தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 23 juni 2014

புலிகளின் சுயநிர்ணய உரிமை ஆவணத்தால் அரசாங்கமே பிளவுபடும் நிலை உருவானது – ஹேமன் குமார



முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையைக் கண்டித்து கனடாவில் ஆர்ப்பாட்டம்
[ திங்கட்கிழமை, 23 யூன் 2014, 03:55.52 AM GMT ]
இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழத்து விடப்பட்டுள்ள தாக்குதல்கள் மற்றும் வன்முறைகளுக்கு எதிராக கனடாவின் தலைநகர் ரொறன்ரோவில் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று நேற்று நடத்தப்பட்டுள்ளது.
இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து கனடவில் வசிக்கும் தமிழ் மக்களும், இஸ்லாமிய தமிழ் மக்களும் இணைந்து இந்த கண்டன - எதிர்ப்பு ஆர்ப்பட்டத்தை நடாத்தியுள்ளனர்.
ஸ்காபுரோ நகரின் செப்பார்ட் - மார்க்கம் சந்திப்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு தமது அதிருப்தியையும் - எதிர்ப்பையும் வெளிப்படுத்தினர்.
கனடாவில் இஸ்லாமிய தமிழர்கள், ஈழத்தமிழர்களுடன் இணைந்து நடத்திய - இலங்கை அரச அடக்குமுறைககு எதிரான - முதல் நிகழ்வாக இது பதிவாகியுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyGRXLafr5.html

புலிகளின் சுயநிர்ணய உரிமை ஆவணத்தால் அரசாங்கமே பிளவுபடும் நிலை உருவானது – ஹேமன் குமார
[ திங்கட்கிழமை, 23 யூன் 2014, 04:55.47 AM GMT ]
பல வருடங்களாக ஆயுதம் ஏந்திப் போராடிய ஒரு குழுவான விடுதலைப்புலிகள் இயக்கத்தால் முன்வைக்கப்பட்ட அரசியல் ரீதியான சுயநிர்ணய உரிமை ஆவணத்தால் அரசாங்கம் கூட பிளவுபடக்கூடிய நிலை ஏற்பட்டது. யுத்தம் முடிவடைந்த பிறகு தமிழ் மக்களுக்கு பிரச்சனை இருக்கிறது என்பதை தென்னிலங்கை ஏற்றுக்கொள்ளவேண்டும் என ஹேமன் குமார தெரிவித்தார்.

