தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 26 juni 2014

சித்திரவதைகளுக்கு முடிவு காண்பது எப்போது?

நாம் எல்லோரும் ஜனநாயகக் கருத்துக்களை பிரதிநிதித்துவப் படுத்துபவர்களாகவும் அகிம்சாவழியில் வாழத் தலைப்படுபவர்களாகவுமே நம்மை வெளிப்படுத்தி நிற்பதில் விருப்புடையாவர்களாகி நிற்கின்றோம்.
மறந்தும் நாம் எம்மை நாகரீகமற்ற மனிதர்களாகச் சித்தரிப்பதில் உடன்பாடு அற்றவர்களாகவே விளங்குகின்றோம்.
இவ்வாறாக எமது அபிலாசைகள், எவ்வாறிருந்த போதும் தற்போதும், எமது பகுதிகளில் நிலவிய யுத்தம் மற்றும் அதனோடு இணைந்த வன்முறைகள் சித்திரவதைகளை மட்டுப்பாடுகளின்றி அதிகரித்தே உள்ளன.
இந்த வகையில் சாதாரணமாக நேரடி யுத்தச் சித்திரவதைகள், இனம், மொழி போன்ற பாரபட்சங்களை மையப்படுத்திய சித்திரவதைகள், அரசியல் கைதிகள் மீதான சித்திரவதைகள் என வகைதொகையின்றி சித்திரவதைகள் நடந்தேறியுள்ளன. இதனை ஏலவே பல சர்வதேச அமைப்புக்கள் கூட சுட்டிக்காட்டியுள்ளன. சர்வதேசம் போரின் பின்பாகவும் சித்திரவதைகள் குறித்த விடயத்திலும் இலங்கை மீது சந்தேகங்களைக் கொண்டே உள்ளது.
கடந்த வாரமும் பிரித்தானியாவில் இருந்து நாடுகடத்தப்பட்ட இலங்கை அகதிகள் மீது சித்திரவதைகள் இடம்பெறுவதாகவும் அவை தொடர்பில் விசாரணை நடத்தப்படும் எனவும் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் வில்லியம் கேக் தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் சர்வதேச மன்னிப்புச் சபையின் ஆசிய பிராந்திய வலயப் பணிப்பாளர் ரிச்சட் பேனாட், இலங்கை உட்பட ஆசிய நாடுகளில் சித்திரவதை சகஜமடைந்தவருவதாகக் கவலை தெரிவித்திருந்தார்.
அவர் மேலும், இந் நாடுகள் சித்திரவதையினைத் தடுப்பது குறித்து வெறும் வாய்மூல உத்தரவாதங்களை விடுவதைவிடுத்து செயற்பாட்டில் உண்மைத்தன்மையினை வெளிப்படுத்த வேண்டும் எனவும் கோரியிருந்தார்.
அதேவேளை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் தொடர்பான நிபுணர் குழுவும் இலங்கையில் சித்திரவதை தொடர்பான கண்டன அறிக்கை ஒன்றை ஏலவே வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறானதோர் நிலையில், வகைதொகையின்றி சித்திரவதைகளால் பாதிக்கப்பட்ட பலரையும் கொண்டுள்ள எமது சமூகத்தில் சித்திரவதைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கான பாதுகாப்பினையும் ஆதரவையும் கட்டியெழுப்ப வேண்டிய தேவை எம் அனைவருக்கும் உள்ளது.
எனவே இத் தருணத்தில் எதிர்வரும் சித்திரவதைகளுக்கு எதிரானவர்களுக்கான ஆதரவு தினத்தினை விளிப்பிற்குறியதோர் சந்தர்ப்பமாகப் பயன்படுத்த வேண்டிய தேவை எம் சகலர் முன்னும் உள்ளது. அதேயிடத்தில் எதிர்காலத்தில் சித்திரவதைகள் இடம்பெறாது விழிப்படைய வேண்டிய அவசியமும் எமக்குள்ளது.
இந்நிலையில் கடந்த 1987ம் ஆண்டிலிருந்து இற்றைவரை சித்திரவதைக்கு ஆளானோருக்கான சர்வதேச ஆதரவு நாள் என்பது உலகெங்கிலும் உள, உடல் ரீதியாக பல்வேறு சித்திரவதைகளுக்கும், துன்புறுத்தல்களுக்கும் ஆளானோருக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக ஐக்கிய நாடுகள் சபையினால் ஜூன் 26ம் திகதி பிரகடனப்படுத்தப்பட்டு அனுட்டிக்கப்பட்டு வருகின்றது.
