[ வியாழக்கிழமை, 25 டிசெம்பர் 2014, 09:15.00 AM GMT ]
மஹிந்த சிந்தனை உலகை வெல்லும் வழி என்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தேர்தல் விஞ்ஞாபனம் நேற்று முன்தினம் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் வெளியிடப்பட்டது. மதத்தலைவர்கள், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் விஞ்ஞாபனத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச வெளியிட்டு வைத்தார்.
பாராளுமன்ற முறையிலுள்ள பலவீனத்தைக் கருத்தில் கொண்டு சட்டவாக்கப் பேரவையின் தீர்மானத்திற்கு அமைய நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை திருத்தம் செய்வதற்கு நடவடிக்கையை எடுப்பேன்.
பிரதேச பிரதிநிதித்துவ மற்றும் தொகுதி முறையைக் கொண்ட கலப்பு தேர்தல் முறைக்கு செல்வேன்.
பயங்கரவாத நடவடிக்கைகள் காரணமாக சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள, தற்போது வழக்கு தொடரப்படாதுள்ள அனைத்து வடக்கு இளைஞர், யுவதிகள் தொடர்பில் ஆராய்ந்து உடனடி நடவடிக்கை எடுப்பதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் அனைத்து அதிகாரங்களுடன் குழுவொன்று நியமிக்கப்படும்.
வடக்கில் மனிதாபிமான நடவடிக்கைகளின் போது மக்கள் விட்டுச் சென்ற வாகனங்கள், தங்க ஆபரணங்கள், உறுதிப்படுத்தலின் பின்னர் மீண்டும் மக்களுக்கு வழங்கும் செயற்பாடு இவ்வருடத்திற்குள் முடிவடையும். பயங்கரவாத அச்சுறுத்தல் காணப்பட்ட போது பாதுகாப்புப் படைகளினால் பயன்பாட்டுக்குப் பெறப்பட்ட காணிகள், கட்டடங்கள், மனிதாபிமான நடவடிக்கைகளின் பின்னர் மீள வழங்கப்பட்டு வருகின்றன.
தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லாத வகையில் குறிப்பிட்ட காலத்திற்குள் இந்த செயற்பாடு முடிவுக்குக் கொண்டு வரப்படும். பயங்கரவாத நடவடிக்கையின் காரணமாக அபிவிருத்தியில் பங்கெடுக்காதிருந்த வடக்கு, கிழக்கு இளைஞர், யுவதிகளை தேசிய அபிவிருத்தியில் பங்கெடுப்பதற்காக நல்லிணக்க செயற்பாடுகள் விரைவுபடுத்தப்படும். இவை வரையறுக்கப்பட்ட காலப்பகுதிக்குள் முன்னெடுக்கப்படும்.
மலையக மக்களுக்கு தோட்டப்பகுதியில் 7 பேர்ச் காணியில் தனி வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படும். எனவும் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச முன்வைத்துள்ள தேர்தல் விஞ்ஞாபனத்தில்,மைத்திரிபாலவைப் போலவே இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பில் நேரடியாக குறிப்பிடப்படவில்லை.
இருந்த போதிலும், ஒரு வருடத்திற்குள் அரசியல் அமைப்பை மாற்றி அமைத்து புதிய அரசியல் அமைப்பை ஏற்படுத்த நடவடிக்கை எடுப்பேன் என்றும் இதற்காக பாராளுமன்றத்தை சட்டவாக்கப் பேரவையாக மாற்றுவேன் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய நிலையில் அரசாங்கமானது இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் முன்னேற்றகரமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை.
2009 ம் ஆண்டு மே மாதம் யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டிருந்தது. யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு ஐந்தரை வருடங்கள் ஆகிவிட்டபோதிலும் யுத்தத்திற்கு காரணமான இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.
2011 ஆம் ஆண்டு அரசாங்கம் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தது. 2012 ம் ஆண்டு ஜனவரி மாதம் வரை 16 சுற்றுப் பேச்சுக்கள் இடம் பெற்றிருந்த போதிலும் தீர்வு எதுவும் எட்டப்படவில்லை.
