தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 25 december 2014

மீளாத்துயரை ஏற்படுத்திச் சென்ற சுனாமியும், அதன் தாக்கத்திலிருந்து விடுபடாத மக்களும்!

பத்தாண்டுகள் ஓடிமறைந்தாலும் இயற்கை ஏற்படுத்திய தடயங்களிலிருந்து இன்னும் மக்கள் முழுமையாக மீளவில்லை.
தாயை இழந்த பிள்ளை, பிள்ளையை இழந்த தாய், கணவனை இழந்த மனைவி, மனைவியை இழந்த கணவன் என்று எத்தனையோ குடும்பத்தை அனாதரவாக்கி, மக்கள் கடலுக்குள் இரையாகிப்போன அந்தநாளை மறக்கவே முடியாது.
இயற்கையின் சீற்றத்தினை யாரால்தான் தடுக்க முடியும். கிறிஸ்மஸ் பண்டிகை முடிவடைந்த அடுத்தநாள். அதுவும் ஒரு ஞாயிற்றுக்கிழமை. வீட்டில் அமைதியாக ஓய்வெடுத்துக் கொண்டிருந்த நேரம். அன்றைய நாளில் இத்தனை துன்பகரமான நிகழ்வு நடைபெறும் என்று யாருமே அறிந்திருக்கவில்லை.
அறிந்திருக்க நியாயமுமில்லை. எத்தனையோ நவீனங்கள் வத்திட்டபோதிலும் இந்தோனேஷியாவிலும் சுமத்ராவிலும் இந்தியாவிலும் இலங்கையிலுமென இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட உயிர்களைப் பலி கொண்ட சுனாமி ஆழிப்பேரலை காரணமாக கடற்கரை வெளியெங்கும் கூக்குரலும் கதறலுமாக எம்மக்கள் பிணங்களைத் தேடி அலைந்து திரியும்படி தடம்பதித்த அந்தநாள் எம்மைக் கடந்து பத்தாண்டுகளாகின்றது.
அவ்வாறான இயற்கையின் சீற்றம் 2004 டிசம்பர் 26ஆம் நாள் காலைவேளையில் அமைதியாக இருந்த இலங்கையின் கிழக்குக் கடற்கரையோரம் யாரும் எதிர்பார்த்திராத வகையில் திடீரென அந்தக் கடல்நீர் சற்று பின்னே செல்கிறது.
மக்கள் கடல் வற்றுகிறதா? என்று ஆச்சரியத்துடனும், வேடிக்கையுடனும் பார்த்துக் கொண்டு நிற்கின்றனர். அப்போது முன்னோக்கியவாறு பெரியதோர் அலை கரையில் முட்டிமோதுகின்றது. பார்த்துக் கொண்டிருந்தவர்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை.
ஆழியின் பேரலையானது கரையை நோக்கி வந்து அனைவரையும் மூழ்கடிக்க வைக்கிறது. கடலிலுக்குள் இரையாகிப் போகும் அந்தமக்களுக்கு எதுவும் தெரிந்திருக்க நியாயமில்லைதான்.
ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்த அந்தக்கனப் பொழுதில் அமைதியாக இருந்த கடல் தீடீரெனச் சீறிப்பாய்ந்தபோதுதான் ஆச்சரியம் ஏற்பட்டது.
மக்களை கிலி கொள்ளச் செய்தது. சுனாமிப் பேரலை என்பதை பின்னர்தான் மக்கள் அறிந்து பதறிப் போனார்கள். முன்கூட்டியே அறிவித்திருந்தால் இந்தளவுக்கு மனிதர்களது உயிர்கள் பலியாகியிருக்காது. எது எப்படியோ இன்று பத்தாண்டுகள் ஓடிவிட்டன.