உண்மையில் இத்தினத்திற்குரிய அவசியம் எங்கிருந்து உணரப்படுகின்றது அல்லது ஆரம்பிக்கப்படுகின்றது? இத்தினங்களை அனுஸ்டிப்பதுடன் மட்டுமே பூரணப்படுத்தப்பட்டு விடுகின்றனவா? என்பவையே எமக்கான வினாக்களாக எஞ்சியுள்ளன.
ஜுன் 26.1987ம் ஆண்டிலிருந்து ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத்தில் சித்திரவதைக்கெதிரான தீர்மானம் எடுக்கப்பட்டது. உலகெங்கிலும் விடுதலை, நீதி, மனிதாபிமானம் மற்றும் அமைதி ஏற்பட மனித சமூகத்தின் அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்படுதல் அவசியமாகின்றது எனும் நோக்கோடு இத் தீர்மானம் எடுக்கப்பட்டது. இன்று உலகெங்கிலும் ஐநா அவையின் ஆதரவில் 200க்கும் மேற்பட்ட மையங்கள் சித்திரவதைக்கு ஆளானோரை புனரமைப்புச் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.
சித்திரவதை என்பது “உடலியல் ரீதியாகவோ அல்லது உளவியல் ரீதியாகவோ நோவினையும் வலியினையும் வேதனையும் ஏற்படுத்தும் வகையில் திட்டமிட்டு ஒரு நபர் மீது  பிரயோகிக்கும் ஒரு செயல்முறையாகும்.” இங்கே நாம் கவலையுடன் நோக்கவேண்டிய மிகப்பிரதானமான விடயம் என்னவெனில் சகமனிதனே தன் போன்ற சகமனிதனுக்கு இத்தகைய செயல்முறையை பிரயோகிக்கின்றான் என்பதே.
இங்கே மனிதன் தன் சகமனிதனேயே சித்திரவதைக்குள்ளாக்க வேண்டிய தேவை உணரப்படுகின்றது எதனால்? ஆதிக்க மனப்பான்மையும் தத்தம் நிலையை அல்லது இருப்பைத் தக்கவைக்க வேண்டிய ஓர் கட்டாய சூழ்நிலையிலேயே பெரும்பான்மையான சித்திரவதைகள் பிரயோகிக்கப்படுகின்றன.
அடுத்து கடுமையான சித்திரவதைக்கு உட்பட்ட அல்லது பிறருக்கு பிரயோகிக்கப்படும் சித்திரவதைக் காட்சிகளை அடிக்கடி பார்க்க நேரிட்ட மனிதமனங்கள் தாங்களும் ஓர் கர்த்தாவாக மாறிவிடும் துர்ப்பாக்கிய சூழ்நிலையும் இங்கு உணரப்படுகின்றது.
நாமெல்லோரும் “சித்திரவதைகள்” தவிர்க்கப்பட வேண்டும் என்ற விழிப்புணர்வு உடையவர்களாகவும் அவற்றைப் பிறருக்கு தெரியப்படுத்தும் தன்மையுடையவர்களாகவும் காணப்படுகின்றோமே தவிர இவற்றுக்கான காரணங்களை அடிவரை சென்று அலசி ஆராய்ந்து எம் மனப்பாங்கை மாற்றியமைக்கும் சக்தியற்றவர்களாகவே இருக்கின்றோம்.
அதாவது, ஓர் சித்திரவதை தொடர்பான செய்தியைக் கேள்வியுற்ற பின் நம் மனப்பாங்கு எத்தகைய தன்மையை வெளிப்படுத்தி நிற்கின்றது? அந்நிகழ்விற்கெதிரான கோசங்களையும், சித்திரவதைக்கு உட்பட்ட நபரின் மறுசீரமைப்பையும், குற்றவாளிக்கெதிரான கடுமையான தண்டனையை வலியுறுத்துவதிலுமே எம் எண்ணங்கள், சக்திகள் பெரும்பான்மையாக பிரயோகிக்கப்படுகின்றன. இங்கே நம்மில் பலர் குற்றவாளியின் மனப்பாங்கையும் இத்தகைய செயலுக்கு அவனைத்தூண்டிய தூண்டிகளையும் நோக்கத் தவறி விடுகின்றோம் என்பதே உண்மை.
இத்தகைய மேம்போக்கான பார்வையிலிருந்து நம்மை வெளியேற்றி எம் கவனத்தில் சம அளவு பங்கை சம்பவத்தில் சம்பந்தப்பட்ட இரு சாராருக்கும் வழங்கி இருவரது புனரமைப்பிலும் வகிபங்கு செலுத்துவோமாயின், இத்தகைய தினங்களிற்குரிய தேவை காலப்போக்கில் உணரப்படாமல் மழுங்கடிக்கப்படும் என்பதே நம் தாழ்மையான அபிப்பிராயமாகும்.
