[ வெள்ளிக்கிழமை, 26 டிசெம்பர் 2014, 03:56.35 AM GMT ]
யாழ்ப்பாணம், தென்மராட்சி, சாவகச்சேரி நுணாவில் பகுதியில் இராணுவ ட்ரக் வாகனம் வீதியை விட்டு விலகி மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இன்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்ற இந்த விபத்தினால் நுணாவில் மற்றும் சாவகச்சேரி பகுதிகளுக்கான மின்சாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmszCRaKahx3.html
அகவை பத்தாகியும் இல்லிடம் கிடைக்காத அவலம்!
[ வெள்ளிக்கிழமை, 26 டிசெம்பர் 2014, 05:34.37 AM GMT ]
இயற்கை அனர்த்தங்கள் பல. அவற்றுள் வெள்ளம் சூறாவளி மண்சரிவு சுனாமி என்பன இலங்கைக்கு பழக்கப்பட்டவை. 1978இல் கிழக்கில் இடம்பெற்ற சூறாவளியும் 2004 இல் கரையோரம் பூராக இடம்பெற்ற சுனாமியும் 2014இல் கொஸ்லந்தை மீரியபெத்தயில் இடம்பெற்ற பாரிய மண்சரிவும் வரலாறாகிவிட்டன.
அந்தளவிற்கு அவை பாரிய அழிவையும் எச்சங்களையும் ஏற்படுத்தியிருந்தன. இவற்றில் 2004 இல் இடம்பெற்ற சுனாமியின் பாதிப்பு என்பது மிகவும் பாரியது. 30ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயிர்கள் காவுகொள்ளப்பட்டமை இங்கு ஈண்டு குறிப்பிடத்தக்கது. ஆம் அது இடம்பெற்று பத்து வருடங்களாகிவிட்டது. அது தொடர்பான பதிவே இங்கு தரப்படுகிறது.
அகவை பத்தில் ஆழிப்பேரலை!
இற்றைக்கு பத்து ஆண்டுகளுக்கு முன்பு இதே போன்றொரு தினத்தில் இடம்பெற்ற சம்பவத்தை இன்று உலகம் நினைவுகூருகிறது. ஆம் தெற்காசியாவை உலுக்கிய ஆழிப்பேரலையே அச்சம்பவமாகும். இந்த துன்பியல் சம்பவத்தை இன்று நினைத்தாலும் நித்திரை வராதோர் உள்ளனர். அதனை நேரடியாக சந்தித்தோரில் சிலர் 10வருடங்களாகியும் இன்னும் சுயநினைவுக்கு திரும்பாமலுள்ளனர் அல்லது வழமைக்குத் திரும்பாமலுள்ளனர்.
ஆனாலும் பலர் மறந்தும் மறவாத நிலையிலுள்ளனர். இளம் சந்ததிக்கு வரலாற்றுக்கதை சொல்வது போன்று சொல்லிக்கொடுக்க வேண்டிய கட்டமும் உள்ளது. அவர்களுக்கு சுனாமி என்றால் என்ன என்று தெரியாது. சூறாவளி என்றால் இன்று பலருக்குத் தெரியாது. எனவே இவை வரலாறுகள். நிச்சயம் பதியப்படவேண்டியவை.
இந்தோனேசியா சுமாத்ராக் கடற்பரப்பில் பூகம்பம் ஏற்பட்டு 3 மணிநேரமாகியபோதிலும் இலங்கையில் அனர்த்த பிரிவினர் அதனை துல்லியமாக கூடிய கவனத்தோடு தெரிவிக்காதமை பல்லாயிரக்கணக்கான உயிர்களை காவுகொள்ளக்காரணமாயமைந்ததை இன்றைய தினம் மீண்டும் வேதனையோடு நினைவுகூரவேண்டியுள்ளது.
இன்று நாடெங்கிலும் ஆத்மார்த்த அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. ஜனாதிபதி தேர்தல் பிரசாரங்கள் சூடுபிடித்துள்ள நிலையில் இப்பத்தாண்டு நிகழ்வு அனுஸ்டிக்கப்படுகிறது.
சனிப்பெயர்ச்சி பலனும் இயற்கை அனர்த்தமா?
