தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 2 december 2014

இலங்கை விவகாரம்! இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுவாமியா? சுஷ்மாவா?

இலங்கையின் ராஜபக்ச சகோதரர்களுக்காகவும் சீனா தேசத்துக்காகவுமே சதா சிந்தித்துக் கொண்டிருக்கிறார் சுப்பிரமணியன் சுவாமி. தமிழக மீனவர்களின் தூக்கு விவகாரத்தில் தலையிட்டு ராஜபக்சவுக்கு கடிதம் அனுப்புகிறார் சு.சுவாமி. அப்படியானால் இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுக்கு என்ன வேலை?
இந்த நாட்டின் பிரதமர் யார் என சந்தேகமாக இருக்கிறது என்று கேள்வி எழுப்பியிருப்பவர் மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ.
அவருக்கு மட்டுமல்ல.. அண்மைக்காலமாக குறிப்பாக இலங்கை விவகாரத்தில் தொடர்ந்து சுப்பிரமணியம் சுவாமி வெளிப்படுத்தி வரும் அதீத கரிசனைகள், அறிக்கைகள் அனைத்துமே ஒட்டுமொத்த தமிழினத்துக்கே இந்த சந்தேகத்தை எழுப்பியிருக்கிறது.
ஜனநாயக முறைப்படி ஒரு தேர்தல் நடைபெற்று பொதுமக்கள் வாக்களித்து உருவானதுதான் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு. பிரதமர் என்ற அடிப்படையில் உள்துறை, வெளியுறவுத் துறைக்கு "மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட"வர்களை அமைச்சர்களாக்கியும் வைத்துள்ளார் பிரதமர் மோடி.
ஆனால் மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத, மத்திய அரசில் எந்த ஒரு பதவியும் வகிக்காத ஒருவர் இப்படியெல்லாம் எப்படி செயல்பட அனுமதிக்கப்படுகிறார் என்பதுதான் புரியாத புதிர்! ஆம் இலங்கை விவகாரங்களுக்கான மோடி சர்க்காரின் 'சிறப்பு அமைச்சர்' போலத்தான் செயல்பட்டு வருகிறார் 'சோழவந்தான்' சுப்பிரமணியன் சுவாமி.
தன் சொந்த நாட்டு மக்களைப் பற்றி எண்ணுவதைவிட்டு இலங்கையின் ராஜபக்சே சகோதரர்களுக்காகவும் சீனா தேசத்துக்காகவுமே சதா சிந்தித்துக் கொண்டிருக்கிறார் சுப்பிரமணியன் சுவாமி. இவர் விஷயத்தில் மத்திய அரசு ஏன் இப்படி கள்ள மவுனம் சாதிக்கிறது என்பது எவருக்குமே விளங்கவும் இல்லை.
இலங்கை அதிபர் ராஜபக்சவிடம் தமிழக மீனவர்களை விடுதலை செய்ய நானே கூறினேன்.. தமிழக மீனவர்களின் படகுகளை பறிமுதல் செய்யவும் நானே கூறினேன் என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கிறார் சுப்பிரமணியன் சுவாமி. இன்று கோத்தபாய ராஜபக்சவிடம் பேசியிருக்கிறேன். தமிழக மீனவர்களின் படகுகளை விடுவித்து விடுவார்கள் என்கிறார்.
5 தமிழக மீனவர்களின் தூக்கு விவகாரத்தில் தலையிட்டு ராஜபக்சவுக்கு கடிதம் அனுப்புகிறார் சு.சுவாமி. அப்படியானால் இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுக்கு என்ன வேலை? கொழும்பில் இருக்கும் இந்திய தூதரகத்துக்கு என்ன வேலை? இத்தனைக்கும் யாழ்ப்பாணத்தில் துணைத் தூதரகமும் உண்டாம்.
அதேபோல் பாரதிய ஜனதாவின் தேசிய செயலர் ஹெச். ராஜா வைகோவுக்கு கொலை மிரட்டல் விடுப்பாராம்.. அந்த கொலை மிரட்டலை கண்டித்து மதிமுகவினர் போராட்டம் நடத்தினால், ஜெயலலிதாவின் ஜாமீனை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றம் போவேன் என்று மிரட்டுவாராம் சுப்பிரமணியன் சுவாமி.
இந்த சு.சுவாமியின் நிலைப்பாடு எதனையுமே தமிழக பாரதிய ஜனதா ஏற்பதே இல்லை. அதிகபட்சமாக கண்டனமும் குறைந்தபட்சமாக விவாத களங்களில் 'நோ கமெண்ட்ஸ்" சொல்லுகிறவர்களாகத்தான் தமிழக பாஜகவினர் இருக்கின்றனர்.
சுப்பிரமணியன் சுவாமியின் அரசியல் பாதை முழுவதுமே மர்ம கேள்விகளைக் கொண்டதுதான்.. இந்த சுப்பிரமணியன் சுவாமியும் சர்ச்சை சாமியார் சந்திராசாமியும் இணைந்து நடத்திய அரசியல் பேரங்கள் ஆட்சி கவிழ்ப்புகள் என்பது இந்திய அரசியலில் அவிழ்க்கப்படாத முடிச்சுகளாக இருக்கின்றன.
இத்தகைய சுப்பிரமணியன் சுவாமி தற்போது பாரதிய ஜனதா அரசில் அசைக்க முடியாத அங்கமாகியிருக்கிறார்... அதுவும் அறிவிக்கப்படாத ஒரு வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்து தற்போது "பிரதமர்' ரேஞ்சுக்கு செயல்படத் தொடங்கியிருக்கிறார்..
இத்தகைய சுப்பிரமணியன் சுவாமிக்கு மத்திய அரசு தனது செலவில் பாதுகாப்பு கொடுப்பதும்.. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசை கலைத்து விடுவேன் என்று மிரட்டல் விடுவிக்க முடிகிறது என்பதும் எப்படித்தான் சாத்தியமாகிறது?
http://www.tamilwin.com/show-RUmszCTWKZkq5.html

Geen opmerkingen:

Een reactie posten