மனித உரிமைச் செயற்பாட்டாளரும் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் தேசிய அமைப்பாளரும் உலக மீனவ சம்மேளனத்தின் விசேட பிரதிநிதியுமான ஹேமன் குமார கடந்த வாரம் மட்டக்களப்புக்கு விஜயம் செய்தபோது அவரை ஊடகவியலாளர்கள் சந்தித்துகலந்துரையாடினோம்.
அதன்போது அவர் இலங்கையின் இனப்பிரச்சினை, அதன் போக்கு, தீர்வுத்திட்டங்கள் எனப் பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடினோம்.
அவரிடம் ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விகளும் அவர் அளித்த பதில்களும் இங்கு தரப்படுகின்றது.
கேள்வி: - இலங்கைக்கெதிராக நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் சர்வதேச விசாரணைகள் பற்றிய உங்கள் கருத்து என்ன?
பதில்: - ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழு ஏதோ ஒரு செயற்பாட்டினை மேற்கொள்கின்றது இதன்படி யுத்தமீறல் செய்தமைக்காக பலருக்கு தண்டணை வழங்கப்படலாம். ஆனால் அதனைத் தாண்டி தமிழ் மக்களுக்கோ முஸ்லீம் மக்களுக்கோ ஒரு நியாயமான தீர்வு கிடைக்கும் என்று நாம் நம்பவில்லை.
இவை அனைத்துக்கும் இறுதியில் மையமாக இருப்பது அரசாங்கம் இதனூடாகத்தான் ஒரு தீர்வினைப் பெற முடியும். மனித உரிமைச் செயற்பாடுகள் என்பது வேறு அரசியல் வேறு இவற்றை ஒன்று சேர்க்க முடியாது. இப்போது நடைபெறுவது மனித உரிமைச் செயற்பாடுகளாகும் என்பதனை மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.
கேள்வி: - இந்தியாவில் உருவாகியுள்ள புதிய அரசாங்கத்தினால் இலங்கையில் ஏதாவது மாற்றம் ஏற்படுமா?
பதில்: - நிச்சயமாக ஏற்படும்…13வது திருத்தத்தசட்டத்தைப் பொருத்த மட்டில் மோடி அவர்கள் இதனை முழுமையாக அமுல்படுத்துமாறு தெரிவித்துள்ளார். அதனை செய்வதாகவும் கூறியிருக்கிறார். இதனை ஜனாதிபதி அவர்கள் இந்தியாவிற்கு சென்று மட்டும் கூற வில்லை மஹிந்த சமரசிங்க ஜெனிவாவிலும் பங்கீமுன் இலங்கைக்கு வந்த போதும் இதனைத் தான் கூறினார்.
ஆனால் நாம் தான் 13 என்கின்றோம் 13ற்கு மேல் என்கின்றோம். ஆனால் தற்போது அந்த 13ம் இல்லாமல் செல்லும் நிலைமையே இங்கு காணப்படுகின்றது. இது ஒரு ஏமாற்றமான விடயமாகவே காணப்படுகின்றது. எந்த நாளும் ஒருவர் ஏமாற்றிக் கொண்டிருக்க முடியாது அது போல் இந்த அரசாங்கத்தினால் எந்த நாளும் ஏமாற்ற முடியாது போகும் என நாம் எண்ணுகின்றோம்.
ஏற்கனவே இந்தியாவில் இருந்த ஆட்சி கூட்டாட்சி ஆனால் தற்போது ஒரு பலம் வாய்ந்த ஆட்சி இருக்கின்றது இதனால் ஒரு தீர்க்கமான முடிவினை எட்ட முடியும். அதுபோல் தமிழ்நாடு ஒரு சாதகமான நிலையில் அரசாங்கத்துடன் இல்லாது விட்டாலும் கூட தென்னிந்திய அழுத்தங்கள் மூலம் ஜெயலலிதா, கருணாநிதி, வைகோ அவர்களினுடைய குரல்கள் ஏதேனும் மாற்றத்தினைக் கொண்டுவர முடியும்.
கேள்வி: -- இலங்கையில் உள்ள இனப்பிரச்சினைக்குரிய தீர்வு திட்டத்தினை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்?
பதில்: - நாங்கள் மேற்கொள்ளும் செயற்திட்டங்கள் யுத்தம் என்பதனை மையப்படுத்தியது அல்ல. யுத்தம் என்பதனையே முழுமையாக வெறுத்தவர்கள் நாங்கள். தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றுகின்ற ஒரு தீர்வினையே நாங்கள் விரும்புகின்றோம். அத்தீர்வு தென்னிலங்கை அரசியல் பிரமுகர்கள் மக்களுடன் இணைந்து செயற்படுத்தப்படுகின்ற ஒரு தீர்வாக அமைய வேண்டும் என்பதனையே நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.
நாங்கள் இன்றும் முழுமையாக யுத்தத்தினை எதிர்க்கின்றவர்களாகவே இருக்கின்றோம். இந்நாட்டில் தமிழ், சிங்கள, முஸ்லீம் மக்களுடைய அபிலாசைகளை அடிப்படையாகக் கொண்ட பேச்சுவார்த்தை மூலமான தீர்வினையே நாம் எதிர்பார்க்கின்றோம். இதனை எவ்விடத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட வேண்டும் என்பது பற்றி பலருக்கு சந்தேகம் இருக்கும் அதற்காகத் தான் 13ம் திருத்த சட்டத்தினை அமுல்படுத்துவதன் முலமும் அதிகாரப் பகிர்வுமே இதற்கு அடிப்படை அம்சங்களாக இருக்கும். 13ம் திருத்தச் சட்டத்திற்கு அப்பால் சென்று தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றுகின்ற ஒரு தீர்வாக இருக்க வேண்டும்.
13ம் திருத்தம் என்பது தீர்வு அல்ல 13ம் திருத்தத்தை அடிப்படையாக வைத்துக் கொண்டு பேச்சுக்களை ஆரம்பிக்கலாம் எனினும் அதற்கு அப்பால் சென்று ஒரு தீர்வினை வழங்க வேண்டும்.
அரசியல் தீர்வுகளை நோக்கி நாம் நகரும் போது இருக்கும் முக்கிய சிக்கல் என்னவென்றால் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை. விசேடமாக தென்னிலங்கையில் இருந்து கொண்டு அதிகாரப் பரவலாக்கல் முலம் தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வினை வழங்க வேண்டும் என்றுளு பேசுகின்ற ஒரு அமைப்பாக நாங்கள் இருக்கின்றோம் ஆனால் அதற்கு தடையாக இருக்கின்றது இந்த நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை.