2004ஆம் ஆண்டு டிசம்பர் 26ம் நாள் உள்ளுர் நேரம் காலை 6.58க்கு இந்தோனேசியாவிலுள்ள சுமத்திராத்தீவுக்கு வடக்கே 160 கிமீ. தூரத்தில் கடலுக்கு அடியில் 33 கிலோமீற்றர் ஆழத்தில் 9.1 றிட்சர் அளவில் ஏற்பட்ட புவி நடுகத்தினால் தோற்றுவிக்கப்பட்ட கடல் கொந்தளிப்பானது,
சுமார் 14 நாடுகளில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களின் உயிரையும் குடித்திருந்து மட்டுமல்லாமல், பலகோடான கோடி ரூபா பெறுமதியான சொத்துக்கள் உடமைகளையும் சில கணப்பொழுதில் அடித்து நொறுக்கி ஏப்பம்விட்ட கடலை இன்றும் நினைக்கிறபோது மனம் பதற்றப்படுகிறது.
காற்று வாங்கவும், இரசிக்கவும், நிம்மதிக்காவும் கடற்கரை செல்கின்றபோது கடலை வெறுப்போடு பார்க்க வைக்கிறது. சுனாமிக்குப் பிறகு கடற்கரைப் பயணங்கள் உள்ளத்தில் அச்சத்தையும் தோற்றுவித்திருக்கின்றது.
இலங்கையைப் பொறுத்தளவில் டிசம்பர் மாதம் வந்துவிட்டால் இயற்கை சீற்றத்திற்குக்கு குறைவிருக்காது. இப்போது கூட கனமழை பெய்து வெள்ளம் ஏற்பட்டு மக்கள் பாடசாலைகளிலும், பொது இடங்களிலும் அகதிகளாகியுள்ளனர்.
கிழக்கில் அதிலும் அம்பாறை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த பெருமழையினால் பல கிராமங்கள் நீரில் மூழ்கின. இது இயற்கையின் வெளிப்பாடு. வழமையாகவே எமது நாட்டைப் பொறுத்தளவில் இக்காலங்களில் இயற்கையின் சீற்றம் சற்று அதிகமாகவே காணப்படும்.
அண்மையில்கூட மலைநாட்டில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக சுமார் 200க்கும் மேற்பட்ட மக்கள் மண்ணுள் புதையுண்டுபோயினர். பல ஆயிரக்கணக்கான மக்கள் அவஸ்தப்பட்டனர். இப்போதும் மலையகப் பிரதேசங்கள் பலவற்றில் மண்சரிவு ஏற்படும் அபாயம் தோன்றியிருக்கிறது.
இவ்வாறான நிலமைகள் ஏற்படுகின்றபோது மிகக் கவனமாக நடந்து கொள்ளவேண்டியது மக்களின் கடப்பாடாகும். இவ்வாறான அனர்த்தங்கள் ஏற்படுவதற்கு முன்னர் அதனை அறிந்து தெரிந்து அதிலிருந்து தப்பிப்பதற்கான வழிவகைகளையும் அரசு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியும் உள்ளது.
இவ் இயற்கையின் சீற்றமான கடல் நடுக்கம் பற்றிய அறிவிப்பினை கி.மு. 426 கிரேக்க வரலாற்றாசிரியரான “தியுசிடைட்ஸ்” என்பவர் சுனாமி ஏற்படுவதற்கான காரணங்களை அக்காலத்திலேயே  கூறியிருந்தார். அதாவது எந்த இடத்தில் நிலநடுக்கம் கடலில் உண்டாகின்றதோ அங்கு கடல் உள்வாங்கி, பின்னர் திடீரென பின்வாங்கி மறு இரட்டை சக்தியும் கொண்ட வெள்ளப் பெருக்கு ஏற்படுகிறது.
நிலநடுக்கம் ஏற்படாமல் இப்படி ஒரு விபத்து ஏற்பட வாய்ப்பே இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கி.பி. 365 இல் அலெக்சாந்திரியாவில் மிகப் பெரிய அழிவுக்குப்பின் ரோமன் வரலாற்றாசிரியரான அம்மியனஸ் மாசில்லினுஸ் கூறுகின்றபோது சுனாமி என்பது, நிலநடுக்கத்தில் தொடங்கி கடல் நீர் பின்னடைவு, அதைத் தொடர்ந்து ராட்சத அலை என்ற தொடர்ச்சியான நிகழ்வாக அமைகிறது என்றார்.