மேலும் இவ்விடத்தில் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் சித்திரவதைகளுக்கெதிராக உள்ள சட்டக் காப்புக்களையும் பரிந்திருப்பது எதிர்காலத்தில் சித்திரவதைகளை தடுக்கும் முயற்சிக்கும் வலுச் சேர்க்கும்.
இலங்கையின் அரசியலமைப்பில் அடிப்படை உரிமைகளில் உறுப்புரை 11 ஆனது ஆள் எவரும் சித்திரவதை அல்லது கொடூரமான மனிதாபிமானமற்ற, இழிவான நடத்துகைக்கு அல்லது தண்டனைக்கு உட்படலாகாது எனக் கூறியுள்ளது.
இங்கு சித்திரவதை பற்றி வியாக்கியானம் தரப்படாத போதும் சித்திரவதை தொடர்பான சமவாயச்சட்டம் சித்திரவதை தொடர்பில் வியாக்கியானத்தினைத் தருகின்றது.
அதாவது, நபரிடம் இருந்து அல்லது மூன்றாம் நபரிடம் இருந்து தகவல்களை அல்லது குற்ற ஒப்புதலைப் பெருவதற்காக, நபரினால் புரியப்பட்ட செயலுக்கு கண்டிப்பதற்காக, நபரை அல்லது மூன்றாம் நபரை அச்சுறுத்துவதற்கான நோக்கங்களுடன் மேற்கொள்ளப்படுவது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. சித்திரவதைச் சமவாயத்தின் பிரகாரம் சித்திரவதை செய்வது மட்டுமல்ல அதனைத் தூண்டுவது, உதவுவது என்பனவும் குற்றங்களாகும்.
மனித உரிமைகள் தொடர்பான சகல சட்டங்களும் சித்திரவதைகளை தடை செய்கின்றன. 1975 டிசம்பர் ஐ.நா. பொதுச்சபையில் சித்திரவதை மற்றும் மனிதாபிமானமற்ற கொடுரமான தண்டனைகளை வழங்குவதிலிருந்து ஆட்களைப் பாதுகாக்கின்றது. இது சித்திரவதை தொடர்பான வியாக்கியானத்தினையும் தருகின்றது.
மேலும், அனைத்துலக மனித உரிமைப் பிடகடனம் உறுப்புரை 5 இலும் குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் மீதான சர்வதேச உடன்பாட்டு ஒப்பந்தம் உறுப்புரை 7 இலும், மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய சமவாயத்தின் உறுப்புரை 3 இலும் சர்வதேச அளவில் சித்திரவதைகள் மற்றும் மனிதாபிமானமற்ற கொடூரமான தண்டனைகள் தடுக்கப்பட்டுள்ளன.
1984 இல் நியூயோர்க்கில் கையெழுத்திடப்பட்ட சித்திரவதை மற்றும் மனிதாபிமானமற்ற அல்லது இழிவான நடத்தை அல்லது தண்டனை மீதான சமவாயத்தில் இலங்கை 1993 ஆம் அண்டு ஐனவரி 03 முதல் ஏற்றுக்கொண்டுள்ளது.
இச் சமவாயத்தின் பிரகாரம் (உறுப்புரை 2) உறுப்பு நாடுகள் தம் நியாயாதிக்கத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சித்திரவதையைத் தடுப்பதற்கான வினைத்திறனான சட்ட மற்றும் நிர்வாக, நீதி சடவடிக்கைகளை எடுக்கக் கடமைப்பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து 1994 ஆம் ஆண்டின் 22 ஆம் இலக்க சித்திரவதை மற்றும் வேறு கொடூரமான மனிதாபிமானமற்ற அல்லது இழிவான நடத்தல் தண்டனைக்கு எதிரான சமவாயச் சட்டத்தினை இலங்கை உருவாக்கியுள்ளது.
இச் சட்டத்தின் பிரகாரம் தனது நாட்டில் தனக்கு எதிராகப் புரியப்பட்ட சித்திரவதை தொடர்பாக முறைப்பாடு செய்ய உரித்துடையவர் ஆவதுடன் முறைப்பாட்டாளர் மேற்கொண்ட முறைப்பாட்டினால் அச்சுறுத்தல்கள் அல்லது தவறாக நடத்தப்படாமல் இருப்ப்தையும் உறுதிப்படுத்தக் கோருகின்றது.
மேலும், சர்வதேச அளவில் சித்திரவதைக்கு எதிரான குழு ஒன்றும் உள்ளது. இக்குழுவிடம் உள்நாட்டில் நிவாரணம் கிடைக்கப்பெறாத பாதிக்கப்பட்டவர்கள் செல்லலாம் என்ற போதும் இலங்கை இக்குழுவின் உருவாக்கத்திற்கான சமவாயத்தில் கையழுத்திடவில்லை. எனவே தனிப்பட்டவர்கள் இக் குழுவிடம் முறைப்பாட்டை கொண்டு செல்ல முடியாது.