இது ஒரு பாரிய பாதிப்பினை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது எனவே இதில் மாற்றம் வரவேண்டும். அரசியல் அமைப்பில் மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும் என்பதை நாம் வலியுறுத்திக் கொண்டிருக்கின்றோம். அரசாங்கத்தில் இருக்கும் சகல கட்சிகளும், எதிர்த்தரப்பில் இருக்கும் சகல கட்சிகளும், சகல மனித உரிமை அமைப்புகளும் சமுக சிவில் அமைப்புகள் சகலமும் இணைந்து ஒரு குழு உருவாக்கப்பட்டு கலந்துரையாடலை மேற்கொள்ள வேண்டும் எந்த விதமான தீர்வினை நோக்கி நாம் நகரப் போகின்றோம் என்பது பற்றி தீர்மானிக்க வேண்டும். இல்லாவிடின் எமக்கு எதிர்காலம் என்பது இல்லாமல் போய்விடும்.
தமிழ் மக்களுக்கு தமிழ் பேசுகின்ற மக்களுக்கு ஒரு தீர்வு வழங்கப்படாவிட்டால் சிறந்த ஒரு எதிர்காலம் எமக்கு இல்லை என்பதுதான் உண்மை. சுதந்திரத்திற்கான அரங்கு என்று எங்களுடைய ஒரு அமைப்பு இருக்கின்றது. இதன் ஊடாக நாம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம்.
கேள்வி:- அவ்வாறானால் பாராளுமன்றத் தெரிவுக்குழு பற்றி உங்களது நிலைப்பாடு என்ன?
பதில்:- பாராளுமன்ற தெரிவுக் குழு தொடர்பாக நம்பிக்கை எமக்கு இல்லை. ஏனெனில் அதில் இருப்பவை ஒரு சில அரசியல் கட்சிகள் மாத்திரமே எனவே அவற்றின் கருத்துக்களை திணித்து செயற்பாட்டிற்கு கொண்டு வரலாம் ஆனால் நாம் அவற்றிற்கு அப்பால் சென்று வியாபித்த ஒரு அமைப்பாக இருக்க வேண்டும் சகல கட்சிகள் சிவில் அமைப்புகள் எல்லோரும் இணைந்த ஒரு அங்கத்தினூடாகத்தான் செயற்படுத்த வேண்டும்.
தெரிவுக் குழுவில் அனைத்து கட்சிகளும் இல்லை தங்களுக்கு ஒத்தவாறான கட்சிகளே அங்கம் வகிக்கின்றன ஆனால் இது அவ்வாறு இல்லாமல் சகல அமைப்புகளின் வியூகத்தினுடனான ஒரு பேச்சுவார்த்தை இடம்பெற வேண்டும்.
இந்த தெரிவுக் குழுவில் இருக்கும் இன வாதிகள் அவர்களின் கருத்தை திணித்து இதனை மாற்றுகின்றார்கள். அந்த நிலை இல்லாமல் அனைவரும் இணைந்து கீழ் மட்டத்தில் இருப்பவர்களும் இணைந்து ஒரு குழு அமைக்கப்பட்டு பேச்சுவார்த்தை நடாத்தப்பட வேண்டும். பொதுபலசேனா ஜாதிக கெல உறுமய சியல உறுமய போன்ற மதவாத கட்சிகள் அனைத்தும் மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் கேலிச்சித்திரங்கள் கைப்பொம்மைகள்.
அனைவரும் தத்தமது உரிமையை பேணுவதற்குரிய மனப்பாங்கு அனைவருக்கும் உண்டு ஆனால் பலாத்காரமாக இன்னொருவர் மீது இதனைத் திணிக்கும் போது அதனை நாங்கள் வன்மையாக கண்டிக்ககின்றோம். ராஜபக்ச அரசாங்கமாக இருக்கலாம் அல்லது ஏனைய சிங்கள அரசாங்கங்களாக இருக்கலாம் அவற்றிற்கு வெளிக்காட்டுவதற்கு விரோதிகள் தேவைப்பட்டது.
அந்த விரோதிகளை காட்டிக்கொண்டுதான் நாட்டில் இருக்கும் ஏனைய பிரச்சனைகளை மறக்கடிக்கச் செய்தனர். முன்னர் இருந்த எதிரி விடுதலைப் புலிகள் அல்லது தமிழ் விரோத குழு என்று தெரிவித்தனர். கடந்த காலங்களில் அவர்கள் கூறினர் விடுதலைப் புலிகளை தோல்வியுறச் செய்தால் அல்லது தமிழ் இன வாதத்தினை இல்லாதொழித்துவிட்டால் நாட்டில் சுபீட்சத்தைப் பெற முடியும் என்றார்கள். ஆனால் தற்போது விடுதலைப் புலிகள் இல்லை ஆனால் இன்னுமொரு பிரச்சனை வந்திருக்கின்றது. தற்போது அவர்களுக்கு வெளியே காட்டுவதற்கு விரோதி தேவைப்பட்டது அதனால் அவர்கள் திடீரென கலால் என்று ஒரு பிரச்சனையை கொண்டுவந்தார்கள்.
அதனைப் பொதுபலசேனா கொண்டுவந்தது நல்லவேளை இதனை முஸ்லீம் மக்கள் புத்திசாதுரியமாக எடுத்துக்கொண்டமையால் இப்பிரச்சனையை சுமுகமாக தீர்த்துக் கொண்டனர். இன்னுமொரு பிரச்சனை அவர்களுக்கு எழுந்தது முஸ்லீம் மக்கள் சனத்தொகை அதிகரிக்கின்றது பள்ளிவாசல்கள் அதிகரிக்கின்றன இதற்கு முட்டுக்கட்டை போடுவதற்கு பொதுபலசேனா என்ற ஒரு அமைப்பினை உறுவாக்கினார்கள்.
எனவே நாட்டில் இருக்கும் மக்களுக்கு நாட்டில் இருக்கும் பிரச்சனைகள் மறைக்கப்பட்டு ஏனைய இனங்களுக்கிடையில் இருக்கும் விரோதத்தினை வளர்க்கின்றது இதுதான் இன்றைய அரசாங்கம் இந்த பொதுபலசேனா இராவணபலய போன்ற அமைப்புகளை வைத்துக்கொண்டு மேற்கொண்டு வருகின்றது.
கேள்வி: - சுதந்திரத்துக்கான அரங்கு என்ற ஒரு அமைப்பைப் பற்றிக் கூறினீர்கள் அதனை உருவாக்க வேண்டியதன் தேவை என்ன, அதன் செயற்பாடு எவ்வாறிருக்கிறது.?
பதில்: - 2009 வரும்போது யுத்தம் உக்கிரம் அடைந்திருந்தது விடுதலைப்புலிகள் கிளிநொச்சியிலிருந்து பின்வாங்கிச் சென்றனர். இதே வேளை தென்னிலங்கையயிலும் இந்த யுத்தத்திற்கு எதிரான கருத்துக்கள் வெளிவரத் தொடங்கின. சிவில் அமைப்புகள் ஏனைய அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன. அதே வேளை ஜனவாரி மாதம் 09ம் தினதி லசந்த விக்கிரமதுங்க அவர்கள் கொலை செய்யப்படுகின்றார்.

அந்த இடத்தில் ஒரு மறைமுக செய்தியைக் கொடுத்தார்கள் அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களுக்கு இதுதான் நிலை என்று இப்படிபட்டதுதான் இந்த அரசாங்கம். இதுவரை இது தொடர்பான எந்தவித விசாரணையே நடத்தப்படவில்லை. இதனால் நாம் திட்டவட்டமாக இது அரசாங்கத்தின் செயற்பாடுதான் என்றுநம்பினோம். இப்படி இருக்கும் போது எவ்வாறு நாட்டில் இருக்கும் சிவில் அமைப்புகள், ஊடகங்கள் என்பன இணைந்து இந்த நிலைமையை எவ்வாறு முகம் கொடுப்பது என்பது பற்றி கலந்துரையாடப்பட்டது.

இதன் போது அரசாங்கத்தின் அடக்கு முறைக்கு எதிராக செயற்பட வேண்டும் அல்லது இதில் தலையிடக் கூடாது அல்லது நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. இந்த சந்தர்ப்பத்தில் சிவில் அமைப்புகள் முடிவெடுத்தன இந்த அரசாங்கத்தின் அச்செயற்பாட்டிற்கு எதிராக செயற்பட வேண்டும் என ஏனைய அரச கட்சிகள் அமைப்புகளுடன் சேர்ந்து நிகழ்ச்சி நிரல் ஒன்றை ஆரம்பித்தது.