திங்களன்று இடம்பெற்ற சனிமாற்றமானது எமது இலங்கையில் அரசியல்ரீதியில் திடீர் திருப்புமுனைகளைக்கொடுக்கும் என்றும் இயற்கை அனர்த்தங்களான காற்று மழை தீ என்பவற்றினால் ஏற்படும் பூமி சம்பந்தமுடைய அனர்த்தங்களும் அமையுமெனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாதிப்பு
2004 இந்திய பெருங்கடல் நிலநடுக்கத்தின்விளைவாக ஏற்பட்ட சுனாமியினால் தென்கிழக்கு ஆசியா மற்றும் அதற்கு அப்பாலும் பல நாடுகளில் இந்தோனேஷியா இலங்கை இந்தியா தாய்லாந்து மாலைத்தீவு சோமாலியா மியான்மர் மலேஷியா சீசெல்சு மற்றும் பல நாடுகள் பாதிக்கப்பட்டன.எனினும் இந்தோனேசியா மற்றும் இலங்கை போன்ற நாடுகள் பாரிய பாதிப்பை சந்தித்தன.
உரியவேளையில் தெரிவித்திருந்தால் கடைசி பல்லாயிரக்கணக்கான உயிர்களாவது காப்பாற்றப்பட்டிருக்குமென்பது வெள்ளிடைமலை.
இந்தச் சுனாமியால் உலகில் 2லட்சத்து 50ஆயிரத்து 676 பேரின் உயிர்கள் பறிக்கப்பட்டன. குறிப்பாக இந்தோனேசியாவில் 1லட்சத்து 84ஆயிரத்து 135 பேரும் அடுத்ததாக இலங்கையில் 38ஆயிரத்து 195பேரும் இந்தியாவில் 22ஆயிரத்து 709பேரும் தாய்லாந்தில் 5ஆயிரத்து 305பேரும் பலியாகினர் என ஆரம்பக்கட்ட தகவல்கள் தெரிவித்தன.
சுனாமியால் உலகில் இரண்டாவது பாரிய அழிவைச்சந்தித்த இலங்கையை எடுத்துக்கொண்டால் 38ஆயிரத்து 195பேரில் அம்பாறை மாவட்டத்திலேயே 9051பேர் இறந்ததாக சொல்லப்பட்டது.
இரண்டாவது கூடிய இழப்பு அம்பாந்தோட்டையிலாகும். அங்கு 4500 பேர் இறந்தனர். காலியில் 3774பேரும் மட்டக்களப்பில் 2975பேரும் முல்லைத்தீவில் 2902பேரும் என ஆரம்பக்கட்ட தகவல்கள் வெளியாகின.
பின்பு இத்தொகை சற்று குறைவடைந்து 30ஆயிரத்து 45ஆக மாறியது. அம்பாறை மாவட்டத்தின் இறப்புத் தொகையும் 5ஆயிரத்து890 ஆகியது. மொத்தத்தில் இலங்கையில் அதிகூடிய இறப்பையும் அழிவையும் சந்தித்தது அம்பாறை மாவட்டமே. எனவே அதனை மையப்படுத்தியதாக இக்கட்டுரை அமைகிறது.
பத்து வருடமாகியும் வீடுகிடைக்காத அவலம்!
ஆழிப்பேரலை இடம்பெற்று பத்துவருடங்களாகிவிட்டபோதிலும் பெரும்பாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிரந்தர வீடுகள் வழங்கப்பட்டுவிட்டன. எனினும் சில இடங்களில் இன்னும் வீடுகள் கிடைக்காத நிலையில் பாதிக்கப்பட்ட மக்கள் உள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmszCRaKagoy.html
புத்திஜீவிகள் விமர்சனம் செய்யலாம்! சாதாரண மக்களே ஆட்சியைத் தீர்மானிக்கின்றனர்
[ வெள்ளிக்கிழமை, 26 டிசெம்பர் 2014, 04:19.41 AM GMT ]
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு வெற்றி என்பது பற்றி நிறுத்திட்டமாகக் கூறமுடியாத அளவில் நிலைமை உள்ளது.
இவ்வாறான நிலைமைக்கு பயம் ஒரு காரணம் என்றால், தேர்தல் ஒழுங்கான முறையில் நடக்குமோ என்ற சந்தேகம் மறுகாரணம் எனலாம்.
