தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 22 juni 2014

கறுப்பு ஜூலையின் தாக்கம் இன்று வரை தொடர்கிறது: கலாநிதி தயான் ஜயதிலக்க!


தொடரும் வன்முறைகள்! அச்சத்தில் முஸ்லிம்கள்- யுத்தத்தின் பின்னர் அச்சமான சூழ்நிலை
[ ஞாயிற்றுக்கிழமை, 22 யூன் 2014, 08:42.29 AM GMT ]
தெஹிவளை பொலிஸ் நிலையத்தின் சமீபமாக அமைந்துள்ள முஸ்லிம் வர்த்தக நிலையம் ஒன்று இன்று அதிகாலை தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது.
தெஹிவளை ஹில் வீதியில் அமைந்துள்ள பெண்களுக்கான ஆடை நிலையம் ஒன்று இன்று அதிகாலையில் கற்கள் வீசித் தாக்கப்பட்டுள்ளதுடன், கட்டிடத்துக்கும் சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த வர்த்தக நிலையம் அமைந்துள்ள இடத்தில் இருந்து நூறு அடிக்கும் குறைவான தூரத்தில் தெஹிவளை பொலிஸ் நிலையம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் பொலிசில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதற்கிடையே நேற்றிரவு பாணந்துறை, சரிக்கமுல்லை மற்றும் வரக்காபொல பிரதேசத்தில் கணிதபுர பகுதிகளில் முஸ்லிம்களின் குடியிருப்புகள் மீது கற்கள் வீசித் தாக்கப்பட்டுள்ளதுடன், குடிபோதையில் இனவாதிகளின் நடமாட்டமும் அவதானிக்கப்பட்டுள்ளது.
பாணந்துறை வேரவத்த ஆற்றுக்கு அக்கரையில் வாள், கத்திகளுடன் இனவாதிகள் திரண்டு வந்து முஸ்லிம்கள் மீதான தாக்குதலுக்குத் தயாரான தகவல் கிடைத்தவுடன் நேற்றிரவு அப்பகுதியில் விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இவ்வாறான இனவாதிகளின் நடவடிக்கை காரணமாக தினம், தினம் முஸ்லிம்கள் அச்சத்துடன் வாழும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனினும் அரச தரப்போ முஸ்லிம்களின் அச்சத்தைக் களைவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குப் பதில், அறிக்கைகளுடன் மாத்திரம் தன்னை மட்டுப்படுத்திக் கொண்டுள்ளது.
யுத்தத்தின் பின்னர் அச்சமான சூழ்நிலை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது
யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் இலங்கையில் மீண்டும் ஒரு பதற்றமான சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளதாக த சிறிலங்கன் கார்டியன் பத்திரிகை தெரிவித்திருக்கிறது.
இலங்கை அரசாங்கம் யுத்தத்தை நிறைவு செய்த பின்னர், சமாதானத்தை நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
யுத்த காலத்தில் மக்கள் மத்தியில் இருந்து பீதி தணிக்கப்படும் என்றும் நம்பப்பட்டது. ஆனால் நிலைமை அவ்வாறு அமையவில்லை.
சிறுபான்மை மக்கள் மீதான தாக்குதல்கள், இந்த நம்பிக்கையை வீழ்த்தி இருக்கிறது.
அண்மைக்காலமாக முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்படுகின்ற தாக்குதல்களும், பௌத்த அடிப்படை வாதத்தின் மேலோங்களும் நாட்டில் மிகவும் அச்சமான சூழ்நிலை ஒன்றை உருவாக்கி இருக்கிறது.
தமிழ், முஸ்லிம் மக்களுக்கு மாத்திரம் இன்றி, சிங்கள மக்களும் அச்சமான சூழ்நிலையாக காணப்படுகிறது என்று அந்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.
பொலிஸ்மா அதிபர் பொறுப்புடன் செயற்பட வேண்டும்: ஐ.தே.க- குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க மங்கள சமரவீர முயற்சிப்பதாக குற்றச்சாட்டு
[ ஞாயிற்றுக்கிழமை, 22 யூன் 2014, 08:52.31 AM GMT ]
பொலிஸ்மா அதிபர் நன்கு படித்த நபர் என்ற வகையில் மேலும் பொறுப்புடன் செயற்பட வேண்டியது அவசியம் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அளுத்கம மோதல் சம்பவங்கள் ஏற்பட்ட போது, நான் பலமுறை பொலிஸ் மா அதிபரை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயற்சித்தேன். எனினும் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை.
நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் எடுக்கும் தொலைபேசி அழைப்புக்கு பதிலளிக்க முடியாது போனால், அதில் பயனேதுமில்லை.
பொலிஸ் மா அதிபரிடம் தற்போது மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அவர் தனது வேலைத் திட்டங்களை மாற்றியுள்ளார். அவர் படித்த நபர் என்ற வகையில் இதனை விட பொறுப்புடன் செயலாற்ற வேண்டும் என்றார்.
குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க மங்கள சமரவீர முயற்சி- தேசிய சுதந்திர முன்னணி
மோதல் சம்பவங்களை பயன்படுத்தி மங்கள சமரவீர குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க முயற்சிப்பதாக தேசிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது.
தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் மொஹமட் முஸ்ஸாமில் வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை கூறியுள்ளார்.