இதன்போது வாழ்வதற்கான உரிமை கருத்துச் சுதந்திரம் போன்றனவற்றை மையப்படுத்தியதாக செயற்பட ஆரம்பித்தன. இதில் 05 முக்கிய மூல தர்மங்களை மையப்படுத்தினோம் ஜனநாயக மறுசீரமைப்பு, ஊடக சுதந்திரம், இனங்களுக்கிடையிலான உறவை வளர்ப்பதற்கான அதிகாரப்பகிர்வு, சமுகப் பொருளாதார சந்தை, சட்டத்தின் இறைமை போன்ற மூலதர்மங்களை மையப்படுத்தி முடியுமானவரை முயற்சிகளை மேற்கொண்டோம். சுதந்திரத்திற்கான அரங்கை மையப்படுத்தியே மேற்கொள்கின்றோம்.

இவ்வமைப்பு 2009ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. 2009ம் ஆண்டு லசந்த விக்கிரமசிங்க கொலை செய்யப்பட்டு போத்தல ஜெயந்தவின் கால் வெட்டப்பட்டு இருந்த போது மக்கள் கதைக்க முடியாதவர்களாக இருந்தனர். இச்சந்தர்ப்பத்தில் மக்கள் தங்கள் கருத்தை வெளிப்படுத்த முயற்சித்தனர்.
அன்றைய நிலையை விட தற்போது மக்கள் தங்கள் கருத்துக்களை வெளிக்கொணர முனவந்திருக்கின்றனர் ஏனெனில் நாம் எதிர்க்கட்சிகளுடன் சேர்ந்து ஐக்கியதேசியக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு போன்ற கட்சிகளுடன் இணைந்து நாங்கள் மேற்கொண்ட செயற்பாடு ஏதோ ஒரு வழியில் மக்கள் முன்வந்து தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்துகின்றனர்.
கேள்வி: - தெரிவுக்குழுவிலும் நம்பிக்கையில்லை என்று கூறினீர்கள், அப்படியென்றால் தீர்வுத்திட்டத்தினை எவ்வாறு அடைந்து கொள்வது!

