யானைகளின் தாக்குதலில் இருந்து மக்களை பாதுகாக்க அதிகாரிகள் அர்ப்பணிப்புடன் சேவையாற்றவேண்டும் -பொன்.செல்வராசா
[ செவ்வாய்க்கிழமை, 31 மார்ச் 2015, 05:31.06 PM GMT ]
மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மைக்காலமாக யானைகளுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான மோதல்கள் உக்கிரமடைந்துள்ள நிலையில் அது தொடர்பில் ஆராயும் விசேட உயர் மட்டக்கூட்டம் ஒன்று நேற்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இதன் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அக்கூட்டத்தில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த காலங்களில் யானை தாக்குதல்களினால் ஏற்பட்ட சேதங்களுக்கு வழங்கப்படவிருந்த நஸ்ட ஈட்டுக்கான பணம் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு மட்டும் வழங்கப்படவில்லை.
இதனைப் பெற்றுக்கொள்வதற்காக கடந்த காலத்தில் அதிகாரிகளினால் உரிய நடவடிக்கைககள் மேற்கொள்ளப்படவில்லையெனவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
இதன்போது கடந்த காலத்தில் இடம்பெற்ற யானை தாக்குதல்கள் தொடர்பிலும் அதனால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டதுடன் யானை தாக்குதல்களை தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஆராயப்பட்டது.
குறிப்பாக கடந்த காலத்தில் வன ஜீவராசிகள் திணைக்களத்தின் செயற்பாடுகள் தொடர்பில் கூட்டத்தில் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டதுடன் அவர்களின் வினைத்திறன் இல்லாத செயற்பாடுகளே பொதுமக்கள் யானை தாக்குதல்களுக்கு உள்ளாவதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.
எல்லைப்புறங்களில் யானை வேலிகளை அமைப்பதற்கு தேசத்துக்கு மகுடம் திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்ட 90மில்லியன் ரூபா தொடர்பில் இங்கு மாவட்ட அரசாங்க அதிபரினால் கேள்வியெழுப்பப்பட்டது.
இது தொடர்பில் பதில் அளித்த வனஜீவராசி திணைக்களத்தின் கிழக்கு மாகாண பணிப்பாளர் வீரசேகர,அந்த காலப்பகுதியில் தான் கடமையாற்றவில்லை எனவும் அந்த நிதி தொடர்பான எந்த பதிவுகளும் தமது திணைக்களத்தில் இல்லையெனவும் தெரிவித்தார்.
இந்த நிதி காணாமல் போனவை தொடர்பாக இருவாரங்களுக்குள் விசாரணையினை மேற்கொண்டு தமக்கு அறிக்கை சமர்ப்பிக்கவேண்டும் என தெரிவித்த மாவட்ட அரசாங்க அதிபர் கடந்த காலத்தில் இந்த நிதி தொடர்பில் பல கடிதங்களை எழுதியபோதிலும் இதுவரையில் எதுவித பதில்களும் அளிக்கப்படவில்லையெனவும் தெரிவித்தார்.
அத்துடன் யானை பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் பொதுமக்கள்,இராணுவம்,ஊர்காவல் படையினர்,பிரதேச செயலகங்கள் இணைந்து யானைகளை விரட்டுவதற்கும் எல்லைகளுக்குள் மீண்டும் யானைகள் வராமல் பாதுகாப்பது எனவும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.
இதேவேளை யானைகளின் தாக்குதலில் இருந்து மக்களை காப்பாற்றுவதற்காக அர்ப்பணிப்புடன் வனஜீவராசிகள் திணைக்களம் சேவையாற்றவேண்டும் அதற்கு தேவையானவற்றினை அரசாங்கத்திடம் இருந்து பெற்றுத்தர நாங்கள் தயாராக இருக்கின்றோம் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா தெரிவித்தார்.
இக்கலந்துரையாடல் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் நடைபெற்றது. இதில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசா, பா.அரியநேத்திரன், சீ.யோகேஸ்வரன்,
மற்றும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான கோவிந்தன் கருணாகரம், இரா.துரைரெட்னம், மா.நடராஜா,பிரசன்னா இந்திரகுமார்,ஞா.கிருஸ்ணபிள்ளை ஆகியோரும் வனஜீவராசி திணைக்களத்தின் கிழக்கு மாகாண பணிப்பாளர் வீரசேகர,மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் சுரேஸ் உட்பட பிரதேச செயலாளர்கள்,உதவி திட்டமிடல் பணிப்பாளர்கள் கலந்துகொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
சுரேஸீன் கருத்து அவரது உரிமை! ரணில் யாழ் வருகையை நாங்கள் பகிஸ்கரிக்கவோ இல்லை. சீ.வி.கே
[ செவ்வாய்க்கிழமை, 31 மார்ச் 2015, 05:33.40 PM GMT ]
லங்காசிறி வானொலிக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பிரதமரின் நிகழ்வுகளை நாங்கள் புறக்கணிக்கவில்லை. ஆனால் முதலாவதாக வீரசிங்கம் மண்டபத்தில் நடந்த ஒரு நிகழ்விற்கான அழைப்பிதழ் எனக்கு வந்தது.
முதலமைச்சருக்கும் அனுப்பியிருப்பார்கள் என நம்புகிறேன். அந்த நிகழ்வை ஒழுங்கு செய்தவர்கள் பலர் பாரிய தவறுகளை ஏற்படுத்தி, அரசியல் சங்கடங்களை ஏற்படுத்தியுள்ளார்கள் என்பது எனது தனிப்பட்ட கருத்து.
அந்த அழைப்பிதழில் வடக்கு முதல்வரின் வகிபாகம் இல்லை. சாதாரண அழைப்பாக அதனைக் கருதி, அந்த நிகழ்வில் போய் இருக்க முடியாது என்பதால் அங்கு செல்லாமல் தவிர்த்துக் கொண்டோம்.
நிகழ்வில் கலந்து கொள்வதை தவிர்த்துக் கொண்டோமே தவிர, புறக்கணிக்கவில்லையென அவர் மேலும் குறிப்பிட்டார்.
http://www.tamilwin.com/show-RUmtyDQVSUko4H.html