இந்த நிலையில் பேச்சு வார்த்தையிலிருந்து விலகிக்கொண்ட அரசாங்கம் பாராளுமன்றத் தெரிவுக்குழுவிற்கு வந்தால் மட்டுமே தீர்வு குறித்து பேச முடியும் என்று அறிவித்து விட்டது. இதனால் பேச்சுக்கள் தடைப்பட்டன.
அரசாங்கமும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் மாறி மாறி ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வந்தன. இந்த நிலையிலேயே ஜனாதிபதி தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
தற்போது பாராளுமன்றத்தை சட்டவாக்கப் பேரவையாக மாற்றி புதிய அரசியல் அமைப்பை உருவாக்குவதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி முன்வந்துள்ளது.
இனப்பிரச்சினைக்கான தீர்வை உள்ளடக்கி புதிய அரசியல் அமைப்பை உருவாக்குவதற்கு எதிர்காலத்தில் முயற்சி எடுக்கப்படும் என்பதை அரசாங்கம் தற்போதும் மறைமுகமாக சொல்லி இருக்கின்றது.
இது உண்மையிலேயே வரவேற்கத்தக்க செயற்பாடேயாகும்.
இதுவரை காலமும் பாராளுமன்ற தெரிவுக்குழுவிற்கு வந்தால் மட்டுமே பேச்சு என்று கூறி வந்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத் தரப்பு தற்போது மாற்றுவழியில் தீர்வைக் காண்பதற்கு முன்வந்துள்ளதாகவே தெரிகின்றது.
இதேபோல் தமிழ் அரசியல் கைதிகளின் விவகாரமும் பெரும் இழுபறி நிலையிலேயே இருந்து வருகின்றது. தம்மை விடுதலை செய்யுமாறு தமிழ் அரசியல் கைதிகள் பல வருடங்களாக கோரி வருகின்றபோதிலும் அதற்கான சாதகமான நிலை இன்னமும் ஏற்படவில்லை.
இறுதி யுத்தத்தின் போது பெருமளவு நகைகள், படைத்தரப்பினரால் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. அந்த நகைகளும் முழுமையாக பொதுமக்களிடம் வழங்கப்படவில்லை.
இந்த விடயங்களுக்கும் தீர்வு காணப்படும் என ஜனாதிபதியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் உறுதி வழங்கப்பட்டிருக்கின்றது.
இதனைவிட வடக்கில் பாதுகாப்பு படையினரால் சுவீகரிக்கப்பட்ட காணி மற்றும் கட்டடங்கள் என்பவை குறித்தும் மலையக மக்களுக்கு 7 பேர்ச்சஸ் காணியில் வீடு அமைக்கப்படும் என்றும் உறுதி வழங்கப்பட்டிருக்கின்றது.
ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட தேர்தல் விஞ்ஞாபன அறிவிப்புக்கள் உரிய வகையில் நடைமுறைப்படுத்தப்பட்டால் அது மக்களுக்கு பயனுள்ளதாகவே அமையும். ஆனால் அதற்கான சூழ்நிலை ஏற்படுமா? என்பதையும் அவை நடைமுறைப்படுத்தப்படுமா என்பதையும் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டியுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszCRZKaht7.html
பயமுறுத்தலை மீறி தமிழ் மக்கள் மாற்றத்தை வேண்டி வாக்களிப்பார்கள்!- மனோ கணேசன்
[ வியாழக்கிழமை, 25 டிசெம்பர் 2014, 09:19.24 AM GMT ]
பயமுறுத்தல், பகிஷ்காரம் என்ற இரண்டு வழிகளை பயன்படுத்தி, அரசாங்கம் வடக்கில் தமிழ் வாக்காளர்களை வாக்களிப்பிலிருந்து ஒதுக்கி வைப்பதற்கான இரகசிய திட்டங்களை தீட்டி வருகிறது. இந்த ஜனநாயக விரோத முயற்சிகளுக்கு எதிரான மாற்று திட்டங்களை நாம் முன்னெடுப்போம்.
இத்தேர்தல் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு இதுவரை முடிவு எடுக்காவிட்டாலும் கூட, அனைவரையும் கட்டாயம் வாக்களிப்பில் கலந்து கொள்ள அழைப்பு விதித்திருப்பது மகிழ்ச்சியை தருகிறது.