பதில்: -
 முஸ்லீம்கள், தமிழர்கள் தங்கள் பிரதேசத்தில் தாங்கள் ஆள்வதற்கான ஒரு யோசனையை முன்வைக்க வேண்டும் இதனை தென்னிலங்கை மக்களுடன் கலந்துரையாடலுக்குச் சென்று அம்மக்களின் ஒத்துழைப்புடன் அந்த தீர்வுக்கான நகர்வைச் செய்ய வேண்டும் இதுதான் எமது சுதந்திரத்திற்கான அமைப்பின் மூலம் நாம் மேற்கொள்ள இருக்கின்றோம்.
நாங்கள் வானத்தில் இருந்து யோசனை செய்ய முடியாது கீழ் மட்டத்தில் இருந்து எமது அடுத்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் அதனால்தான் 13வது திருத்தத்தை அடிப்படையாகக் கொண்டு அதற்கு மேல் சென்று தீர்வைக் காண வேண்டும் என்கிறோம். ஏனெனில் 13வது திருத்தச்சட்டம் மூலம் மாகாணசபை ஆட்சியமைதல் என்பது இலங்கையை பிரிப்பதற்கான செயற்பாடு என்று தென்னிலங்கையில் ஒரு கருத்து உலவியிருந்தது.
இது தவறென அம் மக்களுக்கு தெளிவுபடுத்தி அதை அடிப்படையாகக் கொண்டு தீர்வினை மேற்கொள்ள வேண்டும். இந்த நாட்டைப் பிரிப்பார்கள் என்று நாம் ஒரு போதும் நம்பவும் இல்லை இதனைப் பிரிப்பதை நாம் ஒரு போதும் விரும்பவும் இல்லை. இருப்பினும் தமிழ் மக்களின் சுயஆட்சி முறைக்கான ஒத்துழைப்பினை நாம் வழங்க எதிர்பார்த்திருக்கின்றோம். இதற்கான ஒத்துழைப்புகளையும் அழுத்தங்களையும் நாம் வழங்குவோம்.
கேள்வி: - மனித உரிமைச் செயற்பாட்டாளராக நீண்ட காலணமாகப் பணியாற்றுபவர் என்ற வகையில் உங்கள் மீதான அழுத்தங்கள் எவ்வாறிருக்கிறது ?
பதில்: - 2012ம் ஆண்டு மண்ணெண்ணை விலை அதிகரித்த போது மீனவர்கள் வீதியில் இறங்கி போராட்டங்கள் நடத்தினர். ஆனால் நாம் மீனவர்கள் அமைப்புகளுடன் செயற்பட்டமையால் நாம் தான் இவற்றை ஏற்பாடு செய்தோம் என்று அரசாங்கம் நினைத்தது. அந்த நேரத்திலே நான் உரோம் நகரிற்கு செல்ல வேண்டி இருந்தது. குழப்பத்தை ஏற்படுத்திவிட்டு நாட்டை விட்டு சென்றுவிட்டேன் என்று எனக்கு குற்றம் சாட்டினர்.
இதன்போது நான் விமானநிலையத்திற்கு வரும் போது என்னை அழைத்துச் செல்ல காத்திருந்தார்கள். இதுபோல் 03 சந்தர்ப்பங்களின் என்னை அழைத்துச் செல்ல திட்டமிட்டிருந்தனர். சாட்சிகள் இல்லாமல் நான் எதுவும் சொல்லவில்லை. 2012ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு மார்ச் மாதம் வரை சுமார் 32 பேர்வரை கடத்தப்பட்டு இருந்தனத் அக்காலகட்டத்தில் திட்டமிட்ட கடத்தல்கள் அதிகமாகக் இடம்பெற்றது. இது ஒருபக்கம் இருக்க நான் கிராமத்திற்கு வரும் போது புலனாய்வாளர்கள் எனது செயற்பாடுகளை கண்காணித்தனர்.

