தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 3 december 2014

மலையகத்தில் இடம்பெறும் அவலங்களுக்கு யார் பொறுப்பு?

மலையக மக்களின் வாழ்வியலில் துன்பம், துயரம், வேதனை, ஏழ்மை, வறுமை என்பன புரையோடி போயுள்ளன. அதனை மேலும் வலுசேர்க்கும் முகமாக இயற்கையின் கோரத்தாண்டவம் மலையகத்தை இன்னும் ஆட்டிவைக்கின்றது.
மலையகத்தின் பல பகுதிகளில் ஏற்பட்டு வரும் மண்சரிவுகளும், மண்சரிவு அபாயங்களும் மக்களை துயர் நிலைக்குத்தள்ளியுள்ளது.
மலையகத்தின் மாபெரும் பேரிடர் கொஸ்லாந்த மீரியபெத்த தோட்டத்தில் இடம்பெற்றதைத் தொடர்ந்து தொடர்ச்சியாக முழு மலையகத்திலும் இவ்வாறான பேரனர்த்தங்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.
அத்தகைய அனர்த்த சம்பவமொன்று 01.12.2014 அன்று பொகவந்தலாவ லொயிலோன் தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது.
இவ்வனர்த்தத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாயும் மகளும் பரிதாபமாக பலியாகியுள்ளனர். இவ்வாறான அனர்த்தங்கள் பொகவந்தலாவ பிரதேசத்தில் பல இடங்களில் ஏற்படுவதற்கான அறிகுறிகள் அதிகமாக காணப்படுகின்றன.
குறிப்பாக கியு தோட்டம், பெற்றசோ தோட்டம், கெம்பியன் தோட்டம், இராணிகாடு, பாரதிபுரம், காட்மோர், மெரேயா தோட்டம், சாஞ்சிமலை, டயகம தோட்டம், மஸ்கெலியா தோட்டம், உட்பட 400 ற்கும் மேற்பட்ட தோட்டங்களில் பாரிய மண்மேடுகள் சரிவதற்கான அபாயங்கள் தென்படுகின்றன.
ஆயினும் இதுவரையிலும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் குறித்த பிரதேசங்களில் ஆய்வுகளை மேற்கொள்வதற்கு முன்வரவில்லை.
உண்மையில் இவ்வாறான அபாயம் இருப்பது அவர்களுக்கு தெரியுமா? அல்லது தெரிந்தும் பாராமுகமாக இருக்கின்றார்களா?
இவ்வாறான அலட்சிய போக்கின காரணமாகதான் 29.10.2014 அன்று மீறியபெத்த தோட்டத்தில் இடம்பெற்ற அனர்த்தத்தில் 30 ற்கும் மேற்பட்டோர் பலியாகினர்.
அச்சோகத்தில் இருந்து மீண்டுவராத நிலையில், அதே அலட்சிய போக்கினால் மலையகத்தில் அடுத்து இரண்டு உயிர்கள் காவுகொள்ளப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக தேசிய கட்டிட ஆய்வு மையம் செயற்படுமாக இருந்தால் முழு மலையகமும் மண்ணுக்கு இரையாவது திண்ணம்.
இவ்வாறான சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்றுக் கொண்டிருக்கையில் மலையக அரசியல் தலைவர்கள் அதில் சிறிதளவேனும் அக்கறை கொள்வாரில்லை.
அதே போன்று அனர்த்த முகாமைத்துவ அமைச்சும் இம்மலையக மக்களுக்கு உரிய தீர்வை பெற்றுத்தருவதாகவும் இல்லை. அனர்த்தம் இடம்பெரும் போது மட்டும் தலைகாட்டும் தலைவர்களும், அனர்த்த முகாமைத்துவ குழுவும் பின் அவர்களை அகதியாக்கிவிட்டு செல்வதுதான் வழமையாகியுள்ளது.
பொகவந்தலாவ பிரதேசத்தில் இன்னும் குறுகிய காலத்தில் இன்னுமொரு மாபெறும் பேரனர்த்தம் இடம்பெற காத்திருக்கின்றது. அதற்கான காரணம் இப்பிரதேசத்தில் 100-500 ற்கும் மேற்பட்ட அடி ஆழத்தில் பல ஏக்கர் நிலப்பகுதியில் மாணிக்கக்கல் அகழ்வு இடம்பெற்றிருந்தது.
இதற்கு அரசாங்கமே அனுமதி வழங்கியிருப்பது வேதனைக்குறிய விடயமாகும். இவ்வகழ்வு மலையடிவார தாழ்வு பிரதேசத்தில் தோண்டப்பட்டதால் அதனை அண்டியுள்ள திரேசியா , மோரா, கில்லானி, சிங்காரவத்தை, டன்பார் போன்ற தோட்டங்கள் முழுமையாக தாழிரங்கக் கூடிய அபாயத்தை எதிர்நோக்கியுள்ளது. இதனையும் தேசிய கட்டிட ஆய்வு மையம் கண்டுக்கொள்ளாது இருப்பது ஏன்?
இவ்வாறான பல அனர்த்தங்கள் காத்துக்கொண்டிருக்கும் நேரத்தில் மலையக தேசிய பேரிடர் கண்காணிப்பு குழு சில பரிந்துரைகளை முன்வைக்கின்றது.
அந்தவகையில் மீண்டும் மீண்டும் மலையகத்தில் ஏற்பட்டுவரும் அனர்த்தங்கள் தொடர்பாக முன்;கூட்டியே உரிய தரப்புகள் கவனம் செலுத்தி தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும்.
அத்தோடு அனர்த்தம் ஏற்படக்கூடிய இடங்களில் வாழும் மக்களை பாதுகாப்பான இடங்களில் குடியமர்த்தி அவர்களுக்குறிய சலுகைகளையும், தேவைகளையும் நிறைவேற்றி கொடுக்க வேண்டும்.
தேசிய கட்டிட ஆய்வு மையம் மலையகம் முழுவதும் ஆய்வு செய்தும், பாதுகாப்பான இடங்களை தெரிவு செய்து அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிரந்தரமான காணி மற்றும் வீடமைப்புத்திட்டத்தினை ஏற்படுத்டதி கொடுக்க வேண்டும்.
மேலும் மலையகப் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள வீடுகள் மற்றும் பாடசாலைகள், பொது அலுவலகங்கள் மக்கள் பாவனைக்குரிய பொது இடங்கள் என்பவற்றை நிபுணத்துவம் வாய்ந்த அதிகாரிகளை கொண்டு தக்க ஆய்வுகளை மேற்கொண்டு அப்பிரதேசம் பாதுகாப்பான பிரதேசமா? அல்லது அனர்த்த பிரதேசமா? என்பதனை உறுதிப்படுத்துவதோடு அது தொடர்பான அறிக்கைகளை உரிய தரப்பிற்கு சமர்ப்பிக்க வேண்டும்.
மலையக தலைவர்கள் தாம் மக்கள் பிரதிநிதி என்ற உணர்வோடு மக்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொடுத்து அவர்களுக்குறிய சலுகைகளையும், பாதுகாப்பையும் உறுதிப்படுத்தி மனிதநேய பண்போடு செயற்பட அழைப்பு விடுக்கின்றோம்.
மேலும் மக்கள் தொடர்ச்சியாக அவதானத்துடனும், விழிப்புணர்வுடனும் இருப்பது அவசியமாகும்.
மலையக பேரிடர் கண்காணிப்புக்குழு
http://www.tamilwin.com/show-RUmszCTXKZku6.html

Geen opmerkingen:

Een reactie posten