எதுவாயினும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் நின்றவர்கள் மைத்திரியின் பக்கம் தாவிச் செல்வது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
தேர்தலுக்கு முதல்நாள் மிக நெருக்கமானவர்களும் போய் விடுவார்களோ என்று நினைக்கும் அளவில் நிலைமை மோசமாகி வருவதைக் காண முடிகிறது.
இத்தகைய மாற்றங்கள் தென்பகுதிப் புத்திஜீவிகளின் கடுமையான விமர்சனங்களால் ஏற்பட்டதாகும்.
ஆட்சி மாற்றம் தேவையெனத் தென்பகுதி புத்திஜீவிகள் கருதுகின்றனர். இனியும் சேர்ந்திருக்க முடியாதென்பது தாவிச் செல்லும் அரசியல்வாதிகளின் நிலைப்பாடு.
ஆக, தென்பகுதியைச் சேர்ந்த புத்திஜீவிகளும், அரசியல்வாதிகளும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என விரும்புகின்றனர் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.
எனினும் இலங்கையில் புத்திஜீவிகள் விமர்சனம் செய்யக் கூடியவர்களாகவும் கருத்துரைக்கக் கூடியவர்களாகவும் இருக்கின்றனரே தவிர, ஆட்சியைத் தீர்மானிக்கும் பெரும்பலத்தை தென்பகுதியைச் சேர்ந்த சாதாரண மக்களே கொண்டுள்ளனர் என்ற உண்மை மறப்பதற்குரியதல்ல.
எனவே, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி யாருக்கு என்பதைத் தீர்மானிக்கப் போகின்றவர்கள் சாதாரண மக்கள் என்பதால், அவர்களின் எண்ணம் எப்படியாக உள்ளது என்று ஆராய்வது அவசியம்.
பொதுவாக புத்திஜீவிகளின் கருத்துக்களையும், விமர்சனங்களையும் கொண்டு ஒரு முடிவுக்கு வருவது தவறு என்பது நம் தாழ்மையான கருத்து.
ஆக, தென்பகுதியில் ஆட்சியை, ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய சாதாரண மக்கள் இன்னமும் விடுதலைப் புலிகளை வென்ற மகிழ்வில் இருக்கிறார்களா? அல்லது சாதாரண வாழ்வு நாளுக்கு நாள் கடினமாகி வருகிறது என்று உணர்கிறார்களா? என்பதை அறிவது அவசியம்.
இவை ஒருபுறம் இருக்க, ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆதரவாளர்கள் நாளுக்கு நாள் மைத்திரியின் பக்கம் நகர்ந்து செல்வதைப் பார்க்கும் போது மகிந்த ராஜபக்வின் ஆட்சியில் இவர்கள் கடுமையான பாதிப்புக்கு அல்லது வெறுப்புக்கு ஆளாகி உள்ளனர் என்பதை உணர முடியும்.
அதேநேரம் மகிந்த ராஜபக்ச மூன்றாவது தடவையும் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டால் தமக்கு என்ன நடக்கும்? என்பது கட்சி மாறும் அரசியல்வாதிகளுக்குத் தெரியாததல்ல.
நிலைமையைத் தெரிந்திருந்தும் மைத்திரியின் பக்கம் ஓடுகின்ற அரசியல் வாதிகளின் ஓட்ட வேகத்தைப் பார்க்கும் போது கயிறு இழுத்தல் போட்டியில், மைத்திரியே வெல்ல வேண்டும் என்பதில் தென்பகுதி அரசியல்வாதிகள் அதிதீவிரமாக உள்ளனர் என்பது புரிகிறது.
இவை எல்லாம் நடந்து கொண்டிருக்கும் போது, வடக்கு கிழக்கு தமிழர்கள் அமைதியாகத் தேர்தல் நாளைப் பார்த்துக் காத்திருக்கின்றனர்.
யாருக்கு வாக்களிப்பது என்ற முடிவில் மிகத் தெளிவாக இருக்கும் தமிழ் மக்கள் தங்களின் தீர்மானத்தை மிகச் சிறப்பாகச் செய்வார்கள் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
எதுவாயினும் சாதாரண மக்களின் வாக்குகள் குறித்து மகிந்த கொண்டுள்ள கரிசனை மைத்திரியிடம் இருந்தால் போட்டி கடுமையாக இருக்கும் என்று கூறலாம்.
http://www.tamilwin.com/show-RUmszCRaKahx6.html
Geen opmerkingen:
Een reactie posten