொலை செய்வதாக அச்சுறுத்தியிருக்கலாம் அல்லது தற்கொலை செய்து கொள்ள முயன்றிருக்கலாம் என்றார்.
இதில் எது நடந்தாலும் கப்பலில் இருந்த 35 கடற்படை உத்தியோகத்தர்களதும், 21 மாலுமிகளதும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கலாம் என்று அவர் குறிப்பிட்டார்.
இது போன்று சென்ற மாதம் 41 புகலிடக் கோரிக்கையாளர்களையும் யாருக்கும் தெரியாமல் இலங்கை அரசாங்கத்தின் கையில் ஒப்படைத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
எது எவ்வறாயினும் தங்களது சட்டத்தில் எந்தவிதமான மாற்றத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை என்று பிரதமர் டோனி அபொட் தெரிவித்துள்ளார்.
தான் தேர்தலில் மக்களுக்கு வாக்களித்த படி சட்டவிரோத குடியேறிகளை தடுப்பதே தமது முக்கிய நோக்கமாக உள்ளது ஆகையால், யாருடைய மிரட்டலுக்காகவும் எமது கொள்கையை மாற்ற முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.
புகலிடக் கோரிக்கையாளர்கள் விடயத்தில் எந்தவிதமான மாற்று நடவடிக்கையும் எடுக்கப் போவதுமில்லை, இவர்கள் விரும்பினால் இந்தியாவுக்கு செல்லலாம், இல்லை என்றால் இவர்கள் எமது சட்டத்தின் படி மூன்றாம் தரப்பு நாடுகளான நவுரு, மனஸ், பப்புவ நியுகினிய, போன்ற பிராந்திய நாடுகளுக்கு அனுப்பப்படுவது உறுதி எனவும் தெரிவித்துள்ளார்.
தற்போது இலங்கை மிகவும் மனித உரிமைகள் பாதுகாக்கப்படும் நாடாக இருக்கின்றது ஆகையால், இலங்கை தமிழர்களுக்கு தற்போது அங்கு சுமுகமமாக வாழ நல்ல வாய்ப்புகள் உள்ளது, ஆகவே இங்கு வரும் அநேகமானவர்கள் பொருளாதார அகதிகள் தான் எனக் கூறியுள்ளார்.
157 தமிழ் அகதிகளையும் நேற்றிரவு இரகசியமாக நௌரு தீவுக்கு அனுப்பியது அவுஸ்திரேலியா
அண்மையில் புகலிடம் தேடிய 157 தமிழ் அகதிகளையும், அவுஸ்திரேலியா நேற்றிரவு இரகசியமாக நௌரு தீவுக்கு அனுப்பியுள்ளது.
தஞ்சம் கோரிய 157 தமிழ் அகதிகளையும், ஒரு மாதத்துக்கு மேலாக சுங்க கப்பல் ஒன்றில் தடுத்து வைத்திருந்தது அவுஸ்திரேலியா.
இதற்கு கடும் எதிர்ப்பு ஏற்பட்டதையடுத்து, அவுஸ்திரேலியாவின் மேற்குப் பகுதியில் ஒதுக்குப் புறமாகவுள்ள கேட்டின் தடுப்பு முகாமுக்கு கடந்தவாரம் கொண்டு சென்றது.
இந்த அகதிகள், இந்தியாவில் இருந்து புறப்பட்டனர் என்பதால், இந்திய அதிகாரிகளை இந்த அகதிகளைச் சந்தித்துப் பேசுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், அகதிகள் இந்திய அதிகாரிகளைச் சந்திக்க மறுத்து விட்டனர்.
இதையடுத்து, அகதிகளைப் பாதுகாப்பாக இந்தியா செல்வதற்கு ஏற்பாடு செய்வதாக அவுஸ்திரேலியா கூறியது. ஆனால் அகதிகள் அதனை நிராகரித்து விட்டனர்.
இந்தநிலையில், கேட்டின் தடுப்பு முகாமில் இருந்து நேற்றிரவு 9.30 மணியளவில் மூன்று விமானங்கள் மூலம், இந்த அகதிகள் 157 பேரும் நௌரு தீவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 50 பேர் சிறுவர்களாவர்.
http://www.tamilwin.com/show-RUmsyITWLcgxy.html

Geen opmerkingen:

Een reactie posten