இயற்கையின் சீற்றங்கள் உலகம் உண்டான காலம் முதல் எற்பட்டே வருகின்றன என்பது இதிலிருந்து தெரியவருகிறது.
பொதுவாக நிலநடுக்கம் என்பது நிலப்பகுதியில், கடல் பகுதியில், மலைப்பகுதியில் ஏற்படுகின்றது. நிலப்பகுதியில் வந்தால் நிலத்தில் உள்ளவை அதிர்ந்து சேதமாகிறது.
கடலில் வந்தால் கடலின் ஆழமான பகுதியிலுள்ள நிலத்தட்டுக்களின் அசைவு பெரிய அலைகளை உருவாக்குகின்றது. மலையில் ஏற்படுகின்றபோது எரிமலையாக உருவெடுக்கிறது.
பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஒரே நிலத்தட்டுத்தான் பூமி இருந்த என்றும், கண்டங்களாகப் பிரிய, பிரிய, அதன் தட்பவெப்ப, இயற்கை சூழ்நிலைகளுக்கு ஏற்ப, பல்வேறு நிலத்தட்டுக்கள் உருவாகின எனவும், இந்தத் தட்டுக்களின்மீதுதான் ஒவ்வொரு கண்டமும் இருக்கின்றன எனவும், நிலம், கடல் எல்லாவற்றையும் தாங்கி நிற்பது இந்த நிலத்தட்டுக்களாகும் எனவும், இதனையே ‘டெக்டானிக் பிளேட்கள் என்று புவியியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
புவியாராய்வாளர்களது கருத்தின்படி சமீபகால நூற்றாண்டுகளைக் கணக்கில் கொண்டால், முதன்முதலில் கடந்த 1755 ஆம் ஆண்டு, நவம்பர் 1ம் திகதி போர்த்துக்கல் நகரான லிஸ்பனில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் காரணமாக போர்த்துக்கல், ஸ்பெயின், மொராக்கோ நாடுகளில் சுனாமி ஆழிப்பேரலையானது அதிக பேரழிவை ஏற்படுத்தியது.
1883 ஆம் ஆண்டில் ஜாவா சுமாத்ரா இடையே கிரகோடா என்கிற பகுதியில் எரிமலைகள்  காணப்படுகின்றன. இப்பிரதேசத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால்  ஏற்பட்ட சப்தமானது அணுகுண்டை விட 10 ஆயிரம் மடங்கு சக்தி வாய்ந்த வெடிச்சம்பவங்கள் பல்லாயிரம் கிலோமீற்றர் தூரத்திற்கப்பால் கேட்டதாகவும், அந்த அனர்த்தம் காரணமாக சுமார் 35 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொதுவாக சுனாமியால் அதிகம் பாதிக்கப்படுகின்ற நாடுகளின் வரிசையில் ஜப்பான் நாடு முதலிடம் பெறுகின்றது. 2004ல் இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்ட இவ்வகை நிலநடுக்கம் மிக மோசமான ஆழிப்பேரலையை உண்டாக்கச் செய்து 2,30,000 மக்கள் உயிரிழந்தனர்.
சுமித்ரா பகுதியில் அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுவதால் அங்கு சுனாமிக்கான வாய்ப்புகள் அதிகமாகக் காணப்படுகின்றது.