ஒவ்வொரு வாரமும் புலனாய்வாளர்கள் எனது காரியாலயத்திற்கு வந்து விசாரிப்பார்கள் எம்முடன் வேலை செய்பவர்களுக்கு இவ்வாறு அச்சுறுத்தல் ஏற்பட்டது. இது போன் தொடர்ச்சியதன அச்சுறுத்தல் எமக்கும் இருக்கின்றது. இப்படியான மத்தியில் தான் நாம் எமது செயற்பாடுகளை மேற்கொள்கின்றோம்.

கேள்வி: - மாகாண சபை முறைமையையே தென்னிலங்கை மக்கள் நாட்டைப்பிரிப்பதாகப் பார்த்தார்கள் என்று சொன்னீர்கள் அவ்வாறானால் இலங்கையில் இனப்பிரச்சினைத் தீர்வுத்திட்டம் எவ்வளவுக்குச் சாத்தியமாகும்-?
பதில்:- 13வது திருத்தச்சட்டத்தை அமுல்படுத்துவது என்பது வியாபித்த ஒரு கலந்துரையாடல் மூலம் தான் மேற்கொள்ள வேண்டும். விடுதலைப்புலிகள் இயக்கத்தால் சுயநிர்ணய உரிமை ஆவணம் முன்வைக்கப்பட்ட போது அரசாங்கம் கூட பிளவுபடக்கூடிய நிலை ஏற்பட்டது. பல வருடங்களாக ஆயுதம் ஏந்திப் போராடிய ஒரு குழு. அரசியல் ரீதியாக ஒரு யோசனையை முன்வைத்தனர். ஆனால் தற்போது யுத்தம் முடிவடைந்த பிறகு தமிழ் மக்களுக்கு எவ்வித பிரச்சனையும் இல்லை என்று தெரிவிக்கின்றனர். இதில் சிக்கல் நி;லைதான் உள்ளது. இதனை தென்னிலங்கையில் ஒரு குழு ஏற்றுக்கொள்ளவேண்டும். அக்குழுவுடன் சேர்ந்து ஒரு கலந்துரையாடலை மேற்கொண்டு மக்கள் மனதை மாற்ற வேண்டும்.

இது கடினமான விடயம்தான். ஆனால் இதனை மேற்கொள்ள வேண்டும். பல அச்சுறுத்தல்களும் ஏற்படலாம். முதலில் அரசாங்கத்திடம் இருந்தே அச்சுறுத்தல் வந்தது இவ்வாறு ஒரு கருத்தைத் தெரிவிக்கும் போது மக்கள் மத்தியில் இருந்தும் எமக்கு அச்சுறுத்தல் வரலாம்.
ஏனெனில் மக்கள் மத்தியில் தவறான எண்ணங்கள் பகிரப்படலாம். இவற்றை நாம் கருத்திற்கொண்டு ஒரு வியாபித்த கலந்துரையாடலை மேற்கொள்வதன் மூலம் தான் ஒரு தீர்வுக்கு வரமுடியும் இந்நாட்டில் தமிழர் பிரச்சனைக்கு ஒரு தீர்வு காணப்படாவிடின் இந்நாட்டின் எதிர்காலம் மிகவும் மோசமான ஒரு நிலைக்கு தள்ளப்படும்.
http://www.tamilwin.com/show-RUmsyGRXLafr6.html

Geen opmerkingen:

Een reactie posten