சித்திரவதை தொடர்பான செய்திகளையோ சம்பவங்களையோ தரவுகளையோ எடுத்து ஆராயும் போது நாம் அங்கே நோக்கக்கூடிய ஓர் மிகப்பெரிய உண்மை என்னவெனில் சித்திரவதைக்கு உள்ளாக்கப்படும் நபர்கள் ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் வேறுபட்டவர்களாயும் சித்திரவதைச் சம்பவங்களைப் பிரயோகிப்பவர்கள் பெரும்பாலும் ஓரே நபராகவோ அல்லது ஓரே அமைப்பாகவோ அல்லது ஓரே அரசாங்கமாகவோ பல சந்தர்ப்பங்களில் இனங்காணப்படுகிறார்கள். இத்தகைய நபர்களையோ அமைப்புக்களையோ அல்லது அரசாங்கங்களையோ நாமெல்லோரும் என்ன செய்ய உத்தேசிக்கின்றோம்?
பாதிக்கப்பட்ட ஒரு நபர் மீதான மீளெழுச்சிக்கு நாமெல்லாம் எவ்வளவு வகிபங்கை பிரயோகிக்க தவறி விடுகின்றோம். மேலும், சித்திரவதையை மேற்கொண்ட குற்றவாளிகள் மீது அளிக்கப்படுகின்ற தண்டனைகள் வெறுமனே குற்றத்திற்கான தண்டனை போலல்லாது அவர்களை எதிர்காலத்தில் சித்திரவதைக்கான சிந்தனையற்றவர்களாக மாற்றக்கூடியதான மேம்பட்ட செயல்திட்டங்களையும் கொண்டதாக அமைய வேண்டும். இவ்வாறாக நாம் தலைப்படுவோமாயின் சித்திரவதைகள் அற்ற ஓர் அன்பான சமுதாயத்தை இலகுவில் கட்டியெழுப்பி விடலாம் என்பதே நம் அசைக்கமுடியாத நம்பிக்கையாகும்.
மற்றும் இது பற்றிய விழிப்புணர்வுகளை நாம் எங்கிருந்து ஆரம்பிக்க வேண்டும்? ஒவ்வொரு மனிதனதும் சிறுபிராயத்திலிருந்தே இத்தேவை உணரப்படுதல் வேண்டும்.
எம்மில் பல பெற்றோரும் ஆசிரியர்களும் நம் பிள்ளைகளிற்கு தவறுகளிற்குரிய தண்டனைகளாக பெரும்பாலும் அடித்தல், துன்புறுத்தல் போன்ற வன்முறைச் செயற்பாடுகளை பிரயோகப்படுத்தத் தலைப்படுகின்றோம். இவைகளும் அவர்களிற்கான ஓர் சித்திரவதை தான் என்பதை மறந்தும் உணர மறுக்கின்றோம்.
இத்தகைய தண்டனைகளிற்கு (சித்திரவதைகளிற்கு) தொடர்ச்சியாக உட்படும் சிறுவர்கள் நாளை தாம் அனுபவித்த கொடூரமான அனுபவங்களை பிறர் மீது பிரயோகிக்க அல்லது திணிக்க எத்தனிக்கிறார்கள்.
அடுத்து சித்திரவதைச் சம்பவங்களைத் தொடர்ச்சியாக சிறுபிராயத்திலிருந்தே பார்ப்பவர்களின் உளப்பாங்கு அவற்றிற்கு இசைவாக்கம் அடைந்து விடுகின்றது. காலப்போக்கில் தண்டனைகள் அல்லது சித்திரவதைகள் தவறானவை அல்ல அவசியமானவை என்ற சித்திரம் அவர்கள் மனதில் பதிய வைக்கப்படுவதால் தான் பின்னாளில் அவர்களும் அவற்றை ஆயுதங்களாக கைகளில் எடுக்க முற்படுகிறார்கள்.
இத்தகைய எண்ணங்களை கருத்திற்கொண்டு மேற்கொள்ளப்படும் சமூக சீர்திருத்தங்களும் சித்திரவதைகளிற்கு எதிரான பிரகடனங்களும் தண்டனைகளும் மற்றும் சட்டங்களும் மறுசீரமைக்கப்பட்டு நாமெல்லோரும் அவற்றை உள்வாங்கத்தலைப்படுவோமாயின், உண்மையில் இத்தகைய தினங்கள் நம் மத்தியில் வழக்கொழிந்து போய்விடும் என்பதில் ஐயமில்லை.
வானதி மகாதேவா
http://www.tamilwin.com/show-RUmsyGRaLbno3.html

Geen opmerkingen:

Een reactie posten