2004 ஆம் டிசம்பர் 26 ஆம் நாளன்று, யுரேஷியன் நிலத்தட்டின் ஒரு பகுதியாகக் கருதப்படும் பர்மா நிலத்தட்டும், இந்தோ-ஆஸ்திரேலியன் நிலத்தட்டின் ஒரு பகுதியாகிய இந்திய நிலத்தட்டும், இந்தோனேசியாவின் வடக்கே சுமாத்திரா தீவில், கடலுக்கடியில் மோதியதன் காரணமாக ஏற்பட்ட பூகம்பத்தால் தோன்றிய அலைகள் தான் இந்தியப் பெருங்கடலில் சுனாமியை ஏற்படுத்தியது. இதுவே 2004 ஆம் ஆண்டின் மிகப்பெரிய இயற்கை அழிவாகக் கருதப்படுகின்றது.
கடந்த பத்தாண்டுகால இடைவெளியில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வில் எழுச்சியை ஏற்படுத்தியிருந்தாலும் சில பிரதேசங்களில் முழுமையான வகையில் சுனாமியாளர்களுக்குரிய பங்குகள் வழங்கப்படாமை மிகப்பெரிய ஏமாற்றமாகவே பார்க்கப்படுகின்றது.
குறிப்பாக கிழக்கு மாகாணம் சுனாமியால் மிக மோசகமாகப் பாதிக்கப்பட்ட பிரதேசமாகும். மருதமுனை, பாண்டிருப்பு, கல்முனை, சாய்ந்தமருது, காரைதீவு, நிந்தவூர் மற்றும் அக்கரைப்பற்று, திருக்கோவில், கோமாரி, பொத்துவில் போன்ற பிரதேசங்கள் முழுமையாக பாதிக்கப்பட்டிருந்தமை யாவரும் அறிந்த விடயமாகும்.
ஏனைய பிரதேசங்களிலும் சுனாமியின் தாக்கம் ஏற்பட்டிருந்தாலும் உயிர்த்சேதங்கள் ஏற்படவில்லை. அந்தந்த பிரதேசங்களில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசினாலும், அரசார்பற்ற வெளிநாட்டு, உள்நாட்டு நிறுவனங்களினாலும் உதவிகள் வழங்கப்பட்டன. அவர்களுக்கான வீடுகளும் கட்டிக் கொடுக்கப்பட்டன.
கடற்கரையை அண்டி வாழ்ந்த மக்களின் வாழ்வாதாரம் முழுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், அவர்களுக்குரிய நிவாரணங்கள் வழங்கப்பட்டிருந்தாலும் முழுமையாக வழங்கப்படவில்லை எனும் குறைபாடும் காணப்படுகின்றது.
அதேவேளை அக்கரைப்பற்று பிரதேசத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சவுதிஅரேபிய அரசினால் 500க்கும் மேற்பட்ட வீடுகள் அனைத்து வசதிகளையும் கொண்டதாக அக்கரைப்பற்று அம்பாரை பிரதான வீதிக்கு சமீபமாக நுரைச்சோலை எனும் இடத்தில் கட்டப்பட்டது.
அந்த வீட்டுத் திட்டத்திற்கு சமீபமாக பெரும்பான்மையினரும் நிரந்தரமாக வாழ்ந்து வருகின்றனர். இதனை குறிவைத்து அவர்களுக்கு பங்கு வழங்கப்படுதல் வேண்டும் எனும் கோஷத்திற்கு மத்தியில் இழுபறி நிலையில் பல ஆண்டுகளாக இருந்து வந்த நுரைச்சோலை வீட்டுத்திட்டம் யாருக்கும் வழங்கப்படாமல் பாழடைந்து காணப்படுகின்றது.
பாடசாலை, பள்ளிவாசல் என ஒரு கிராமத்திற்குரிய அனைத்து வசதிகளும் கொண்டதாக அமைக்கப்பட்ட இவ்வீட்டுத் திட்டம் முஸ்லிம்களுக்கு மாத்திரமின்றி அனைத்து சமூகத்தவர்களுக்கும் வழங்கப்பட வேண்டுமெனவும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
ஜனாதிபதி தேர்தல் நடைபெறப்போகின்றது. அக்கரைப்பற்று கடற்கரை யோரத்தில் வாழ்ந்த மக்களுக்காக கட்டப்பட்ட சுனாமி வீடமைப்புத் திட்டம், கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்பதுபோல, நீண்டகாலப் போராட்டத்தின் மத்தியில் குறிப்பிட்ட சில வீடுகளை மாத்திரம் அக்கரைப்பற்றில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படவுள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.
