[ புதன்கிழமை, 25 யூன் 2014, 06:32.05 AM GMT ]
முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் பொது மக்களின் காணிகளை இராணுவ தேவைக்கு பயன்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
புதுகுடியிருப்பு பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட கிழக்கு கிராமத்தில் உள்ள பொன்னம்பலம் வைத்தியசாலை அமைந்துள்ள காணி உட்பட பொதுமக்களுக்குச் சொந்தமான ஏழே முக்கால் ஏக்கர் காணியே இவ்வாறு இராணுவ தேவைக்கு எடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளரினால் கையெழுத்திட்டு ஒட்டப்பட்டுள்ள அறிவித்தல் கடிதத்திலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் காணிகள் பொதுமக்களுக்குச் சொந்தமானது என்று பிரதேச செயலகத்தில் காணி உரிமையாளர்கள் உரிமை கோரியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு இருந்தும் இந்தக் காணிகளுக்கு உரிமை கோருபவர்கள் எவரும் இல்லை என குறிப்பிட்டு, இந்தக் காணிகள் இலங்கை இராணுவப் படையணியின் 682 ஆம் பட்டாலியனின், தலைமையகத் தேவைக்காக எடுக்கப்படவுள்ளதாக அந்த அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வடக்கில் புதுக்குடியிருப்பு, புதுமாத்தளன் வீதியையும், கிழக்கில் வைத்தியசாலைக்கு முன்னாலுள்ள வீதியையும், தெற்கு மேற்கு ஆகிய பகுதிகளில் வைத்தியசாலை வீதிகளையும் இந்த ஏழே முக்கால் ஏக்கர் காணிகள் எல்லைகளாகக் கொண்டிருப்பதாகவும் அந்த அறிவித்தலில் அடையாளம் காட்டப்பட்டுள்ளது.
இந்தக் காணிகள் பொன்னம்பலம் வைத்தியசாலை உட்பட 19 பேருக்குச் சொந்தமான காணிகள் என்றும், இவற்றுக்குரிய ஆவணங்களை அவர்கள் வைத்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. புதுக்குடியிருப்பு நகரப் பகுதியில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதும், அந்தக் காணிகளின் உரிமையளார்கள், தமது காணிகளுக்கு உரிமை கோரி, தங்களை அந்தக் காணிகளில் மீள்குடியேற்றம் செய்வதற்காக இராணுவத்திடமிருந்து அவற்றைப் பெற்றுத் தருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இருந்தும் அந்தக் கோரிக்கை கவனத்தில் எடுக்கப்படாமல், இராணுவ தேவைக்காக இந்தக் காணிகளை எடுப்பதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகக் காணி உரிமையாளர்கள் கூறுகின்றனர். தனியாருக்குச் சொந்தமானது என கூறப்படுகின்ற பொன்னம்பலம் வைத்தியசாலை இறுதி யுத்தத்த்தின் போது விடுதலைப்புலிகளினால் பயன்படுத்தப்பட்டதன் பின்னர், அவ்விடத்தில் இராணுவத்தினர் நிலைகொண்டிருப்பதாகக் கூறப்படுகின்றது.
அவ்வாறு நிலைகொண்டுள்ள இராணுவத்தின் முகாம் விஸ்தரிப்புக்காகவே இந்தக் காணிகளை எடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyGRZLaet1.html
முஸ்லிம்களுக்கு எதிராக ஏன் சட்டத்தை அமுல்படுத்துவதில்லை: ஹெல உறுமய ஜனாதிபதியிடம் கேள்வி
[ புதன்கிழமை, 25 யூன் 2014, 06:48.52 AM GMT ]
இலங்கையில் கடந்த பல தினங்களாக நாடு முழுவதும் முஸ்லிம் பொதுமக்கள் வீதிகளை மறித்து நடத்திய ஹர்த்தால் போராட்டத்திற்கு எதிராக நாட்டின் சட்டத்தை ஏன் செயற்படுத்தவில்லை என ஜாதிக ஹெல உறுமய ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதம் ஒன்றில் கேள்வி எழுப்பியுள்ளது.
ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் ஓமல்பே சோபித தேரரின் கையெழுத்துடன் இந்த கடிதம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
பௌத்த மக்கள் அமைதியான கூட்டங்கள் மற்றும் போராட்டங்களை நடத்தும் போது தடை செய்து நீதிமன்றம் உத்தரவிடுகிறது.
இந்த சட்டம் ஏன் முஸ்லிம்களுக்கு அமுல்படுத்தப்படுவதில்லை? அவர்களுக்கு நாட்டில் தனியான சட்டம் அமுலில் இருந்து வருகிறதா?
அளுத்கம சம்பவத்தின் பின்னர், பௌத்த மக்களும், பௌத்த அமைப்புகளும் மாவனல்லை, ருவான்வெல்லை, பதுளை, மஹியங்கனை ஆகிய பிரதேசங்களில் நடத்தவிருந்த பௌத்த கூட்டங்கள் தடை செய்யப்பட்டன.
நாட்டில் அமைதி, மத சகவாழ்வு என்பவற்றை தற்காத்து கொள்ளும் தேவையின் நிமித்தம் இந்த கூட்டங்கள் தடை செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இந்த அமைதியான நிலைமையை தற்காத்து கொள்வதற்காக முஸ்லிம், அமைப்புகள், அடிப்படைவாத குழுக்களுக்கு எதிராக ஏன் சட்டத்தை அமுல்படுத்துவதில்லை. நாட்டின் சட்டத்திற்கு மேல் ஷரியா சட்டம் அமுலில் இருப்பது இதற்கு காரணமா?
எவரை மகிழ்விப்பதற்காக பௌத்தர்களை அச்சுறுத்தி, அவர்களை ஆக்கிரமித்து முஸ்லிம் அடிப்படைவாதிகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்கப்படுகிறது?
முஸ்லிம்கள் ஹர்த்தாலில் ஈடுபடும் போது பௌத்தர்களை தேடி வேட்டைக்கு போகும் பொலிஸார் நாட்டுக்கு கிடைத்துள்ளனர்.
உலகம் முழுவதும் சிங்கள பௌத்தர்கள் மற்றும் பௌத்த பிக்குகளுக்கு எதிராக சர்வதேச ஊடகங்களை பயன்படுத்தி, முஸ்லிம் அரசியல் தலைவர்கள் பொய்களை பரப்பி வரும் நிலையில், சிங்கள பௌத்தர்களின் குரல்களுக்கு இலத்திரனியல், அச்சூடகங்களில் உத்தியோகபூர்வமற்ற தடை விதிக்கப்பட்டிருப்பது கவலைக்குரியது.
நாட்டின் பெரும்பான்மை பௌத்த மக்களுக்கு இவ்வாறான துயரமான நிலைமை ஜனாதிபதியின் ஆட்சியின் கீழ் எதிர்நோக்க நேர்ந்துள்ளமை பெரும் மனவருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது எனவும் சோபித தேரர் தனது கடிதத்தில் கூறியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyGRZLaet2.html
Geen opmerkingen:
Een reactie posten