பயமுறுத்தலையும், பகிஷ்கார கோரிக்கையும் மீறி தமிழ் மக்கள் மாற்றத்தை வேண்டி வாக்களிப்பார்கள் என்று நான் நம்புகின்றேன். இது என் கோரிக்கையல்ல. தமிழ் மக்களின் மனசாட்சியை அறிந்துள்ள எனது நம்பிக்கை என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கத்தின் ஊடக மாநாடு கொழும்பில் இடம்பெற்றது. இம்மாநாட்டில் சிங்கள, தமிழ் மொழிகளில் உரையாற்றிய மனோ கணேசன் மேலும் கூறியதாவது,
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பகிஷ்கரிப்பு கோரிக்கையை நான் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் கூட, அக்கட்சியின் தொடர்சியான தமிழ் தேசிய நிலைப்பாட்டை நான் புரிந்து கொள்கிறேன். இதற்கும் மகிந்த அரசுக்கும் தொடர்பு இல்லை.
ஆனால், மகிந்த அரசு பகிஷ்கார கோரிக்கையையும் கூட தனக்கு சாதகமாக பயன்படுத்த திட்டமிடும் தகவல் எங்களுக்கு கிடைத்துள்ளது. தமிழர்களை பொறுத்தவரையில் இந்த அரசின் கொள்கை இரட்டை வழிமுறைகளை கொண்டது.
இது பற்றி அறிந்துள்ள நாங்கள் இதற்கு எதிராக உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். அவை பற்றி உரிய வேளையில், உரிய முறையில் மக்களுக்கு அறிவிப்போம்.
ஒன்று, எதிரணிக்கு வாக்கு விழும் என்ற சாத்தியங்களை கொண்ட இடங்களில் பயமுறுத்தல் என்ற ஆயுதத்தை பயன்படுத்தி வாக்களிப்பில் இருந்து தமிழ் வாக்காளர்களை தடுத்து நிறுத்தும் முயற்சி திட்டமிடப்பட்டுள்ளது.
இது முஸ்லிம் மக்கள் பெருவாரியாக வாழும் இடங்களிலும் நடைமுறையாக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது.
இத்தகைய வழிமுறையைத்தான் இவர்கள் கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது கண்டி மாவட்டத்தில் நாவலப்பிட்டி தொகுதியின் பெருந்தோட்ட பகுதிகளில் நடைமுறைபடுத்தினார்கள். அதன்மூலம் எனது பாராளுமன்ற உறுப்புரிமையை பறித்தார்கள்.
அடுத்தது, தமிழ் மக்கள் மத்தியில், குறிப்பாக வடக்கில், மைத்திரிபால சிறிசேனவும், மகிந்த ராஜபக்சவும் ஒன்றுதான், மாற்றம் எதுவும் வராது, வாக்களிப்பில் பயனில்லை, இது சிங்கள நாட்டு தேர்தல், என்ற மாதிரியான சிந்தனையோட்டத்தை பரப்பிடும் இரகசிய பிரச்சாரம், சமூகதள ஊடகங்கள் மூலமாகவும், வேறு சில அடையாளம் காணப்பட்ட ஊடகங்கள் மூலமாகவும், சில தனிநபர்கள் மூலமாகவும் முன்னெடுக்கப்படுகிறது.
எதிரணிக்கு வாக்களிக்கவுள்ள தமிழ் வாக்காளர்களை வாக்களிப்பில் இருந்து தடுத்து நிறுத்த இத்தகைய இரட்டை வழி திட்டங்களை திட்டமிட்ட முறையில் அரசு முன்னெடுகின்றது.
இவை பற்றி தமிழ் வாக்காளர்கள் நாடு முழுக்க எச்சரிகையாக இருக்க வேண்டும்.
பயமுறுத்தலையும், பகிஷ்கார கோரிக்கையும் மீறி தமிழ் மக்கள் மாற்றத்தை வேண்டி வாக்களிக்க தயாராக இருக்க வேண்டும். நமது வாக்காளர்களுக்கு நாம் துணையிருப்போம்.
http://www.tamilwin.com/show-RUmszCRZKahuy.html
Geen opmerkingen:
Een reactie posten