இருப்பினும் அந்தக் கிராமம் முழுமையாக அக்கரைப்பற்று மக்களுக்காகக் கட்டப்பட்டது. அந்த மக்களே அதில் அமரவேண்டுமென அந்தப்பிரதேசத்து மக்கள் கூறுகின்றனர். சவுதி அரசாங்கம் முஸ்லிம் மக்களுக்காகவே கட்டப்பட்டது என்பது தெரிந்தும், அவ்வீடுகள் மூவின சமூகங்களுக்கும் கிடைக்கவேண்டும் என்று உயர்நீதிமன்றில் வழக்கும் தாக்கல் செய்யப்பட்டது.
இன்று சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் வழங்கப்படாமல் புல்பூண்டுகள் முளைத்து காடாய் காணப்படும் நுரைச்சோலை சுனாமி வீட்டுத் திட்டத்திற்கு விடிவுகாலம் எப்போது பிறக்கும் அப்பிரதேச மக்கள் வருடந்தோறும் அரச அதிபர்கள் முன்னே ஆர்ப்பாட்டம் செய்வதும் வழமையாகிப்போன விடயமாகும்.
தேர்தல் நடைபெறுகின்ற இக்காலத்திலாவது இவ்வீட்டுத் தொகுதியினை முழுமையாக அக்கரைப்பற்று பிரதேசத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படுவதற்குரிய ஏற்பாடுகளை அரசு முன்கொணர வேண்டும் என மக்கள் கோரிக்;கை விட்டவண்ணமே உள்ளனர்.
நெஞ்சில் நிழலாடும் அந்தநாளை இன்று நினைத்தாலும் நெஞ்சம் படபடக்கிறது. இயற்கையின் சீற்றத்திற்கு யாராலும் எதனைக் கொடுத்தாலும் ஈடாகாது.
இருப்பினும் அந்த மக்களின் எழுச்சிக்கு அரசு உதவவேண்டும். ஒரு காலகட்டத்தில் கடற்கரையை அண்டிய பிரதேசத்தில் வீடுகள் அமைக்கப்படக்கூடாது என்பதற்கான வரையறைகள் மக்களுக்கு வழங்கப்பட்டபோதிலும் உல்லாச விடுதிகளுக்கான கட்டிடங்கள், மீனவர்களுக்கான வாடிகள் போன்றன கடற்கரையோரங்களில் கட்டப்பட்டுள்ளன.
இது 60மீற்றர்களுக்கும் அப்பால் இருக்கவேண்டுமெனக் கூறப்பட்டபோதிலும் அதற்கும் குறைவாக கட்டப்படுவது தவிர்க்கப்படுதல் வேண்டும். சுனாமி பேரலை காரணமாக தங்களுடைய வாழ்வினை மேம்படுத்தும் எத்தனையோ திட்டங்கள் ஊடாக அபிவிருத்தி செய்யப்பட்ட போதிலும் போன உயிர் மீண்டும் திரும்பப் போவதில்லை.
எனவே, பத்தாண்டுகள் கடந்துவிட்ட ஆழிப்பேரலையின் பாதிப்புக்களிலிருந்து மக்களின் வாழ்வாதாரம் மேம்படுத்தப்பட வேண்டுவதுடன், அந்த நிகழ்வில் உயிர்நீத்த அத்தனை ஆத்மாக்களையும் இன்றைய நாளில் நினைவுகூர்ந்து அவர்களின் ஆத்மசாந்திக்காக இறைவனிடம் பிரார்த்திப்போம்.
 rthillainayagam@gmail.com
http://www.tamilwin.com/show-RUmszCRZKahv3.html

Geen opmerkingen:

Een reactie posten