பாணந்துறை பிரதேசத்தில் உள்ள உள்ள நோ லிமிட் ஆடை விற்பனை நிலையத்தில் ஏற்பட்ட தீ பொலிஸார் கூறுவது போல் மின் ஒழுக்கினால் ஏற்படவில்லை எனவும் சிலர் விற்பனை நிலையத்திற்கு தீ மூட்டியுள்ளமை தெளிவானது எனவும் மங்கள சமரவீர, சம்பவம் இடம்பெற்று 6 மணிநேரத்திற்குள் கூறியிருந்தார்.
விசாரணைகளின் பின்னரே, தீ எப்படி ஏற்பட்டது என்ற முடிவுக்கு வர முடியும். எனினும் சம்பவம் நடந்து 6 மணிநேரத்திற்குள் மங்கள சமரவீர இப்படியான கருத்துக்களை வெளியிட்டது அருவருக்கத்தக்கது.
அவர் நாட்டில் ஏற்பட்டுள்ள மோதலான நிலைமையை பயன்படுத்தி, குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க முயற்சித்திருப்பது தெளிவாகியுள்ளது எனவும் முஸ்ஸாமில் குறிப்பிட்டுள்ளார்.
கறுப்பு ஜூலையின் தாக்கம் இன்று வரை தொடர்கிறது: கலாநிதி தயான் ஜயதிலக்க
[ ஞாயிற்றுக்கிழமை, 22 யூன் 2014, 10:38.50 AM GMT ]
மேற்குலக நாடுகளில் உள்ள புலம்பெயர் தமிழர்கள், தமிழகத்தில் உள்ள தமிழர்களின் வாக்கு வங்கி என்பன இலங்கைக்கு இன்று பெரும் ஆபத்தாக அமைந்துள்ளது என கலாநிதி தயான் ஜயசேகர தெரிவித்துள்ளார்.
மனித உரிமை குற்றச்சாட்டுக்கள், சர்வதேச விசாரணை என இலங்கைக்கு எதிரான செயற்பாடுகள் அனைத்திற்கும் பின்னால், இந்த இரண்டு சக்திகள் உள்ளன எனவும் அவர் கூறியுள்ளார்.
சிங்கள வார இதழ் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார்.  அதில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
1983 ஆம் ஆண்டு கறுப்பு ஜூலையே இலங்கையின் இந்த பாதிப்புக்கு காண வழியை ஏற்படுத்தியது.
அடிப்படைவாதிகள் சிலர் அண்மையில், சிங்கள மற்றும் முஸ்லிம் மோதலை உருவாக்கி கறுப்பு ஜூனை ஏற்படுத்த முயற்சித்தமையானது, இலங்கையை மீண்டும் சர்வதேச ரீதியில் பாரதூரமான ஆபத்துக்குள் தள்ளும் நடவடிக்கையாகும்.
1983 ஆம் ஆண்டு கறுப்பு ஜூலை காரணமாக உலகம் முழுவதிலும் உள்ள தமிழ் மக்களுக்கும் சிங்கள மக்களுக்கும் இடையில் பகை ஏற்பட்டது. அது இலங்கைக்கு இழப்பாக மாறியது. அந்த பாதிப்பின் தாக்கம் இன்று வரை தொடர்ந்து வருகிறது.
மேற்குலக நாடுகளில் உள்ள புலம்பெயர் தமிழர்கள் மற்றும் தமிழகத்தில் இருக்கும் தமிழர்களின் வாக்கு வாங்கி என்பனவே மனித உரிமை பிரச்சினை, சர்வதேச விசாரணை என அனைத்துக்கும் பின்னால் உள்ளன.
உலகம் முழுவதும் 80 மில்லியன் தமிழர்கள் வாழ்கின்றனர். இந்த 80 மில்லியன் மக்களால் இலங்கை இந்தளவு பாரிய சேதம் ஏற்பட்டது என்றால், உலகம் முழுவதும் ஒரு பில்லியன் மக்களை கொண்டிருக்கும் முஸ்லிம் சமூகம் இலங்கையிடம் இருந்து விலகி செல்லும் வகையில் செயற்பட்டால், நாட்டின் எதிர்காலம் பெரும் பாதிப்புகளை சந்திக்கும்.
பண்டைய கால வரலாற்றில் இருந்தே இலங்கை தென்னிந்தியாவின் ஆக்கிரமிப்புகளை எதிர்நோக்கியது. அதேபோல் மேற்குலக ஆக்கிரமிப்புக்கும் உள்ளானது.
இவை இரண்டும் வரலாற்றில் ஒரே தடைவையில் நடைபெறவில்லை. ஆனால், இன்று மேற்குலகில் இருந்தும் தென்னிந்தியாவில் இருந்தும் ஓரே நேரத்தில் அச்சுறுத்தல் மேற்கொள்ளப்படுகிறது.
ஒரே நேரத்தில் இரண்டு முனைகளுடன் மோதுவது சிரமமான காரியம். இரண்டு முனைகளையும் ஒரே நேரத்தில் எதிர்கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில், மூன்றாவது முனையாக இஸ்லாம் சமூகம் மற்றும் அரபு முஸ்லிம் நாடுகளும் இலங்கைக்கு எதிராக செயற்பட்டால், அது நாடு மற்றும் மக்களின் அழிவுக்கு வழியை ஏற்படுத்தக் கூடும் எனவும் தயான் ஜயதிலக்க குறிப்பிட்டுள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten